மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான் பிறப்பொழுக்கங் குன்றக் கெடும் . பார்ப்பான் ஓத்து மறப்பினும் கொளல் ஆகும் - ஆரியப் பார்ப்பானான பிராமணன் தான் கற்ற வேதத்தை மறந்தானாயினும் அதைத் திரும்ப ஓதிக்கொள்ள முடியும் ; பிறப்பு ஒழுக்கம் குன்றக்கெடும் - ஆனால் அவன் தன்னை உயர்ந்தவனாகச் சொல்லிக் கொள்ளும் பிறப்பு , தமிழ ஒழுக்கங் குன்றின் கெடும் . ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த நாட்டுப் பண்பாட்டின்படியே ஒழுக்கவரம்பிருக்கும் . பிராமணன் வேதத்தை மறந்தானா மறக்க வில்லையா என்பது தமிழ்நாட்டில் ஆய்விற்குரியதன்று ; அவன் தமிழ வொழுக்கத்தைக் கடைப்பிடித்தானா இல்லையா என்பதே அதன் ஆய்விற்குரியதாம் . ஆகவே , அவ்வொழுக்கத்தினாலேயே அவன் உயர்குலத்தானாவான் என்பதும் , அது கெட்டவிடத்துத் தாழ்ந்த குலத்தானாகிவிடுவான் என்பதும் , தமிழறநூல் முடிபாம் .
மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் (ஒழுக்கமுடைமை:134) பொழிப்பு (மு வரதராசன்): கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும். மணக்குடவர் உரை: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று. பரிமேலழகர் உரை: ஓத்து மறப்பினும் கொளலாகும் - கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.- அந்தணது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். (மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.) வ சுப மாணிக்கம் உரை: கற்பவன் மறந்தாலும் படித்துக் கொள்ளலாம்; மானிட ஒழுக்கம் குறைந்தாலோ கெடுவான். பொருள்கோள் வரிஅமைப்பு: மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும். பதவுரை: மறப்பினும்-மறந்து விட்டாலும்; ஓத்து-ஓதுதல், கற்றல், வாசித்தல்; சொல்லுதல், வேதம்; கொளல்ஆகும்-பெற்றுக் கொள்ள முடியும்; பார்ப்பான்-நூல் ஆய்வான்; பிறப்பு-மனிதப்பிறவி, மனித வாழ்க்கை; ஒழுக்கம்-நன்னடத்தை; குன்ற-தவற; கெடும்-அழியும். மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: பரிதி: வேதம் ஓதி மறந்தாலும் பின்பு சந்தத்தை விட்டு ஓதிக்கொள்ளலாம்; [சந்தம்-சந்தஸ் என்னும் வேதஇசை] காலிங்கர்: தனது குலமரபுக்கு முதற்காரணமாகிய தான் ஓதிய வேதத்தை மறந்தானாயினும் பின்னும் அஃது ஓதிக்கொளலாயிருக்கும்; பரிமேலழகர்: கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம்; பரிமேலழகர் குறிப்புரை: மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். 'வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். இன்றைய ஆசிரியர்கள் 'பார்ப்பான் மறந்தாலும் வேதத்தை மீண்டும் ஓதிப் பெறலாம்', 'நூலாய்பவன் தான் கற்ற கல்வியை மறந்து போனாலும் திரும்பவும் கற்றுக் கொள்ளலாம்', 'நூல்கற்பான் கற்றதை மறந்து விட்டாலும், மீண்டுங் கற்றுக் கொள்ளுதல் கூடும். (அதனால் இழுக்கொன்றும் இல்லை.)', 'நூலை ஆராய்கின்றவன் தாம் கற்ற நூலை மறந்தாலும் மீண்டும் கற்றுக் கொள்ளலாம்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர். மறந்து விட்டாலும், மீண்டுங் கற்றுக் கொள்ளுதல் கூடும் என்பது இப்பகுதியின் பொருள். பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்: இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும். மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று. பரிதி: ஒழுக்கம் கெட்டால் பிராயச்சித்தம் பண்ணினாலும் போகாது; செய்த தோஷம் அனுபவிக்க வேண்டும் என்றவாறு. [பிராயச்சித்தம் - பாவக்கழிவு; தோஷம் - குறை அல்லது பாவம்] காலிங்கர்: மற்று அந்தணனது குலப்பண்பு தனது ஆசாரம் குறைபடவே கெடும் என்றவாறு. பரிமேலழகர்: அந்தணது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும். பரிமேலழகர்: சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும். 'பிராமணன் ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்' என்று மணக்குடவரும் 'ஒழுக்கம் கெட்டால் பாவக்கழிவு இல்லை' என்று பரிதியும் 'அந்தணது குலப்பண்பு ஒழுக்கம் குறைவுபடவே கெடும்' என்று காலிங்கரும் 'ஒழுக்கம் குன்ற அந்தணது வருணம் கெடும்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர். இன்றைய ஆசிரியர்கள் 'ஆனால் அவன் குடிப்பிறப்பு ஒழுக்கம் குறையக் கெட்டுவிடும்', 'ஆனால் ஒழுக்கம் குறைதலால், சிறந்த அவன் குடிப்பிறப்பு அழிந்து போகும்', 'அவன் ஒழுக்கத்திற் குறைவுபட்டானாயின் அவனது குடியின் சிறப்பு அழிந்து படும்', 'ஆனால் மக்கட் பிறப்புக்குரிய நல்லொழுக்கம் நீங்குமேல் அவன் அழிவான்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர். ஒழுக்கம் தவறினால் பார்ப்பான் பிறப்பு கெட்டுவிடும் என்பது இப்பகுதியின் பொருள். நிறையுரை: கற்றதை மறந்து விட்டாலும், மீண்டுங் கற்றுக் கொள்ளுதல் கூடும்; ஒழுக்கம் தவறினால் பார்ப்பான் பிறப்பு கெட்டுவிடும் என்பது பாடலின் பொருள். இங்கு சொல்லப்பட்ட பார்ப்பான் யார்? மறந்தும் ஒழுக்கம் தவறக்கூடாது. ஒழுக்கம் குன்றினால் மனித வாழ்வே சீர்மை கெட்டுப்போய்விடும். தான் கற்ற நூலை மறந்தாலும் நூல்ஆராய்கின்றவன் மீண்டும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் நல்லொழுக்கம் நீங்குமேல் அவன் பிறவியே பொருளற்றதாகிவிடுகிறது. ஓத்து என்ற சொல் ஆரியர்களின் வேதத்தைக் குறிப்பது என்று பல உரையாளர்கள் கூறினர். தொன்றுதொட்டு ஒருவர்க்கு ஒருவரால் ஓதப்பட்டு வருவதாலும் ஓதி ஓதி உணரும் காரணத்தாலும் வேதத்திற்கு ஒத்து என்னும் பெயர் வழங்கப்படுகின்றது என்பர். பார்ப்பான் என்ற ஒருவகை இனத்தார்க்கு வேதம் ஓதுதல் மிக இன்றியமையாதது; வேதம் ஓதுதலை தமக்கே உரியதென்று அவர்கள் சொல்வர். அது அவர்களுக்கு என்று அவர்களாகவே விதித்துக்கொண்ட அறுவகை தொழில்களில் முதன்மையான ஒன்று (மற்றவை ஓதுவித்தல், வேட்டல், வேட்டுவித்தல், ஈதல், ஏற்றல் ஆகியன). அதனால்தான் அவர்கள் வேதியர், மறையவர் எனப் பெயர் கொண்டனர். வேதம் ஓதுவதைக் கைவிட்ட பார்ப்பனர்களைச் சிலப்பதிகாரக் காட்சி ஒன்று காட்டுகிறது. கண்ணகியும் கோவலனும் மதுரையை நோக்கிச் செல்லும்போது, மறைநூல்களை ஓதுவதைக் கைவிட்டு வரிப்பாடல்களைப் பாடுவதை மேற்கொண்ட அந்தணர் வாழும் ஊர் ஒன்றைக் கண்டனர் எனக் கூறப்படுகிறது. வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூன் மார்பர் உறைபதிச் சேர்ந்து (சிலப்பதிகாரம் புறஞ்சேரியிறுத்த காதை 38-39: பொருள்: வரிப் பாட்டைப் பயிலும் கொள்கையோடு பொருந்தி வேதநூற் கொள்கையினின்றும் வழுவுதலையுடைய முப்புரிநூல் அணிந்த மார்பினையுடை யோர் வதியும் பதியைச் சேர்ந்து (வரி - காமம் கண்ணிய இசைப் பாட்டு)). அக்கால மக்கள் வரிப்பாடல்களையே பெரிதும் விரும்பியதனால் பொருள் வருவாய் கருதி அவற்றைப் பாடினர் போலும் (காமாட்சி சீனிவாசன்). பார்ப்பானை எடுத்துக்காட்டாக்கி 'பார்ப்பனர் ஒருவர் தாம் கற்றுக்கொண்ட கல்வியை மறந்தாலும் அதை அவர் மீண்டும் கற்றுக்கொண்டுவிடலாம் ஆனால் அவருக்கென்று விதிக்கப்பட்ட ஒழுக்கநெறிகளை மறந்தால், அவருடைய நிலையிலிருந்து தாழ்ந்த நிலைக்குப்போவர்' என்ற கருத்தை சொல்கிறது என்று ஒருசாரார் இக்குறட்பொருளை விளக்குவர். இன்னும் சிலர் பார்ப்பனராவார் வேதம் ஓதுதல், ஓதுவித்தல் என்ற தொழிலையே மேற்கொள்ள வேண்டும். பார்ப்பனக்குரிய பிறப்பொழுக்கம் குன்றியவர்களை பார்ப்பனர் என்று மதிக்கக் கூடாது. பார்ப்பனக்குரியன அல்லாத மற்றத் தொழில்கள் செய்வாராயின் அந்தந்த இனத்திலேயே அவர்களைச் சேர்க்க வேண்டும் என்பதாகக் கூறுவர். மற்றொரு சாரார், இங்கு சொல்லப்பட்ட ஓத்து என்ற சொல் வேதத்தைக் குறிக்காது என்றும் அச்சொல்லுக்கு கற்று என்ற நேர்பொருளே கொள்ளவேண்டும் என்பர். 'ஓத்து மறப்பினும்' என்பதற்கு படித்ததை யெல்லாம் மறந்து போனாலும் என்றும். தினந்தினம் தவறாமல் ஓதவேண்டிய நேரங்களில் ஓத மறந்து விட்டாலும் என்றும் இவர்கள் பொருளுரைப்பர். பார்ப்பான் என்ற சொல்லுக்கு நூலை ஆராய்பவன் என்றும் ஒரு பொருள் உண்டு. அப்பொருளிலேயே அச்சொல் இப்பாடலில் ஆளப்பட்டது என்பவர்கள் ஓத்து என்பதற்கு கற்று என்றும் பார்ப்பான் என்பதற்கு நூலை ஆராய்பவன் என்று பொருள் கொண்டு நூலை ஆராய்ந்து பார்ப்பான் மறப்பினும் மீட்டும் கற்றுக் கொள்ளலாம்; ஆனால் 'பார்ப்பானது பிறப்பு, ஒழுக்கம் குன்றக் கெடும்' என விளக்கம் செய்வர். ஒழுக்கம் குன்றின் அவனது பிறப்பு -மனிதப் பிறப்பே கெடும் அதாவது வாழ்க்கையே கெடும் என்று இவர்கள் பொருள் உரைப்பர். இரா சாரங்கபாணி "வள்ளுவனார் பார்ப்பான் வேதம் ஓதுதலை மறக்கலாகாது என்னும் கருத்துக்குச் சிறப்பளிக்கவில்லை. அதனை மறந்தாலும் மீண்டும் கற்கலாம்; ஆனால் அதனினும் ஒழுக்கமே சிறப்புடையது; அது கெட்டால் மக்கட்பிறப்பே கெடும் என ஒழுக்கத்தின் விழுப்பத்தை இக்குறளில் வலியுறுத்திக் காட்டுவர். வேதம் ஓதுதலினும் ஒழுக்க நெறி நிற்றல் விழுமிது என்பதனை வலியுறுத்துதலால் ஒருவகை இனத்தாரின் கொள்கையை மறுத்துத் தமிழர்க்குரிய ஒழுக்க நெறியை நாட்டியது தெரிகிறது. ‘நல்லா றெரினும் கொளல் தீது’ என்ற குறளும் ஆரியக் கொள்கையைக் குறிப்பான் மறுத்தல் காணலாம். ஒவ்வாத பிறர்தம் கொள்கைகளை மறுத்தல் வள்ளுவர் இயல்பு என்பதனை ‘மழித்தலும் நீட்டலும் வேண்டா’ (280) என்னும் குறளானும் அறியலாம். ‘பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’ என்பதற்குப் பார்ப்பானது பிறப்புக்குரிய ஒழுக்கம் என வருணாசிரம தன்ம முறையில் பொருள் கொள்ளாமல் பார்ப்பான் பிறப்பு மக்கட்குரிய ஒழுக்கம் குன்றக் கெடும் எனக் கொள்வதே குறள் நெறிக்கு இயல்பாகும்" என்று இக்குறள் பற்றிக் கருத்துரைப்பார். இவ்விளக்கம் சிறப்பாக உள்ளது. மணக்குடவர் தனது சிறப்புரையில் 'இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று' என்கிறார். இதன் பொருள் 'ஓதிக் கற்கின்ற கல்வியைக் காட்டிலும், ஒழுக்கமே சாலச் சிறந்தது' என்பது. இதுவே இக்குறள் கூறும் செய்தி. ஓதியதை யாரும் மறக்கவே கூடாது; மறந்தால் அதுவும் ஓர் ஒழுக்கக் குறைவாம் என்பதையும் இப்பாடல் உணர்த்துவதாக உள்ளது. இங்கு சொல்லப்பட்டுள்ள பார்ப்பான் யார்? வள்ளுவர் இந்த ஒரு குறளில் மட்டும்தான் பார்ப்பான் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். நச்சினார்க்கினியர் கலித்தொகை உரையில் 'வேதாந்தத்தையே பொருள் என்று மேற்கொண்டு பார்ப்பார்' என்று சொல்விளக்கம் கூறுகிறார். 'பார்ப்பார் என்பது ஆரியப்பார்ப்பனரையும் குறித்தல் இயல்பானது' என்பார் இரா சாரங்கபாணி. 'பார்ப்பான்: பார்த்தான், பார்க்கிறான், பார்ப்பான் எனப் பார்த்தல் தொழிலின், கால அடைவு வழி வந்த சொல்லே பார்ப்பான் என்னும் சொல். அது இந்நாள் கூறுவதுபோல் ஒரு குலப்பெயரன்று; நூல் கற்பார்க்கு வாய்ந்த பெயர் 'ஓதுவார்' என்பது போலப் பொதுமை சுட்டும் பெயரே; 'பொச்சாப்புப் பார்ப்பார் (285) என்பதில் வந்துள்ள 'பார்ப்பார்' என்ன பொருளைத் தருமோ, அதே பொருளையே 'பார்ப்பான்' என்பதும் (134) தரும். நூல் (பொத்தகம்) படிப்பவன், கணியம் பார்ப்பவன், ஏடு பார்ப்பவன், தொடுகுறி பார்ப்பவன் என்பன போல ஆசிரியத் தொழில் பார்ப்பவனைக் குறித்தது' என்பது இளங்குமரன் தரும் விளக்கம். ரா பி சேதுப்பிள்ளை 'இக்குறளில் அமைந்திருக்கின்ற பார்ப்பான் என்னும் சொல்லிற்கு வேதியன் என்று உரையாசிரியர் பொருள் கொண்டுள்ளளர். ஆனால் வள்ளுவர் காலத்தில் அந்தணன், பார்ப்பான் என்ற சொற்களெல்லாம், சாதிப் பெயரை உணர்த்தாமல், காரணப் பெயர்களாகவே விளங்கின என்பது மொழிநூல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து. அழகிய செந்தண்மை பூண்டு ஒழுகிய அறவோன் அந்தணன் என்று அழைக்கப்பட்டாற்போல, நூல்களைப் பார்த்து பரிசீலனை செய்பவர் 'பார்ப்பார்' என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இவ்விரு சொற்களும் ஒரு சாதியைக் குறிக்கும் பெயர்களாய் அமைந்தன. இவ்வுண்மையை மனத்தில் கொண்டு மேற்கூறிய குறளின் பொருளை ஆராய்தல் இன்றியமையாததாகும்' எனக் குறித்துள்ளார். 'பார்ப்பான்' என்ற சொல்லுக்குக் கற்பவன் என்று வ சுப மாணிக்கமும், நூல்கற்பான் என்று கா சுப்பிரமணியம் பிள்ளையும் நூலை ஆராய்கின்றவன் என்று சி இலக்குவனாரும் நூல்களை ஆராய்ந்து பார்ப்பவன் என்று குழந்தையும் தலைமை வேளாண் மரபுவழி நின்று தமிழ் மந்திரம் ஓதுபவர் எனக் கா அப்பாத்துரையும் பொருள் உரைத்தனர். ஆரிய பிராமணர் தம்மைப் பார்ப்பான் என அழைக்கப்படுவதை விரும்புவதில்லை; அதை இழிவு என வெறுக்கின்றனர் என்ற பார்வையும் உள்ளது. இங்குள்ள 'பார்ப்பான்' என்ற சொல்லுக்கு நூலை ஆராய்கின்றவன் என்பது பொருள். கற்றதை மறந்து விட்டாலும், மீண்டுங் கற்றுக் கொள்ளுதல் கூடும்; ஒழுக்கம் தவறினால் கற்பவன் வாழ்வு கெட்டுவிடும் என்பது இக்குறட்கருத்து. கற்றலினும் ஒழுக்கமுடைமை மேம்பாடானது. பொழிப்பு -கற்றதை மறந்தாலும் மீண்டும் படித்துக் கொள்ளலாம்; பார்ப்பான் ஒழுக்கம் தவறினால் பிறப்பு கெட்டுவிடும்.
ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின் (அதிகாரம்:கொடுங்கோன்மை குறள் எண்:560) பொழிப்பு: நாட்டைக் காக்கும் தலைவன் முறைப்படி காக்காவிட்டால் அந்நாட்டில் பசுக்கள் பால் தருதலாகிய பயன் குன்றும்; அந்தணரும் அறநூல்களை மறப்பர். மணக்குடவர் உரை: பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்: அரசன் காவானாயின். இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று. பரிமேலழகர் உரை: காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின், ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர். (ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.) கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: அரசன் குடிகளைக் காவானாயின், முயற்சி செய்வார்க்கு அம்முயற்சியால் இயற்கையில் உளதாம் பயன் இல்லாமற்போம். அறியுந் தொழிலையுடைய கலைஞர் நூலினைக் கற்பதைக் கைவிட்டு அதனை மறப்பர். பொருள்கோள் வரிஅமைப்பு: ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்: பதவுரை: ஆ-பசு; பயன்-கொள்ளும் பயன்; குன்றும்-குறையும்; அறு-ஆறாகிய; தொழிலோர்-தொழிலை உடையவர்; நூல்-நூல்; மறப்பர்-நினைப்பொழிவர். இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: பசுக்கள் பால் குறையும்: அந்தணர் வேதம் ஓதார்; பரிதி: ஆவின் பயன் குன்றும், வேத நீதியும் கெடும்; காலிங்கர்: உலகத்து முந்நிரைப் பசுக்களானவை கறவையும் கன்றுமாகப் பயன்பட்டு வருகிற பயனும் குன்றும்; மற்று அதுவேயும் அன்றி அறுவகைத் தொழிலுக்கு உரியராகிய அந்தணரும் அருமறை ஓதலும் மறந்துவிடுவர்; [முந்நிரை பசுக்கள் - பசு, எருமை, ஆடு மூவிலாமான மந்தைகளில் ஒன்றாகிய பசுக்கள்] பரிமேலழகர்: அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர். பரிமேலழகர் குறிப்புரை: ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. ஆபயன் என்றதற்கு அனைத்துப் பழம் ஆசிரியர்களும் 'பசுக்கள் பால் குறையும்' என்ற பொருளில் உரை கூறினர். அறுதொழிலோர் என்பதற்கு மணக்குடவர், காளிங்கர், பரிமேலழகர் மூவரும் 'அந்தணர்' எனப் பொருள் கண்டனர். பரிதி 'வேதநீதி' என்றார். நூல்மறப்பர் என்ற தொடர்க்கு மணக்குடவர் 'ஓதார்' என்றும் பரிதி 'கெடும்' என்றும் காலிங்கர் 'மறை ஓதல் மறந்துவிடுவர்' என்றும் பரிமேலழகர் 'நூல்களை மறந்துவிடுவர்' உரை நல்கினர். இன்றைய ஆசிரியர்கள் 'பசு பயன் தாராது; எத்தொழில்களும் இரா', 'பசுக்கள் பால குறையும். அறுதொழில் புரியும் அந்தணர் மறைநூல் ஓத மறப்பர்', 'அந்த நாட்டில் பசு இனத்தால் அடையக்கூடிய பலன்களும் அறிவினால் நடக்கக்கூடிய கல்வி கற்றல், பொதுநல வேள்வி செய்தல், செய்வித்தல், கொடுப்பது, வாங்குவது ஆகிய ஆறு தொழில்களும் அவற்றிற்கான அறிவும் இல்லாது போகும்', 'பசுக்கள் பால் தருவதில் குறைவு ஏற்படும். அறுவகைப்பட்ட தொழிலோரும் தம் தொழிலைச் செய்ய இயலாமல் மறந்து விடுவர். (அறுதொழில்- உழவு, நெய்தல், அமைச்சு, அரசு, கற்பித்தல், வாணிபம்)', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர். ஆகும் பயன் இல்லாமற்போம்; எத்தொழில் புரிவோரும் அவரவர் தொழில் அறிவினை இழப்பர் என்பது இப்பகுதியின் பொருள். காவலன் காவான் எனின்: பதவுரை: காவலன்-காப்பவன்; காவான்-காக்கமாட்டான்; எனின்-என்றால். இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: அரசன் காவானாயின். மணக்குடவர் குறிப்புரை: இது காவாமையால் வருங் குற்றங் கூறிற்று. பரிதி: மன்னவன் செங்கோல் குன்றின். காலிங்கர்: என்னை எனின் வையம் காவலன் ஆகிய மன்னவன் செங்கோல் முறையால் பாதுகாவாது கொடுங்கோன்மை செய்து ஒழுகின் என்றவாறு. பரிமேலழகர்: காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின். பரிமேலழகர் குறிப்புரை: இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது. 'அரசன் உயிர்களைக் காவானாயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். இன்றைய ஆசிரியர்கள் 'காத்தற்கு உரிய அரசன் காவாவிடின்', 'நாட்டினை நன்முறையில் காவல் புரியக்கூடிய அரசன் அங்ஙனம் காவாவிடின்', 'காக்கவேண்டிய முறையில் அரசன் குடிகளையும் அறங்களையும் காக்கத் தவறினால்', 'காவலன் அறநெறியில் நாட்டைக் காக்கவில்லையேல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர். ஆட்சியாளர் செங்கோல் முறையால் நாட்டைக் காக்கவில்லையென்றால் என்பது இப்பகுதியின் பொருள். நிறையுரை:ஆட்சியாளர் குடிமக்களைக் காக்கத்தவறினால் அவர்களுக்கு உண்டாகும் பயன் குறைந்துபோகும். எத்தொழில் புரிவோரும் அவரவர் தொழில் அறிவினை இழப்பர். ஆட்சியாளர் செங்கோல் முறையால் நாட்டைக் காக்கவில்லையென்றால் ஆகும் பயன் இல்லாமற்போம்; அறுதொழிலோர் நூல் கற்பதைச் செய்யார் என்பது பாடலின் பொருள். 'அறுதொழிலோர்' யார்? ஆபயன் என்ற சொல்லுக்கு ஆகும் பயன் என்பது பொருள். குன்றும் என்ற சொல் குறையும் என்ற பொருள் தருவது. நூல்மறப்பர் என்ற தொடர்க்கு நூலறிவின இழப்பர் என்று பொருள். காவலன் என்றது ஆட்சியாளன் குறித்தது. காவான் எனின் என்ற தொடர் காக்காவிட்டால் எனப்பொருள்படும். முறையற்ற ஆட்சியில் குடிமக்கள் முயற்சிக்கான பயன் இராது. தொழில் புரிவோர் அவரவர் தொழில் அறிவினை இழப்பர். குடியுள் நாடு அடங்கும் என்பது வள்ளுவம். அக்குடிமக்களைக் காக்கவேண்டியது நாட்டுத்தலைவனது முதற்கடமையும் பொறுப்பும் ஆகும். அவர்களைக் காவாதிருந்தால் அந்நாட்டில் கொடுங்கோன்மை ஆட்சி நடைபெறுகிறது எனக் கருதப்படும். குடிகளுக்குப் பாதுகாப்பு இல்லாவிட்டால் அவர்கள் ஆர்வம் குன்றி ஊக்கம் இழப்பர். அவர்களது முயற்சிக்கு உண்டான பயன் கிடைக்காது. தொழில் செய்வோர் தம் திறன் முன்னேற்றம் கருதார். இது வள்ளுவர் இப்பாடல்வழி கூறவந்த கருத்தாகும். ஆனால் குறளில் உள்ள ஆபயன் குன்றும், அறுதொழிலோர் நூல்மறப்பர் என்ற இரண்டு தொடர்களால் வெவ்வேறு மாறுபட்ட கருத்துக்கள் தோன்றின. ஆபயன் குன்றும்- இத்தொடர்க்கான விளக்கங்களை இரண்டு பெரும்பிரிவாகப் பகுக்கலாம். முதற்பிரிவினர் ஆபயன் என்பது ஆ+பயன் என விரிந்து பசுவினால் பெறும் பயன் எனப் பொருள்படும் என்பவர்கள். ஆபயன் குன்றும் என்றது பசுவினால் பெறும் பயன் குறையும் என்பதைக் குறிக்கும் என்பர் இவர்கள். கொடுங்கோலர் ஆட்சியில் பால் வளம் அதாவது பால், தயிர், வெண்ணெய், நெய் இவை குறையும். இதனால், அவற்றைப் பயன்படுத்தி அவியுணவு படைத்துச் செய்யப்படும் வேள்விகள் தடைப்படும். வேள்விகளால் என்ன பயன் விளையும்? தேவர்களை நோக்கி அக்கினியிற் செய்யப்படும் ஓமங்கள் சூரியனை அடைகின்றன; சூரியனிடமிருந்து மழை உண்டாகிறது; அதனால் தானியங்கள் விளைகின்றன; அவற்றால் உயிரினங்கள் வளர்கின்றன; இவை பயன்கள் என வேதம் சொல்கிறது; ஆபயன் குன்றலால் வேள்வி நடவாமையும் வேள்வி நடவாமையால் மழைபெய்யாமையும் உண்டாகும் என்பது இவர்கள் கருத்து. வேள்வி பற்றிச் சொல்லவிரும்பாதவர்கள் ஆட்சியாளன் அரசு முறை செய்யானாயின் முந்தைய குறளில் சொல்லப்பட்டதுபோல அவன் நாட்டில் வானம் பெயல் ஒல்லாது; மழை பெய்யாவிட்டால் பசும்புல் தலைகாட்டாது, ஆவினங்கள் மேய்தலின்றி பால் வற்றும் என்று வேறுவகையாக விளக்கம் கூறினர். ஆவினது பயன் என்பதற்குப் பசு கன்றீனாமை என்றபடியும் உரை உள்ளது. 'ஆனினம் பால் முதலிய உணவுப் பொருள் தந்து உலகத்தார்க்கு அச்சாணி அன்ன உழவுத் தொழிலுக்கு துணையாய் இருத்தலின் அதனைக் காத்தல் பேரறமாகக் கருதப்பட்டது. ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்>. (புறநானூறு 9) ஆவிற்கு நீரென் றிரப்பினும்.. (1066) என்னும் பகுதிகளை ஒப்பு நோக்குக. அறக் கொடுமைக்கு ஆன்முலை அறுத்த அறனிலோரைச்... (புறம் 34:1) சுட்டுதலையும் நினைக. எனவே, அறுதொழிலோர்க்கு அந்தணர் என்றும் ஆபயன் என்பதற்கு ஆவின்பயன் என்றும் கோடலே குறட்போக்குக்கு இயைந்ததாகும்' என்பது இரா சாரங்கபாணியின் கருத்துரை. 'ஆபயன் குன்றும்' என்பதற்கு பசுக்கள் பாலாகிய பயனைத் தருதலிற் குறைவுபடும் என்பதே பெரும்பான்மையோர் கருத்தாகிறது. இரண்டாவது பிரிவினர் ஆபயன் குன்றும் என்பதற்கு 'நாட்டுக்கு ஆகிக் கொண்டு வந்த பயன் ஆகாமலே அளவிற் குன்றிவிடும்' என்றும் 'ஆனபயன், ஆகின்ற பயன், ஆகும் பயன் என முக்காலத்துக்கும் விரியும்' என்றும் 'அரசனுக்கு ஆகும் பல வருவாய்கள் குறையும்' என்றும் உரை தருவர். கா சுப்பிரமணியம் பிள்ளை 'முயற்சி செய்வார்க்கு அம்முயற்சியால் இயற்கையில் உளதாம் பயன் இல்லாமற்போம்' என உரை கூறுவார். அறுதொழிலோர் நூல்மறப்பர்-இத்தொடர்க்கும் வேறுபட்ட பல விளக்கங்கள் உள. அறுதொழிலோர் என்ற சொல்லுக்கு அந்தணர் என்று தொல்லாசிரியர்கள் அனைவரும் மற்றும் பிற்காலத்தவர்களுள் பலரும் பொருள் கூறினர். இதற்கு..அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த தீயொடு விளங்கும் நாடன்... என்ற புறநானூற்றுச் செய்யுளையும் (397:20) ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், ஏற்றல், என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம் புரி அந்தணர்... என்ற பதிற்றுப்பத்துப் பாடலையும் (24) சான்றாகக் காட்டுவர். கற்பதும், கற்பிப்பதும், வேள்விகளைச் செய்வதும், வேள்விகளைச் செய்வித்தலும், ஈதலும், இரத்தலும் என்ற ஆறு தொழில்கள் அவர்க்குரியதெனக் கருதப்பட்டன என்பர். நூல்மறப்பர் என்றதற்குக் கொடுங்கோல் ஆட்சியில் அந்தணர் மறைகள் ஓதலை மறப்பர் எனவும் அவர்கள் தம் நூலை மறப்பின் அது சமுதாயத்திற்குத் தீங்காகும் அதனால் சமுதாயம் ஒரு நற்பயனை இழக்கின்றது எனவும் விளக்கம் தருவர். மறப்பர் என்ற சொல் நோக்கி மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் (ஒழுக்கமுடைமை 134) என்ற குறளை ஒப்புநோக்கச் சொல்வர். அறுதொழிலோர் என்போர் அந்தணர் அல்லர் என்று சொல்பவர்கள் அறுதொழிலோர் என்றதற்கு 'முதன்மையான தொழிலுடையோர்' எனவும், 'இன்றியமையாத சிறந்த தொழிலென அறுதி செய்யப்பட்ட தொழில்களாவன: உழவு, வணிகம், நெசவு, தச்சு, கொல் முதலியன' எனவும் மற்றும் வேறுவேறு தொழில்கள் கொண்ட தொகுப்புகளுடன் உரைகள் வகுக்கப்பெற்றன. நூல்மறப்பர் என்றதற்கு இவர்கள் 'தம் கொள்கையை விடுவர்' எனவும் 'தத்தம் கடமைகள் முறையாக செய்யமாட்டார்' எனவும் 'மறத்தல் என்பது முயன்று செய்யாமையையும் நூல் என்பது அத்தொழில்களின் நுட்ப அறிவையும் உணர்த்திற்று' எனவும் 'தம் தொழில் முறையை மறந்து விடுவர்' எனவும் 'தம் தொழிலைச் செய்ய இயலாமல் மறந்து விடுவர்' எனவும் 'தம் தொழிலுக்குரிய அறிவை மறந்து விடுவர்' எனவும் 'தத்தமக்குரிய நூல் கற்பதை அல்லது பார்ப்பதை விட்டுவிடுவர்' எனவும் பொருள் கூறினர். கா சுப்பிரமணியம் பிள்ளை அறிதொழிலோர் எனப்பாடங்கொண்டு 'அறியுந் தொழிலையுடைய கலைஞர் நூலினைக் கற்பதைக் கைவிட்டு அதனை மறப்பர்' என முற்றிலும் மாறுபாடான பொருள் கூறுவார். ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்... (புறநானூறு 9 பொருள்: பசுக்களும், பசுவின் இயல்பை ஒத்த அந்தணரும்...) என்ற சங்கச் செய்யுளை மேற்கோள் காட்டி இக்குறள் முறைதவறிய ஆட்சியில் ஆவும் அந்தணரும் தம் இயல்பு குன்றி உலகம் துன்புறும் என்பதைச் சொல்கிறது என்றனர். ஆனால் கொடுங்கோல் அரசின் கீழ உள்ள அனைவருக்கும் நேரும் தீங்குகளைக் கூறாது அந்தணர்க்குண்டானவை மட்டும் கூறுதல் வள்ளுவர் எண்ணமாயிருக்க முடியாது. இப்பாடலில் அறிதொழிலோர் என்போர் அந்தணர் என்றோ அவர்தம் தொழில்கள் இவைஇவை என்றோ எவையும் பட்டியலிடப்பட்டுச் சொல்லப்படவில்லை. எனவே இக்குறளுக்குப் பொதுமையில் பொருள் காண்பதே பொருத்தம். நாட்டை ஆள்பவன் அனைத்து மக்களையும் காக்க வேண்டுமேயன்றி, அந்த்ணர்களை மட்டும் காப்பாற்ற அரசாட்சி செய்யமாட்டான். முறையற்ற ஆட்சியில் இன்றியமையாத தொழில்கள் ஆறைச் செய்பவர்கள் தத்தம் கடமையை முறையாகச் செய்ய முடியாதவராகி, தமது தொழில் குறித்த நூல்களை நாளடைவில் மறப்பர் என்பது பொருளாகலாம். ஒருங்கிணைத்து நோக்கும்போது இக்குறளுக்கு ஆள்வோர் முறையாக ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றாவிட்டால், செய்தொழில்களால் ஆகின்ற பயன்கள் குன்றும்; எத்தொழில் புரிவோரும் அவரவர் தொழில் அறிவினை இழப்பர் எனப் பொருள் கொள்வது சிறக்கும். 'அறுதொழிலோர்' யார்? 'அறுதொழிலோர்' என்ற சொல்லுக்கு அந்தணர், அறுவகைத் தொழிலுக்கு உரியராகிய அந்தணர், ஆறு தொழிலுக்குரிய அந்தணர்கள், எத்தொழிலாரும், அறுதொழில் புரியும் அந்தணர், ஆறு தொழில்களைச் செய்ய வேண்டியவர்கள், அறியுந் தொழிலையுடைய கலைஞர், அறுவகைப்பட்ட தொழிலோர், முதன்மையான தொழிலுடையோர், அறுவகைத் தொழில் செய்வோர், அறத்தை வரையறுக்கும் நீதி நூலார், பணி செய்வதே கடமை என்று கருதும் பெரியோர் என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர். ஆறு தொழில்களாக பல தொகுப்புகளை உரையாளர்கள் கண்டு சொல்லியிருக்கின்றனர். வரிசை மாற்றியும் உறுப்புக்கள் மாற்றியும் கூறப்பெற்ற தொகுதிகள்: உழவு, நெய்தல், அமைச்சு, அரசு, கற்பித்தல், வாணிபம் கல்வி கற்றல், பிறருக்குக் கல்வி கற்பித்தல், பொதுநலத்துக்கான பெரு முயற்சிகளைச் செய்தல், அந்த முயற்சிகளுக்கு உதவி செய்தல், அந்த நன் முயற்சிகளுக்காக நன்கொடை கொடுத்தல், அவற்றிற்காக நன்கொடை வசூலித்தல் போன்ற அறிவு முயற்சிகளும் அன்பு முயற்சிகளும். இன்றியமையாதன என்று அறுதி செய்யப்பட்ட தொழில்கள்; உழவு, வாணிகம், நெசவு, தச்சு, கொல் முதலியன ஆறு அரசாங்க உறுப்பினர் உழவர், நெசவாளர், தச்சர், கொல்லர், வணிகர், படைவீரர் உழவு, கைத்தொழில், வணிகம், கைவினைகள், வடிவமைத்தல், வித்தை ஒவ்வொரு வருணத்தார்க்குமுரிய ஆறுஆறு தொழில்கள்: வேத மோதல், ஓதுவித்தல், யாகஞ் செய்தல், செய்வித்தல், ஈதல், ஏற்றல் என்பவை- அந்தணர்க்குரியன. ஓதல், யாகஞ் செய்தல், ஈதல், உலகோம்பல், படியியற்றல், பொருதல் என்பவை அரசர்க்குரியன. ஓதல், யாகஞ்செய்தல், பொருளீட்டல், ஈதல், பசுக்காத்தல் ஏருழல் என்பவை வைசியர்க்குரியன. ஏவல் செய்தல், பொருளீட்டல், உழுதல், பசுக் காத்தல், குயிலுவத் தொழில் செய்தல் (தோற்கருவிகளைக் கொட்டலும் துளைக்கருவிகளி ஊதலுமாம்), காருக வினைகளாக்கல் (பட்டு நூலையும் பருத்தி நூலையும் கொண்டு ஆடையாக்கலும் சுமத்தலும் உழுதலுமாம்) ஆகியவை சூத்திரர்க்குரியன. திவார நிகண்டு உழவு, வாணிபம், தொழில் ஆகிய மூன்றும் உடலுழைப்புத் தொழிலகள் எனவும் வரைவு, சிற்பம், வித்தை ஆகிய மூன்றும் மூளை உழைப்புத் தொழில்கள் எனவும் ஆறு தொழில்களைக் குறிப்பிடும். ‘அறுதொழிலோர்’ என்பது அறுவைத் தொழிலாளரை- நெசவுத்தொழிலாளரை அதாவது ஆடை நெய்வோரைக் குறிக்கும் என்றும் உரை உள்ளது. 'எத்தொழிலும்' என உரைத்தார் வ சுப மாணிக்கம். அந்தணர்க்குரிய ஆறு தொழில்கள் என்று சொல்லப்பட்டனவற்றில் கற்பித்தல் என்பது சரி. ஆனால் ஓதல் (படித்தல்) என்பது எப்படித் தொழிலாகும்? வேள்வி செய்வது ஒரு தொழிலாகலாம், வேள்வி செய்யத் தூண்டுவது எப்படித் தொழிலாகும்? ஈதல் என்பது ஒரு அறம்; அது தொழிலாகாது. ஆறுதொழில்கள் எவை என்று குறளில் எங்கும் சொல்லப்படவில்லை. எனவே அந்தணர்க்கான தொழில்களே அவை என்று அறுதியிட்டுக் கூறமுடியாது. ஆறுதொழில்கள் எனக் கருதத்தக்க வேறுபட்ட பலவகைப் பிரிவுகள் -சான்றுகளுடனோ ஊகங்களின் அடிப்படையிலோ- காணக்கிடக்கின்றன. எனவேதான் 'எத்தொழிலும்' எனக் கருத்துப் பொருளாக வ சுப மாணிக்கம் உரைத்தார் போலும். இதுவே இக்குறளுக்கான பொருத்தமான பொருள். ஆட்சியாளர் செங்கோல் முறையால் நாட்டைக் காக்கவில்லையென்றால் தொழில்களால் ஆகும் பயன் இல்லாமற்போம்; எத்தொழில் புரிவோரும் அவரவர் தொழில் அறிவினை இழப்பர் என்பது இக்குறட்கருத்து. கொடுங்கோன்மை ஆட்சியில் முயற்சிக்கேற்ற பலனும் செய்யும் தொழில்திறனில் முன்னேற்றமும் இல்லாமற் போகும். பொழிப்பு-ஆட்சியாளர் குடிமக்களைக் காக்காவிடின் தொழில்களால் ஆகும் பயன் குறையும். அவரவர் தொழில் அறிவு மங்கும்.
உலகில் இன்பத்தை நுகரவேண்டுமென்பதே பொதுவாக எல்லா மாந்தர்க்கும் இயல்பான நோக்கம். அவ்வின்பத்திற்குப் பொருள் இன்றியமையாதது. பொருள் சிறந்தபின், "தனக்கு மிஞ்சித்தானம்", "பாழாய்ப் போகிறது பசுவின் வாயிலே". என்னும் நெறிமுறைப்படி, தான் நுகர்ந்ததுபோக எஞ்சியதை உழைக்கவியலாதவரும் துறவியருமான பிறர்க்கு அளிப்பதும் இயல்பே. இதுவே அறமெனப்படுவது. இங்ஙனம் இன்பம், பொருள், அறம், என்னும் முக்குறிக்கோள் இயற்கையாகத் தோன்றின. அறத்தைச் சிறப்பாக நோக்காது இன்பத்தையே நோக்கும் இன்பநூல்களும் இலக்கண நூல்களும் இம்முப்பொருளையும் இம்முறையிலேயே குறிக்கும். "இன்பமும் பொருளும் அறனு மென்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின் காமக் கூட்டங் காணுங் காலை" (கள. 1) என்று தொல்காப்பியங் கூறுதல் காண்க. தமிழர் புறநாகரிகத் துறைகளில் மட்டுமன்றி அகநாகரிகமான பண்பாட்டுத்துறையிலும் மறுமைக்குரிய சமயத்துறையிலும் தலைசிறந்திருந்ததினால், சமயநூலாரும் அறநூலாரும் அறத்திற்கே சிறப்புக்கொடுத்து அறம் பொருளின்பம் எனத்தலைமாற்றிக் கூறினர். "அந்நிலை மருங்கின் அறமுத லாகிய மும்முதற் பொருட்கு முரிய வென்ப" (செய். 105) என்று தொல்காப்பியமும், "அறனும் பொருளும் இன்பமு மூன்றும் ஆற்றும் பெருமநின் செல்வம்"(28) "சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும் அறத்துவழிப் படூஉந் தோற்றம் போல" (31) என்று புறநானூறுங் கூறுதல் காண்க. அறவழியிற் பொருளையீட்டி அதைக் கொண்டு அறவழியில் இன்பம் நுகர வேண்டுமென்பது கருத்து. இன்பம் என்பது முதற்கண் இவ்வுலக வின்பத்தையும் பின்பு அதனொடு விண்ணுலக வின்பத்தையும் அதன்பின் அவற்றொடு வீட்டுலக வின்பத்தையுங் குறித்தது. இது சமயத்துறை பற்றிய நாகரிக வளர்ச்சியைக் காட்டும். வீட்டின்பம் பலவகையில் ஏனையிரண்டினும் வேறுபட்டதாதலின், பின்னர் அறம் பொருளின்பம் வீடு எனப் பிரித்துக் கூறப்பட்டது. ஆயினும் வீடென்பது அறம் என்னும் வாயில் வகையிலும் காதலின்பம் என்னும் உவமை வகையி லுமன்றி வண்ணனை வகையிற் கூறப்பட வியலாதாதலின், நாற்பொருளும் நூலளவில் என்றும் முப்பாலாகவே இருக்கும். அதனாலேயே திருக்குறட்கும் முப்பால் என்று பெயர். நாற்பொருளும், மாந்தர்க்கு நன்மைசெய்தல் பற்றி உறுதிப் பொருள் என்றும், சிறப்புடைமை பற்றி மாண்பொருள் என்றும் கூறப்படும். கல்வியின் பயன் கடவுள் திருவடியடைதல் என்னுங் கருத்தெழுந்தபின், நாற்பயனே நூற்பயன் என்றாயிற்று. "அறம்பொரு ளின்பம்வீ டடைதல் நூற்பயனே." என்பது நன்னூற்பாயிரம்(10). அறம், பொருள், இன்பம், வீடு, என்னும் நாற்சொல்லையும், முறையே தர்ம அர்த்த காம மோக்ஷ என மொழிபெயர்த்தனர் வட மொழியாளர். ஆயின், தமிழில் அறம் என்பது நல்வினையையும், வடமொழியில் தர்ம என்பது வருணாச்சிரம தருமம் என்னும் குலவொழுக்கத்தையுமே குறிக்கும்.
காமக் கூட்டங் காணுங் காலை" என்று தொல்காப்பியங் கூறியதும் என அறிக. முழுத் தமிழிலக்கணந் தோன்றியது தலைக்கழகக் காலம் (கி. மு. 10,000). அது தோன்றிய போதே முத்தமிழாகத் தோன்றிற்று. அவற்றுள் அடிப்படையான இயற்றமிழ் இலக்கணமும் மூவதிகாரப் பிண்டமாகவே தோன்றிற்று. இதனால் பொருளதிகார அகப்புறப் பொருட்பாகுபாட்டிற்கு மூலமான அற நூற்பொருட்பாகுபாடு, தலைக்கழகத்திற்கும் முந்தியதென அறிக. அது ஆரியம் என்னும் பேரும் இனமுந் தோன்றாத முதுபண்டைக் காலம். அகம் புறம் என்பதே தமிழர் பொருட்பாகுபாடென்பது, பொருளிடங் காலஞ் சினைகுணந் தொழில் என்பதே தமிழர் பொருட் பாகுபாடென்பது போன்றதே.
பெயர் : இவர் பெயர் வள்ளுவன் என்பதே. வள்ளுவர் என்பது உயர்வுப் பன்மை. இவரது இறைப்பற்றொடு கூடிய ஒழுக்கத்தின் உயர்வும் இவர் நூலின் மறைத் தன்மையும், இவருக்குத் திருமை (தெய்வத்தன்மை) யுண்டாக்கியதினால், இவர் பெயர்க்குமுன் திரு என்னும் அடைமொழி சேர்க்கப்பெற்றது, தெய்வப் புலவர், பொய்யில் புலவர், முதற்பாவலர், பெருநாவலர், செந்நாப் போதார், நாயனார் முதலிய பிற பெயர்களெல்லாம், இவரைப் பாராட்டிக்கூறிய புலவர் ஆண்ட புகழ்ச் சொற்களேயன்றி வேறல்ல. வள்ளுவன் என்பது இயற்பெயராகவுமிருக்கலாம்; தொழில் பற்றிய பெயராகவுமிருக்கலாம். திருவள்ளுவர் பெயர் இவற்றுட் பின்னதென்பதே பெரும்பான்மைப் பொருத்தமாம். வள்ளுவன் என்பான், அரசன் கட்டளையைப் பறையறைந்து அறிவிப்பவன் என்று பெருங்கதையும், அரசர்க்கு உள்படு கருமத் தலைவன் என்று பிங்கல நிகண்டும், புள்ளுவன் (நிமித்திகன்) என்று சீவகசிந்தாமணியும், கூறுகின்றன.
வள் என்னும் அடிச்சொற்குள்ள பலபொருள்களுள் மூன்று, கூர்மை வலிமை வண்மை என்பன. ஆதலால் , வள்ளுவன் என்னும் சொற்கு, கூர்மதியன், வல்லவன், வள்ளியோன் என்று முப்பொருள் கொள்ளலாம்.
என்று உள்படுகருமத் தலைவருள் ஒருவனாகக் குறிக்கும். வள்ளுவன் அரசன் கட்டளையையே முரசறைந் தறிவிப்பவன்; சாக்கையன் அரசர்க்கே நாடகம் நடிப்பவன். ஆதலால் இவ்விருவரும் அரசர் தொடர்பே கொண்ட அரண்மனைப் பணியாளராவர். சிலர் கருதுகின்றவாறு, வள்ளுவன் அரசன் பள்ளியறைக் கண்காணிப்பாளனான மாளிகை நாயகம் ( Chamberlain) அல்லன்.
பெருங்கணி குறித்த நன்னாளிலேயே வள்ளுவன் பறையறைய வேண்டியிருந்ததினாலும், வள்ளுவனைப் புள் (நிமித்தம்) அறிவிப்பவன் என்றும் சிந்தாமணி கூறுவதனாலும், வள்ளுவர் என்பார் இன்றும் கணியராயிருந்து வருவதனாலும், பண்டை வள்ளுவனும் கணியம் அறிந்தவனே என்று கருத இடமுண்டு. நாள்கோள்களின் இயக்கத்தை யறிந்து ஐந்திறம் ( பஞ்சாங்கம் ) வகுத்தற்கும் அரசர்க்குப் பிறப்பியம் (சாதகம்) எழுதுதற்கும் நுண்மாண் நுழைமதி வேண்டியிருத்தலின், கணியருள் ஒரு பிரிவார் வள்ளுவர் எனப்பட்டதாகத் தெரிகின்றது.
நாஞ்சில் வள்ளுவனைப் பாடிய ஒருசிறைப்பெரியனார், மருதனிள நாகனார், ஒளவையார், கருவூர்க் கதப்பிள்ளை ஆகிய நால்வரும் அவனை நாஞ்சிற் பொருநன் என்றே குறிக்கின்றனர். பொருநன் போர்மறவன் அல்லது படைத்தலைவன்.
"பொருந ரென்ப பெரும்போர்த் தலைவர்."
என்பது பிங்கலம் (5: 119)
பாண்டிநாட்டிற்கும் சேரநாட்டிற்கும் இடைப்பட்ட நாட்டை யாண்டதினால், ஒருகாற் பாண்டியனுக்கும் மற்றொருகாற் சேரனுக்கும் படைத்தலைவனாக இருந்ததாகத் தெரிகின்ற நாஞ்சில் வள்ளுவனை, வலிமையிலும் வண்மையிலும் சிறந்தவனாக மருதனிள நாகனாரும் ஒளவையாரும் கதப்பிள்ளையும் பாடியிருத்தலால், அவன் பெயர் வலிமையாலோ வண்மையாலோ வந்ததாகவுமிருக்கலாம்; இயற்பெயராகவுமிருக்கலாம்.
வல்லப என்னும் வடசொல், வேரில்லாததாகவும் காதலன், நண்பன், கணவன், மேலோன், கண்காணி என்றே பொருள்படுவ தாகவும் இருத்தலால், அது வள்ளுவன் என்னும் தென்சொற்கு மூலமாயிருத்தல் முடியாது. கல்வெட்டுக்களில் வரும் வள்ளுவன் வல்லுவன் என்னும் சொற்களும், தூய தென்சொற்களேயன்றி வல்லப என்னும் வடசொல்லின் திரிபாகா. உண்மை யெதுவெனின், வல்லவன் என்னும் தென்சொல் வடமொழியில் வல்லப என்று திரிந்துள்ளது என்பதே. வகரம் பகரமாவது வடமொழிக்கியல்பே. ஆண்மகன் என்னும் சொல் கணவனையும் ஆண்டகையென்னுஞ் சொல் சிறந்த தலைவனையுங் குறித்தல் போன்றே, வல்லவன் என்பதன் திரிபான வல்லப என்பதும் வடமொழியில் கண்காணிப்புத் தலைவனையும் கணவனையும் காதலனையும் நண்பனையும் முறையே குறித்ததென்க.
குடி : திருவள்ளுவர் அரசனின் முரசறை விளம்பரத் தலைவரா யிருந்தாரெனின், அவர் பிறந்த குடி வள்ளுவக் குடியென்றே கொள்ளலாம். கடைக் கழகக் காலத்திற் பிராமணர் தம்மை மேன் மேலுயர்த்தத் தமிழரைப் படிப்படியாய்த் தாழ்த்தி வந்தாரெனினும், கடைப்பட்ட வகையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு இக்காலத்திற் போல் அக்காலத்தில் இழிவு இருந்ததில்லை. அதனால், இக்கால நிலைமைபற்றித் திருவள்ளுவரை வள்ளுவக் குடியினரென்று கொள்வது அவருக்கிழுக்காகும் என்று கருதுவது அறியாமையின் விளைவேயாம். "அறம்பொரு ளின்பம்வீ டென்னுமந் நான்கின் திறந்தெரிந்து செப்பிய தேவை- மறந்தேயும் வள்ளுவன் என்பானோர் பேதை யவர்வரய்ச்சொற் கொள்ளா ரறிவுடை யார்."
என்று மாமூலர் பெயரிலுள்ள திருவள்ளுவமாலைப்பாவும், திருவள்ளுவரைத் தெய்வப் பிறப்பினரென்றே கொள்ளவேண்டுமென்றும், மறந்தும் மக்கட் பிறப்பினராகக் கொள்ளக்கூடாதென்றும், கூறுகின்றதேயன்றி, அவர் குடி எள்ளளவேனும் இழிவுள்ளதாகக் கருதுவ தன்று.
காலம் : திருவள்ளுவர் காலம் இன்ன நூற்றாண்டென்று திட்டமாய்த் தெரியாவிடினும், தொல்காப்பியர் காலமான ஏழாம் நூற்றாண்டிற்கும் கடைக்கழக முடிவான மூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதென்று கொள்வது, எவ்வகையினும் இழுக்காகாது.
கடைக்கழக முடிவிற்கு முற்பட்ட தென்பதற்குச் சான்றுகள் : -
என்னும் புறப்பாட்டுப் பகுதி, "தன்மகனைச் சான்றோ னெனக் கேட்ட தாய்". என்னுங் குறட்பகுதியொடும் முற்றும் பொருந்துவதே.
(4) கி. பி. மூன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பெற்ற திருச்சிற்றம்பலக் கோவை 400 துறைகளும் 25 கிளவித்தொகைகளுங் கொண்டிருக்க திருக்குறட்கோவையாகிய இன்பத்துப்பால் 25 தலைப்பின் கீழ்க் கிளவித்தொகைப் பாகுபாடின்றி 135 துறைகளே கொண்டிருத்தல்.
தொல்காப்பியத்தில் ஏறத்தாழ 400 துறைகள் குறிக்கப்பட்டுள. அவற்றுட் சில திருக்கோவையில் இல்லாதன; சில பெயர் குறிக்கப்பெறாதன; சில நுண்வேறுபாடுகளைக் கொண்டன. திருக்கோவைக்குப் பிற்பட்டவற்றில் ஏறத்தாழ 45 துறைகள் கூடியுள்ளன. திருவள்ளுவர் அறநூன்முறையில் ஒருமனை மணம் பற்றிய இன்றியமையாத துறைகளையே கூறினாரேனும், அவற்றின் சுருக்கமும் பெயர் முறையும் திருக்குறளின் முன்மையைத் தெளிவுறக் காட்டுவனவாம்.
(5) திருவள்ளுவரின் பிற்காலத் தொழிலாகத் தெரிகின்ற நெசவிற்கு நூலுதவினதாகச் சொல்லப்பெறும் ஏலேலசிங்கர் என்னும் சோணாட்டுக் கடல் வணிகர் காலம் கி. மு. இரண்டாம் நூற்றாண்டா யிருந்தமை.
(6) கிறித்துவிற்குப் பிற்பட்ட நூல்களை அல்லது நிகழ்ச்சிகளைப்பற்றித் திருக்குறளில் யாதொரு குறிப்புமின்மை.
கடைக் கழகச் செய்யுட்களில் கூறப்பெறும் யவனரைப்பற்றித் திருக்குறளில் ஒரு குறிப்புமின்மை கவனிக்கத்தக்கது.
தொல்காப்பியர் காலத்திற்குப் பிற்பட்ட தென்பதற்குச் சான்றுகள் : -
என்று வேளிருங் கோசருமான குறும்பரால் மூவேந்தரும் அலைக்கப்பட்ட நிலையைத் திருக்குறள் குறிப்பாகக் கூறுதல்.
(5) "தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும் விலைப்பொருட்டா லூன்றருவா ரில். (256)
என்று திருவள்ளுவர் புத்தமதக் கொள்கையைக் கண்டித்தல்.
புத்தர் கி.மு. ஆறாம் நூற்றாண்டினராயினும், புத்தமதம் அசோகனால் இந்தியாவிலும் வெளியிலும் பரப்பப்பட்ட காலம் கி. மு. 273-236 ஆகும். அசோகனின் மகனும் (அல்லது உடன் பிறந்தானும்) வேறு நால்வரும் இலங்கைக்கு வந்து புத்த மதத்தைப் பரப்பின காலம் கி. மு. 247-207. அதன் பின்னரே அம்மதம் அங்கிருந்து தமிழகத்திற்கு வந்திருத்தல் வேண்டும். ஆதலால், கி. மு. 2-ஆம் நூற்றாண்டிலேயே திருவள்ளுவர் அதைக் கண்டித்திருக்கக் கூடும்.
(6) திருவள்ளுவர் தம் நூலின் முதலதிகாரமாகிய முதற்பகவன் வழுத்தில், 'மலர்மிசை யேகினான்' (பூமேல் நடந்தான்). பொறிவாயி லைந்தவித்தான் என்னும் அருகன் பெயர்களைக் கடவுட்கு ஆண்டிருத்தல். ஆருகதம் என்னும் சமணமதம் புத்தமதத்திற்குப் பின்னரே தமிழகத்துட் புகுந்தது.
மேற்காட்டிய இருவகைச் சான்றுகளால், திருவள்ளுவர் காலம் கி. மு. 2-ஆம் நூற்றாண்டென்று கொள்வதே பொருத்தமாம் எனினும், 5-ஆம் நூற்றாண்டு வரை கொள்ளவும் இடமுண்டாம்.
பிறந்தவூர் : இது இன்னதென்று தெரியவில்லை.
பெற்றோர் : இவர் இன்னாரென்று தெரியவில்லை. திருவள்ளுவர் யாளிதத்தன் என்னும் பிராமணனுக்கும் ஒரு சண்டாளப் பெண்ணிற்கும் பிறந்தாரென்று கி.பி. 6-ஆம் நூற்றாண்டினதாகச் சொல்லப்படும் ஞானாமிர்தமும், பகவன் என்னும் பிராமணனுக்கும் ஆதி யென்னும் புலைச்சிக்கும் பிறந்தவரென்று பிற்காலத்துக் கபிலர் அகவலும், கூறுவன கொள்ளத்தகாத கட்டுக் கதைகளாகும்.
திருக்குறள் உலகம் போற்றும் ஒப்புயர்வற்ற பொது அறநூல் என்பதைக்கண்டு பொறாது மனம் புழுங்கிய சில பிராமணர், முதற் குறளிலுள்ள ஆதிபகவன் என்னும் தொடரைப் பயன்படுத்திக் கொண்டு திருவள்ளுவரை ஒரு பிராமணனுக்குப் பிறந்தவராகவும் அதேசமையத்தில் ஒர் இழிகுலத்தாராகவுங் காட்டல் வேண்டிக் கட்டிய கதைகளே மேற்கூறியவை என்க.
முதன்முதற் கடவுளைக் குறித்த பகவன் என்னும் சொல் பிற்காலத்திற் பெருந்தேவர்க்கும் சிறு தெய்வங்கட்கும் முனிவர்க்கும் பிராமணர்க்கும் வழங்கப்பட்டுத் தன் முதற்பெருள் குன்றியமையால் அதை நிறைவுபடுத்தற்கு ஆதி என்னும் அடை கொடுக்க வேண்டியதா யிற்று. இதை ஆதிசங்கராச்சரியார் என்பது போலக் கொள்க. முதற் சங்கராச்சாரியார் ஆதியென்னும் புலைச்சியை மணந்தவரல்லர்.
ஆதிபகவன் என்பது, ஆதியாகிய பகவன் என்றாவது ஆதிப்பகவன் என்றாவது விரியும்.
யாளிதத்தனின் மனைவி, அவனால் முன்பு வெட்டுண்டு கிணற்றிலே தள்ளப்பட்ட ஒர் அறிவில்லாத சண்டாளப்பெண் என்றும், பின்பு ஒரு பிராமணன் அவளை எடுத்துக்கொண்டுபோய் உத்தர தேசத்தில் வளர்த்து அவளை மீண்டும் யாளிதத்தனுக்கே பிராமண மனைவியாகக் கொடுத்தானென்றும், ஞானாமிர்தவுரை கூறும். கபிலர் அகவலோ, பகவன் மனைவியாகிய ஆதி யென்னும் புலைச்சி கருவூர் மாநகரத்தாள் என்று குறிக்க, அதன் உரையான கதை, அவளும் அவனால் முன்பு வெட்டுண்டாளென்று குறிப்பினும், பலநாட்பின்னர் அவளை அவன் கருவூர்ச் சத்திரத்தில் ஓரிரவிற்கண்டு அடையாளந் தெரியாமல் அவளைத் தானே மனைவியாகக் கொண்டான் என்று கூறும். இவ்வேறுபாடே இவற்றின் கட்டுத்தன்மையைக் காட்டுதல் காண்க. உடன்பிறந்தார்: இவருக்கு உடன் பிறந்தார் இருந்ததாகத் தெரியவில்லை.
யாளிதத்தனின் மனைவி பிராமணத்தியாயிருந்து பிள்ளைகளைப் பெற்றாளென்று ஞானாமிர்தவுரையும், ஆதியென்னும் புலைச்சி மறு நாட்பகலில் அடையாளங்கண்டுபிடிக்கப்பட்டபின், பிறக்கும் பிள்ளைகளையெல்லாம் உடனுடன் விட்டுவிட்டு வரவேண்டுமென்னும் நிலைப்பாடு பற்றியே நிலையான மனைவியாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டாளென்று கபிலரகவல் பற்றிய கதையும் வேறுபட்டுக் கூறினும், பிறந்த பிள்ளைகள் வள்ளுவருள்ளிட்ட கபிலர் முதலிய எழுவர் என்பதில் மட்டும் ஒன்றுபடுகின்றன.
இதன் புரைமையையும் பொருந்தாமையையும் அறிஞர் அறிந்து கொள்க.
மனைவியார் : திருவள்ளுவர் மனைவியார் வாசுகி யென்னும் பெயர் கொண்ட கற்பரசியார் என்னும், மார்க்க சகாயர் என்னும் வேளாளரின் மகளார் என்றும், அவ்வேளாளர் செய்த பயிர்பச்சைகளைத் தாக்கிய நோயைத் திருவள்ளுவர் நீக்கியதால் அவர் தம் மகட்கொடையைப் பெற்றாரென்றும், அவ்வம்மையாரை மணக்குமுன்பே அவர் செய்த ஒர் இறும்பூதுச் செயலால் அவர்கற்பைத் திருவள்ளுவர் கண்டாரென்றும், நீண்ட கால வரலாறு வழங்கிவருகின்றது. இதில் நம்பத்தகாதது ஒன்றுமில்லை. இறும்பூதுச் செயல் கற்பினாலும் நிகழலாம்; இறைவன் அருளிய ஈவினாலும் நிகழலாம்; இன்றும் சோழநாட்டு மருதூரிலுள்ள நெசவுத்தொழில் செய்யும் தெய்வயானையம்மையார் பற்பல இறும்பூதுகள் செய்துவருவதாக, புலவர் மறைத்திருநாவுக்கரசர் எழுதிய மறைமலையடிகள் வரலாற்றில் வரையப்பெற்றிருத்தல் காண்க.
நாகன்-நாகி என்பன ஆண்பாற் பெண்பாற் பெயர்களாகத் தமிழர்க்குத் தொன்று தொட்டு இடப்பட்டு வருவதனாலும் வாசுகி என்பது வடமொழித் தொல்கதைப்படி ஒரு பாம்பின் பெயராய் இருத்தலாலும் திருவள்ளுவர் மனைவியாரின் பெயர் ஒருகால் நாகி என்று இருந்திருக்கலாம் என்று மறைமலையடிகள் கருதுவர்.
நல்கூர்வேள்வியார் என்னும் புலவர் பெயரிலுள்ள திருள்ளுவ மாலைப்பாவில் மாதாநுபங்கி யென்றிருக்குஞ்சொல், தாய்போலொழுகுபவள் என்று பொருள்படலாமேயன்றி, வள்ளுவரின் மனைவியார் பேராயிருந்திருக்க முடியாது.
மக்கள் : திருவள்ளுவர்க்கு மக்கள் இருந்ததாகத் தெரியவில்லை.
தொழில் : திருவள்ளுவர் தம் நூலியற்றுமுன் பாண்டியனின் முரசறை விளம்பர அதிகாரியாய் இருந்திருக்கலாம். பல்துறைப் பன்னூல்களைக் கற்கவும் அரசியல் வினைகளை நெருங்கியறியவும் அது மிகுந்த வாய்ப்பளித்திருக்கும். அவர் நூல் ஆரியத்தை வன்மையாகக் கண்டிப்பதால், அது இயற்றப்பெற்றபின் பிராமணர் கிளர்ச்சியாலும்
அரண்மனைப் பிராமணப் பூசாரியின் துண்டுதலாலும் அவர் தம் பதவியை இழந்திருக்கவேண்டும். அதன்பின், அவர் நெடுந்தொலைவிலுள்ள மயிலை சென்று நெசவுத் தொழிலை மேற்கொண்டிருக்கலாம். அல்லாக்கால் ஏலேலசிங்கன் தொடர்பிற்கும், பட்டப்பகலில் நெசவுக்குழலைத்தேட வாசுகியம்மையார் தம் கணவர் சொற்படி விளக்குக்கொண்டுவந்தார் என்னும் கதைக்கும், இடமில்லை.
வாழ்ந்த இடம் : திருவள்ளுவர் முன்பு மதுரையிலும் பின்பு மயிலையிலும் வாழ்ந்ததாகத் தெரிகின்றது.
அவர் பாண்டி நாட்டில் நீண்டகாலம் வாழ்ந்திராவிடின், ஊருணி, பைய, வாழ்க்கைத்துணை என்னுஞ் சொற்களை ஆண்டிருக்கவும் அண்மையிலுள்ள சேரநாடு சென்று அக்காலத்து நம்பூதிரிப் பிராமணக் கன்னிகையர் சவச்சடங்கையறிந்து.
என்பதும் ஒருவகையில் திருவள்ளுவரின் மதுரை வாழ்கையை உணர்த்தும்..
சமயம் : ஆரியர் வருமுன்னரே, தமிழர் சமயத்துறையில் தத்தம் அறிவு நிலைக்கேற்ப சிறு தெய்வ வணக்கத்தாரும் பெருந்தேவ வழி பாட்டாரும் கடவுள் மதத்தாரும் ஆக முந்நிலைப்பட்டிருந்தனர்.
இம்மைப்பயனையே அளிப்பனவாகக் கருதப்பெறும் இடத் தெய்வங்களும் பூத்தெய்வங்களும் நடுகல்தெய்வங்களும் சிறு தெய்வங்களாம். இம்யையில் மழையையும் மறுமையில் விண்ணுலக வின்பத்தையும் அளிப்பவனாகக் கருதப்பெற்ற வேந்தன் பெருந்தேவனாம். இம்மையில் இவ்வுலக இன்பத்தோடு மறுமையில் பிறவி நீக்கப்பேரின்பவீட்டையும் அருள்பவனாகக் கருதப்பெற்ற இறைவன் எல்லாவற்றையுங் கடந்துநிற்கும் கடவுளாம். முதற்கண் சிறுதெய்வ வணக்கமாகவிருந்து பின்பு பெருந்தேவ வழிபாடாகவுயர்ந்த சேயியமும் மாலியமும் இறுதியில் முறையே சிவனியம் திருமாலியம் என்னும், வீடுபேற்று மதங்களக வளர்ந்துவிட்டன. ஆயின், கடவுள் மதத்தார் கடவுள் என்னுஞ் சொற்கேற்ப அவ்விரண் டிற்கும் பொதுவாயிருக்க வேண்டியதாயிற்று. "அங்கிங்கெனாதபடி யெங்கும் பிரகாசமாய்", "பண்ணேனுனக்கான பூசை" என்னும் தாயுமானவர் பாட்டுக்களும், "உளியிட்ட கல்லையு மொப்பிட்ட சாந்தையும்", "சொல்லிலும் சொல்லின் முடிவிலும்", "எட்டுத்திசையும் பதினாறு கோணமும் என்னும் பட்டினத்தார் பாட்டுக்களும் கடவுளியல்பைத் தெளிவாகக் காட்டும்.
சிவனியமும் திருமாலியமும் முறையே சிவன் என்னும் பெயராலும் திருமால் என்னும் பெயராலும் கடவுளையே வணங்கும் வீடுபேற்று மதங்களாம். ஆதலால் கிறித்தவமும் போலக் கொள்கையால் வேறுபடினும் தெய்வத்தால் ஒன்றாம். எனினும், உருவ வணக்கங் கொள்வதால் வீடுபேற்று மதங்களேயன்றிக் கடவுள் மதமாகா.
கடவுட்கொள்கையும் கோயில் அல்லது உருவவழிபாடுமில்லாத ஆரியர், சிவனியம் திருமாலியம் என்னும் இரு தமிழ மதங்களையுத் ஆரியப்படுத்தற்கும், தம்மினு முயர்ந்த தமிழரை அடிமைப்படுத்தற்கும் கடவுள் முத்தொழிலோன் என்னுங் கொள்கையைப் பயன்படுத்திக்கொண்டு, பிரமன் என்னும் ஒரு தெய்வத்தைப் புதிதாகப் படைத்து, அப்பிரமன் படைப்போனென்றும் திருமால் காப்போனென்றும் சிவன் அழிப்போனென்றும் முத்திருமேனிக் கொள்கையைத் தோற்றுவித்துவிட்டனர்.
கடவுள் மதமாவது, காலமும் இடமும்போல முதலும் முடிவும் உருவமும் நிறமுமின்றி, இயல்பாகவே எங்கும் நிறைந்தவனாகவும், எல்லாம் வல்லவனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும்,எல்லாம் உடையவனாகவும், முற்றின்பனாகவும், முழுத்தூயனாகவும், எல்லை யில்லா அருளனாகவும், எல்லாஉலகங்களையும் படைத்துக் காத்தழிப்பவனாகவு மிருந்து ஒப்புயர்வற்று மனமொழி கடந்த கடவுளை, உள்ளத்தில் எங்கும் என்றும் தொழுது, எல்லாவுயிர்களிடத்தும் அன்பும் அருளும் பூண்டொழுகுதலேயாம். திருவள்ளுவர் சமயமும் அதுவே. இதனாலேயே அவர் எச்சமயத்தையுந் தழுவாது எல்லாச் சமயங்கட்கும் பொதுவாகக் கூறியதும், எல்லாச் சமயங்களும் கூறும். இறைவன் பெயர்களையும் கடவுட்குப் பொருத்தியதும் என்க. வேறுநூல் : திருவள்ளுவர் வேறுநூல் செய்ததாகத் தெரிய வில்லை. இவர் பெயரால் வழங்கும் ஒரு சில இவர் பெயரைத் திருட்டுத்தனமாகக் கொண்டனவே.
திருவள்ளுவர் காலத்தில் ஆரியம் வேரூன்றிவிட்டது. நிறம் பற்றிய நால்வகை வரணப்பாகுபாடும் புகுத்தப்பட்டுவிட்டது. தமிழரெல்லாரும் பிராமணருக்குத் தாழ்ந்தவராயினர். பார்ப்பாரென்று சொல்லப்பட்ட இல்வாழ்க்கைப் பிராமணரும் தம்மை அந்தணரென்று கூறிக்கொண்டனர். தொழில்பற்றி யேற்பட்ட குலங்களும் பிறப்புப் பற்றிப் பெயர்பெறலாயின. புலவருள்ளும் பிராமணர் உயர்ந்தவர் என்னுங் கருத்தெழுந்தது, அறங்களெல்லாம் பொதுவாகப் பிராமணர்க்கே செய்யப்பட்டன. தமிழருக்குள் உறவுக்கலப்பும் ஒற்றுமையும் வரவரக் குறைந்துவந்தன. மூவேந்தரும் மன்னர் சிலரும் ஆரியச்சார்பாயிருந்ததினால். பிராமணியத்தைக் கண்டிக்க எவருக்கும் வாயில்லாமற் போயிற்று. அதனாற் புலவரும் அடிமையராயினர். பிராமணர் தெய்வப் பிறப்பினர் என்னுங் கருத்து தமிழருக்குள் வளர்ந்து வந்தது. அதனால் வடசொற்கள் தமிழில் தாராளமாகக் கலக்கவும் தமிழ்ச்சொற்கள் மறையவும் புதுத் தமிழ்ச் சொற்கள் தோன்றாதிருக்கவும், வழிவகுக்கப்பட்டுவிட்டது.
உலகியல் இனிது நடைபெறுதற்கு இன்றியமையாத நால் நிலைமையும் இல்லறமுந் துறவறமும் அரசியலும் கணவன் மனைவியர் காமவின்பமும் பற்றி, உண்மையாகவும் நடுநிலைமையாகவும் எல்லார்க்கும் ஒப்ப முடிந்த வகையிலும், தலைசிறந்த பாவாலும் சிறந்த சொற்களாலும் இலக்கண வழுவின்றி இருவகை யணிகளுடன், சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் நூல் திருக்குறள் ஒன்றே. இருமைக்கும் உதவும் விழுமிய பொருளை அணிமிக்க குறள்வெண்பாவாற் பாடியிருப்பது, பன்மணிபதித்த ஓவிய வேலைப்பாட்டுப் பொற்கலத்தில் அரசர்க்குரிய அறுசுவையுண்டியைப் படைத்தாற் போலும். குறள் வெண்பாவால் ஆனதினாலும், வீடுபேற்று வழியைக் கூறி மறைத் தன்மை பெற்றதினாலும், திருக்குறள் என அடையடுத்த ஆகு பெயர் பெற்றது.
"காசினியிற் பிள்ளைக் கவிக்கம் புலிபுலியாம் பேசும் உலாவிற் பெதும்பை புலி - ஆசு வலவர்க்கு வண்ணம் புவியாமற் றெல்லாப் புலவர்க்கும் வெண்பாப் புலி."
( தனிப்பாடல் )
ஐவகை வெண்பாவுட் குறுகியது குறள் வெண்பா. பயனில் சொல் பகர்வானைப் பதடியென்னும் திருவள்ளுவர், சொற்சுருக்கம் பற்றிக் குறள் வெண்பாவையே தம் நூற்குத் கொண்டார்.
என்னும் திருவள்ளுவமாலைப்பாவும்; சுருங்கச் சொல்லலை,
"தினையளவு போதாச் சிறுபுன்னீர் நீண்ட பனையளவு காட்டும் படித்தால் - மனையளகு வள்ளைக் குறங்கும் வளநாட வள்ளுவனார் வெள்ளைக் குறட்பா விரி."
என்னும் திருவள்ளுவமாலைப் பாவும்; விளங்கவைத்தலை,
"பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு தெரிந்து திறந்தொறுஞ் சேரச் - சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள்விளங்கச் சொல்லுதல் வல்லாரார் வள்ளுவரல் லால்."
என்னும் திருவள்ளுவமாலைப்பாவும்; உணர்த்தும்.
இங்ஙனம் திருக்குறள் எல்லா வகையிலும் ஒப்புயர்வற்ற உலகத்தமிழ் நூலாம். அதனால், முப்பொருண்மை பற்றி முப்பால், முப்பால் நூல் என்றும்; ஆசிரியனை நோக்கி வள்ளுவம், வள்ளுவநூல், வள்ளுவப்பயன் என்றும்; உண்மை யுரைத்தல் பற்றிப் பொய்யா மொழி என்றும்; மந்திரத்தன்மைபற்றி வள்ளுவர் வாய்மொழி யென்றும் மறைத்தன்மை பற்றித் தமிழ்மறை, பொதுமைற என்றும், தெய்வத்தன்மை பற்றித் தெய்வநூல் என்றும்;
"வேம்புங் கடூவும் போல வெஞ்சொல் தாங்குதலின்றி வழிநனி பயக்குமென் றோம்டைக் கிளவியின் வாயுறுத்தல்"
பற்றி வாயுறைவாழ்த்து என்றும் ; பெயர் பெற்றுள்ள தென்க.
முதனூன்மை : திருக்குறள் எல்லாவகையிலும் தூய முதனூ லாகும். அறம் பொருளின்பம் என்னும் முப்பொருளையும் பற்றித் திருக்குறள் முறையிற் கூறும் வடநூல் ஒன்று மில்லை. நான்முகன் (பிரமன்) முதலில் 'திரிவர்க்கம்' என்னும் பெருநூலைச் செய்தானென்றும், அதை வியாழனும் (பிருகற்பதி) வெள்ளியும் (சுக்கிரன்) சுருக்கி முறையே பார்கற்பத்தியம் சுக்கிரநீதி என்னும் நூல்களை இயற்றின ரென்றும், திருவள்ளுவர் 'திரிவர்க்கம்' போல் அறம் பொருளின்பம் பற்றி நூல் செய்ததனாலேயே நான்முகனின் தோற்றரவு (அவதாரம்) எனக்கருதப் பெற்றாரென்றும், தமிழ்ப் பற்றில்லாத பிராமணத் தமிழ்ப் புலவர் கூறுவர். ஒருவரோ பலரோ கட்டிப் பாடிய திருவள்ளுவமாலையில்,
என்று காவிரிப் பூம்பட்டினத்துக காரிக்கண்ணனார் பெயரிலுள்ள பாவும், எல்லா அறநூல்களையும் மறைநூல்களையும் ஆரியவேத வழிநூலாகக் கொள்ளும் பண்டை மரபு பற்றிக் கூறியதைக் கொண்டு அவர் அங்ஙனங் கூறுகின்றார் போலும்.
மேற்காட்டிய பாப் பகுதிகளில் நான்மறையென்றும் வேதமென்றும் குறித்திருக்கின்றதே யொழிய, திரிவர்க்கமென்று குறிக்கப்பட வில்லை. இதற்கு முற்றும் மாறாக,
மேலும், திருவள்ளுவர் முப்பாலால் நூற்பொருளுங் கூறினாரேயன்றி, முதல் முப்பொருளை மட்டும் கூறினாரல்லர். மக்களால் இயற்றப் பட்ட முப்பானூல் வடமொழியில் இல்லாததினாலேயே, 'திரிவர்க்கம்' என்பது நான்முகனால் இயற்றப் பெற்றதென்றும், "ஓடிப்போன முயல் பெரிய முயல்." என்பதற்கொப்ப அது மகாசாஸ்திரம் என்றும், கூறுவாராயினர் என்க.
இனி, கி. மு. நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த சாணக்கியரும் அவர் மாணவராகிய காமந்தகரும் எழுதிய பொருள்நூற் கருத்துக்கள் திருக்குறளிற் பயின்று வருவதால், அதன் பொருட் பாலுக்கு வடமொழி 'அருத்த சாத்திரம்' முதனூலென்பர் தமிழ்ப் பகைவரும் போலித்தமிழரும்.
"தொன்று தொட்டு வருதல் சேர சோழ பாண்டிய ரென்றாற் போலப் படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வருதல்" என்று பரிமேலழகராலும் பழைமை கூறப்படும் மூவேந்தர்குடிகளும், அவற்றுள்ளும் சிறப்பாகப்
என்றுந் தொல்காப்பிய நூற்பா கி. மு ஏழாம் நூற்றாண்டிற்கும் முற்பட்ட அறம்பொருளின்ப வீட்டு நூல்களைக் குறிப்பதாலும்,
"மாரணம் பொருள் என்றின்ன மானநூல் யாவும் வாரி வாரணங் கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள."
என்று ஒரு பழந்தனிச் செய்யுள் கூறுவதாலும்,
திருவள்ளுவர் வேந்தர்க்கு உள்படுகருமத் தலைவராயிருந்ததாகத் தெரிவதனாலும், அவர் திருக்குறள் இயற்றியதற்கு வடநூற்றுணை எத்துணையும் வேண்டியதாயிருந்ததில்லையென, அவர் நூலை வழிநூலென்பார் மறுக்க.
முழுநிறைவு :
அறம்பொருளின்பம் வீடென்னும் நாற்பொருளையும் பற்றி விளக்கமாகக் கூறுவதனாலும், ஒவ்வோர் அதிகாரத்திலும் அததற்குரிய பொருளைப் பற்றிய எல்லாக் கருத்துக்களையுங் கொண்டிருப்பதனாலும், திருக்குறள் முழுநிறைவான நூலாகும்.
"அகரமுதல" என்று தமிழ் நெடுங்கணக்கின் முதலெழுத்தில் தொடங்கி "முயங்கப் பெறின்" என்று அதன் இறுதியெழுத்தில் முடிந்திருப்பதும், திருக்குறளின் முழுநிறைவைக் காட்டும்.
திருக்குறள் தமிழ்நாட்டிற்கு மட்டுமன்றி உலக முழுமைக்கும் ஒத்ததென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததே. இதுபற்றியே "வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு" என்று பாடினார் பாவலர் சுப்பிரமணிய பாரதியாரும்.
திருக்குறள் இத்துணைக்காலந்தான் அல்லது இன்ன நூற்றாண்டு வரைதான் பயன்படுமென்று எவருஞ் சொல்லுதற்கிடமின்றி, எக்காலத்திற்கும் ஏற்றதாயிருப்பதும் அதன் ஏற்றங்களுள் ஓன்றாம்.
"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக வுலகியற்றி யான்."
என்னுங் குறள்கள் இடந்தரும் என்க.
மறையியல் :
திருக்குறள் இம்மைக்குரிய ஒழுக்க வரம்பு கூறும் அறநூலாக மட்டுமன்றி, மறுமையில் உயர் பிறப்போ விண்ணின்பமோ வீட்டின்பமோ பெறுதற்குரிய வழிகாட்டும் மறைநூலாகவுமிருப்பதால், தமிழ் மறை, பொதுமறை, வள்ளுவர் வாய்மொழி, தெய்வநூல் எனப்பெயர் பெற்றுள்ளது.
இதுவரை பகுதிக்கும் முழுமைக்கும் சுருக்கமாகவும் பெருக்க மாகவும் திருக்குறட்குத் தோன்றியுள்ள உரைகள் ஏறத்தாழ நூறும், அது மொழிபெயர்க்கப் பெற்ற மொழிகள் இருபதும், ஆகும். ஆயினும், இன்னும் அச்சுரங்கத்தினின்று கருத்துமணிகள் தோண்டத் தோண்ட மேன்மேலும் வந்து கொண்டேயிருக்கின்றன.
எ - டு :
"நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நாட வளந்தரு நாடு."
நாடு என்ப - சிறந்த நாடென்று சொல்லப்படுவன; நாடா வளத்தன - பிறநாடுகளின் உதவியை வேண்டாது தமக்கு வேண்டிய பொருள் வளங்களையெல்லாம் தம்மகத்தே கொண்டனவாகும்; நாடவளந்தரு நாடு - பிற நாட்டுதவியை நாடுமாறு குன்றிய வளங் கொண்ட நாடுகள்; நாடு அல்ல - சிறந்த நாடாகா.
திருவள்ளுவர் மக்கட்கு உயர்ந்த ஒழுக்கத்தை வகுத்தாரேனும், உலகியலறிந்து அதன் ஒழுங்கான நடப்பிற்குத் தோதாகவே சில விலக்குகளையும் அமைத்திருக்கின்றார்.
அருளுடைமை, புலான்மறுத்தல், கள்ளாமை, வாய்மை, வெகுளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை என்னும் அறவினைகளை அரசியலில் முற்றக் கடைப்பிடிப்பது அரிதாதலின், அவற்றை இல்லறவியலிற் கூறாது துறவறவியலிலேயே கூறியுள்ளார்.
"தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்" என்று சொன்ன வள்ளுவரே, "புலத்தலிற் புத்தேணாடுண்டோ" என்றும் "ஊடுதல் காமத்திற் கின்பம்" என்றும் உடன்பட்டுள்ளார்.
உண்மைக்கூற்று :
இறைவனே நால்வகை வருணத்தாரையும், முறையே தன்முகத்தினின்றும் மார்பினின்றும் தொடையினின்றும், பாதத்தினின்றும் படைத்தானென்றும், அவருட் பிராமணனே உயர்ந்தவனென்றும், மற்ற மூவரும் அவனுக்குத் தாழ்ந்தவரென்றும் அவனுக்குத் தொண்டு செய்யவே படைக்கப்பட்டவரென்றும், ஆரிய நூல்கள் துணிந்து பொய்யுரைப்பது போல, திருக்குறள் ஓரிடத்தும் கட்புலனான
உண்மைகளைத் திரித்துக் கூறுவதில்லை. எங்கேனும் ஓரிடத்தில் உயர்வு நவிற்சி அளவிறந்திருப்பினும், அது அணிதழுவியதும் உண்மை எல்லாராலும் அறியப்படத்தக்கதுமாகவே யிருக்கும்.
அக்காலத்தில் மொழியாராய்ச்சி யின்மையாலும், வடசொற்கள் ஒவ்வொன்றாகப் புகுத்தப்பட்டமையாலும், தமிழருட் பெரும்புலவர்க்கும் தென்சொல் வடசொல் வேறுபாடு தெரியாதிருந்தது. அதனால் திருக்குறளிலும் சில வடசொற்கள் புகுந்து விட்டன. அவை அந்தம், அமரர், அவி, ஆகுலம், ஆசாரம், ஆதி, இந்திரன், கணம் (க்ஷணம்), அன்னம், உல்கு, காரணம், சலம் (வஞ்சனை), நாமம் (பெயர்), பாக்கியம், பாவம், பாவி, வித்தகர் என்னும் பதினேழே. ஆரிய வெறியர் கூறுவது போல் ஐம்பதல்ல.
அப்பதினாறனுள்ளும், அமரர், காரணம், பாக்கியம், வித்தகர் என்னும் நான்கும் தமிழ் வேரினவே.
அல் - அ, மடி - மரி - மரர்.
கரணம் - காரணம் (வ.) கரு + அணம் = கரணம் = செய்கை, செய்கைக் கருவி. கருத்தல் செய்தல். இது ஒரு வழக்கற்றவினை.
விழித்தல் = கண்திறத்தல், பார்த்தல், அறிதல். விழி = அறிவு. விழி - விடி - விதி - வித் (வ.) - வித்தக. கவரி என்பது சமரி என்னும் வடநாட்டு சொல்லின் திரிபு. அதி என்பது அதை என்னும் சொல்லிற்கினமான வழக்கற்ற தமிழ் வினைச்சொல். ஆயம் என்னுஞ் சொல்லின் முதனிலையான ஆ என்பது வா என்பதன் திரிபு.
குணம், நிச்சம் என்னும் இரண்டும். தென்சொல்லே, கொள்ளுதல் = கொண்டிருத்தல், உடையனாயிருத்தல், கொள்- கொள்கை = இயல்பு. கொள் - கோள் = தன்மை. கொள் - கொண் - (கொணம்) - குணம் = கொண்டதன்மை, தன்மை.
கடைக்கழகச் செய்யுட்கள் அல்லது நூல்கள் என்று முதலில் வழங்கியவை பத்துப்பாட்டும் எட்டுத்தொகையுமே. திருவள்ளுவர் கழகப்புலவரன்மையாலும், அவர் நூல் கழகத்திலுள்ள பிராமணப் புலவரால் ஒப்புக் கொள்ளப் பெறாமையால் அரங்கேறாதிருந்ததினாலும், அது கழக நூலும் கழக மருவியநூலுமல்லாது தனியாகவேயிருந்து வந்தது. பிற்காலத்திற் கடைக்கழகங் கலைக்கப்பட்டபின், சமணத் தமிழ்க் கழகத்தைச் சேர்ந்த அறநூலாசிரியர் சிலர் தம் நூல்கட்குக் கடைக்கழக நூல் நிலைமை யூட்டல் வேண்டி, கழகக் காலத்தனவும் பிற்காலத்தனவுமான பதினெண் நூல்களை ஒரு தொகுதியாக்கி, அவற்றைப் பதினெண் கீழ்க்கணக்கென்றும் பத்துப்பாட்டையும் எட்டுத்தொகையையும் பதினெண் மேற்கணக்கென்றும் வழங்கினதாகத் தெரிகின்றது.
திருக்குறள் கழக நூலன்மையாலும், அதற்கு நால் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட கார்நாற்பது, களவழிநாற்பது, இன்னாநாற்பது, இனியவை நாற்பது என்னும் நான்கே கழகக்காலத்தனவாதலாலும், ஏனையவெல்லாம் வச்சிரநந்தி 5-ஆம் நூற்றாண்டில் மதுரையில் சமணத் தமிழ்க்கழகம் நிறுவிய பின்னரே எழுந்தவையாதலாலும், அவற்றுள் ஆசாரக்கோவை திருக்குறட்கு நேர்மாறாக வடசொல்லும் ஆரியக்கொள்கையும் மிகுந்திருப்பதுடன், இழிதகு நிலையில் தமிழரைப் பிராமணர்க்கு அடிமைப் படுத்தியிருப்பதாலும், பதினெண்கீழ்க்கணக்கு என்னும் தொகுதிமுறை மிகத்தவறானதென்றும், திருக்குறளை அதிற் சேர்த்தது அதினும் மிகத்தவறானதென்றும் அறிந்துகொள்க.
திருக்குறளைக் கடைக்கழகக் காலத்து அம்மை வனப்பு நூலென்று கொள்வதே தக்கதாம்.
10. பாயிர விளக்கம்
"ஆயிர முகத்தான் அகன்ற தாயினும் பாயிர மில்லது பனுவ லன்றே"
பாயிரம் பொதுவும் சிறப்பும் என இருவகைப்படும். இலக்கண நூற்கு இவ்விரண்டும் வேண்டும்; இலக்கிய நூற்குச் சிறப்பொன்றே போதும். அச்சிறப்பும், பிறர் ஆசிரியனையும் நூலையும் சிறப்பித்துக் கூறுவதும் ஆசிரியன் நூற்பொருளைச் சுருக்கிக் கூறுவதும் என இரு வகையாம். ஆசிரியன் கூறுவது தற்சிறப்புப்பாயிரம் எனப்படும். அது கடவுள் வழுத்தொடு கூடியும் கூடாதும் இருக்கும்.
மக்களெல்லாரும் இம்மையிலும் மறுமையிலும் இன்புற்று வாழ வேண்டுமென்பதே, திருவள்ளுவர் திருக்குறளியற்றியதன் நோக்கம். இல்லறத்தில் இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்றவாறு எங்ஙனம் ஒழுக வேண்டுமென்பது இல்லறவியலிலும், இறந்தபின் வீடு பெறுவதற்கு எவ்வெவ்வறங்களையும் பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்பது துறவறவியலிலும், எல்லாரும் தத்தம் தொழிலைச் செய்து பொருளீட்டி வாழ்வதற்கு அரசன் எங்ஙனம் பாதுகாப்பளிக்க வேண்டுமென்பது பொருட்பாலிலும், கணவனும் மனைவியும் காமவின்பத்தை எங்ஙனம் நுகரவேண்டுமென்பது இன்பத்துப் பாலிலும், கூறப்பட்டுள்ளன.
இங்ஙனம் மக்களெல்லாரும் இடையூறின்றி இனிது வாழ்தற்கு, முதற்படியாக வேண்டிய ஏதுக்கள் நான்கெனத் திருவள்ளுவர் கண்டார். அவை கடவுள்வழிபாடு, மழைபெயல், துறவியர்உறைவு, அறவொழுக்கம் என்பன. இவற்றையே ஆதிபகவன் வழுத்து, வான்சிறப்பு, நீத்தார்பெருமை, அறன்வலியுறுத்தல் என்னும் பாயிர வதிகாரங்கள் நான்கும் எடுத்தோதுகின்றன. ஆதலால், திருக்குறட்குப் பாயிரந் தேவையில்லை யென்பதும், அது இடைச் செருகலென்பதும், ஆராய்ச்சியில்லார் கூற்றேயென அறிக.
பாயிரம் என்னும் சொல், முதற்கண் போர்மறவர் போர்க்களத்திற் பகைவரை விளித்துக்கூறும் நெடுமொழியென்னும் மறவியல் முகவுரையைக் குறித்துப் பின்பு நூன் முகவுரையைக் குறித்தது.
பயிர்தல் = (க) ஊரி விலங்கு பறவைகள் ஒன்றையொன்று அழைத்தல்.
'பாயிரங் கூறி என்பதற்கு "வீரத்திற்கு வேண்டும் முகவுரைகள் சொல்லி" என்று பழைய வுரையாசிரியர் பொருள் வரைந்திருப்பதை நோக்குக.
11. நூற்பகுப்பு
திருக்குறள், பால் என்னும் முப்பெரும் பிரிவுகளையும் இயல் என்னும் எண் சிறு பிரிவுகளையும், அதிகாரம் என்னும் 133 உட்சிறு பிரிவுகளையும் உடையது. ஒவ்வோர் அதிகாரமும் பப்பத்துக் குறள்களைக் கொண்டது. ஆக, மொத்தம் 1330 குறளாம். பாயிரமும் ஊழும் நூல் முழுமைக்கும் பொதுவாம்.
அதிகாரக் கணக்கு
பால்
இயல்
அதிகாரத்தொகை
அறத்துப்பால்
பாயிரவியல் இல்லறவியல் துறவறவியல் ஊழியல்
4 20 13 1
பொருட்பால்
அரசியல் உறுப்பியல்
25 45
இன்பத்துப்பால்
களவியல் கற்பியல்
7 18
____
மொத்தம்
133
____
உறுப்பியல் அமைச்சு (10), நாடு (1), அரண் (1), பொருள் (கூழ், 1), படை (2), நட்பு (17), குடி (13) என ஏழு பகுதிகளையும் 45 அதிகாரங்களையும் உடையது. நட்பிற் பகையும் (14) அடங்கியுள்ளது.
ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு (அதிகாரம்:அவையஞ்சாமை குறள் எண்:725)
பொழிப்பு (மு வரதராசன்):அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடை கூறும் பொருட்டாக நூல்களைக் கற்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.
மணக்குடவர் உரை: அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும். நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.
பரிமேலழகர் உரை: ஆற்றின் அளவு அறிந்து கற்க - சொல்லிலக்கண நெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக் கற்க; அவை அஞ்சா மாற்றம் கொடுத்தற்பொருட்டு - வேற்றுவேந்தர் அவையிடை அஞ்சாது அவர் சொல்லிய சொற்கு உத்தரஞ்சொல்லுதற் பொருட்டு. (அளவை நூல், சொல் நூல் கற்றே கற்க வேண்டுதலின், அதற்கு அஃது ஆறு எனப்பட்டது. அளக்கும் கருவியை 'அளவு' என்றார், ஆகுபெயரான். அவர் சொல்லை வெல்வதொரு சொல் சொல்லலாவது, நியாயத்து வாதசற்ப விதண்டைகளும் சலசாதிகளும் முதலிய கற்றார்க்கே ஆகலின், அவற்றைப் பிழையாமல் கற்க என்பதாம், இதனான் அதன் காரணம் கூறப்பட்டது.)
தமிழண்ணல் உரை: அளவையின்கண் அஞ்சாமல் நின்று, தன்னைக் கேள்வி கேட்பவர்கட்கெல்லாம் மறுமொழி கொடுக்கும் பொருட்டு, ஒருவன் அதற்கான நெறிமுறைப்படி அத்தகைய ஆற்றல் தரும் அளவை நூலை நன்கு கற்க வேண்டும். அளவைநூல் -தருக்கம். அவைக்கு அஞ்சாது, உடனுக்குடன் மறுமொழிய, வினா விடைகளாலான அளவை நூலறிவு மிகமிகத் தேவை.
பொருள்கோள் வரிஅமைப்பு: அவையஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு ஆற்றின் அளவறிந்து கற்க.
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும்; மணக்குடவர் குறிப்புரை: நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும், (2) வேதமும் ஆகமமும் கற்றலும், (3) உழவும் வாணிகமும் கற்றலும், (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும். பரிப்பெருமாள்: நெறியானே அளவு கூறு நூல்களை அறிந்து கற்க; பரிப்பெருமாள் குறிப்புரை: அளவு-பிரமாணம். அது கூறு நூல்களாவன மீமாம்சை முதலான நூல்கள். கல்வியாவதுமெய் ஆராய்ச்சியான நூல்களைக் கற்றலும், வேத வேதாந்தம் கற்றலும், உழவும் வாணிகமும் கற்றலும், படை வழங்கலாகிய தண்டநீதி கற்றலும் என நால்வகைப்படும் என்பது கௌடல்ய மதம். அந்த நான்கினும் பின் கூறிய இரண்டும் சொல்லாண்மை அன்மையானும், வேதம் கேட்டல் சொல்லாதே அமைதலானும், அவையிற்றைக் கூறாது தர்க்கம் கற்றர்க்கல்லது மறுமாற்றம் சொல்லுதல் அரிது ஆதலின் அதனைக் கற்கவேண்டும் என்று இது கூறப்பட்டது. [தர்க்கம் - உண்மைப்பொருளை உசாவியறியத் துணைசெய்யும் நூல்.] பரிதி: ஒரு காரியத்தைக் கற்கும்போது பொருள் தெரிந்து கற்க; காலிங்கர்: அரசர்க்கு அமைச்சராய் உள்ளார் முன்னமே தாம் கற்குமிடத்துக் கல்வி நெறியின் அளவு அறிந்து கற்பார் ஆக; காலிங்கர் குறிப்புரை: இதனால் என்சொல்லியவாறோ எனின், அரச நீதியும் அமைச்ச நீதியும் அறநெறிக்கு உரியவும், புரவியும் களிறும் பொருந்துவ குறிப்பவும் பிறவும் ஆகிய வரம்புக்கு ஏற்பன கற்க என்று இங்குச் சொல்லிய அன்றிப் புல்லிய கற்பின் அவை அரசர்க்கும் அவைக்கும் அடாதன என்றவாறு. [புல்லிய - இழிந்த நூல்கள்]. பரிமேலழகர்: சொல்லிலக்கண நெறியானே அளவை நூலை அமைச்சர் உட்பட்டுக் கற்க; பரிமேலழகர் குறிப்புரை: அளவை நூல், சொல் நூல் கற்றே கற்க வேண்டுதலின், அதற்கு அஃது ஆறு எனப்பட்டது. அளக்கும் கருவியை 'அளவு' என்றார், ஆகுபெயரான். அவர் சொல்லை வெல்வதொரு சொல் சொல்லலாவது, நியாயத்து வாதசற்ப விதண்டைகளும் சலசாதிகளும் முதலிய கற்றார்க்கே ஆகலின், அவற்றைப் பிழையாமல் கற்க என்பதாம், இதனான் அதன் காரணம் கூறப்பட்டது.
'நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும்' என்று மணக்குடவர் கூற பரிப்பெருமாள் 'நெறியான அளவு கூறு நூல்களைக் கற்க' என்றார். பரிதி 'பொருள் தெரிந்து கற்க' என்கிறார். காலிங்கர் 'கல்வி நெறியின் அளவு அறிந்து கற்க' என உரை கூறினார். பரிமேலழகர் பரிப்பெருமாளைப் பின்பற்றி 'அளவை நூல் உட்பட்டுக் கற்க' என உரை செய்தார். .
இன்றைய ஆசிரியர்கள் 'முறையாகத் தருக்கநூல் அறிந்து கற்க', 'நெறிப்படி அளவை நூல்களை (தருக்க நூல்களை) அறிந்து தெளிவாகக் கற்க வேண்டும்', 'சபையில் தர்க்கம் செய்ய நேரிட்டால் சபைக்கு அஞ்சாமல் தம்முடன் தர்க்கம் செய்கிறவருக்கு எதிர்வாதம் சொல்லுவதற்காக', 'நெறிமுறைப்படி அளவைகளை (தருக்கங்களை) நன்கு அறிந்து கற்க வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.
முறையாக வேண்டிய அளவறிந்து கற்க வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.
அவையஞ்சா மாற்றம் கொடுத்தற் பொருட்டு:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்: மணக்குடவர்: அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக. பரிப்பெருமாள்: அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக. பரிதி: ஆஸ்தானத்திலே உத்தாரங் கொடுத்தல் பொருட்டாக என்றவாறு. [உத்தாரம் - மறுமொழி] காலிங்கர்: என்னை எனின், பின்பு தாம் சென்று எய்திய அவையினை அஞ்சாது மற்று அவர் கேட்டவற்றிற்கு மாற்றம் வண்மையின் வழங்குதல், பொருட்டு ஆக என்றவாறு. பரிமேலழகர்: வேற்றுவேந்தர் அவையிடை அஞ்சாது அவர் சொல்லிய சொற்கு உத்தரஞ்சொல்லுதற் பொருட்டு.
'அவையஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அவைக்கண் அஞ்சாது மறுமொழி சொல்ல', 'அவையில் ஒன்றைக் கேட்டார்க்கு அஞ்சாமல் மறுமாற்றம் கொடுத்தற்காக', '(சொல்ல வேண்டிய) ஒழுங்கு முறை கெடாதபடி அளவறிந்து (தம் கல்வித் திறத்தை அழுத்தமாகப்) பேச வேண்டும்', 'அவைக்கு அஞ்சாமல் கேட்ட கேள்விகட்கு விடையளித்தற்பொருட்டு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
மன்றத்தில் அஞ்சாமல் மறுமொழி சொல்ல என்பது இப்பகுதியின் பொருள்.
நிறையுரை: மன்றத்தில் அஞ்சாமல் மறுமொழி சொல்ல, முறையாக வேண்டிய அளவறிந்து கற்க வேண்டும் என்பது பாடலின் பொருள். 'அளவறிந்து கற்க' குறிப்பது என்ன?
கேள்வி கேட்பார்க்குப் பதில் கொடுக்கத் தேவையான அளவு படித்து அவைக்குப் பேசச் செல்லுக.
வினா எழுப்புவோர் தொடுக்கும் சொல்லுக்கு அஞ்சாமல் சொல் தருவதற்காக. பேசப்போகும் பொருள் பற்றிய நூல்களை கற்கவேண்டிய அளவு அறிந்து கற்றல் வேண்டும். அவையில் அஞ்சாமல் பேசி மறுமொழிசொல்லும் வல்லமை பெறுவதற்காகக் கற்க வேண்டிய முறைப்படி கற்கவேண்டிய அளவு அறிந்து பலதுறை நூல்களைக் கற்க வேண்டும். பல நூல்கள் என்னும்போது அளவை நூல்களும் அடக்கம். கருத்து மோதல்கள் உருவாகும் அவைகளில் பேசும்போது எதிரில் இருப்போர் கேட்கும் கேள்விகட்கு உடனுக்குடன் பதிலிறுக்கவேண்டும். அங்ஙனம் விடை கூறும்போது, அச்சமில்லாமல் அழுத்தம் திருத்தமாகப் பேசவேண்டுமாதலால், அதற்கு வேண்டிய அளவு முறைப்படி கற்றிருக்க வேண்டும் என்கிறது இப்பாடல். அவைக்கு அஞ்சாமல் மறுமொழி கொடுப்பதற்காக இவ்வாறு கற்க வேண்டுமென்பதால், அத்தகைய தகுதியில்லாதார் அவையை எதிர்நோக்க அஞ்சுவர் என்பது பெறப்படும்.
'மாற்றம்' என்றதற்குச் சொல் என்றும் 'மாற்றம் கொடுத்தல்' என்ற தொடர்க்குப் பதில் கூறுதல் எனவும் பொருள் கொள்வர். மாற்றம் சொல்லிற்குப் பொதுப்பெயராயினும் மறுமொழிக்கு உரிய பெயராதலால் இங்கு இடமறிந்து பெய்யப்பெற்றது. 'மாற்றம் கொடுத்தல்' என்பது எதிர்வரும் வினாக்களையும் எதிர்ப்புகளையும் எதிர்பார்த்து அவற்றிற்குத் தக்க விடையை அவையில் கொடுக்க முன்னமேயே ஆயத்தமாக இருத்தலைக் குறிப்பது. அவையில் பிறர் மாற்றுக் கருத்துக்களைத் தெரிவிக்கும்போது அந்தக் கருத்துக்களைக் கூறுபவர் யாராக இருந்தாலும் அந்தக் கருத்துக்கள் தனக்குத் தவறு எனத் தோன்றினால், அஞ்சாமல் மறுப்பு தெரிவித்து தன் கருத்துகளை நிலைநாட்ட வேண்டும்.
'அளவறிந்து கற்க' குறிப்பது என்ன?
அளவு என்றதைப் பொதுச் சொல்லாகவே 'அளவு அறிந்து கற்க' என்றதில் கையாளப்பட்டது. அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு அதற்குரிய கல்வியைக் கொள்ளவேண்டும்; அக்கல்வி பெற அதற்குண்டான நூல்களை அளவு அறிந்து கற்க வேண்டும் என்கிறது பாடல். அப்படிக் கற்றுத் தெரிந்தபின் அவைக்குச் செல்ல அஞ்ச வேண்டியிராது. ஒருவன் தான் எடுத்துக் கொண்ட பொருள் பற்றி அவையில் அஞ்சாமல் சொல்வதற்கு, அப்பொருள் பற்றிய நூல்கள் பலவற்றை நன்கு கற்கவேண்டும். கேள்வி கேட்போர்க்கு விடைகூறும் பொருட்டாக பலதுறை நூல்களையும் கற்கும் முறைமை அறிந்து கற்க வேண்டும். அவையில் சிறப்பாகப் பேச சொற்றிறமை மிகவேண்டப்படுவதால் சொல்லிலக்கணத்தை முதலில் நன்கு கற்கவேண்டும். பின் தர்க்கநூல் எனச்சொல்லப்படும் அளவை நூலையும் (Logic) தெரிந்துவைத்திருக்கவேண்டும். சொல்லிலக்கணம் கற்றபின் அளவை நூல் கற்கத்தக்கது. இதனாலேயே பரிமேலழகர் 'தருக்க நூற்படிப்பார்க்கு, அதற்கு முன் இலக்கண அறிவு வேண்டும்' என்பதை வற்புறுத்த 'சொல்லிலக்கண நெறியானே' எனக்கூறினார். உண்மை காணுதற் பொருட்டும் காட்டுதற் பொருட்டும் சொற்போர் நடைபெறும். கருத்துப் போரில் மறுமாற்றம் சொல்லுதற்கு தர்க்கம் கற்றிருத்தல் மிகவும் துணை செய்யுமாதலால் அதனைக் கற்கவேண்டும். அப்போதுதான் எதிராளிக்குத் தக்கபடி ஈடுகொடுத்து வெற்றி கொள்ளுமாறு பேச முடியும்.
மன்றத்தில் அஞ்சாமல் மறுமொழி சொல்ல, முறையாக, வேண்டிய அளவறிந்து கற்க வேண்டும் என்பது இக்குறட்கருத்து.