ஒளிமிக்க ஞாயிற்று மண்டிலத்துக்குரிய வடமொழிப் பெயரான பகன் என்ற கண்ணற்றவனின்
முகத்தைக்கொண்டவனான திருதராட்டிரனின் மக்களுள் மூத்தவனின் சூழ்ச்சியால்
ஐவர் என்று உலகம் போற்றும் அரசர்கள் உள்ளேயிருக்க,
வேலைப்பாடு மிக்க அரக்கு மாளிகையைக் கட்டுக்கடங்காத நெருப்பு சூழ்ந்துகொண்டதைப் போல்,
கிளர்ச்சியூட்டும் மதநீரைச் சொரிகின்ற, விரைந்து சுழலும் களிறுகள் உள்ளே அகப்படுக்கொள்ள
காய்ந்துபோன மூங்கில்களைக் கொண்ட உயர்ந்த மலையைச் சூழ்ந்து வெடிக்கும் பெருந்தீயை,
தீயினால் ஒளிவிடும் உருவத்தையுடைய அரக்கு மாளிகையை காற்றின் மகனான வீமன் உடைத்துத் தன்
உள்ளத்துக்கு நெருங்கிய உடன்பிறப்புகளோடு பிழைத்து வெளியேறியது போல
கணைமரத்தைப் போன்ற பருத்த துதிக்கையினால் தன் இனத்தைக் காக்கும் அழகிய வேழம்
வயக்குறு மண்டிலம் என்பது மூன்றாம் பிறை. இதற்கான வடமொழிப் பெயர் ‘திரிதியை’. இந்தத் திரிதியையின் பெயர் பெற்றவன் ‘திருதராட்டிரன்’. திருதராட்டிரன் மக்களுள் முதியவன் துரியோதனன். துரியோதனன் சூழ்ச்சியால் ‘ஐவர்’ என்று என்று பெயர் பெற்ற பாண்டவர் அரக்கு மாளிகையின் உள்ளே இருந்தனர். துரியோதனன் கைத்திறனால் கட்டப்பட்ட அந்த மாளிகைக்கு அவனே தீ மூட்டினான். வீமன் பாண்டவர்களைக் காப்பாற்றினான். அது போல மலையில் மூங்கில் காட்டில் தீ பற்றிக்கொண்டபோது ஆண்யானை அந்தத் தீயைக் காலால் மிதித்து, தன் யானைகளைக் காப்பாற்றி அழைத்துச் செல்லும் காடு அது. இத்தகைய கொடிய காட்டைக் கடந்து செல்லும் ஐயனே! இவள் நிலைமையைக் கேட்டருள்க.