தமிழ் மொழி மிகவும் தொன்மையான பேச்சு மொழியாக இருந்திருக்கிறது என்பதில் யாருக்கும் ஐயம் இருக்கமுடியாது. ஆயினும் சான்றுகள் மூலம் அதை செந்தமிழ் மொழியாக காலம் கணிப்பதற்குச் சான்றுகள் மகாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாச காலத்திலிருந்துதான் கிடைக்கின்றன. பாண்டவரில் ஒருவனாகிய அர்ஜுனன் தமிழ்நாடு வந்ததாகவும், மதுரைக்கு அருகில் மணலூர் என்ற இடத்தில் அன்று ஆண்டு கொண்டிருந்த மன்னன் மகளை மணந்துகொண்டான் என்றும், அவனுக்குப் பிறந்த மகனே பாண்டியன் என்றும், அவன் வழி வந்தவர்களே வடபால் மதுராவைப் பின்பற்றி, வைகை ஆற்றங்கரையிலே, மதுரை என்ற தலைநகரை ஏற்படுத்தினார்கள் என்றும் மஹாபாரதம் வாயிலாக அறிகிறோம். முக்கால பாண்டிய செப்பேடுகளில், மதுரை மாநகரை தலைநகராக்கிய பாண்டியர், கௌரவர் வழி வந்தவர்கள் எனவும், அவர்கள் அகத்தியர் வாய் தமிழும் வடமொழியும் கற்று, ஆராய்ந்து, தமிழ் சங்கம் அமைத்தனர் என்றும், சேரரும், சோழரும், பாண்டியரும், மாபாரதப் போரில் இரு படைகளுக்கும் பெருஞ்சோறு அளித்தனர் என்றும் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ஆதலின், மூன்று தமிழ் மன்னர்களும் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே வட மொழியும் கற்றிருந்தனர் என்றும் அறிய முடிகிறது. ஆயினும் எழுத்து வடிவு வடநாட்டில் அசோகப் பெரு மன்னன் காலத்திலிருந்து தான் படிக்கும்வகையில் உருப்பெற்றுள்ளன. அக்காலத்து வடமொழியாகிய ப்ராக்ருத மொழியே எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. அசோகன், முதன் முதலில் வடமேற்கு இந்தியப் பகுதியில் ஆப்கானிஸ்தானம், பலூசிஸ்தானம் முதலிய பகுதிகளில் மோரியப் பேரரசர்களில் கவர்னர் ஆக ஆட்சி புரிந்து வந்தான். ஆகவே அக்காலத்தில், அவனால் தோற்றுவிக்கப்பட்டது தான், பிராம்மி என்ற எழுத்து வடிவாகும். அவன் காலத்திற்கும் முன்பே, ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே, வேத மொழி இந்தியாவில் முழுவதும் பரவி இருந்தது. வேத மொழி என்பது இரு வகைத்து இருந்தது. ஒன்று, வேத மந்திரங்களைக் கூறும் செய்யுள் மொழி, இரண்டாவது அக்காலத்திலே மக்கள் பேசிய மொழியும் (வைதிக ப்ராக்ருதம்) இந்தியாவின் வட பால் வழக்கில் இருந்தன. ஆயினும் அது, பிரிந்திருந்தது. கீழை ப்ராக்ருதம், (பாலி பாடலிபுத்திரத்தில் வழங்கியது) அதேபோல பக்கத்தில் மகத நாட்டில் வழங்கிய ப்ராக்ருதம், மாகதி என்று அழைக்கப்பட்டது. பிராந்தியத்திற்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களிலும், உருவங்களிலும் இருந்தது. மத்திய நாட்டு ப்ராக்ருதம், கூர்ஜரம், மகாராஷ்டிரம், காந்தாரம் என்றெல்லாம் பல பிரிவுகள் இருந்தன. அசோகன் காந்தாரப் பகுதியில் ஆண்டதற்கு ஒரு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னர், பாணினி என்ற மொழி இயல் மேதை, சமஸ்க்ருத மொழியை மிகவும் சீராகவும் உலகே வியக்கும் வகையிலும் ஈடு இணையற்ற இலக்கண மொழியாக வகைப் படுத்தினார். அவர் காலத்து வந்த வேத மொழியையும் ப்ராக்ருத மொழியையும் செப்பனிட்டு ஓர் உயர் தனி மொழியாகச் செய்தார். அந்த மொழிக்குத்தான் சமஸ்க்ருதம் அல்லது செம்மையாக செய்யப்பட்டது என்று பெயர். அது இடத்தாலும், காலத்தாலும், வேறுபடாமல் எல்லா இடத்திலும் ஒரே வடிவிலும், பொருளிலும், வழங்க வகை செய்தது. ஆயினும் அது முதலில் செய்யுள் மொழியாகவே அமைந்தது. பாணினி தனது நூலை தக்ஷசீலம் என்ற பகுதியில் (ஆப்கானிஸ்தானம்) எழுதினார் என்பர். இது வரலாற்று ஆண்டுக்கு முன் ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது ஆகும். அக்காலத்தில் பல்வேறு துறைகளிலும், விஞ்ஞானம், வான சாஸ்திரம், கணிதம், மொழி இயல் போன்ற துறைகளில் எல்லாம் பல சான்றோர்கள் தோன்றி சாத்திரங்களை எழுதினர். அதே சமயத்தில் கௌதம புத்தர், மஹா வீரர் போன்ற பெரியோர்கள் எல்லாம் தங்களது தத்துவ சாஸ்திரங்களை போதித்தனர். ஆயினும் அது எல்லா மக்களுக்கும் புரியும் வழியில் இருந்தமையால், ப்ராக்ருத மொழியிலேயே அவை இருந்தன. ஆகவே அசோகனும் அவனுக்குப் பின் வந்த அரசர்களும் தங்களது ஆணைகளை ப்ராக்ருத மொழியிலேயே வெளியிட்டனர். ப்ராக்ருத மொழி படிப்படியாக தென் பகுதிக்கும் பரவத் தொடங்கிற்று. மகாராஷ்டிரம், மத்யப் பிரதேசம், ஆந்திரா தேசத்தில் வட பகுதி, கர்நாடகத்தின் வட பகுதி, கலிங்கம் ஆகிய இடங்களிலும் பரவி இருந்தது. அதேபோல தமிழ் நாட்டிலும் ப்ராக்ருத மொழி பரவி இருந்ததற்கு சான்றுகள் உள்ளன. மிகவும் தொன்மையான தமிழகத்தில் உள்ள கல்வெட்டுகள் வரலாற்று ஆண்டுக்கு ஒரு நூறு அல்லது நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்து தமிழகத்தில் காணப்படுகின்றன. எழுத்து வடிவில் படிக்கக்கூடிய அளவு உள்ள கல்வெட்டுகள் தமிழகத்தில் ப்ராக்ருதத்தில்தான் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக மீனாஷிபுரம், சித்தன்னவாசல் முதலிய இடங்களில் உள்ள கல்வெட்டுகள் ப்ராக்ருதத்தில்தான் உள்ளன. “கணி நந்த ஆசிரியக உவன் கே தம்மம் இத்த நெடுஞ்சழியன் கடலன் வழுதி பணவன் கொட்டுப் பித்த பாளி” என்ற கல்வெட்டு மிகவும் ப்ராக்ருத மொழியாகவே இருப்பதைக் காணலாம். அதேபோல சித்தன்னவாசல் கல்வெட்டும், எருமி நாடு, குமுடூர், பிறாந்த காவுதி ஈசெனுக்கு, சிறு பாவில் இளையர் செய்த அதிட்டணம் — என்பதாம். இவை பெரும்பாலும் ப்ராக்ருத வடிவிலேயே, இருப்பதைக் காணலாம். பெரும்பாலான பிரம்மி கல்வெட்டுகள் தொன்மை யானவை. ப்ராக்ருத சொற்களே நிரம்பி இருப்பதைக் காணலாம். சமீப காலத்தில் மேற்கொண்ட அகழ்வாய்வில், பண்டைய ஊர்களில் எங்கு தோண்டினாலும் பிராம்மி எழுத்துக்கள் பொறித்த பானை ஓடுகள் கிடைக்கின்றன. பிராம்மி எழுத்துக்களில் தம்மம், சாத்தன், ஸுதன், விசாகன் போன்ற பெயர்களோடு தமிழ் பெயர்களும் உள்ள பானை ஓடுகள் கிடைக்கின்றன. இதன் வாயிலாக தமிழகமெங்கும், தமிழும் ப்ராகிருதமும் இணைந்து வந்துள்ளதைக் காண்கிறோம். இரண்டாயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து ப்ராக்ருதம் தமிழகத்தில் ஒன்றிய மொழியாக இருப்பதை டி.சி.சர்கார் போன்ற இந்திய கல்வெட்டுத் துறை தலைவராகத் திகழ்ந்த வரலாற்று பேராசிரியர் சுட்டிக் காட்டியுள்ளனர். வடபால் இராமாயணம் மகாபாரதம் போன்றவை காப்பிய நூல்களாக இயற்றப்பட்டிருந்தபோதிலும், அவை பாடல்களாக இசைக்கப்பட்டு வந்தன. படிப்படியாக அவை ஆட்சி மொழியாகவும், சாசன மொழியாகவும் இடம் பெறத்தொடங்கின. வரலாற்று ஆண்டுக்கு செம்மைப்படுத்தப்பட்ட சமஸ்க்ருத மொழி ஏற்றுக் கொள்ள ஓரிரு நூற்றாண்டுகள் ஆயின. அதற்குப் பிறகு ஒரு நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் புத்த சரிதம் என்ற ஒரு பெரும் காப்பியம், அஸ்வ கோஷர் என்பவரால் எழுதப்பட்ட சமஸ்க்ருத காப்பியம் என்பர். இதுவரையிலும் வெவ்வேறு ப்ராக்ருத மொழிகளாகத் திகழ்ந்த மரபு சமஸ்க்ருதத்தினால் வேறுபாடு அற்று, ஒருங்கிணைக்கப்பட்டன. அதனால் ஆய்வாளர்கள், அறிஞர்கள், வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் சில பகுதிகளுக்குச் செல்லவும், பேசவும், வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் காஷ்மீரம், ஆப்கானிஸ்தானம், பலூசிஸ்தானம், ரஷ்யாவின் தென் பகுதியாகிய தாஷ்கண்ட் முதலிய பகுதிகளுக்கும், அங்கிருந்து சீனத்திற்கும் போக்குவரத்து அதிகமாயிற்று. அப்பகுதிகளில்தான் அக்காலத்தில் ஆண்ட சகர், குஷானர் என்ற அரச மரபினர்கள் சமஸ்க்ருதத்தை படிக்கவும், ஆட்சி மொழியாகவும், பயன்படுத்தியதை அவர்களுடைய சாசனங்கள் காட்டுகின்றன. ஆகவே சமஸ்க்ருத மொழியை ஆட்சி மொழியாகக் கொண்டுவந்த பெருமை வெளி நாட்டு அரசர்களாகிய கனிஷ்கன், வாசுதேவன் போன்ற மன்னர்களையே சாரும். இதுவரையிலும் எங்கும் ப்ராக்ருதமாக இருந்த சாசனங்கள் இதுமுதல் படிப்படியாக சமஸ்க்ருத மொழியாக மாறியதைக் காண்கிறோம். இந்தியாவின் தென் பகுதியில் சாதவாகனர்களும் முதலில் ப்ராக்ருத மொழியில் தான் வழங்கினர். அவர்கள் காலத்து “சத்த சாய்” என்ற ப்ராக்ருத நூலும் வெளிவந்தது. ஆனால் விரைவில் அவர்களும் சமஸ்க்ருத மொழியைப் பயன்படுத்தி உள்ளதைக் காண்கிறோம். மத்ய பிரதேசத்தில் போபாலுக்கு அருகில் விதிசா என்ற இடத்தில் ஒரு பெரிய கல் தூண் உள்ளது. இதில் பிராம்மி எழுத்துக்களில் தக்ஷசீலத்தை ஆண்ட கிரேக்க நாட்டு அரசனின் தூதுவன், ஹீலியோ தோரஸ் என்பவன் அத்தூணைத் தோற்றுவித்தான் என்றும், அதைத் திருமாலின் வாகனமாம் கருடனுக்கு எடுத்தானென்றும், அவன் பரம பாகவதன் என்றும் அக்கல்வெட்டு கூறுகிறது. மதுராவில் கிடைத்த சோதாசன் என்பவன் கல்வெட்டும், குஜராத்தில் ஜுனாகத் என்ற இடத்தில் உள்ள ஒரு கல்வெட்டில் மஹாக்ஷத்ரப ருத்ரதாமன் என்பவன் அப்பெரும் ஏரியைச் சீர் செய்தான் என்ற செய்தியும் அங்குள்ள கல்வெட்டுகளில் குறிக்கப்படுகின்றன. இவைதாம் சமஸ்க்ருத மொழியில் முதன் முதலில் எழுதப்பட்டுள்ள கல்வெட்டுகள் ஆகும். இவை வரலாற்றுக் காலத்துக்கு நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்டவை ஆகும். இக்காலத்தில் இருந்து கிழக்காசிய நாடுகள் முழுவதும், அதாவது பர்மா, மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், இந்தோனேசியா, சீனா, ஜப்பான், மங்கோலியா ஆகிய நாடுகள் அனைத்திலும் படிப்படியாக சமஸ்க்ருதம் பரவி வந்ததைக் காண்கிறோம். உலகெங்கும் இருந்து இந்திய நாட்டுக்கு, குறிப்பாக புத்தர் போதனையை அறிந்து கொள்வதற்காக அறிஞர்கள் பல நாடுகளில் இருந்தும் வரத்தொடங்கினர். இதற்கு வசதியாக கருத்து பரிமாறிக்கொள்வதற்கு ஏற்ப சமஸ்கிருத மொழி, உலக மொழியாக மாறி இருப்பதை கல்வெட்டுகள் காட்டுகின்றன. ஆந்திரா தேசத்தில் நாகார்ஜுனா கொண்ட என்ற இடத்தில் போதிஸ்ரீ என்ற ஒரு பெண்மணி பெளத்த விகாரம் ஒன்றைச் சீர்படுத்தி, “ச்சண்ட ஆச்சர்யார்” என்ற ஒரு பௌத்த ஆசிரியருக்கு வேண்டும் வசதிகளை எல்லாம் செய்துகொடுத்தாள். அவரிடத்தில் படிப்பதற்காக காந்தார தேசம் (ஆப்கானிஸ்தான்), சீனம் (சீனா) முதலிய வெளிநாடுகளிலிருந்தும் மகதம், தோசலி, அவந்தி முதலிய உள் நாட்டுப் பகுதிகளிலிருந்தும் பலர் படிப்பதற்காக வந்து தங்கினர். அவர்களில் தமிழர்களும், தாமிர பரணி தீபம் (இலங்கை) இருந்தும் படிப்போர் வந்து தங்கினர். இவர்கள் அனைவருக்கும் போதிக்கும் மொழியாக, உலக மொழியாக சமஸ்க்ருத மொழி திகழ்ந்தது. இது கி.பி. 150 காலத்திய கல்வெட்டு. இதிலிருந்து முதல் இரண்டு நூற்றாண்டுகளில் சமஸ்க்ருதம் உலக மொழியாகத் திகழ்ந்திருக்கிறது என்பது உறுதியாகத் தெரிகிறது. இக்கால அளவில்தான் தமிழகத்தில் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய (நாடக) காப்பியங்கள் தோன்றின. இதைத் தொடர்ந்து வளையாபதி, குண்டலகேசி, சிந்தாமணி ஆகிய ஐம்பெரும் காப்பியங்களும் மலர்ந்தன. இக்காப்பியங்களை தமிழ்த் தாய்க்கு ஊட்டிய சிறப்பு மிக்க அணிகலன்களாக தமிழ் மரபு கூறும். இவ்வைந்து காப்பியங்களுமே, சமஸ்க்ருத மொழி அறிந்தவர் களாலேயே முழுமையாக அறிந்து கொள்ளமுடியும். இதே சமயத்தில்தான் சங்க இலக்கியங்களும் அதாவது, புறநானூறு, அகநானூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, குறுந்தொகை, நற்றிணை, பரிபாடல், ஐங்குறுநூறு ஆகிய தமிழ் செய்யுட் தொகுதிகள் தோன்றின. அதனால் சமஸ்க்ருத தொடர்பினாலே இதுவரையிலும் ப்ராக்ருத மொழியோடு இணைந்திருந்த தமிழ் மிகச் சிறந்த செய்யுட் மொழியாக வளர்ந்தது வரலாறு. சாசனங்களிலும் முக்கால பல்லவர் காலத்தில் பயன்பட்ட ப்ராக்ருதமும் சமஸ்க்ருதமும் கலந்த சாசனங்களிளிருந்து சமஸ்க்ருதமும் தமிழும் ஆகிய இரு மொழிகளிலும் சாசனங்கள் வெளியிடப்பட்டன. இவற்றில் பல்லவ மன்னர்கள் வெளியிட்டுள்ள தாமிர சாசனங்களைக் காணலாம். இதே கால கட்டத்தில் தாய்லாந்து, கம்போடியா முதலிய நாடுகளிலும் சமஸ்க்ருதமும் அந்தந்த தேச பிராந்திய மொழிகளிலும் இரு மொழி சாசனங்களில் வெளியிடப்பட்டன. உலக வரலாற்றில் சமஸ்க்ருதம் வந்ததினால் எந்தத் தேசிய மொழியும் தன் தன்மையை இழந்து விடவோ தேசிய மொழியை அழித்ததாகவோ சான்றுகள் ஏதும் இல்லை. எங்கும் இல்லை. இதே கால கட்டத்தில் ஐந்தாம் நூற்றாண்டுகளிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையில், சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு 20000 பாடல்கள் மலர்ந்துள்ளன. தேவாரம், திருவாசகம், திருமந்திரம், திவ்யப்ரபந்தம் திருமுறைகள் கவினுரப் போற்றுவிக்கப்பட்டவை. இவை இன்றும் மக்கள் வாழ்வில் ஒன்றி இறவாப் பாடல்களாக வழங்கி வருகின்றன. இது உலக வரலாற்றிலேயே ஈடு இணையற்ற ஒரு மாபெரும் இயக்கம் என்றே சொல்லாம். இவை அனைத்துமே சமஸ்க்ருத மொழியோடு இரண்டறக் கலந்த ஒரு மொழியாகக் காட்டுகின்றன. இதே காலத்தில், சாசனங்களில் பல்லவர், சேர, சோழ, பாண்டியர் ஆகிய அனைத்து மன்னர்களுடைய சாசனங்களிலும் இரு மொழியும் இணைந்தே காணப்படுகின்றன. பதினான்காம் நூற்றாண்டின் இறுதியிலிருந்தே தமிழகம் முழுவதும் விஜய நகரப் பேரரசர்களின் ஆட்சியின் கீழ் வந்தன. அவர்கள் தமிழ், சமஸ்க்ருதம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளையுமே, சாசனங்களிலும், காப்பியங்களிலும் சடங்குகளுக்கு வேண்டிய நூல்களிலும் பயன்படுத்தி அனைத்து மொழிகளையும் போற்றி இருக்கின்றனர். அக்காலத்து தமிழகத்தில் வந்து குடியேறிய, தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட பல பிரிவினரும் இன்றும் தமிழ் மண்ணில் வாழ்கின்றனர். இவர்களது ஜனத்தொகை அண்மைக்கால ஓர் ஆய்விலிருந்து ஏறத்தாழ நாற்பதிலிருந்து நாற்பத்தைந்து சதவிகிதம் உள்ளனர் என்று குறிக்கின்றனர்.
இவர்கள் அனைவரும் வீட்டில் பேசும் மொழி தெலுங்கு. இதில் கணிசமான மக்கள் கன்னடம் பேசுவோரும் உண்டு. இவர்கள் தங்களுடைய சடங்குகளில் சமஸ்க்ருத மொழியைத்தான் பயன் படுத்துகின்றனர். முகம்மதியர்கள் அரேபியா, உருது, பாரசீக மொழியையும் கொண்டு வந்தனர். ஏறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு அப்பால் லத்தீன், ஆங்கிலம், பிரெஞ்சு, டச் ஆகிய மொழிகள் கிறிஸ்துவ சமயத்தை போதிப்பவர்களால் கொண்டுவரப்பட்டன இது மொழி வரலாறு. அண்மையில் மொழி வரலாற்றைப்பற்றிய ஆய்வுக் கட்டுரை வந்திருந்தது. அதில் மொழியின் சிறப்பு, பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வீட்டில் போதிக்கும் தாய் மொழியே சிறந்ததாக அறிவை வளர்க்கக் கூடியதாக அண்மைக்கால விஞ்ஞான ஆய்வு குறிப்பதாகக் கூறுகிறது. அதனால் தாய் மொழி படிப்புக்கு முதலிடம் கொடுத்தல் இன்றியமையாதது என்பதை யாரும் மறுக்க முடியாது. அத்துடன் தங்களது பழக்க வழக்கங்களை வாழ்வில் இடம் பெரும் மொழியையும் மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்புக்கள் இருத்தல் வேண்டும். எல்லா மக்களுக்கும் அவரவர் தன்மைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ப அறிவை வளர்த்துக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தித்தருவது அரசின் கடமையாகும். இந்திய அரசியல் சாசனத்தின் தலையாய குறிக்கோளாக குறித்திருப்பதையும் நினைவு கொள்ளல் வேண்டும்.
சமஸ்க்ருத மொழி வந்தால் பிராந்திய மொழி தன் நிலை இழந்து விடும் என்பது வரலாற்றின் வாயிலாகவோ பகுத்தறிவின் வாயிலாகவோ நிரூபிக்க முடியாத ஒன்றாகும். அவரவர் மொழியைப் படிப்பதற்கு வாயுப்புகளைக் கொடுக்கவேண்டியது மக்கள் ஆட்சியின் தலையாய கடன். ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின் என்பது வள்ளுவர் வகுத்த நெறி. ______________________________