தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 24. கணக்கு காட்டய்யா


Guru

Status: Offline
Posts: 898
Date:
24. கணக்கு காட்டய்யா
Permalink  
 


24. கணக்கு காட்டய்யா
சமீபத்தில் நமது இந்திய உச்ச நீதிமன்றம் ஓர் ஆணை பிறப்பித்துள்ளது. தேர்தலுக்கு நிற்பவர் தமக்கு எவ்வளவு சொத்து உள்ளது? அது அவருக்கு நேர்மையாக வந்ததா என்பதற்கு சான்றுகள் என்ன? அவர் மனைவி, மக்கள், சுற்றம், இன்னம் நெருங்கியவர்களின் சொத்துக்கள் எவ்வாறு வந்தன என்பதை தமது தேர்வு விண்ணப்பத்தில் குறிக்கவேண்டும். அது எல்லாப் பொதுமக்களுக்கும் தெரியும்வகையில் விளம்பரம் செய்யவேண்டும் என உத்திரவு இட்டுள்ளது. இது இன்னம் செயல்முறைக்கு விதியாக வரவில்லை.
கடந்த 70 ஆண்டுகளில் நமது குடியாட்சியில் இந்த மாதிரி சொத்து குவிப்பைப்பற்றி சட்டவிதி வராமல் தங்களைக் காத்துக்கொண்ட பெருமை நம்மை ஆண்டவர்களைச் சாரும். அதாவது தேர்தலில் நின்று ஜெயித்து எத்தனையோ வழிகளில் சொத்துக்களைக் குவித்தனர். தன் பெயரிலும் தன் குடும்பத்தின் பெயரிலும், சுற்றம், உற்றார் பெயரிலும், பினாமியாக எவ்வளவு வேண்டுமானாலும் குவித்துக் கொள்ளலாம். எந்தக் கணக்கும் யாருக்கும் காட்டத் தேவையில்லை என்ற சலுகையை கண்ணும் கருத்துமாக இது வரையிலும் ஆண்டவர்கள் காத்து நிறுத்தி வைத்தார்கள். அதன் விளைவு இப்பொழுது எதிலும் லஞ்சம் எங்கும் லஞ்சம் என்ற சூழ்நிலையில் சிக்கி பொதுமக்களைத் திணற வைக்கிறது.
ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தலுக்கு நிற்பவன் தனது சொத்துக் கணக்கு காட்டவேண்டும். கணக்கு காட்டாதவன் தேர்தலில் நிற்கமுடியாது என்ற விதியை உத்தரமேரூர் கல்வெட்டில் சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இது இரண்டு விதிகளால் குறிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப் பட்டவர் தன் பதவிக்காலத்தில் என்ன என்ன பணிகள் செய்தார் என பொதுமக்களுக்கு கணக்கு காட்டவேண்டும். இரண்டாவது, தன் பதவி காலத்தில் சேர்த்த சொத்து எவ்வளவு என்றும் காட்ட வேண்டும். இது காட்டினால் ஒழிய அவர் மீண்டும் தேர்தலுக்கு நிற்கத் தகுதியற்றவர் என உத்தரமேரூர் கல்வெட்டு கூறுகிறது. ஏற்கெனவே ஒரு விதியில் தேர்தலுக்கு நிற்பவர் தன்னுடைய சொத்து நேர்மையான தொழிலாலோ பரம்பரையாலோ வந்தது எனச் சான்று காட்ட வேண்டும் என்றும் உள்ளது.

இவர் சமீபகாலத்தில் சேமித்த சொத்துக்கு கணக்குக் காட்ட வேண்டும். காட்டத் தவறினால் இவரும், இவர் சுற்றமும், உற்றோரும் தேர்தலில் நிற்கவே முடியாது என பட்டியல் இட்டே கல்வெட்டு காட்டுகிறது.
அப்பட்டியலைக் கீழே பாருங்கள்.
எப்பேர்பட்ட வாரியங்களும் செய்து கணக்கு காட்டது இருந்தான்.
எப்பேர்ப்பட்ட கமிட்டியிலிருந்தும் கணக்கு காட்டாதவன்.
எப்பேர்ப்பட்ட கையூட்டும் கொண்டான்
கையூட்டு என்றால் லஞ்சம் என்பது பொருள். அது எந்த வழியில் பெற்றிருந்தாலும் சரி அவன் தேர்தலில் நிற்க முடியாது. அதுமட்டுமல்ல அவன் உற்றார் உறவினர் யாருமே நிற்க முடியாது. அந்தத் தேர்தலில் மற்றொரு குடும்பத்தினர்தான் நிற்க முடியும். இதுபோல பலதிறப்பட்ட மக்களும் தேர்தலுக்கு நிற்க வாய்ப்பு ஏற்படுவதால் குடியாட்சி பரவலாக எல்லோராலும் அனுபவிக்கத் தக்கதாக இருந்தது. அக்காலத்தில் ஒரு குடும்பத்தின் கையில் சிக்கி நாடு அடிமையாகத் திணறவில்லை.
யாரெல்லாம் நிற்க முடியாது என்ற பட்டியலை காணுங்கள்.
1. இவர்களுக்கு சிற்றவை பேரவை மக்கள்
2. இவர்களுக்கு அத்தை, மாமன் மக்கள்
3. இவர்களுக்கு தாயோடு உடன் பிறந்தான்
4. இவர்கள் தகப்பனோடு உடன் பிறந்தான்
5. மனையாளோடு உடன் பிறந்தான்
6. மனையாளோடு உடன் பிறந்தாளை வேட்டான் ( மச்சினி பையன் )
7. இவர்களுக்கு பிள்ளை கொடுத்த மாமன்
8. தன்னோடு உடன் பிறந்தான்
9. தன்னோடு உடன் பிறந்தான் மக்கள்
10. தன் மகளை வேட்ட மருமகன்
11. தன் தகப்பன்
12. தன் மகன்
13. பிற பெண்களை பலாத்காரமாக கற்பழித்தவன்
14. எவ்வித பலாத்காரத்திலும் ஈடுபட்டவன்
15. தன் உடன் பிறந்தாளை பலாத்காரம் செய்து கற்பழித்தவன்
16. ஊரில் சாஹஸம் செய்பவன் (பொய் புனை சுருட்டு முதலிய நம்ப தகாத செயல்களில் ஈடுபட்டவன்)
17. பிறர் பொருளை அபகரித்தவன்
18. பஞ்ச மகாபாதகங்களில் ஏதாகினும் செய்தவன்
19. பிராயசித்தம் செய்து விட்டேன் என்று சொல்பவன்
20. இது போன்றோர்க்கு துணை போனவன்
21.
இப்படிப்பட்ட எவரும் தேர்தலில் நிற்க முடியாது. சுருக்கமாகக் கூறினால் ஏழு தலைமுறைக்கு இவர்களில் யாருமே தேர்தலில் நிற்க முடியாது என்று கல்வெட்டு கூறுகிறது.

இது ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சாசனம். ஈடு இணையற்ற குடியாட்சி அரசியல் சட்டம். இதை இந்திய நாடு உலகுக்கு அளித்த பெருமை கொண்டது.
இதுதான் நமது “தேசிய குடியாட்சி முறை”. இவ்வாறு ஒரு சாசனம் இருக்கிறது என்று கண்டுகொள்ளாமல் “இறக்குமதி குடியாட்சியை” புகுத்தி, லஞ்சமும், பொய்யும், களவுமே நிறைந்த நாடாக நம்மை மாற்றியோரை என்ன சொல்ல?

இந்த விதிகளில் ஒரு சில ஆராயத்தக்கதாகும்.

நம் தொகுதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தன் பதவி இறுதியில் என்ன செய்தார் என்று தொகுதி மக்களிடத்தில் அச்சிட்டுக் கொடுத்தல் வேண்டும். எழுத்து மூலம் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரையும் தட்டிக் கேட்கும் உரிமை மக்களிடத்தில் இருத்தல்வேண்டும். இவர்கள் சொத்துக் கணக்கையும் மக்களிடத்தில் அச்சுப் போட்டுக் கொடுக்கவேண்டும். தம்மீது எவ்வித குற்றப் பத்திரிகையும் இல்லை என்று உறுதி கூறவேண்டும். தொகுதி மக்களிடம் பட்சபாதம் இன்றி நடந்ததற்கு சான்று வேண்டும். ஒழுக்கத்தின் சிறந்தோனாக இருக்க வேண்டும். நாட்டுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டவன் யாராக இருந்தாலும் தேர்தலில் நிற்க முடியாது என்று செயல்படுத்த வேண்டும்.

கிராம கண்டகராய் இருப்பார் தேர்தலில் நிற்க முடியாது என்று கல்வெட்டு கூறுகிறது. கண்டகன் என்றால் முள் போன்றவன் என்பதாம். சுருக்கமாகச் சொன்னால் பேட்டை ரௌடிகளுக்கு தேர்தலில் கண்டிப்பாக இடம் இல்லை. ஜகஜ்ஜால புரட்டாக இருப்பவனுக்கும் இடம் இல்லை. இதைத்தான் “ஸாஹஸியராய்” இருப்பவன் என்று கல்வெட்டு கூறுகிறது.

இவ்வளவு தூய்மை உடையவர்கள்தான் பல்லவர், சோழர் காலத்தில் ஊரார்களாக, நாட்டார்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகத் திகழ்ந்தார்கள். அதனால் வேளாண்மை சிறந்தது. பொருளாதாரம் சிறந்தது. கல்வி சிறந்தது. கலை சிறந்தது. வியத்தகும் கட்டடங்கள் எழுந்தன. குடியாட்சி என்பது வலுவுள்ள, பரவலான, சக்தியாகத் திகழ்ந்தது. எவ்வளவு ஆற்றல் உடையாரே ஆயினும், குறிப்பிட்ட கால கெடுவுக்குப் பின் மற்றவர்க்கு இடம் கொடுத்து விலக வேண்டும் என திட்டவட்டமாக நம் மக்கள் ஆண்டனர். வெள்ளைக்காரன்கூட நம் ஊர்களில் இருந்த மரபுகளைக்கண்டு வியந்திருக்கிறான்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard