5. அழகுக்கு அழகு செய்தான் கம்பன் தனது ராமகாதையில், சீதையின் திருமணத்தை “கடிமணப் படலம்” என்று மிக அழகுற விரிவாக விவரித்துள்ளார். இப்படலம் முழுவதும் கவிநயமும், சொல்நயமும், சுவைநலமும், படிக்கப் படிக்க, இனிமை சேர்க்கும். இத்தனைச் சுவையாக பாடஇயலும் என்பதற்கு சான்றாக இந்தக் கவிதைகள் அமைந்துள்ளன. மணநாளுக்கு முன்பு ராமன், சீதையின் மனவோட்டம், மறுநாள் மணமுரசு அறைய ஜனகன் கட்டளையிடுதல், நகர மாந்தர் மகிழ்ந்து நகரை அணி செய்தற்கு விரைதல், மணமண்டபத்திற்குத் தசரதன் வருதல், திருமண மண்டபத்தின் தோற்றம், ராமன் நீராடி மணக்கோலம் புனைதல், ராமன் தேரில் ஏறிவரும் காட்சி, மண்டபம் சேர்ந்து ராமன் முனிவரையும் தந்தையையும் தொழுது அமர்தல், சீதை மண்டபத்துள் வந்த காட்சி, வசிட்ட மாமுனி மணவேள்விக்குத் தேவையான பொருள்களுடன் வந்து வேள்வியைத் தொடங்குகிறான். தண்டுலம் விரித்து (அரிசி தரையிலே பரப்பி) தருப்பை சாத்தி விதிமுறையில் மண்டிலம் வகுத்து, மெல்லிய மலர் கொண்டு தீயில் சொரிந்து தீயை முட்டினான். இவை எல்லாம் பண்டைய மறைநெறி என்கிறார் கம்பன். அப்பொழுது ராமனும், சீதையும் மெல்ல வந்து மண்டபத்தில் மணத்தவிசில் அமர்கின்றனர். அதைக் காணும்பொழுது போகமும் யோகமும் இணைந்து இருந்ததாம். அப்பொழுது ஜனகன் குளிர் நீர் பூவும், பொருளும் என்று “நீ என் மாமகளோடும் மன்னுதி” என்று ராமனின் தாமரைக் கையில் நீர்வார்த்து கொடுக்கின்றான். ஒரு பொருளை பிறர்க்கு தானமாக தரும்போது அவர் கையில் பூ வைத்து நீர் வார்த்துக் கொடுத்தல் வேண்டும். இத்திருமணம் கன்னிகாதானம். ஆகையால் ஜனகன் ராமன் கையில் நீர் வார்த்துக் கொடுத்தான். அப்பொழுது மந்திரங்கள் முழங்கின. மங்கள வாத்தியங்கள் முழங்க, எல்லாரும் பூமாரி பொழிய, ராமன் தீ சாட்சியாக மந்திரம் மும்முறை சொல்லி, வேள்வியில் ஆவுதி செய்து, தையலின் கையைப் பிடித்துக்கொண்டு வேள்வித்தீயை வலம் வந்து, பொரி ஹோமம் புரிந்து, அம்மி மிதித்து, அருந்ததி கண்டனர்' என்று கம்பன் வர்ணித்துள்ளான். மணமேடையில் இருக்கும் ராமன் சீதை இருவர்மீதும் வானவர் பூமழை பொழிகின்றனர். மன்னர்கள் பொன்மலர் தூவுகின்றனர். மற்றவர்கள் முத்துக்களையும் மலர்களையும் தூவுகின்றனர். இதனால் அந்தச் சூழல் வானில் மின்னும் நட்சத்திரங்கள் நிறைந்திருப்பதைப் போல ஆனது என்கிறான் கம்பன். தமிழிலும் தொல்காப்பியத்திலும், அகப்பாடல்களிலும் எவ்வாறு தமிழர் திருமணம் கூறப்பட்டுள்ளதோ, இளங்கோவடிகளும், ஆண்டாளும் எவ்வாறு தமிழர் திருமணத்தை வர்ணித்துள்ளனரோ அதைப்போலவே சீதையின் திருமணத்தை கம்பன் இங்கே வர்ணிக்கக் காண்கிறோம். இதை கம்பனின் கவி வரிகளால் படித்து ரசிப்பதே சாலச் சிறந்தது. நீந்த அருங்கடல் என்று, நிறைந்த வேதியர், தோய்ந்த நூல் மார்பினர், சுற்ற, தொல் நெறி வாய்ந்த நல் வேள்விக்கு, வசிட்டன், மை அற ஏய்ந்தன கலப்பையோடு இனிதின் எய்தினான். தண்டிலம் விரித்தனன்; தருப்பை சாத்தினன்; மண்டலம் விதிமுறை வகுத்து, மென் மலர் கொண்டு நெய் சொரிந்து, எரி குழும், மூட்டினன்; பண்டு உள மறை நெறி பரவிச் செய்தனன். மன்றலின் வந்து, மணத் தவிசு ஏறி, வென்றி நெடுந் தகை வீரனும், ஆர்வத்து இன் துணை அன்னமும், எய்தி இருந்தார்; ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார். “கோமகன் முன் சனகன், குளிர் நல் நீர், பூமகளும் பொருளும் என, நீ என் மாமகள் தன்னொடும் மன்னுதி” என்னா, தாமரை அன்ன தடக்கையின், ஈந்தான். வெய்ய கனல்தலை வீரனும், அந்நாள், மை அறு மந்திரம் மும்மை வழங்கா, நெய் அமை ஆவுதி யாவையும் நேர்ந்தே, தையல் தளிர்க் கை தடக் கைபிடித்தான். வலம்கொடு தீயை வணங்கினர், வந்து, பொலம் பொரி செய்வன செய் பொருள் முற்றி, இலங்கு ஒளி அம்மி மிதித்து, எதிர் நின்ற கலங்கல் இல் கற்பின் அருந்ததி கண்டார்.