தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நான் மறை


Guru

Status: Offline
Posts: 1051
Date:
நான் மறை
Permalink  
 


நான் மறை வேறு நால்வேதம் வேறு என்பதோடு நான்மறை என்பது அறம் பொருள் இன்பம் வீடு தான் என்ற கூற்றுகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. அவ்வகையில் சங்க இலக்கியங்களில் புறநானூற்றின் ஒரு பாடலைக் கொண்டு நால்வேதங்கள் என்பவை யாது என்பதையும் அவை அறம் பொருள் இன்பம் வீட்டைத் தான் குறிக்கிறதா என்பதையும் பார்க்கலாம்...!
நூல் : புறநானூறு
பாடியவர் : ஆவூர்
மூலங்கிழார்.
பாடப்பட்டோன் : சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்.
திணை : வாகைதிணை
"நன்றாய்ந்த நீள்நிமிர்சடை
முதுமுதல்வன் வாய்போகாது
ஒன்றுபுரிந்த ஈரிரண்டின்
ஆறுணர்ந்த ஒருமுதுநூல்
இகல்கண்டோர் மிகல்சாய்மார்
மெய்அன்ன பொய்உணர்ந்து
பொய்ஓராது மெய்கொளீஇ
மூவேழ் துறையும் முட்டின்று போகிய
உரைசால் சிறப்பின் உரவோர் மருக"
- புறநானூறு.
பொருள் : மேன்மை பொருந்திய நீண்ட சடையை உடைய, எல்லாவற்றையும் நன்கு நுணுகி அறிந்த, #முழுமுதற்_கடவுளாகிய சிவனின் வாக்கிலிருந்து நீங்காது அறம் ஒன்றையே அடிப்படையாகக் கொண்ட, நான்கு பிரிவுகளும் ஆறு உறுப்புகளும் உடைய பழைய நூலாகிய வேதத்திற்கு மாறுபாடுகளைக் கண்டோரின் செருக்கை அழிக்க விரும்பி, அவரது மெய் போன்ற பொய்யை உணர்ந்து, அப்பொய்யை மெய்யென்று கருதாமல், மெய்யைக் கொண்டு இருபத்தொரு வேள்வித் துறைகளையும் குறையின்றிச் செய்து முடித்த, சொல்லுதற்கரிய சிறப்புடைய முனிவர்களின் வழித்தோன்றலே"
அதாவது இங்கு இரிக்கு, யஜுர், சாம, அதர்வணம் என்பவை வேதத்தின் நான்கு பிரிவுகளாகும். அதோடு சிட்சை, நிருத்தம், சந்தசு, சோதிடம், கற்பம், வியாகர்ணம் என்ற ஆறு நூல்களும் வேதத்தின் ஆறு அங்கங்களாகும் (உறுப்புகள்). ஒருவேளை அறம் பொருள் இன்பம் வீடு தான் வேதங்கள் எனில் புறநானூறு கூறும் அறம் பொருள் இன்பம் வீட்டிற்கான ஆறு உறுப்புகள் எதுவென சொல்லியே ஆக வேண்டும். இவர்களின் இப்பிரிவினைவாதத்திற்கு காரணம் ஆறாம் திருமுறையில் ,அறுபத்து ஆறாவது பதிகத்தின் இரண்டாம் பாடலில் அப்பர் பெருமான் இதுபற்றி கூறும்போது
"ஆலதன் கீழிருந்து நால்வர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு,ஆறங்கம், வேதம், தெரித்தானை"
என்று பாடியுள்ளார், அதாவது இந்த பாடலில் அறம்,பொருள், இன்பம், வீடு என்று குறிப்பிடுவதோடு “ஆறங்கம்” என்று குறிப்பிட்டுவிட்டு அதற்கு பின்னர் வேதம் என்று குறிப்பிடுகிறார். அதாவது
“அறம்,பொருள், இன்பம்,வீடு” என்பது தான் வேதம் என்றால்
அப்பர் பெருமான் “
அறம், பொருள், இன்பம், வீடு,வேதம் என்றோ🤔 அறம், பொருள், இன்பம், வீடு முதலிய வேதம் என்றல்லவா பாடியிருக்க வேண்டும்.🤔 ஆனால்,
“அறம், பொருள், இன்பம், வீடு” என்ற சொற்றொடருக்கும், வேதம் என்ற பதத்திற்கும் நடுவில் “ஆறங்கம்” என்று பாடியுள்ளாரே? இதில் வேதத்தை” அறம், பொருள், இன்பம், வீட்டிலிருந்து வேறுபட்ட ஒன்றாக பாடியுள்ளாரே? இது மேலே பதிந்த ஆவூர் மூலங்கிழார் பாடிய சங்க பாடலுக்கு இணை அல்லவா?
அவ்வாறு இருக்க எப்படி “அறம், பொருள், இன்பம், வீடு” என்பது வேதங்களாக இருக்க முடியும்.? இதை புரிந்துகொண்ட சிலர் வேதம் என்பது ரிக் யஜுர் சாம அதர்வண வேதம் தான் எனவும் நான்மறை என்றால்தான் அறம் பொருள் இன்பம் வீடு எனவும் கூறுகின்றனர். இக்கூற்றை ஏற்பவர்கள் சங்ககாலத்தில் அதுவும் இன்றிலிருந்து 2300 ஆண்டுகளுக்கு முன்பு நால்வேதங்களாகிய ரிக் யஜுர் சாம அதர்வண முதலிய வேதங்கள் இருந்தது என்பதை ஏற்க வேண்டும். எனெனில்,
"நற்பனுவல் நால் வேதத்து
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பன்மாண வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி யூபம் நட்ட வியன்களம் பல கொல் யாபல கொல்லோ பெரும!”
- புறநானூறு
வேதம் என்பது ரிக் யஜுர் முதலான நான்கு வேதங்களைத்தான் குறிக்கும் என்று ஏற்றுக்கொண்டால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே வேதங்கள் நடைமுறையில் இருந்ததையும் ஏற்றுத்தான் ஆக வேண்டும். ஆனால் நான்மறை என்பதுதான் அறம் பொருள் இன்பம் வீடு என்பதற்கு யாதொரு குறிப்புகளும் இல்லை.
இந்த குழப்பத்தை இன்னும் சில திருமுறை வாசகங்களுடன் ஒப்பிடலாம். அதாவது
"வேதியர்கள் வேள்வி யொழியாது மறைநாளும் ஓதி"
என்ற திருமுறை வாசகத்தின் மூலம் #நான்மறை (வேதம்)ஓதியே வேள்வி செய்தனர் என்பது தெளிவு.
"கேள்வியர் நாள்தொறும் ஓதும் நால்வேதத்தர் கேடிலா வேள்வி செயந்தணர்"
அதாவது இந்த வரிகள் மூலம் அதே நான்மறையை நால்வேதம் என்று சுட்டியே வேள்வி செய்தனர் என்று பொருள் கொள்வதே சிறந்தது. ஏனெனில் மறையும் வேதமும் தனித்தனியே ஓதி வேள்வி செய்தனர் என்பது ஒவ்வாததாகிறது.
"இருக்கு வேதம்
முறைமுறை இருக்குச் சொல்லி
எந்தைநீ சரண"
என்ற திருமுறை வரிகளால் இருக்கு என்பதை ரிக் வேதமாக பொருள் கொண்டால், (அப்படித்தான் பொருள்கொள்ள வேண்டும்)
"இருக்கு நான்மறை ஈசனை யேதொழும் கருத்தினை"
என்ற வரிகளைக் கொண்டு ரிக் வேதம் முதலான நான்மறை என்பதே பொருளாக கொள்ள வேண்டுமே அன்றி இரண்டையும் பிரித்து பிரித்து அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும்..!
ஒருவேளை நான்மறை என்பதை அறம் பொருள் இன்பம் வீடு என்று கொண்டாலும் வேதத்தையும் நல்கியவர் சிவனே என்பதையும் ஏற்க வேண்டும். ஏனெனில்,
"விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள்
புரித்தானைப் பதஞ்சந்திப் பொருளுருவாம்" என்றும்,
"எரித்தவன் முப்புர மெரியின்மூழ்கத்
தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல்
விரித்தவன் வேதங்கள் வேறுவேறு
தெரித்தவ னுறைவிடந் திருவல்லமே"
என்றும் குறிப்பிட்டுவதோடு மட்டுமல்லாமல்,
_________________________________________
"நான்மறையோடு ஆறங்கம் நவின்ற நாவர்"
"அங்கமொ ராறுடை வேள்வி யான வருமறை நான்கும்"
"நான்மறையோடு ஆறங்கம் வல்லானை"
- திருமுறைகள்
__________________________________________
என்ற வரிகளால் நான்மறைக்கும் ஆறு அங்கங்கள் உள்ளன என்பதோடு வேதத்திற்கும் ஆறு அங்கங்கள் உண்டு என்பதையும் ஏற்று அறம் பொருள் இன்பம் வீட்டிற்கான ஆறங்கம் எதுவென குறிப்பிட வேண்டும்.
______________________________________
"அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடிபரவ"
"அங்கம் ஆறும் வேதம் நான்கும்
ஓதும் அயனொடு மால்"
"அங்கமும் வேதமும் வைத்தார்"
- திருமுறைகள்
_______________________________________
என்று வருவதால் நான்மறையாகிய அறம் பொருள் இன்பம் வீட்டிற்கு ஏது ஆறு அங்கங்கள்? அதாவது அறம் பொருள் இன்பம் வீடு என்ற மறைக்கு ஆறு அங்கங்கள் உள்ளதாகவும், வேள்வியின்போது ஓதவேண்டிய இந்த ஆறு அங்கங்களுடன் கூடிய அறம் பொருள் இன்பம் வீடாகிய நான்மறை எங்கே உள்ளது? என்பதற்கும் விடை காண வேண்டும் தானே?
இவற்றிற்கெல்லாம் ஒருபடி மேலாக நான்மறை அல்லது நால்வேதம் ஆறங்கம்‌ மற்றும் ஆகமம் ஆரியருடையதே என்று பாவணர் கூறுவதன் மூலம் நால்வேதமும் நான்மறையும் ஒன்றுதான் என்பதை பாவணரே ஏற்றுள்ளார் என்பதோடு நிகண்டுகளிலும் வேதத்திற்கான பெயர்களில்தான் நான்மறையும் உள்ளது என்பதை கருத்தில் கொண்டு நான்மறையும், நால்வேதமும் ஒரே பொருளைத்தான் தரும் என்பதைக்கூறி அமைகிறேன்...!


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard