‘வேற்றுமையுள் ஒற்றுமை’ என்ற பாரதப் பண்பாட்டின் தனித்துவமிக்க தன்மைக்கு வலிமை சேர்ப்பவை இராமாயணம், மகாபாரதம் ஆகிய இதிகாசங்கள் எனும் நெடுங்கதைகளாகும். ஒரு கதையாக- இலக்கியமாக நின்றுவிடாமல், இன்றுவரை பாரதமக்களின் நினைவுகளில் நீங்காது நின்றிலங்கி, நாள்தோறும் அவை ஊடாடிக் கொண்டிருக்கின்றன. இதிகாசங்கள் சித்தரிக்கும் மாந்தர்கள் மற்றும் நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்திப் பேசுவதில் பெருமைகொண்டு, தத்தம் கிராமங்களை-திருக்கோயில்களை-நீர்நிலைகளை- குன்றுகளை முன்னிலைப்படுத்திட முயற்சிக்கும் நிலைப்பாடு பாரதம் முழுவதும் பரந்து காணப்படுகிறது.
வால்மீகி முனிவர் கூறுவது போன்று, மலைகளும் நதிகளும் இவ்வுலகில் இருக்கும்வரை இராமாயண கதையும் நிலைத்திருக்கும். தீமையை ஒழித்து நீதியை நிலை நாட்டிட மனிதனாக அவதாரம் எடுத்த மாலவனின் ஏழாவது அவதாரமாக-சிறந்த லட்சியவாதியாக-உத்தமசீலனாக காப்பியத்தில் படைக்கப்பட்ட இராமன் எளிதில் தெய்வத்தன்மையை பெற நேர்ந்தது. மேலும், இராமனை தங்கள் மனோபாவத்தால் புனைந்துபுனைந்து அத்தெய்வத்தன்மை புலப்படும் செய்திகளை பாரத நாட்டவர்கள் தங்கள் கற்பனைக்கேற்றவாறு உருவாக்கி கற்பிக்கலாயினர். அதுமட்டுமன்றி, ஆங்காங்கே வழக்காற்றிலிருந்த செய்திகளை இராம கதையுடன் இணைத்துப் பார்ப்பதில் இன்பூறு எய்தினர். இராமன் தான் பாரதத்தின் அடையாளம். பாரத பண்பாட்டின் திருக்கோலம். பாரதம் புகட்டும் ஒழுக்கநெறியின் சிகரம். இராமன் நேபாளம் முதல் இலங்கை வரை நடந்ததால் மொத்த இந்தியாவே புண்ணிய பூமியாக பாரத நாட்டவர்களால் போற்றப்படுகிறது. இராமனின் வரலாற்றை மனித குலம் உள்ளவரை மறைக்கவோ மாற்றவோ மறுக்கவோ முடியாதபடி அவன் திருப்பாதம் பட்ட புண்ணிய தலங்கள் இந்தியா முழுவதும் வரலாற்றுச் சின்னங்களாக பரவிக் கிடக்கின்றன.
இராமாயணக் கதை தமிழ் நாட்டில் சங்க காலத்திலேயே அறியப்பட்டிருந்தது என்பதை புறநானுறு 378ஆம் பாடலும், அகநானுறு 70ஆம் பாடலும் நினைவூட்டுகின்றன.. பல்லவர்கால பக்தி இயக்கத்தினபோது மாலடியார்கள் மாலவன் மீதான பக்தியைப் பரப்ப இராமகதையினை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர். திருவாய்மொழியில் நம்மாழ்வார் “கற்பார் இராமபிரானையல்லால் மற்றும் கற்பரோ? என்று இராமனுக்கு வைணவ மரபில் மிக உயரிய இடத்தை அளிக்கின்றார். பிற்காலச் சோழர் காலத்தில் இராமசரிதப் பகுதிகளை சமய ஆன்றோர்கள் எடுத்து, சாங்கோபங்கமாக வியாக்கியானம் செய்தனர். தமிழ்மண்ணில் வேரூன்றிய இராமபக்தி இராம கதையின் தேவையை உணரச் செய்தது. அத்தேவையை நிறைவு செய்யும் விதமாக, வால்மீகியின் இராமாயணக் கதையைத் தழுவித் தமிழ் மரபிற்கேற்ற கவிச்சக்கரவர்த்தி கம்பன் சுமார் 22,000பாடல்களில் இராமாயணத்தை எழுதினார். கம்பர் தான் பாடிய இராமாயணத்திற்கு இராமகாதை என்றே பெயரிட்டார். இது, நேர்மறையாக அறத்தை விளக்கும் ஓர் ஒப்பற்ற நூலாகத் திகழ்கிறது. இராமகாதையில் சித்தரிக்கப்பட்ட நிகழ்வுகள் தமிழ்மக்களின் நினைவுகளில் ரீங்காரமிட்டு, அவர்கள்தம் ஊர்களின் பெயர்களில்- இறை வடிவங்களில்- இறை நாமங்களில்- அவர்கள் காணும் இயற்கை வடிவங்களில் நாள்தோறும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அந்த எதிரொலியின் நாதமே இக்கட்டுரையில் உணரப்படுகிறது.
திருவான்மியூர்: இராமாயணத்தை வரித்துக் கொடுத்தவர் வால்மீகி. அவர் தவம் செய்கையில் அவர் மீது புற்று உருவாகியதனால் ‘வால்மீகி’ என்று பெயர் பெற்றார். அப்படி அவர் தவம் புரிந்த- அவருக்கு இறைவன் காட்சியளித்த தலமே வான்மிகியூர் என்று வழங்கப்பெற்று, திருவான்மியூர் என்று இன்று பேசப்படுகிறது.