தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்க தமிழ் நூல்களில் தமிழர்கள் வைதீக வேதங்களையும், வேள்வி செய்வதையும்,அந்தணர் பற்றி சொல்கிறத


Guru

Status: Offline
Posts: 1049
Date:
சங்க தமிழ் நூல்களில் தமிழர்கள் வைதீக வேதங்களையும், வேள்வி செய்வதையும்,அந்தணர் பற்றி சொல்கிறத
Permalink  
 


 சங்க தமிழ் நூல்களில் தமிழர்கள் வைதீக வேதங்களையும், வேள்வி செய்வதையும்,அந்தணர் பற்றியும் சொல்கிறது!



தமிழர்களின் இலக்கியங்களான தொல்காப்பியம், திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அகநானூறு, புற நானூறு, சிலப்பதிகாரம்......, இப்படி எண்ணிலடங்காத நூல்கள் அனைத்திலும் வேத கலாச்சாரம்,பண்பாடு,வழிபாடுகளையே சொல்கிறது என்பதை இங்கே பார்க்கலாம். இந்த இலக்கிய நூல்கள் இல்லாமல் தமிழனின் பாரம்பரியம், கலாச்சாரம், வரலாறு இவைகளை நிறுவ முடியுமா....?

தொல்காப்பியம் கூறும் வேத ஓதுவதும்/அந்தணர் பற்றியும் ..

தொல்காப்பியத்தில் வேதம் ஓதி திருமணம்...

“இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக்கூட்டம் காணுங்காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே”

-தொல்.பொருளதிகாரம்—1038

பொருள்: “வேதம் ஓதினனாகவும் நல்லொழுக்கனாகவும் இருக்கின்ற பிரம்மச்சாரியைத் தானாகவே அழைப்பித்து அவனை நூதன வஸ்திரத்தால் (புத்தாடைகளால்) அலங்கரித்து, கன்னிகையையும் அப்படியே நூதன பூஷண அலங்காரம் (பெண்ணையும் நகை, ஆடைகளால் ) செய்வித்து அவ்வரனுக்கு அவளைத் தானம் செய்வது பிராம்மம் ஆகும்."

இதில் வேதம் ஓதுகின்ற மாப்பிள்ளை யார்....? அவன் எந்த வேதத்தை ஓதினான்...?

அதாவது வேத ஓதுவது என்பது தமிழர் பண்பாடு என இதன் மூலம் அறியலாம்.

தொல்காப்பியர் என்பவர் கூறுகிறார், கற்பு என்பது திருமணத்துக்குப் பின்னர் ஆணும் பெண்ணும் உறவு பூண்டு வாழும் வாழ்க்கை. திருமணத்துக்கு முன்னர் வாழும் வாழ்க்கையைக் களவு என்றும், இந்த ஒழுக்கம் பற்றிய செய்திகளைத் தொல்காப்பியம் பொருள் அதிகாரத்தில் கற்பியல் என்னும் தலைப்பில் விளக்குகிறது.

எல்லோரும் கல்யாணம் என்ற பெயரில் பல மோசடிகள் செய்து பொய், பித்தலாட்டம் செய்யத் துவங்கிய பின்னர் ஐய்யர்கள் கல்யாணம் என்ற சடங்கை உண்டாக்கினர் என்று தொல்காப்பியர் கூறுகிறார்:

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே (1090)

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப (1091)

பறவைகள், மிருகங்கள் போல எந்த ஆணும் எந்தப் பெண்ணுடனும் ஓடி விடக் கூடாது. திருமணத்திற்கு தசப் பொருத்தம் – பத்து வித பொருத்தங்கள் பார்க்க வேண்டும் என்கிறார் தொல்காப்பியர்:

பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு
உருவுநிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே (1219)

“1.குலம்/கோத்திரம் 2. ஒழுக்கம் 3. வினை சிறப்பு. 4. வயது. 5. வடிவம். 6. காம (யோனி பொருத்தம்). 7. சால்வு. 8. அருளுடைமை. 9. உள்ளக் குறிப்பை அறிந்தொழுகும் அறிவு. 10. உயர்தன்மை ஆகிய பத்து பொருத்தங்கள் இருபாலருக்கும் ஒத்து இருக்கும் போது தான் கல்யாணம் சிறப்புறும்” என்கிறார் தொல்காப்பியர்.

தொல்காப்பியம் கூறும் சன்யாசிகள் அடையாளங்கள்...

''நூலே கரகம் முக்கோல் மணையே ஆயும் காலை அந்தணர்க்கு உரிய''
(தொடர் எண்- 1570)
முப்புரிநூல், கமண்டலம், முக்கோல் எனக்கூடிய தவம் செய்யும் கைதாங்கி, அமரும் பலகை இவை நான்கும் அந்தணர்க்குரியவைகள். (வனத்திற்கு சென்று தவம் செய்யும் வனப்பிரஸ்தன்)

''அந்தணாளர்க் குரியவும் அரசர்க்கு ஒன்றிய வரூஉம் பொருளுமார் உளவே.''
(தொடர் எண்- 1572)
“அந்தணர்க்குரிய முப்புரி நூல், கமண்டலம், முக்கோல், பலகை அரசர்க்கும் பொருந்தும்.”

தொல்காப்பியத்தின் இந்த அந்தணன் யார்...? இதிலும் தெளிவாக சொல்கிறது, அந்தணன் என்கிற வேத கலாச்சாரத்தை தான் !
பூணூலையும், முக்கோலாகிற திரிதண்டத்தையும் தரித்த பெரியவர்களே அந்தக்காலத்தில் சந்நியாசிகளாகக் கருதப்பட்டனர் என விளங்குகிறது. பூணூலும், முக்கோலுமுள்ள வைணவ சந்நியாசிகளே அக்காலத்தில் சான்றோர்களால் சந்நியாசிகளாகக் கருதப்பட்டார்கள் என விளங்குகிறது.




__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
RE: சங்க தமிழ் நூல்களில் தமிழர்கள் வைதீக வேதங்களையும், வேள்வி செய்வதையும்,அந்தணர் பற்றி சொல்கிற
Permalink  
 


தொல்காப்பியத்தில், நான்மறை வேதங்கள் பற்றி…

தொல்காப்பியத்தில் சிறப்புப் பாயிரத்தின் முதல் செய்யுளில், நான்கு வேதங்களையும் அறிந்த அதங்கோட்டு ஆச்சார்யார் என்ற பிராமணர் தலைமையில் நிலந்தரு திருவிற் பாண்டியன் சபையில் தொல்காப்பியம் அரங்கேறிய நற்செய்தியையும் தருகிறது..

“நிலம்தரு திருவில் பாண்டியன் அவையத்து
அறம் கரை நாவின் நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து” (பாயிரம்)

“நான்கு வேதங்களை முற்றிலும் அறிந்த அறம் பேசும் அதங்கோடு என்னும் ஊரில் இருக்கும் ஆசிரியரிடம் முதலில் தொல்காப்பியத்தைப் படித்துக்காட்டிய பின்னரே அதனை அரங்கேற்றம் செய்ததாகக் கூறுகிறது தொல்காப்பியம்.”

தமிழ் நூல்கள் கூறும் சமசுகிருத வேத யாகங்கள் & வேள்விகள் பற்றியது...

கலித்தொகை கூறும் வேள்விகளும் & யாகங்களும்...

"கேள்வி அந்தணர் கடவும்
வேள்வி ஆவியின் உயிர்க்கும், என் நெஞ்சே " - கலித்தொகை - 36

“வேள்வி செய்யும் அந்தணர் வேள்விக் குண்டத்தில் புகை எழும்புவது போல என் நெஞ்சு பெருமூச்சு விடுகிறது."

அந்தி அந்தணர் எதிர்கொள, அயர்ந்து
செந் தீச் செவ்அழல் தொடங்க வந்ததை - கலித்தொகை- 119:12,13

பொருள்: "அந்தணர் செந்தீ வளர்த்து மாலைக் காலத்தைப் போற்றுகின்றனர்"

இதில் செய்கிற வேள்வி என்ன ? இதில் சொல்கிற அந்தணன் யார் ? அவர் யாக தீ எதற்கு வளர்த்தான் ? இதில் தமிழன் ஓதிய மந்திரம் என்ன ?

அதாவது பிராமணர்கள் மந்திரங்கள் ஓத வேள்விகள் செய்வதை சொல்கிறது. இது தமிழர் கலாச்சாரம் என அறியமுடிகிறது.

பரிபாடல் கூறும் நான்கு வேதங்கள்...

பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை,
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. - பரிபாடல்-திரட்டு 8:7-12

விளக்கம்: "பாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறா: சேர தலைநகர்- வஞ்சிவாழ் மக்களும், உரையூர் சோழ தலைநகர்வாழ் மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர். நாங்கள் அதிகாலையில் அந்தணர் ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் ஓதும் முழக்கம் கேட்டு எழுகிறோம்” என பெருமை கொள்கின்றார்.

தமிழின் பழமையான தொல்காப்பியத்தில் பரி பாடலின் இலக்கணம் எடுத்தாளப்பட்டு இருக்கு. சங்க இலக்கிய காலத்திற்கும் தெளிவாய் தெரிந்திருகிறது வேதத்தின் ஆதி என்பது தமிழே. தமிழின் மந்திர மொழி சமஸ்கிருதம்.

புறநானூறு & அகநானூறு கூறும் அந்தணர் வளர்க்கும் வேள்வி பற்றி …

புறநானூற்றின் பல பாடல்களில் வேதம் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. முதல் பாடலிலேயே, சிவனை வர்ணிக்கும் புலவர் பெருந்தேவனார்…

“கறைமிடறுஅணியலும்அணிந்தன்று; அக்கறை
மறைநவில்அந்தணர் நுவலவும்படுமே”

“வேதம் உணர்ந்த அந்தணர்கள் சிவனைத் தொழுது ஏத்துவார்கள் “என்கிறார்

"நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப்பெருங்கண் மாப்பிணை,
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற்றுஞ்சும் பொற்கோட்டு
இமயமும்,பொதியமும் போன்றே' (புறம்-2 )

"இமயம், பொதியம் ஆகிய மலை அடுக்கத்தில் அந்தணர் வளர்க்கும் முத்தீ விளக்கொளியில் நவ்வி-மான்கள் உறங்குவது போல அச்சமின்றி உன் மக்கள்-சுற்றம் நிலை கொள்வதாகுக' என்கிறார்

" நற்பனுவல் நால் வேதத்து
அருஞ் சீர்த்திப்பெருங் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதிபொங்கப், பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி' (புறம் -15)

"முழவினை முழக்கிக்கொண்டு உன்னைப் பாடும் பாடினியின் வஞ்சிப் பாடலை விரும்பும் வலிமை மிக்கவனே! நால்வேத சிறப்புமிக்க, குழியில் நெய் ஊற்றி, ஆவி பொங்க வேள்வி செய்து, தூண் நட்டுச் சிறப்பெய்தியவனே'”

ஒழுக்கத்தில் நிலைத்துநின்று பற்றுவிட்ட முனிவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே வேத நூல்களின் துணிவாகும் எனக் கபிலர், சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனை வாழ்த்துகின்றார்.

பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை வாழ்த்தும் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர்,

"பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறிதிரியினும்
திரியாச் சுற்றமொடு முழுது சேண்விளங்கி' (புறம்-2)

"பால் புளித்தாலும், பகல் இருளானாலும் நான்கு வேதங்களின் நெறிமுறை மாறினாலும் திரிபில்லாச் சுற்றத்தாருடன் நீ வாழ்வாயாக' என்கிறார்.

"பணியியர் அத்தைநின் குடையே; முனிவர்
முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே
இறைஞ்சுக, பெருமநின் சென்னி; சிறந்த
நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே' (புறம்-5)

"நகர்வலம் வரும் முக்கண்ணரான சிவபெருமான் முன் மட்டுமே உன் குடை தாழ்வு கொள்ளட்டும், நான்மறைகளை ஓதும் முனிவர்கள் முன் மட்டுமே உன் சிரம் தாழ்த்துவாயாக!”

என்று பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மன்னனை வாழ்த்தும்பொழுது பாடுகிறார் புலவர் காரிகிழார்.

.



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

 புறநானூற்றில் உள்ள அவ்வையார் பாடல்:


“ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் (போல) காண்தகு இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்!
யான் அறி அளவையோ இவ்வே வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும் இம்மென
இயங்கும் மாமழை உறையினும்
உயர்ந்து சமந்தோன்றிப் பொலிக நும் நாளே (புறம் 367)

“சேர ,சோழ, பாண்டிய மன்னர்கள் மூவரும் சோழன் பெருநற்கிள்ளி நடத்திய ராஜசூய யாகத்தில் ஒருங்கே அமர்ந்திருந்ததைக் கண்ட அவ்வைப் பாட்டிக்கு ஒரே அதிசயம், ஆச்சர்யம்!! “
((சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கு இருந்தாரை அவ்வையார் பாடியது))

சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.


மறவர் மலிந்த………………………….
கேள்வி மலிந்த வேள்வித்தூணத்து - புறம் 400

சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதானார் பாடியது

எருவை நுகர்ச்சி, யூபநெடுந்தூண்
வேதவேள்வித் தொழில் முடித்ததூஉம் - புறநானூறு 224

அகநானூற்றுக் குறிப்பு…

பாடியவர் மருதன் இளநாகனார்
மன்மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன்
முன்முயன்று அரிதினின் முடித்த வேள்வி
கயிறுஅரையாத்த காண்தகு வனப்பின்
அருங்கடி நெடுந்தூண் போல, யாவரும்
காணலாகா மாண் எழில் ஆகம் - அகநானூறு 220


சிலப்பதிகாரம் கூறும் வேதம்

“கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க.....” (அடைக்கலக் காதை)

“வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்”


திருக்குறள் கூறும் அந்தணர் & யாகங்கள் ...

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் - குறள் (543-செங்கோன்மை)

“அந்தணர்கள் ஓதும் வேதம் மற்றும் தர்ம சாஸ்திர அற நூல்களின் ஆட்சி செய்து அதற்கு முன்னோடியாய் அவர் செங்கோல் இருக்க வேண்டும்.”

ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின் - குறள் (560 கொடுங்கோன்மை)

“நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால் தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.

மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் (134 ஒழுக்கமுடைமை)

“பார்ப்பான் தான் கற்ற வேதத்தை மறந்து போனாலும் பிறகு கற்றுக் கொள்ளலாம்; ஆனால், அவன் பிறந்த குலத்திற்கு ஏற்ற, மேலான ஒழுக்கத்திலிருந்து தாழ்ந்தால் அவன் குலத்தாலும் தாழ்வான்.”

“ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு” - குறள் 3:1

“ஒழுக்கத்தில் நிலைத்துநின்று பற்றுவிட்ட முனிவர்களின் பெருமையைச் சிறந்ததாகப் போற்றிக் கூறுவதே வேத நூல்களின் துணிவாகும்.”

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். – குறள் 28

“பயன் நிறைந்த மொழிகளில் வல்ல சான்றோரின் பெருமையை, உலகத்தில் அழியாமல் விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.”

தவவலிமை உள்ளவர்கள் பெருமையைக வேதங்கள் இந்நிலத்து வேதங்கள் காட்டுகின்றன. ரிக் வேதத்தில் வருணன் மிக முக்கியமான கடவுள். தொல்காப்பிய பொருள் அதிகாரம் (1-5) "வருணன் மேய பெருமணல் உலகமும்" என் கூறுகிறது. தொல்காப்பியர் தனது சூத்திரத்தில் கடலும் கடலைச் சார்ந்த நிலமும் ஆன நெய்தல் நில மக்களின் கடவுள் வருணன் என்று சொல்கிறார்.

அது போல் தான் திருக்குறளும் சொல்கிறது ..

“சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு’ - குறள் 18)

“தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின்’ - குறள் 19)

பொருள்: “வானம் வறண்டு மழை இல்லாது போனால், இந்த உலகில் வானோர்க்கு எடுக்கும் திருவிழாவும் நடைபெறாது; நாள்தோறும் செய்யும் பூஜையும் நடைபெறாது”

மேலே, வள்ளுவன் கூறும் பூஜை என்ன? விழா (க்கள்) என்ன? இது வருண வழிபாடு, இந்திர வழிபாடு (பூஜை) தான் சொல்கிறார் !

சங்க நூல்கள் கூறும் வேத,புராண கதைகள்..

இதோ மஹாபாரத கதையை இங்கே சொல்கிறது..

புரிபு மேல் சென்ற நூற்றுவர் மடங்க,
வரி புனை வல்வில் ஐவர் அட்ட
பொரு களம் போலும், தொழூஉ - கலித்தொகை - 104

"இந்தப் போர் ஐந்து பேராகிய பாண்டவர் நூறு பேர் துரியாதனன் ஆதியரோடு போராடிய போர்க்களம் போல இருந்தது."

இந்திரனை தீம் புனல் (இனிப்பான நீர்) உலகத்துக்கு, அதாவது வயலும் வயல் சார்ந்த இடத்துக்கும் அதிபதி என்கிறார் தொல்காப்பியர். இதே கருத்துதான் வேதத்திலும் புராணத்திலும் உள்ளது. இந்திரனுடைய உலகத்தில் கிடைக்கும் அமிர்தம் (சம்ஸ்க்ருத சொல்) சங்க இலக்கியத்தில் முப்பதுக்கும் மேலான இடங்களில் பயன் படுத்தப்படுகிறது.

"கடலுள் மாய்ந்த இளம் பெரு வழுதி பாடிய புறம்" - 182-ல்

“இந்திரனுடைய அமிர்தமே கிடைத்தாலும் தனியாக உண்பவர் இல்லை” என்கிறார்.

மேலும், அந்தணர்கள், வேதம் ஓதுவதை கூறும் சங்க நூல்கள் ..

பிராமணர்கள் ஆறு தொழிலை உடையவர்கள்.
ஓதல் அந்தணர் வேதம் பாட - மது 656
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த - புறம் 397/20
மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே - புறம் 1/6
ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து - கலி 1/1
“ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல்
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்தொழுகும்
அறம் புரி அந்தணர்” – பதிற்றுப்பத்து 24)
கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது
வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச் (பதிற்றுப்பத்து பாட்டு - 74
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் - சிறு 204
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் புறம் -126-11
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு புறம் 361/4,5
அறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று - ஐங் 387/2
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் - கலி 69/5
ஒத்து உடை அந்தணர் உரை-நூல் கிடக்கை - சிலப்பதிகாரம் 15-70
ஓத்துஉடை அந்தணர்க்கு மணிமேகலை 13-25
ஓத்து இலாப் பார்ப்பான் உரை இன்னா நாற்பது 21
(ஓத்து - பார்ப்பான், அந்தணர் என்பது சங்க இலக்கிய முறையில் வேதம் பிராமணர்களை தான் குறிக்கிறது)

வடமொழி வேதங்கள் முனிவர்களால் இயற்கையிலிருந்து கேட்டு பெற்றவை, இப்பொருளிலேயே ஸ்ருதி என அழைக்கப்படும். வேதங்களிற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் பின்னால் எழுந்த பாணினியின் இலக்கண வரைமுறையினுள் வாராதமையால் எழுத்தில் வடிக்க மாட்டார்கள், குரு மூலமாய் ஒத்து கூற ஓதிக் கொள்வதால் ஓத்து. எழுதாமையால் மறை, எழுதாக் கற்பு எனும் பெயரில் சங்க இலக்கியத்தில் காணலாம்.

படிவ வுண்டிப் பார்ப்பன மகனே 5
எழுதாக் கற்பினின் சொல்லுள்ளும் குறுந்தொகை 156

நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளக்கும்
மறைமொழி தானே மந்திரம் என்ப. தொல்காப்பியம்-செய் 480

மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம், திருமுருகாற்றுப்படை2.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப. தொல் -பொருள-கற் 4
ஐயர் பாங்கினும் அமரர் சுட்டியும் - தொல் பொருள். கற்:5/29

மொழியை மேன்மை செய்த நம் பெரியோர் ஒரே நிலப்பரப்பில் விளங்கிய இரு வேறுபட்ட தனிச் சிறப்பு வாய்ந்த மொழிகளை அவற்றின் செறிவுமிக்க கருத்துகளை ஒன்றுக்கொன்று பெருமை சேர்க்கும் வகையில் பயன்படுத்தினார்களேயன்றி, எவ்விதக் காழ்ப்புணர்ச்சியும் அவர்களுக்கு இருக்கவில்லை.

சங்க இலக்கிய காலத்திற்கும் தெளிவாய் தெரிந்திருகிறது வேதத்தின் ஆதி என்பது தமிழே. தமிழின் மந்திர மொழி சமஸ்கிருதம்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard