இந்திய நாட்டின் கிராம சுயாட்சியையும் அதன் சிறப்பையும் பல மேலை நாட்டு அறிஞர்கள் எழுதியுள்ளனர். 1879 இல் நெல்லை மாவட்ட மேன்யுவல் என்று எழுதிய ஏ. ஜே. ஸ்டுவர்ட் என்பவர், இதன் சிறப்பை விவரித்துள்ளார். அவர் கோவை மாவட்ட நீதிபதியாகத் திகழ்ந்தவர். அவர் காலத்தில் வாழ்ந்தவர்தான் பிஷப் கால்டுவெல் திராவிட மொழிகளின் அமைப்பைப்பற்றி எழுதியவர். அவர் இந்திய கிராமங்களைப்பற்றி எழுதியதை ஸ்டுவர்ட் தமது நூலில் மேற்கோளாகக் காட்டியுள்ளார். கால்ட்வெல்லின் கருத்து கீழ் வருமாறு:
“இந்திய ஊர்களின் அமைப்பு மிகவும் ஈடு இணையற்ற இந்துப் பண்பாட்டின் தோற்றமாகும். பொதுவாகப் பார்த்தால் இந்துக்களின் செயல்பாடுகள் நமது (வெள்ளைக்காரர்களின்) செயல்பாடுகளைக் காட்டிலும் மட்டமாகத்தான் இருக்கும். ஆனால் சிலவற்றில் நம்மைக் காட்டிலும் அவர்கள் மிகவும் முன்னேற்றம் உடையவர்களாகக் காணப்படுகிறார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்துக்களின் ஊர்கள் அனைத்தும் மிகவும் சீராக அமைக்கப்பட்டு நேர்த்தியான ஊராட்சியாக விளங்குவதைக் காண்கிறோம்.
பெரும்பாலான ஆங்கிலேய நாட்டுப்புற கிராமப்புறங்கள் வெறும் வீடுகளின் தொகுப்புகளாக இருக்கின்றனவே ஒழிய எந்தவிதமான ணைந்து வாழும் உணர்வோ, ஆட்சிமுறையோ உடையவை அல்ல. ஆங்கில ஊர்களில் ஊராள்பவர்கள் யாரும் இல்லை. எந்தவிதமான சமுதாய அமைப்புகளும் இல்லை. ல்லை. ஊர்ப்புற மேம்பாடுகளைப்பற்றி ஒருங்கிணைப்பு திட்டங்களோ இல்லவே இல்லை. ஆனால் இந்திய ஊர்களில் ஊராட்சிக் குழுக்கள் உள்ளன. அவற்றின் எல்லைகள் எல்லாம் சீராக வகுக்கப்பட்டுள்ளன. ஊர்ச்சபைகள் சீராக இயங்குகின்றன. ஊர் கிராமங்களின் சட்ட வரம்புகள் வரி வசூலித்து ஊரை மேன்படுத்தும்முறை எல்லாம் வியத்தகும் வகையாக சிறந்து ஓங்கி உள்ளன. தங்கள் ஊர்களிலே ஏற்படும் பிரச்னைகளை தாங்களே பேசித் தீர்த்துக் கொள்ளும் முறை நேர்மையாக உள்ளது. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஊர் காவல் உள்ளது. பல்வேறு பணிகளுக்கெல்லாம் தேவையான தொழில் புரிவோர் உள்ளனர். கோயில்களில் வழிபாடு செய்வோரே, அந்தந்த சமுதாயத்தினரை அமைத்து அவர்களே ஊழியம் கொடுக்கும் முறையும், ஊர் மொத்தமாக அதற்காக வேண்டிய பொருள் வசூலித்துச் செயல் படுவதும் சிறப்பாக உள்ளன. வெவ்வேறு தேவைகளைக் கவனிக்க வேண்டியோரை ஊர் சமுதாயமே பணியில் அமர்த்தி அவர்கள் மூலமாக ஊர்ப்பணிகள் செவ்வனே நடைபெறுகின்றன. ஊர் கணக்கு எழுதுபவர், வரி வசூலிப்பவர், சோதிடர் முதலிய சமுதாயம் செய்வோர்களை ஊராரே தேர்ந்தெடுத்துச் செயல் படுகிறார்கள்.
கிராமத்தினர் தமக்குள் ஏற்படும் வழக்குகளை தாமே தீர்த்துக் கொள்கின்றனர். தண்டிக்கத்தக்கவை தாங்களே தண்டிக்கும் நீதி முறையும் சிறந்துள்ளது. அமைதிக்கும், ஒற்றுமைக்கும் எவ்வித பங்கமும் ஏற்படாது கண்ணும் கருத்துமாக காத்துக் கொள்கின்றனர். பல ஊர்கள் இணைந்து நாடுகளாக அமைந்துள்ளன. வழக்குகள் எல்லாம் ஊர் சபையும் ஊர்த்தலைகளுமே முடிவெடுக்கின்றனர். ஊர்ச் செயல்பாடுகள், வழக்குகளைத் தீர்க்கும் மரபு எல்லாம், அரசின் ஆணையை எதிர்நோக்காமால் ஊராரே, நாட்டாரே தீர்மானிக்கும், ஊர்ப்புறச் சுதந்திரம் எவ்வளவு சிறந்திருந்தது என்று காண வியப்பாக உள்ளது.
ஊர் நடுவில் மரத்தடியிலோ, மண்டபத்திலோ அமர்ந்து ஊர் நல்லிணக்கத்தையும், கட்டுப்பாட்டையும் தாங்களே காத்து வருகிறார்கள். இவற்றைக் காணும்போது வியந்து போற்றும் வகையில் சட்ட நுணுக்கங்களை எல்லாம் நடத்துவது நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது. ஊராளிகளாக இருப்போரின் முடிவே அவரின் முடிவாக ஏற்று, பிணக்குகள் அதிகம் இன்றி சபைகள் கூடி நடத்துகின்றன. இவை பெரும்பாலும் பொது மக்களின் கருத்தாக ஏற்றுக் கொள்கின்றனர். இதன் சிறப்பைக்கண்டு அண்டை கிராமங்களும், அம்முறையை ஏற்றுக்கொள்கின்றன.
இந்த ஊராட்சிமுறை மிக மிகத் தொன்மையான இந்திய அமைப்பாகும். நிரந்தரமான அமைப்பும் ஆகும். சீராகவும் இயங்கி வருகின்றன. பல அரசு குடும்பங்கள் தோன்றி மறைந்து உள்ளன. பல சமயங்கள் தோன்றி மறைந்து உள்ளன. ஆனால் இவ்வூராட்சி முறை நிரந்தரமாக இன்றும் புகழ்பெற்று விளங்குகிறது.
இந்துக்கள் தங்கள் ஊரில் பல படை எடுப்புகள், மாற்றங்கள் இருந்தாலும், அவை எல்லாம் தற்காலிகமானவையாகவே கொண்டு, சிரமங்கள் பலவற்றையும் தாண்டி தங்கள் ஊரில் மீண்டும் இணைந்து விடுகிறார்கள். இந்துக்கள் வெளியூர் சென்றாலும் மீண்டும் தங்கள் ஊருக்கே திரும்பி விடுவதே அவர்கள் நோக்கமாக இருக்கிறது. இந்து மக்களுக்கு தங்கள் ஊர் சுயாட்சியின் பால் உள்ள பற்று ஆச்சர்யமானது. நான், எனது ஊர் என்ற எண்ணம் இன்றும் அவர்களிடம் மேலோங்கி இருப்பதைக் காணலாம். இதுதான் இந்து மக்களின் ஈடு இணையற்ற கிராமப்புற உணர்வு.
இப்படி மாபெரும் பல்லாயிரம் ஆண்டுகளாக இயங்கி வந்த இந்து கிராம சுயாட்சி இப்பொழுது படிப்படியாக உடைந்து வருகிறது. எல்லா உரிமைகளும், அதிகாரங்களும் மாநிலக் கட்டுப்பாடு, மையக் கட்டுப்பாடு என வெளியேறத் தொடங்கிவிட்டன. இது பண்பாட்டிற்கு ஏற்பட்டுள்ள மாபெரும் பின்னடைவு ஆகும்” எனக் கால்டுவெல் எழுதியுள்ளார். (ஆதாரம் - நெல்லை மாவட்ட மேன்யுவல், ஆசிரியர் — ஸ்டுவர்ட் — அரசு வெளியீடு —1879)
19ஆம் நூற்றாண்டின் நடுவில், அதாவது 1850 இல்கூட ஆங்கிலேயர் ஆட்சியாளரும் மதக் குருமார்களும், இந்துக்களையும் அவர்களின் பண்பாடுகளையும் மிகவும் கீழ்ப்பட்டதாகவும் தங்கள் இனமே உயர்ந்த இனம் எனக்கருதினார்கள். அவ்வாறு எங்கள் இனமே உயர்ந்தது எனக் கூறிக்கொள்ளும் பிஷப் கால்டுவெல்லும் மாறுபட்டவர் அல்ல. ஆயினும் இந்துக்களின் அடிப்படை வாழ்வை மிகவும் போற்றியுள்ளதை இங்கு காண்கிறோம். அதன் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தவை கிராமப்புற சுதந்திரமே ஆகும். இப்பொழுது நாம் நமது பண்பை இழந்து வெள்ளைக்காரன் கொடுத்த குடியாட்சி என்னும் போர்வையில் சிக்கித் தவிக்கிறோம். கட்சி ஆட்சி, வந்ததும் இருந்த ஊர்ப் புறங்களை இரண்டோ அல்லது பலவோ எனப் பிரித்து விட்டோம். கட்சி ஆட்சி ஒரு நிலையானது அல்ல. ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஒரு கட்சியை எறிந்துவிட்டு வேறு ஒரு கட்சியைக் கொண்டுவருகிறோம். புதிதாக ஆட்சிக்கு வருவோர் நேற்று இருந்தோர்களின் செயல்களை மாற்றுவதில் கவனம் செலுத்துவதோடு, தங்கள் குடும்பம் ஓர் ஐம்பது ஆண்டுகளாவது ராஜ வாழ்க்கை வாழ ஆட்சியைப் பிடித்து பொருள் சேர்ப்பதில் முனைகின்றனர். அதனால் தொடர்ந்து வரும் பண்பு, மரபு என்று சொல்ல ஏதும் இல்லை. ஒரு நிலையற்ற சமுதாயமாக மாறி அல்லல் உற்று இருக்கிறோம்.
நாடு முழுவதும் பரவலாக, சுதந்திரமாக வாழ்ந்த ஊராட்சி முறையை விட்டு சுதந்திரத்தை இழந்து நிற்கிறோம். உலகம் போற்றிய இந்து மக்களின் கிராமப்புற சுயாட்சியை அழித்து, குடியாட்சி என்ற போர்வையில் குடும்ப ஆட்சியை அமைத்து, ஒரு குடும்பத்தின் காலடியில் இந்நாட்டையே வீழ்த்தி குடும்ப ஆட்சியை ஏற்படுத்தியுள்ளோம்.
இன்றைய கணக்குப்படி, மத்திய ஆட்சியில் 50% மந்திரிகள், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், சில குடும்பங்களின் வசம்தான் உள்ளது. இன்னம் மூன்று தேர்தல்கள் முடியும்போது, 90% குடும்ப ஆட்சியை ஏற்படுத்தி விடுவோம். இவர்கள் உரக்கப் பேசும் குடியாட்சி மரபு என்பது குடும்ப ஆட்சி மரபு என்பதுதான்.