32. தானமும் தாசிகளும் அரிது அரிது மானிடர் ஆதல் அரிது என்னும் பாடலில் அவ்வைப் பிராட்டி, தானமும் தவமும் தான் செயல் அரிது தானமும் தவமும் தான் செய்வாராயின் வானவர் நாடு வழி திறந்திடுமே என தானத்தின் பெருமையைக் குறிக்கிறார். இந்து மக்களின் வாழ்வில் தானம் செய்தல் ஒரு உன்னத வழியாகக் கருதப்படுகிறது. அத்தனை மக்களும் தம் வாழ்நாளில் ஒரு தானமாவது செய்ய வேண்டும் என்று செய்கின்றனர்.
தானம் என்றால் என்ன? தனக்கு உடமையான பொருளை பிறருக்குக் கொடுத்து விடுவது. தனக்கு உடைமையான ஒரு பொருளை இனி எனக்கும் இப்பொருளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று கூறி, தன் உரிமையை விட்டுவிடுவதுதான் தானம் என்பது. தன் பொருளை பிறன் ஒருவன் கையில் வைத்து நீர் வார்த்து, நான் இதைக் கொடுத்துவிட்டேன் என்று கூறிக் கொடுத்து விடுவது மரபு. இதனால் கொடுத்தவனுக்கு ஆயுள் நீள்வதும், நல்ல வலிமை பெறவும், மேல் உலகம் செல்லவும், மீள் பிறப்பு உண்டேல், நல் பிறப்பு பெறவும், தன் தாய், தந்தை, குடும்பம், நாடு புண்ணியம் பெறவும் இத்தானத்தை கொடுப்பது மரபு. இந்துக்கள் “தானம்” கொடுப்பதை சிறப்பாக நினைப்பதற்குக் காரணம், இது தியாகத்தின் குறியீடு. தியாகத்தினால் மனிதன் இறவாத தன்மை எய்துகிறான் என்பது இந்துக்களின் திடமான நம்பிக்கை என்பதைக் காட்டுகிறது.
தானத்தைக் கூறும் அற நூல்கள் எல்லாம் மற்றும் ஒரு கருத்தை வலியுறுத்துகின்றன. தனக்கு உரிமை இல்லாத பொருளை ஒருவன் தானம் என்று கொடுத்தால், அது தானமாகாது. தானத்தால் வரும் புண்ணியம் கிட்டாது. அதற்கு பதிலாக “பாவம்” தான் வந்து சேரும். அரசனே ஆனாலும் தனக்கு சொந்தமில்லாப் பொருளை தானம் என்று கொடுத்தால் அதனால் நரகத்துக்குதான் செல்வார் என்பது திடமான நம்பிக்கை. அதனால் பிறர் பொருளை தனதெனக் கொடுப்போன் பாவியாகக் குறிக்கப் பெறுகிறான்.
பண்டைய காலங்களில் அரசர்கள் ஏராளமான தானங்களை கொடுத்து உள்ளனர். அவற்றில் நிலத்தை தானம் செய்வது சிறந்ததாகக் கூறப்பட்டது. பண்டைய நாட்களில் ஓர் ஊரை எடுத்துக்கொண்டால், அதில் பல வகையான நிலங்கள் உண்டு. கோயிலைச் சார்ந்த நிலம். இதை தேவ(ஸ்)தானம் என்று கூறுவர். உழு குடிகளின் நிலங்கள், இவற்றை “குடி” என்றும் “ஏர்” (ஹலம்) என்றும், சமணப் பள்ளி, பௌத்தப் பள்ளி என்பவைகளின் நிலங்கள் “பள்ளிச் சந்தம்” என்றும் அழைக்கப்பட்டது. காலத்தைக் கணித்து பௌர்ணமி, அமாவாசை, ஆதிரை நாள், திருவோண நாள் என்றவை நல்ல நாள் என்று எடுத்துரைப்பவர்களை “கணி” என்றும் சோதிடர் என்றும், “நாழிகை கணக்கர்” என்றும் கூறுவர். அவருக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தை “கணி முற்றூட்டு” என்று கூறுவர்.
முற்காலங்களில் ஒவ்வொரு ஊரிலும் ஆடு மாடுகள் மேய்ப்பதற்காக விடப்பட்ட நிலங்கள் இருந்தன. இவற்றை “கன்று மேய் பாழ்” என்று கூறுவர். இது தவிர ஊர்ப் பொது நிலங்கள் உண்டு. சிலவற்றில் அரசனுக்கு உடமையான பல நிலங்கள் உண்டு. அதனால் அரசன் ஊரையோ, பல ஊர்களையோ தானமாகக் கொடுக்கிறான் என்றால் தனக்கு உரிமையில்லாத நிலத்தை தான் எடுத்துக்கொண்டு தானமாகக் கொடுக்க முடியாது. அவனுக்கு அவ்வாறு செய்ய அதிகாரம் இல்லை. அதாவது சட்டம் இல்லை. அதனால் அரசன், நிலம் உடைய குடியிடமிருந்து நிலத்தைப் பறித்துக் கொடுக்க முடியாது. இதற்குச் சான்றாக ஈராயிரம் ஆண்டுகளாக உள்ள நூற்றுக்கணக்கான சான்றுகள் கல்வெட்டில் உள்ளன.
அரசர்களால் கொடுக்கப்பட்ட நில தானங்களைக் குறிக்கும் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் உள்ளன. அவற்றில் “தேவதான பள்ளிச் சந்த, கணி முற்றூட்டு, பிரும தேய, குடி நீக்கி”, ஏனைய பகுதிகளைத்தான் அரசன் தானத்துள் அடங்கும். இதைக் “குடி நீக்கி” என்ற சொல், இவை தவிர்த்து பிற நிலங்கள் என்ற பொருளில் வரும்.
அரசன் கோயில் கட்டவும், நில தானங்கள் புரிவதும் தன்னுடைய நலத்திற்கும் நாட்டு மக்களின் நன்மைக்காகவும் செய்வதால் எந்த நிலத்தில் கோயில் கட்டி வழிபாடு செய்ய நிலம் வேண்டுமோ அந்நிலத்தை, தான் விலைக்கு வாங்கிக் கோயிலுக்குக் கொடுத்ததை 680இல் ஆண்ட பல்லவ பரமேஸ்வரவர்மனின் செப்பேட்டில் தெளிவாகக் கூறியுள்ளான். “விலைக் காணம் கை கொடுத்து நிலம் கொண்டு கோயில் எடுப்பித்து, ஏரி தோண்டி, வழிபாடு செய்வோர்க்கு மனையும் மனைப் படைப்பும் செய்து கொடுத்தான்” என செப்பேடு கூறுகிறது. இராஜ இராஜ சோழனின் தமக்கையார், குந்தவையார், பொது ஏலத்தில் ஒரு நிலம், தனது பணம் கொடுத்து வாங்கி கோயிலுக்குக் கொடுத்ததை தஞ்சைக்கருகில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. அதனால் மன்னன் குடி மக்களுடைய நிலத்தைப் பிடுங்கிக் கொடுத்தான் என்பது வரலாற்றுக்குப் புறம்பான உளறல்.
“தாசி” என்ற சொல்லையும் தேவடியாள் என்ற சொல்லையும் வைத்து சில குதர்க்கவாதிகள் கூறுவதைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, தஞ்சைப் பெருங்கோயில் கட்டிய இராஜ இராஜ சோழன் 400 தேவடியாள்களை கோயிலுக்குக் கொடுத்து கீழ்த் தரமாக நடந்தான் என ஒருவர் சொன்னதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. முதலில் நாம் அறிய வேண்டியது, நாட்டிய மகளிர் எல்லாம் தேவடியாத் தொழில் செய்தனர் என்பது மரபு தெரியாத, வரலாறு தெரியாதவன் வாதம்.
சிலப்பதிகாரத்தில் பிறப்பாலும் தொழிலாலும் மிகச் சிறந்தவள் “மாதவி” என்று “சிறப்பிற் குன்றா செய்கையோடு பொருந்திய பிறப்பிற்குன்றா பெருந்தோள் மடந்தை” என்கிறார். அரும் பதவுரை ஆசிரியர் தமது உரையில் “ஒப்பிலாத சிறப்பினை உடைய வானவர் மகளிர் — தளியிலார்” என்கிறார். அடியார்க்கு நல்லார் — “குறைவற்ற நாடகத் தொண்டு பொருந்திய பிறப்பில் குன்றாது பெரிய தோளினை உடைய மாதவி” என்கிறார். அம்மாதவி கோவலன் எனும் ஒரு தலைமகனுடன் மட்டும் வாழ்ந்து பிரிவு ஏற்பட்ட பின் துறவு பூண்டு, வாழ்ந்தாள் என்பது சிலம்பு கூறும் மகளிர் மாண்பு. இவர்களில் நான்கு பிரிவுகள் உண்டு. பதியிலார், தளியிலார், இஷவத் தளியிலார், தேவரடியாள் என்பர். இவர்களுக்கு தொழிலால் உயர்வு தாழ்வு உண்டு. இவர்களில் பதியிலார் என்பவர்கள் ஆலத்தி கும்பத்தை எடுத்துக் கருவறைக்குள் சென்று வழிபாடு செய்வோரிடம் கொடுக்கும் உரிமை பெற்றவர் என்றும், சிலர் தட்டெடுப்போர் என்றும், சிலர் “கை காட்டும் முறைக்காரி” என்றும், தேவரடியாள் என்போர் பாத்திரங்களை சுத்தம் செய்தல், சுற்றுப்புறங்களை தூய்மையாகவும் வைத்துக்கொள்வோர் எனவும் திருவொற்றியூரில் உள்ள கல்வெட்டு கூறுகிறது.
இங்கு மேலும் ஒன்றை நினைவு கொள்ளவேண்டும். இப்பெண்கள் எல்லாம் சிவதீக்கையோ வைணவ தீக்கையோ மேற்கொண்டு தங்கள் வாழ்நாள் முழுவதும் தெய்வத்துக்குத் தம்மை அர்ப்பணித்தவர்கள். எத்தனையோ ஆண்கள் சன்யாச தீக்கை மேற்கொண்டு தூய வாழ்க்கை நடத்தவில்லையா? அதுபோல் இவர்கள் தூய வாழ்க்கை மேற்கொண்டவர்கள். தஞ்சைப் பெருங்கோயிலில் இராஜ இராஜன் 400 தேவரடியார்களை நியமித்ததாக எங்கும் கூறவில்லை. அவன் நியமித்தவர்கள் “தளிச்சேரிப் பெண்டுகள்” என்றுதான் கூறுகிறான்.
தமிழ் நாட்டில் சைவ சமயத்தில் தேவாரப் பதிகங்களைப் பாடிய சுந்தரர் முதலில் மணந்துகொண்டவர் “பரவை”. அவள் பதியிலாள் குடியில் பிறந்த நாட்டியப் பெண். அவள் தனது வாழ் நாள் முழுவதும் சுந்தரரோடு வாழ்ந்தவள்தான். அந்நாட்டியப் பெண்ணை இன்றும் சுந்தரருடன் சேர்த்து வணங்குகிறோம்.
இராஜராஜன் இவர்களை தனிச்சேறிப் பெண்டுகளாக நியமித்தான். ஸ்ரீ ராஜராஜத் தேவர், தனிச்சேரிப் பெண்டுகளாக நிவந்தமாக செய்தபடி — பங்குவழி. பங்கு ஒன்றுக்கு, நிலன் வேலியினால், இராஜ கேசரியோடு ஒக்கும் மரக்காலால் நெல்லு நூற்றுக் கலமாகவும்.
இப்படி பங்கு பெற்ற இவர்களில் செத்தார்க்கும், அனாதேசம் போனார்க்கும் தலைமாறு; இவ்விவற்கு அடுத்த முறை கடவார்க்காணி பெற்று பணி செய்யவும். அடுத்த முறை கடவார், தாம் தாம் யோக்யர் அல்லதுவிடில் யோக்யராயிருப்பாரை ஆளிட்டு செய்வித்துக் கொள்ளவும்.
அடுத்த முறை கடவார் இல்லாதுவிடில் “அவ்வவ் நியாங்களுக்கு தக்கவரில் அவ்வவ் நியாங்களிலாறே யோக்யராயிடுபாரை ஆணிட்டு இட்ட அவனே காணி பெறவும்.” (தஞ்சாவூர் கல்வெட்டு) என்று உள்ளது.
இக்கல்வெட்டில் தனிச்சேரி பெண்டுகளுக்கு தங்கள் நாட்டியத்துக்கு வேண்டிய தொழில் யோக்யதை வேண்டும். அவள் இல்லை என்றால் அவள் வழி வந்தாருக்கும் செய்யலாம். ஆனால் அவர்களுக்கும் தகுதி வேண்டும். இல்லை என்றால், தகுதியுள்ளவர்களை அவளே அமர்த்திக்கொண்டு பணி செய்யலாம்.
அவளால் முடியவில்லை எனில், அந்த நியாயங்களில் உள்ளவர் நியமித்து பணி செய்யலாம். நாட்டியப் பெண்களுக்கு நாட்டியத் தொழில் தகுதி இன்றியமையாதது. அதற்காகத்தான் அவர்களை இராஜராஜன் அமர்த்தினான் என்றும், தகுதியுள்ளோர் இல்லை எனில் எவ்வாறு தகுதிள்ளவர்களை நியமிக்கவேண்டும் என்றும் இராஜராஜன் தெளிவாக்க குறிப்பிட்டுள்ளான். இங்கு அமர்த்தப்பட்ட பெண்கள் அனைவரும் நாட்டியத் தகுதிக்காகத்தான் நியமிக்கப்பட்டவர்கள், வேறு எதற்காகவும் அல்ல என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எழுதி கல்லில் வெட்டி வைத்துள்ளான். அதை அறியா அறிவிலிகள் திருத்தி, உள்நோக்கோடு எழுதினால் கடும் தண்டனைக்கு உட்படுத்த வேண்டும்.