தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 10. தொல்காப்பியமும் பரத சாஸ்திரமும்


Guru

Status: Offline
Posts: 898
Date:
10. தொல்காப்பியமும் பரத சாஸ்திரமும்
Permalink  
 


8. தொல்காப்பியமும் பரத சாஸ்திரமும்
தமிழரின் பண்டைய வாழ்க்கை நெறிகளை அறிவதற்கான அடிப்படை நூல் “தொல்காப்பியம்”.
இந்திய மரபில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல் பரதர் எழுதிய “நாட்டிய சாஸ்திரம்”. தொல்காப்பியர்,
பரதரின் நாட்டிய சாஸ்திரத்தின் அடிச்சுவட்டில் தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தை எழுதியிருக்கிறார் என்பதை, இரு நூல்களையும் ஒப்பிட்டால் தெளிவாக உணரலாம். பரதர் தன் நூலில் நாட்டியத்தை “சுகுமாரம்”, “ஆவித்தம்” என்று இரு வகையாகப் பிரிக்கிறார். “ஆவித்தம்” என்பது ஆண்கள் ஆடுவதற்கானது. “சுகுமார” நாட்டியத்தை பெண்கள் ஆடினால்தான் சிறப்பாக இருக்கும்.

பரதரின் நாட்டிய சாஸ்திர நூலின் வழியே தமிழில் “அகப்பாடல்கள்” (அகத்திணை) என்றும் “புறப்பாடல்கள்” (புறத்திணை) என்றும் தொல்காப்பியர் அமைத்துள்ளார். தொல்காப்பியர் பொருள் அதிகாரத்தில் முதன்முதலில் ஆய்வது அகத்திணை. அவர் குறிப்பிடும் “முதல்”, “கரு”, “உரி” ஆகிய வற்றில் “முதல்” என்பது ஒரு நிகழ்ச்சி நடைபெறும் இடம் அல்லது நிலம். அந்த நிலத்தை குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்று ஐந்து வகையாகப் பிரிக்கிறார். அதோடு காலைப் பொழுது, மாலைப் பொழுது என்று பொழுதையும் பிரிக்கிறார்.
இந்த நிலப்பிரிவுகளில் வாழ்ந்த மக்களின் உணவு, பழக்க வழக்கம் சார்ந்தவற்றைக் குறிப்பது “கரு”. இயற்கையில் காணும் பொருள்களை வாழ்க்கையுடன் இணைத்து இன்பச் சுவையோடு கற்பனையாக பாடல்களை தோற்றுவித்துப் பாடும் மரபு “உரி”. “முதலும்” “கருவும்” நாட்டிய அரங்கில் பின்புலத் திரை போன்றவை. நிலத்தை ஐவகையாகப் பிரித்து நாட்டிய நிகழ்ச்சியைக் காட்டும் மரபு பரதரின் நாட்டிய சாஸ்திரத்தில் “கட்சியா விபாகம்” என்ற அத்தியாயத்தில் இடம்பெறுகிறது.
அரங்கில் ஆடும் நாட்டிய மகளிர், அரங்கை நான்கு பகுதிகளாக கற்பனையாகவே பிரித்து, ஒரு பகுதி மலை, இரண்டாவது நகரம், மூன்றாவது கடற்பகுதி, நான்காவது வனம் என்று பிரித்து, பாடலின் பொருளுக்கேற்ப அந்தந்தப் பகுதியில் சென்று ஆடுவர். நிலப்பிரிவுகள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவை பரதரின் நாட்டிய சாஸ்திரத்தைப் பின்பற்றியதாகும்.
இங்கு, சிருங்கார சுவை ஒவ்வொரு நிலத்திலும் புணர்ச்சி, இருத்தல், இரங்கல், ஊடல், பிரிதல் என்று ஐவகையாகப் பிரிக்கப்பட்டு அந்தந்த நிலங்களில்ஆடுவதாகும். அதைத்தான் தொல்காப்பியம் குறிக்கிறது. ஆதலின், பொருளதிகாரம் நாட்டிய சாஸ்திரத்தைப் பின்பற்றித் தொடங்குகிறது என்பது தெளிவு.
அகத்திணை அத்தியாயத்தின் இறுதியில் தொல்காப்பியர் “நாடக வழக்கினும், உலகியல் வழக்கினும் கலியே பரிபாடல்” என்று கூறுகிறார்.
அரங்கில் ஆடிவரும் பெண், தாளத்துக்கு ஏற்ப அடி வைத்து அங்கங்களால் அபிநயித்து வருவது நாடக வழக்கு. அபிநயங்கள் இல்லாது நடந்து வருவது உலகியல் வழக்கு.

அகத்திணை பாடல்கள் முற்றிலும் நாட்டியத்திற்காக, இக்காலத்தில் பதம், வர்ணம் போன்று ஆடுவதற்குப் புனைந்தவை எனலாம். இவற்றை பரதர் “நாட்டிய தர்மி”, “லோக தர்மி” என்று குறித்துள்ளார். அடுத்து, தொல்காப்பியர் புறத்திணையை விவரிக்கிறார். புறத்திணை என்பது அறம், பொருள், வீடு குறிப்பதாகும். அகத்திணைக்கு பயன்படும் பொதுவான சூத்திரங்கள் அனைத்தும் புறத்திணைக்கும் பொருந்தும் என்கிறார் உரையாசிரியர். புறப்பாடல்களிலும் வெட்சி, கரந்தை, உழிஞை, தும்பை, வாகை என்று ஐந்து திணைகளைப் பிரித்து இருக்கிறார். இவை அரசர்கள் படை எடுத்து வெற்றி காண்பதைக் குறிப்பவையாகும்.
வெற்றிகளின்போது மன்னனும், மறவனும் கைகோர்த்து, வெற்றிப் பறை முழங்க ஆடும் பல நிலைகளையும் அவற்றின் பெயர்களையும் “வேலன் வெறியாடல்”, “பூ மலைதல்”, “பூவைநிலை”, “கொற்றவை நிலை”, போன்ற எண்பதுக்கும் மேற்பட்ட ஆடல் குறித்து தொல்காப்பியர் குறிக்கிறார்.
அடுத்து, தொல்காப்பியரின் “மெய்ப்பாட்டியல்”. மெய்ப்பாட்டியல் என்றால் நாட்டிய சுவையை இன்புறுதல் ஆகும். இந்த அத்தியாயம் முழுவதும் பரதரின் ரச அத்தியாயத்தின் மொழிபெயர்ப்பாகக் காணப்படுகிறது எனலாம்.
பரதர் தமது நாட்டிய சாஸ்திரத்தில் பின்வரும் எட்டு நாட்டியச் சுவைகளைக் கூறுகிறார். அவை “சிருங்காரம்”, “ஹாஸ்யம்”, “கருணை”, “ரௌத்ரம்”, “வீரம்”, “பயானகம்”, “பீபத்ஸம்”, “அத்புதம்” ஆகியன. இதே எட்டு சுவைகளை தொல்காப்பியரும் “வீரம்”, “அச்சம்”, “வியப்பு”, “இழிபு”, “காமம்”, “அவலம்”, “உருத்திரம்” எனவும், இவை மனக்குறிப்புகள் எனவும், இவற்றிலிருந்து தோன்றும் சுவைகள், “நகை”, “அழுகை”, “இளிவரல்”, “மருட்கை”, “அச்சம்”, “பெருமிதம்”, “வெகுளி”, “உவகை” எனவும் குறிக்கிறார்.
“சாந்தம்” எனும் ஒன்பதாவது சுவையை முற்காலத்தில் இருந்தவர்கள் கூறினர். பரதர் அதைக் கூறவில்லை. தொல்காப்பியமும் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. எட்டுச்சுவை தான் கூறுகிறார்.
மனக்குறிப்பிலிருந்து தோன்றுவது சுவை. மனக்குறிப்பு என்பதை “பாவம்” என்றும் இவற்றை நான்காகப் பிரித்து (“விபாவ”, “அநுபாவ”, “சாத்விகபாவ”, “வியபிசாரி”) நாட்டிய சாத்திரம் கூறுகிறது.

இவை சுவைகள் தோன்றக் காரணமானவை. “விபாவம்” — 8, “அநுபாவம்” — 4, “சாத்விக” பாவம் — 8, “வியபிசாரி” பாவங்கள் — 32+1 = 33 என்று நாட்டியசாஸ்திரம் வகைப்படுத்தி உள்ளது.
இந்நான்கு பிரிவுகளையும் தொல்காப்பியம் மெய்ப்பாடு என்றே கூறுகிறது. எடுத்துக்காட்டாக “வியபிசாரி” பாவங்கள் 32-யும் தொல்காப்பியர் அப்படியே குறிக்கிறார். ஒவ்வொரு பாவத்துக்கும் நான்கு ஏதுக்களையும், நாட்டிய சாத்திரத்தில் உள்ளவற்றை அப்படியே இங்கு தமிழில் தொகுத்திருப்பதைக் காணலாம்.
எடுத்துக்காட்டாக பயத்தை உண்டாக்கும் குறிப்பு, பயங்கரமான வனவிலங்குகளை நேரில் குகளை நேரில் காணல், அரசனால் தண்டனை, பாழடைந்த கோயில் முதலிய காண்பதால் ஏற்படும் நடுக்கம் என்று நாட்டிய சாஸ்திரம் கூறுகிறது. அதை தொல்காப்பியம் “அணங்கே, விலங்கே, கள்வர்தம் இறை எனப் பிணங்கல், சாலா அச்சம் நான்கே” என்று கூறுகிறது.

உவகையைக் கூறும்போது, “செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு என்று அல்லல் நீங்கிய உவகை நான்கே” என்று தொல்காப்பியம் கூறுகிறது.
இதையே பரதர், மனதுக்கு இனிய நேரம், தமக்கு வேண்டியவர்கள், மலர்மாலைகள், பூங்கா, விளையாட்டு முதலியன என்கிறார்.
இதைத்தொடர்ந்து பரதர் ஒவ்வொரு சுவையையும் எவ்வாறு அபிநயத்தால் வெளிபடுத்தல் வேண்டும் என்று குறிக்கிறார். அதே போல ஒவ்வொன்றுக்கும் உள்ள அபிநயத்தையும் சூத்திரங்களில் எழுதியுள்ளார்.
இவை “அநுபாவம்” என்பதாம். இதிலிருந்து தொல்காப்பியத்தின் பொருளதிகாரம், பரதரின் நாட்டிய சாஸ்திரத்தைப் பின்பற்றியது என்பது தெளிவு. மேலும் பலப்பல எடுத்துக்காட்டுகளைக் காட்டலாம். விரிப்பின் பெருகும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard