தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இலக்கியங்களில் மறுபிறப்பு


Guru

Status: Offline
Posts: 898
Date:
இலக்கியங்களில் மறுபிறப்பு
Permalink  
 


இலக்கியங்களில் மறுபிறப்பு

 

ஆய்வு: ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டாரத்தில்  நெடுங்கல் வழிபாடும் வழிபாட்டு மாற்றமும்முன்னுரை
மனித உயிர் உடலும் குருதியும் கலந்த பின்டமாகும். வாழும் வாழ்வில் இவ்வுயிர் பிறர் போற்றும்படி  அறமாக இருக்க வேண்டும். பிற உயிர்களுக்கு துன்பம் விளைவித்தல்  கூடாது. ஆனால் மனிதன் இன்றைய நவீன வாழ்க்கையில் நிலைபேறில்லாத் தன்மையில் எதிர்காலத் தலைமுறையின் வாழ்க்கையைக் கருத்திற்கொண்டு பிற உயிர்களின்மீது போற்றுதலில்லாமல் சுயபோக்கோடு செயல்பட்டு வருகிறான். மனமும் அதனைச்சார்ந்து இயங்குகிறது. பண்பாடும் கலச்சாரமும் அதற்கு ஒத்திசைவு தருகிறது.

அதிலிருந்து மீளாக்கம் பெற்று புதியக் கலாச்சாரத்தைக் கையிலெடுக்கும் வன்மையும் ஒரு படி மக்களிடத்தில் எழுந்துள்ளது. மனித வாழ்வானது உயிர்களிடத்தில் இரக்கமும், அன்பும் கொள்ளும்போது மறுபிறப்பு எய்தாமல் இப்பிறப்பிலே இன்ப நிலையை அடைய முயற்சி செய்யும். இத்தகைய எண்ணப் போக்குகள் சங்ககாலத்திலிருந்து மக்களிடத்தில் நிலவி வந்தன. வருகின்றன. அதற்கு மக்கள் தங்கள் வாழ்வில் கடைபிடித்த அறங்கள் என்ன? அந்த அறத்தினால் மக்கள் அடைந்த இன்பப்பேறு என்ன? மறுபிறப்பின்மீது மக்கள் கொண்ட எண்ண வோட்டங்கள் எவ்வாறு இருந்தன. இருந்து வருகின்றன. இன்றைய நவீன வாழ்க்கையில் மனிதன் குடும்ப அமைப்பாக்கத்தில் பிறப்பு எய்தியும், மறுபிறப்பு எய்தாமல் இருக்கவும் கடைபிடிக்க வேண்டிய கொள்கைகள் என்ன என்பது குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சங்க காலத்தில்  மறுபிறப்பு
உயிர்களின் இறப்பானது இந்ஞாலத்தில் மீண்டும் பிறப்பு எய்துவதற்கே படைக்கப்பட்டவையாகும். ஆகையால் உயிர்களின் கதிகளை நான்கு நிலைகளில் நரகர், விலங்கு, மக்கள், தேவர் என உறுப்படுத்தப்பட்டுள்ளன. இந்நான்குவகைக் கதிகளும் இஞ்ஞாலத்தில் மீண்டும் மீண்டும் வினை புரிவதற்கே படைக்கப்பட்டவகையாகும். ஆனால் வாழும் வாழ்க்கையில் அறத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு இந்நிலை இல்லை என்கிறது.

அதாவது, ஒருவன் தன்னுடைய வாழ்வில் மறுமைப்பயன் (மறுபிறப்பு) அடைய எண்ணினால் அவன் அறப்பயன் செய்து ஒழுகுதல் சிறந்தன்று. அத்தகையோன் இப்பிறப்பில் நலம் செய்து மறுபிறப்பில் இன்பம் பெற முயற்சிப்பான். அத்தகையோனை அறவிலை வணிகன் என்றழைத்தனர். இதனைப் புறநானூறு தெளிவுபடுத்துகிறது.

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அற விலை வணிகன்” (புறம்.134:1-2)

என்ற பாடல் வரிசுட்டுகிறது. சங்கப் பாடல்களில் மறுபிறப்பு பற்றி கூறுகின்ற இடங்களெல்லாம் அறத்தை மட்டும் வழியுறுத்தவில்லை. கொடைத்தன்மையையும், உணவுப் பங்கீடுமே முன்னிருத்திப் பேசுகின்றன. பாரி, ஆஆய், சான்றோர் பிறருக்குச் செய்த கொடையும் (பாரி- பாணர்களுக்கு) வறுமை நிலையில் கொடுத்த உணவே முதன்மையாகக் கொள்ளப்படுகிறது. இங்கு பாரி, ஆஆய் இருவரும் மறுமைப் பயனை நோக்கி கைங்காரியங்கள் செய்தாகச் சொல்லப்படவில்லை. மக்கள் வறுமையில் வாடும்போது நிவர்த்தி செய்து, கொடையளித்து சிறப்புற்றதே மறுபிறப்பு நிலையில் புலவர்கள் பேசியுள்ளனர். இவ்வாறு குடிமக்களுக்குச் செய்யும் கொடையளிப்பு சமணத் தத்துவத்தில் அறமாகக் கொள்ளப்படுகிறது. அவ்வாறு செய்த கொடைகள் உயிர்களின் கதிகளை இப்பிறப்பிலே தெய்வநிலை அடையச்செய்கிறது. இவை ஒரு புறம் இருப்பினும், ஐந்து நில  மக்களிடத்திலும் இப்போக்கு நிலவியுள்ளன.

திணைச்சமூகத்தில்  மறுபிறப்பு
சங்க கால திணைச்சமூக மக்களிடமும் மறுபிறப்பு பற்றிய சிந்தனை நிலவியுள்ளன. புறவாழ்கையைத் தவித்து அகவாழ்வில் உள்ளம் மகிழ்ந்து உரிப்பொருள் தலைவி, தவைன் மீது நெருப்புற்று ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார். இது தனியொரு பெண்ணிற்கான இயல்பு நிலையாகும். பெண்களின் கற்பினை வலியுறுத்திக் காட்டுவதற்காகப் புலவர்கள் பெண்களின் மனவெளிப்பாட்டை மறுபிறப்பு நிலைவரை கொண்டு சென்றுள்ளனர். இல்லத்துப் பெண்களும் தன்னுடைய காதலன், கணவன் மீது கொண்டுள்ள அன்பினாலும் அவரையே அடைந்து அடுத்த பிறப்புவரைக்கும் தொடர்பு கொள்ள வேண்டுமென்று பேசியுள்ளனர்.


குறுந்தொகையில் நெய்தல்நில தலைமகன் தலைவியை விட்டுப் பிறிந்து பரத்தையர் மாட்டு போகும் தன்மையில் அவனது ஆற்றாமை கண்டு தலைவி, இல்லக்கிழத்தி மனம் வருந்தி, தலைவனே இப்பிறப்பு மாறி மறுபிறப்பு வருவதாயினும் நீ என் கணவன் ஆகுக. நின் மனம் ஒத்தவள் யான் ஆவேன் என்று தன்னுடைய ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள். இதனை,

“இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகிய எம் கணவனை
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே” (குறுந்.நெய்.49)

என்று கூறுகிறார். இங்கு மறுபிறப்பு சிந்தனை மனிதனின் ஆழ்மனதோடு பொருந்தியே வெளிப்பட்டுள்ளது. தன்னைச் சார்ந்துள்ள கணவன் பிரிந்து செல்லும் காலங்களில் அல்லது சந்தோசமான சூழல்களிலும் இத்தகைய எண்ணங்கள் எழுகிறது. தலைவியினுடைய ஆற்றாமையும் அதே நிலையில் தென்பட்டுள்ளது. பிறரை அடையும் எண்ண வோட்டத்தில் தன்னுடைய ஆழ்மனதின் தெரிவிப்பை மறுபிறவி வரையில் கொண்டு சென்றுள்ளதை சுட்டும்போது பெண்களிடத்தில் மறுபிறப்பு என்ற சொல்லாடல் வழக்கத்தில் இருந்து வந்தது தெரிய வருகிறது.

சங்க காலத்தில் ஆண்கள் பெண்களின் காமத்தை அடைவதற்கும் அடைந்த பின்பு அவை தொடந்து நிகழ்வதற்கும் சிற்சில நேரங்களில் தடைபடாமல் தொடர்வதற்காகவும் அப்பெண்ணுடைய காமஇன்பத்திலே திளைத்து உடல்புறத் தோற்றத்தை காமம் சார்ந்த நட்பை மறுபிறவியும் தொடரவேண்டும். அல்லது நிறைவுறச் செய்ய வேண்டும் என்று ஆண்களின் ஆழ்மனதிலும் இத்தகைய எண்ணங்கள் எழுந்துள்ளன.

குறுந்தொகை 199வது பாடலில், தலைவியின் இல்லில் அலர் எழுந்து இற்செரிக்கப்பட்டதால் தலைவனால் அவளைக்காண இயலவில்லை. இருப்பினும் காமவேட்கை மிகுதியால் தலைவியை இப்பிறவியில் அடையவில்லை என்றாலும் மறுபிறவியில் அடைவேன் என்று கூறுகிறான். உடலோடு கூடிய நோய் அழிந்தாலும் உயிரோடு கூடிய நட்பு அழியாது தொடரும். அன்பின் வெளிப்பாட்டை மறுபிறப்பு வரை வெளிக்கொண்டுள்ளனர்.

நிலப்பிரபுத்துவத்தில்  மறுபிறப்பு
மறுபிறப்பு குறித்த கருத்தாக்கம் நிலக்குடிகளிடமும் நிலவி வந்துள்ளன. சமூகத்தில் அங்கமாக இருப்பது குடும்பம். அக்குடும்பத்தில் புத்திரப்பாக்கியம் நிறைவு செய்யப் பெற்றோரை மறுமையிலும் வாழ்த்தியுள்ளனர். ஒரே குடிக்குள் உள்ள பகைவர்கள் பிறரைப்பழித்து எதிர்த்து அவர்களின் குடிப்பிறப்பைச் சுட்டிக்காட்டி இழிவு படுத்துவது பன்டையோரின் சொல்லாட்சி. இருப்பினும் ஒரே குடியில் பகைவராகத் திகழ்ந்து வரும் ஒருவன் தன்னை யொத்த ஆண் தனது வாழ்வில் குற்றமில்லாத அழகினையுடைய புதல்வனைப் பெற்று இருப்பாராயின் அவனது புகழை இப்பிறவியில் இவ்வுலகத்தே வாழ்ந்தும் மறுமை உலகில் குற்றமின்றி வாழக்கடவார் என்று வாழ்த்துவர். இச்சொல்லாச்சி சான்றோர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் பழமொழிகளாகத் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தன. இதனை அகநாநூற்றுப்பாடல் ஒன்றில் செல்லூர்க் கோசிகன் கண்ணனார் கூறுகிறார்.

“ இம்மை உலகத்து இடையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச்
சிறுவார்ப் பயந்த செம்மலோன் எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயொடு ஆகுதல் வாய்த் தனம்” (அகம்.66.1-6) என்று சுட்டுகிறது.   

திருக்குறளில் மறுபிறப்பு
ஒருவன் தம்மோடு பழகியவரின் நட்பானலுஞ்சரி அல்லது ஒருவருக்கு ஏற்பட்ட துன்பத்தினை மனமுவந்து போக்கி உதவுகின்றவர்களுடைய நட்பானலுஞ்சரி ஏழேழு பிறவிக்கும் விட்டு நீங்காது நினைத்துக்  காத்தருள வேண்டும். வள்ளுவா் இதனை,

“எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கன்
விழுமந்த துடைந்தவர் நட்பு” (குறள்.செய்நன்றி.8) என்றும் கூறுகிறார்.

மறுபிறப்பை போக்கக் கூடியவன்
மறுபிறப்பை அறவே அறுத்து போக்கக் கூடியவன் இறைவன் ஒருவனே. இறைவனுடைய திருவடியை நினைப்பவர்க்கும், அதனை அடைபவர்க்கும் மறுபிறப்பு இல்லை. அவர்களே பிறவியாகிய பெருங்கடலை நீந்திக்கடவுவார். இதனை,

“பிறவி பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவனடி சேரா தார்” (குறள்.2) என்று கூறுகிறார் வள்ளுவா். 

வள்ளுவா் பார்வையில் இறைவனுடைய திருப்பாதங்களில் சென்று சோ்வோர்க்கு மறுபிறப்பு மீண்டும் நிகழப் பெறாது.

காப்பியங்களில் மறுபிறப்பு
ஆண், பெண் வாழ்வில் அடுத்தடுத்து நிகழவிருக்கும் துன்பம் சார்ந்த இறப்பு அதனையொட்டிய கனவுகள் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். அல்லது துன்பம் சார்ந்த கனவுகள் ஏற்பட்டு பின்பு நிகழ்வாழ்வில் இறப்புகள் ஏற்படவும் செய்யும். பெரும்பாலும் பெண்களுக்குக் கணவன் இறப்பு சார்ந்து ஏற்படும் கனவில் அதனை நிவர்த்தி செய்ய இறை வழிபாட்டை கடைபிடித்தால் சரியாகிவிடும் என்ற சிந்தனைப்போக்கு, நம்பிக்கை வழக்கத்தில் நிலவி வருகிறது. இருப்பினும் வினைப்பயன் தொடர்ந்து வெளிப்பட்டு கனவுகள் நிறைவேறும் தன்மையிலும் இருந்துள்ளது.

கண்ணகியும் கோவலனும் ஒரு பெரிய ஊரை அடைந்து அவ்வூரில் தகாததொரு பழியை அடைய நேரிட்டு பழிசுமத்தினர். கணவனுக்கு நேர்ந்த நீங்கு கேட்டு மன்னன் முன் சென்று வழக்குரைத்தேன். இதனால், மன்னன் ஊர் இரண்டுக்கும் தீங்கு நேரிட்டதைக் கண்ணகியே முன்கூட்டியே வெளிக்காட்டுவது வினைவிளைப் பயனாகும். இதனை,

“கடுக்கும்என் நெஞ்சம் கனவினால் என்கை
பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம்
பட்ட பதியில் படாதது ஒருவார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேள்இட்டு என்தனை;மேல்
கோவலாற்கு உற்றதுஓர் தீங்குஎன்று அதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு
ஊர்க்குஉற்ற தீங்கும்ஒன்று உண்டால் உரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம்
உற்றேனொடு உற்ற உறுவனோடு யான்உற்ற
நல்திறம் கேட்கின் நகைஆகும் பொற்றொடீஇ (சிலம்பு.கனா.காதை.44-55)

என்று கூறுகிறாள். இங்கு இரண்டு வழிகளில் வினைப்பயன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1. முற்பிறவியில் கணவனுக்கு செய்ய வேண்டிய நோன்பு ஒன்றினை கண்ணகி செய்யாதிருத்தல்.
2. கோவலன் சங்கமன் எனும் ஒருவனை கொன்ற காரணத்திற்காகவும் வினைவிளைப்பயன் மேற்கொள்கிறான்.

இதில் பெண்கள் கணவனோடு தொடர்புடைய தீவினையை சரிசெய்ய சில நம்பிக்கை சார்ந்த சடங்குகளைச் செய்வதன் மூலம் சொர்க்க நிலையை அடைந்து இறைவன் பாதங்களைத் திரும்ப பெற்று மறுமையில் பூமியில் மனிதனாகப் பிறக்கக் கடவார்கள் ஆவார். கண்ணகியும் முற்பிறப்பில் கணவன் பொருட்டுச் செய்ய வேண்டிய நோன்பு ஒன்றினை செய்யாமல் விட்டதால் தீ கனவு ஏற்பட்டது. அதனை சரிசெய்ய காவிரியாறு கடலொடு கலக்குமிடத்திற்குச் சென்று சோமக் குண்டம், சூரிய குண்டம் என்ற இரண்டு பொய்கையில் மூழ்கி காமவேள் கோட்டத்தை தொழும்போது மறுபிறவியில் சுவர்க்கம் அடையப் பெறுவர். இது வினைவிளைப் பயனாகப் பெண்களுக்கு ஏற்படும் கனவுகளாகும். (சிலப்ப.கனா.காதை.56-64) இவ்வழிபாட்டில் பெண்கள் அறுகு, சிறுபூளை, நெல் முதலியவைகளைத் தூவி நீர்த்துறையை வழிபாடு செய்கின்றனர்.

விலங்குகள் மனித மறுபிறப்பை எய்துதல்
சங்க காலத்தில் தானம் செய்தலில் பெண்களே அதிகமாக முன்னிருத்தப்பட்டனர். அவ்வாறு தானம் செய்யும்போது விலங்குகள் (குரங்கு) மறுபிறப்பு எடுத்து மீண்டும் மனிதனாக ஆக்கப்பட்டுள்ளது. மறுபிறப்பிற்கான செய்கைகளை பெண்கள் வாயிலாகவே நிறைவேற்றியுள்ளனர். அப்பெண்கள் தானம் இடும்போது விலங்காக இருந்துள்ள குரங்கு பின்பு மனிதனாக முற்பிறப்பு அடைந்துள்ளான்.

எட்டி என்ற பட்டத்தையும் சாயலன் என்ற பெயரையும் கொண்ட இல்லறத்தான் ஒருவன் பட்டினி நோன்பிருக்கும் பலருக்கும் உணவளிப்பதைக் கடமையாகக் கொண்டிருந்தான். பலரும் புகுந்து உணவருந்து அம்மனையில், ஒரு நாள் சாயலன் மனைவி ஒரு மாதவனை வரவேற்று, தீவினை ஒழிய அருளுமாறு வேண்டி, உணவளித்தாள். அவ்வேளை அவ்வூரிலிருந்த சிறுகுரங்கு ஒன்று, அச்சத்தால் ஒதுங்கி அவ்வீட்டினுள் நுழைந்தது. அருளறம் பூண்ட மாதவனின் திருவடிகளை வணங்கி அக்குரங்கு, அவன் உண்டபின் எஞ்சிய சோற்றையும் ஊற்றிய நீரையும் நீங்காத விருப்பத்துடன் சிறிதளவு பருகித் தன் பசியைத் தீர்த்துக் கொண்டது. பசியாறிய குரங்கு அவன் முகத்தைப் பரிவுடன் நேராகப் பார்த்தது. விருப்பு வெறுப்பற்ற கொள்கையுடைய மாதவனும், குரங்கின் அன்பான பார்வையைக் கண்டு நெகிழ்ந்து இல்லறம் பேணும் நங்கையே இக்குரங்கினை உனது மக்களைப் போலப் வளர்ப்பாயக என்று கூறிச் சென்றான். அக்கருத்தைக்கேட்ட மங்கையும் அவன் சொல்படியே காப்பாற்றி வந்தாள்.

அக்குரங்கு இறந்த பின்னரும்,  தானம் செய்யும்போது, அதில் ஒரு பகுதியை அக்குரங்குக்கென ஒதுக்கி அதன் தீய பிறவி ஒழிக என்று கருதிக் கொடுத்து வந்தாள். அதனால் அது மறுபிறப்பில் மத்தியப் பிரதேசத்திலுள்ள வாரணாசி என்னும் நகரத்தில் உத்தர கௌத்தன் என்னும் ஒருவனுக்கு ஒப்பற்ற மகனாய்ப் பிறந்தது. அப்புதல்வன் அழகாலும் செல்வத்தாலும் அறிவாலும் மேம்பட்டுத் தோன்றி, பெருமைக்குரிய தானங்கள் பல செய்து, அப்பிறவியிலேயே முப்பத்திரண்டாவது வயதில் இறந்தபோது தேவ வடிவத்தினைப் பெற்றான். இவ்வாறு பெற்ற இந்த உயரிய பெருமை எல்லாம், தன்னைப் பாதுகாத்து வளர்த்த சாயலன் மனைவியின் தானப் பயனாலேயே என்பதை மனத்துள்கொண்டு,  முற்பிறவியில் தான் கொண்டிருந்த குரங்கு உருவின் சிறுகையை, தன் ஒரு பக்கக் கையாகக் கொண்டு திகழ்ந்தான்.(அடைக்காதை.151-200) இங்கு உயிர்களின் சாபத்திற்கு ஆளமுற்பட்ட நிலையில் அதனைக் காத்தல் பெண்களின் பங்களிப்பு முக்கியமாக இருந்துள்ளது.

சமணத்தில்  மறுபிறப்பு
ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் சமண சமயத்தையே முன்னிடுத்திப் பேசுகின்றன. ஐந்து காப்பியங்களும் சமணக்காப்பியங்கள் ஆகும். சமணத்தின் கொள்கையே உயிர் பலி கொடுத்தல் கூடாது. அவ்வாறு உயிர்களைக் கொலை செய்தால் மனித பிறப்பானது மீண்டும் மீண்டும் மறுபிறப்பு எய்தக் கூடும். யசோதர காவியத்தில், யசோதரன் அவனது தாய் (சந்திரமதி) ஆகிய இருவரும் செய்த மாக்கோழி உயிர்பலியால் யசோதரன் மயில், முள்ளம்பன்றி, மீன், ஆட்டுக்குட்டி (இரண்டுமுறை), கோழி என்று பிறப்பும், சந்திரமதி அவனது தாய்   நாய், பாம்பு, முதலை,ஆட்டுக்குட்டி, எருமை, கோழி என பல்வேறு பிறவிகள் எடுத்து வருந்தினா்.

உயிர்களின் இறப்பானது இந்ஞாலத்தில் மீண்டும் மறுபிறப்பு எய்துவதற்கே படைக்கப்பட்டவையாகும். இதனை,

“கறங்கென வினையி னோடிக் கதியொரு நான்கி னுள்ளும்
பிறந்த நாம் பெற்ற பெற்ற பிறவிகள் பேச லாகா
இறந்தன இறந்து போக எய்துவ தெய்திப் பின்னும்
பிறந்திட இறந்த தெல்லாம் இதுவுமவ வியல் பிற்றேயாம்” (ய.சோ.35)

பாடல் கூறுகிறது. உயிர்களானது மீண்டும் மறுபிறப்பு எடுக்கும் நிலைக்கு உரியனவாகும் என்று சமணத் தத்துவங்கள் கூறுகின்றன. ஆனால் அறத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு இந்நிலை இல்லையாகும்.
அறத்தைக் கடைப்பிடிப்பவர்க்கு உடம்பால் பிறப்பால் இல்லை

ஒருவன் தன்னுடைய வாழ்வில் முறையான அறத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்து இறப்பானாயின்  மீண்டும் மறுபிறவியல்  அவனது பிறப்பு இராது. மாறாக அறவாழ்வை ஒழுகலாறுகளாகக் கொள்ளாமல் ஒருவனது வாழ்வு இருக்குமாயின் இறந்த பின்பு நிலைபெறாமால் உயிரானது இருக்கும். மீண்டும் பிறப்பெடுக்கச் செய்யும். இதனை,

“பிறந்தநாம் பிறவி தோறும் பெறுமுடம் பகைவள் பேனாத்
துறந்தறம் புணரின் நம்மைத் தொடர்ந்தன வல்ல” (யா.சோ.36)

என்று யசோதர காவியம்  கூறுகிறது. ஒருவன் தனது வாழ்வில் இறப்பு கதிவரை நிலையான அறத்தைக் கடைபிடிப்பானால் என்றால் இல்லை. குடும்பவாழ்விலிருந்து விலகி அறவாழ்க்கை, துறவுவாழ்க்கை வாழக்கூடியவர்களின் வாழ்விற்கு இத்தகைய வினை பொருந்தும். அதுவே நிலைபேறு உடைய வாழ்வாகும். அவனுக்கே மறுபிறப்பில் உடம்பால் பிறப்பு இல்லை என்று சமண மதத்தில் கூறவும் படுகிறது. அது போன்று பிற உயரிகளைத் துன்புறுத்திக் கொண்று அதன் உயிர்களை உடம்பிலிருந்து நீக்கி வாழ்பவர்கள் வறுமையும் நோயும் மிகுந்த தீய வாழ்க்கையில் உலளக்கூடியவர்களாக இருப்பர். அவர்களுக்கே மறுபிறப்பு நிகழக்கூடும். இதனை, வள்ளுவர்

“உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்” (குறள்.கொல்.10) என்று கூறுகிறார்.

பௌத்தத்தில்  மறுபிறப்பு
துக்கத்தை நீக்கி இன்பத்தைப் பெறும் வழிகளைப் போதிப்பது பௌத்தக் கொள்கை. மணிமேகலை பல்வேறு அறங்களைக் கடைப்பிடித்து துறவு வாழ்வு நெறியை வெளிக்காட்டக்கூடியது. முற்பிறப்பு அடைவதற்கு தனிமனிதன் தனது வாழ்வில் முழுவதுமான அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இதனை,

“அறமெனப் படுவது யாதெனக் கேட்பின்
மறவா திதுகேள் மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதில்... (மணி.25.228-231) என்றும்

“ மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர் கொடுத்தோரே” (மணி.1.95-96)

இவ்வுலகில்  நிலைபெற்று வாழ்வதற்கு அறங்களை செய்து ஒழுகல் சிறந்தன்று பௌத்தக் கொள்கை கூறுகிறது.

இதை போன்று பக்தி இலக்கிய காலத்திலும் மறுபிறப்பு குறித்த செய்திகள் விரவிக் காணப்படுகிறது. சுந்தரா் முற்பிறப்பு இப்பிறப்பு என்ற நிலையிலே தனது வாழ்க்கை இறைவனது பாதக்கமலங்களை அடைந்து விட்டன. எனக்கு மறுபிறப்பு இல்லை என்றும் கூறுகிறார். ஆனால், மறுபிறப்பு ஏற்படாமலிருக்க இறைவனுக்கு தொண்டு புரியுங்கள். அவ்வாறு செய்வதன் மூலம் நேரடியாக தேவலோகம் சென்று இறைகதி அடையப் பெறலாம் என்றும் கூறுகிறார்.

முடிவாக
மறுபிறப்பு சங்ககால மக்களிடத்தில் இருவேறு தன்மையில் வெளிப்பட்டுள்ளன. புலவர் அரசர் உறவில் கொடையளித்தல், உணவுப்பங்கீடு செய்தல் என்ற தன்மையிலும் மக்கள் குடும்பம் என்ற தன்மையில் எதிர்பார்ப்பு என்ற நிலையிலும் வெளிப்பட்டுள்ளது. ஆனால் இவையிரண்டும் ஓர் உயிர் தன் வாழ்நாளில் இறைநிலையை அடையுமா என்ற கருத்தோட்டத்தில் செயல்படவில்லை. சமூகம் அதன் பிரதிபலிப்பு வாழ்வியலோடு தொடர்பு கொண்டு வினை புரிந்துள்ளது. திணைக்குடி மக்களிடத்தில் தனியொருவனுடைய வாழ்வியலோடு இயைபுற்று ஆழ்மனத்தோடு மறுபிறப்பு வெளிப்பட்டுள்ளன.

சங்க காலத்தில் குடும்பம், கொடை, பங்கீடு, ஆழ்மனச்சிதைவு என்ற பெயரில் தென்பட்ட மறுபிறப்பு சிந்தனைகள் இன்று சமயம், ஆன்மீகம் என்ற தன்மையில் கடவுளோடு இணைத்து பேசப்பட்டு வருகிறது. சங்க காலத்தில் மக்கள் மத்தியில் நிலவிய மறுபிறப்பு பற்றிய கருத்தாடல்கள், திருக்குறள், ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறுகாப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் காலத்தில் சமணம், பௌத்தம், சைவம் என்ற தன்மையில் கடவுளோடு தொடர்பு படுத்தப்பட்டுள்ளன. இதில் பக்தி இலக்கிய காலத்தில் சைவ அடியார்கள் சிலரில் எனக்கு மறுபிறப்பு இல்லை என்றும் இப்பிறப்பிலே அனைத்தும் அடைந்து விட்டதாக கருதுகின்றனர். ஆனால் காப்பிய காலத்தில் மறுபிறப்பு செய்வினைப் பயனைக் கொண்டே மீண்டும் நிகழும் என்ற புரிதல்கள் மக்கள் மத்தியில் நிலவின. மாறாக உயிர்கொலை செய்வதன் மூலமும் இத்தகைய விளைவுகள் நிகழப்பெறும் என்ற கருத்தையும் வலியுறுத்துகிறது. சங்க காலத்தில் நினைத்தை அடைய மறுக்கும்போதும், இன்பத்தை மேலும் நிறைவு செய்ய மறுமையை நாடியுள்ளனர். ஆனால் பிற்காலங்களில் இதன் நாட்டம் இறைவன் மீது மாறியுள்ளது. அது குறித்து விரிவாக ஆராய்ந்தால் தனியொருவனுடைய ஆழ்மன எண்ணங்கள் வெளிப்படும். மறுபிறப்பின் தன்மையையும் இனங்கான முடியும்.

துணை நின்ற நூல்கள்

1.    புறம்.134:1-2
2.    குறுந்..49
3.    அகம்.66.1-6
4.    எஸ் குருபாதம் - மறுபிறப்பு பற்றிய ஆச்சரியத் தகவல்கள், மணிமேகலை பிரசுரம்,சென்னை-600 017
5. ஔவை சு. துரைசாமிப்பிள்ளை (உரை) – யசோதர காவியம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி. முதற்பதிப்பு -1970
6.உ.வே.சா (குறிப்புரை) –மணிமேகலை, உ.வே.சாமிநாதையா் நூல் நிலையம், சென்னை
7.நா.மு. வேங்கடசாமி நாட்டார் (உரை) – சிலப்பதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை.

* . முனைவா். இரா. மூர்த்தி ,உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை ,ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய ,,கலை அறிவியல் கல்லூரி ,கோயம்புத்தூர் -20 -ramvini2009@gmail.com



-- Edited by Admin on Monday 30th of September 2024 09:07:42 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard