தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 03. சங்ககால தமிழர் திருமணம்


Guru

Status: Offline
Posts: 898
Date:
03. சங்ககால தமிழர் திருமணம்
Permalink  
 


2. சங்ககால தமிழர் திருமணம்
பழந்தமிழர்களின் திருமணம்பற்றி அறிய தொல்காப்பியத்தில் உள்ள “கற்பியல்” என்ற பகுதி உதவுகிறது. தொல்காப்பிய சூத்திரத்துடன் அவற்றின்மீது விரித்து எழுதப்பட்டுள்ள இளம்பூரணர் உரையும் நச்சினார்க்கினியர் உரையும், அவர்களின் சங்க இலக்கிய செய்யுட்களும் திருக்குறள் மேற்கோள்களும் பெரிதும் உதவுகின்றன.

தமிழ்மக்கள் சிறந்த பண்பின் இருப்பிடமாகத் திகழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு, அவர்கள் கற்புடை வாழ்விற்கு முதலிடம் கொடுத்திருப்பதே யாகும். “கற்பின் சிறப்பே தமிழ் மக்களின் சிறப்பு” என்று காட்ட வந்ததுதான் சிலப்பதிகாரம் என்னும் ஈடுஇணையற்ற காப்பியம். கற்பு என்றால் என்ன என்று ஓர் எழிலார்ந்த இலக்கணத்தை எழுதியுள்ளார். அது ஒரு நுணுக்கமான சட்டவிதியாகக் காணப்படுகிறது.
“கற்பெனப்படுவது கரணமொடு புணர்
கொளற்குரி மரபின் கிழவன், கிழத்தியை
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”
என்பது இலக்கணமாய சூத்திரம். ஓர் ஆண்மகனும் பெண்ணும் தம் வாழ்நாள் முழுவதும் கணவன் மனைவியாக இணைந்து இன்பம் துய்க்கவும் வாழவும் வேண்டில் அதற்கு “கரணம்” என்பது வேண்டும். அப்பொழுதுதான் அவ்வுறவை சமுதாயம் ஏற்றுக் கொள்ளும். அது இரு வகையில் ஏற்படுத்தலாம்.

வாய்மொழியாக ஆன்றோர் முன் சபதம் மேற்கொள்ளுதலும், எழுத்து மூலமாக கொடுத்தலும் ஆகும். இதை நச்சினார்க்கினியர் இருவகை இருவகை என்கிறார். அதாவது
“ஆதிக்கரணமும் ஐயர் யாத்த கரணமும்” என்கிறார்.

ஆதிகாலத்தில் வாய்ச்சொல் சத்தியமாகக்கொண்டு அதை யாரும் மீற மாட்டார்கள். ஆனால் காலம் செல்லச் செல்ல, ஆண் மகன் களவில் ஒரு பெண்ணை இணைந்து பின்னர் இல்லை என்று பொய்க் கூறுதலும், பொறுப்பேற்க மறுக்கவும், பெண்ணின் நலத்தையும் உரிமையையும் மனத்திற்கொண்டு ஐயர், இருடிகள் எழுத்துமூலமாக மணஓலை கொடுத்தல் வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தனர். அதைத்தான் “ஐயர் யாத்த கரணம்” என்றார்

தொல்காப்பியர். கரணத்தான் என்றால் “எழுத்தின் மூலம் பதிவு செய்பவன்” என்று பொருள். அவ்வாறு ஊரார் முன்பும் சான்றோர் முன்பும் கரணம் எழுதிக்கொடுத்து மணப்பதுதான் “கற்பு” எனப்படும். இதைத்தான் தொல்காப்பியர் “கற்பெனப்படுவது கரணமொடு புணர” என்று ஒரு பெண்ணோடு இணைந்து வாழ உரிமை கொடுப்பது கரணம் என்றார். இது சமுதாயத்தால் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமாகும்.

மணவினை என்பது ஐயரால் அந்தச் சான்றோர்களால் கற்பிக்கப் பட்டது. ஆதலால் “கற்பு” எனப்பட்டது. “கொளற்குரி மரபின் கிழவன்” எனில், ஒரு பெண்ணை மணக்க குலத்தாலும், அறிவாலும், செல்வத்தாலும், ஆண்மையாலும், வயதாலும், ஈடுடையவனாக இருத்தல்வேண்டும். அதாவது அப்பெண்ணைக் கொள்வதற்கு உரிய தகுதிபெற்றவன் என்பது. “கிழத்தியை” எனில் மணமகளை. கொடைக்குரி மரபினோர் கொடுப்ப, அதாவது அப்பெண்ணைக் கொடுக்கக்கூடிய உரிமை பெற்ற அவளது தாய், தந்தை, மாமன், முதலியோர் கொடுக்க, சட்டப்படி ஏற்க அனுமதிக்கப்படுகிறது. இந்த விதியும் பெண்ணின் நலத்தைக் காக்க ஏற்படுத்தப்பட்டது.

முன்பின் தெரியாத ஒருவர், ஒரு பெண்ணை ஒரு கோயிலுக்கு அழைத்து வந்து இப்பெண்ணை நான் தானம் செய்கிறேன் என்று மணம் செய்து கொடுத்தால் அது சட்டப்படி ஏற்பதற்கில்லை. தெரியாதவர், தெரியாத இடத்தில் கொடுத்தல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

“கற்பு மணம்” என்பது எல்லாவிதத்திலும் பெண்களின் நலனுக்கான விதிகளை அமைத்து கட்டுப்பாட்டுடன் கொண்டு வரப்பட்டதாதலின், சீரான சமுதாய வாழ்வை தமிழகம் கண்டது.

“கரணம்” என்பதை இளம்பூரனர் “வதுவைச் சடங்கு” என்று கூறுகிறார். திருமணம் என்ற பொருளில் “வதுவை” என்ற சொல் சங்க இலக்கியங்களில் பல இடங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நச்சினார்க்கினியர், “இருமுதுகுரவர் கற்பித்தலாலும் அந்தணர் திறத்தும் சான்றோர் தேயத்தும் ஐயர் பாங்கினும், அமரர் சுட்டியும் ஒழுகும் ஒழுக்கம் தலைமகன் கற்பித்தலாலும் கற்பு என்றாயிற்று” என்கிறார். இவற்றிலிருந்து தமிழ்மக்கள் போற்றிய கற்பு வேதநெறிப்படி அறநூல் தொகுத்த தருமசாஸ்திரம் கூறியபடி, வேதியனாகிய அந்தணர், மணமகனையும், மணமகளையும், மணவேள்வி செய்ய வழிகாட்டிட மணந்ததுதான் “கற்பு” என்பதாம். தமிழர் மணம் என்பது வேத நெறிப்படி சடங்குகள் செய்து நடை பெற்றதேயாகும்.

தமிழர்தம் திருமணச்சடங்குகள் எவ்வாறு இருந்தன என்று அகநானூறுப் பாடல்களில் இருந்து நச்சினார்க்கினியர் உதாரணமாகக் காட்டியுள்ளார்.

கற்பியல் அதிகாரத்தில் இரண்டு அகநானூறுப் பாடல்களை நச்சினார்க்கினியர் உதாரணமாகக் காட்டியுள்ளார். இவ்விரண்டு பாடல்களிலும், திருமணச் சடங்குகள் எவ்வாறு இருந்தன என்று காணக் கிடைக்கின்றன. இதில் முதல் பாட்டில் கூறப்பட்ட திருமண முறையைக் கீழே காணலாம்.

திருமண விழாவில் உற்றார் உறவினர்க்கும், ஊராருக்கும் சுவையான உணவுகள் அளிக்கப்பட்டன. உயர்ந்தோரை உபசரித்தனர். நல்ல சகுனம் என்று பறவைகளின் ஒலியை வைத்து நிச்சயித்து சந்திரன் ரோகிணி நட்சத்திரத்துடன் சேர்ந்த நாள் (திங்கள் சகடம் சேர்ந்த நாள்), கிரஹங்கள் எல்லாம் நல்ல வீட்டில் இருக்க நல்ல முகூர்த்தத்தில் சடங்குகளைத் தொடங்கினர். மணமுரசு முழங்க, நகரை அலங்கரித்து கடவுளைப் பூசித்து மணப்பெண்ணை அலங்கரித்து மகளிர்கள் எல்லாம் வாசனைத் திரவியங்களைப்பூசி, பெரிய ஆரவாரத்துடனே விருந்து அளித்து (பெருஞ்சோறு), முகூர்த்தக்கால் நட்டு குளுமையான பெரிய பந்தலை நட்டு, புதிய மணலைப் பரப்பி, நல்ல மங்கல விளக்கு ஏற்றி, பூ மாலைகளை தோரணமாகக் கட்டி அலங்கரித்தனர். காலையில் எழுந்து, கோள்கள் அனைத்தும் நல்ல வீட்டை அடைய, சந்திரன் ரோகிணி நட்சத்திரத்துடன்கூடிய முகூர்த்தத்தில் வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்கள், தலையில் புதுக்குடங்களில் நீர் கொண்டு, புதிய அகல்களையும் (பாலிகைகளையும்) ஏந்தி வரிசை முறைகளை எல்லாம் ஏந்தி முன்னும் பின்னுமாக வர, புதல்வரை ஈன்றெடுத்த நான்கு மகளிர்கள் கூடி, “நீ கற்புடைய பெண்ணாக, நல்லவற்றைக் கொடுக்கும் பெற்றோர் மெச்சும் பெண்ணாகுக” என்று கூறி மணமகளை மணமகன் கைப்பிடிக்கும்போது ஒரு வாக்குறுதி கொடுத்தல் வேண்டும்.

மணமகன் நாம் இருவரும் இணை பிரியாது வாழ்நாள் முழுவதும் வாழ்வோமாக என்பான். இதையேத்தான் வேதம் படித்த அந்தணர், மணமகளையும் கூறும்படி செய்கிறார். இதையே திருவள்ளுவரும் திருக்குறளில் தலைமகன் கூறியதாகக் குறிக்கிறார்.
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனால்
கண்ணீரை நீர் கொண்டனள் (குறள் - 1315)

அத்தொழில் நிகழும்கால் இவளை இன்னவாறு பாதுகாப்பாயாக — இவற்கு ஏற்றவகை குற்றேவல் செய்வாயாக அங்கியங் (அக்னி) கடவுள் அரிகரியாக (சாட்சியாக) அறிவர் மந்திரவகையால் கற்பிக்கப்படுதலின் அத்தொழிலை “கற்பு” என்றார்.
மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம் கீழோர்க்காகிய காலமும் உண்டே என்பது தொல்காப்பியர் கூறிய சூத்ரம். இதன் உரையில் “வேதநூல்தான் அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூவர்க்கும் உரியவாகக் கூறிய கரணம். அந்தணர் முதலியோர்க்கும், மகட்கொடைக்குரிய வேளாண்மாந்தர்க்கும் தந்திர, மந்திர வகையான் உரித்தாகிய காலமும் உண்டு” என்று நச்சினார்க்கினியர் கூறுகிறார். அதனால் முதலில் வேளாண்மாந்தர்க்கும் வேதமரபின் கரணமோடு மணம் நடந்தது என்றும், பின்னர் சில காலம் இல்லாதிருந்து மீண்டும் நான்கு வர்ணத்தார்க்கும் வேதமரபிலான கரணம்தான் நிலைத்தது என்பதும் அறிய முடிகிறது.

மணப்பெண்ணின் கரம் பிடித்தல், தீயை வலம் வருதல், அப்பொழுது உன்னை நான் என்றும் கைவிடேன் என்று உறுதி கூறுவதும், பொரியை ஹோமம் செய்தல், அருந்ததி காணல் என்பதெல்லாம் வேத நெறியின் படி நடக்கும் மணவிழாவின் முக்கிய அங்கங்களாகும். இங்கு சங்க நூல்களும், தொல்காப்பியமும் ஓர் அரிய செய்தியைக் குறிக்கின்றன.

மணப்பெண்னின் தலையில் பட்டு வஸ்திரம் போர்த்தி, அவள் முகத்தை மூட, அதை மணமகன் மெதுவாக தன் விரல்களால் தூக்கி அப்பெண்ணின் முகத்தைப் பார்க்கும் மரபுபற்றிக் குறிக்கப்படுகின்றன. இம்மரபு தமிழகத்தில் இக்காலத்தில் இல்லை. ஆனால் தெலுங்கு, கர்நாடகம், கேரளம் ஆகிய இடங்களிலும், வட இந்தியாவில் பல இடங்களிலும் இன்னும் உள்ளது. அதனால் இந்தியா முழுவதும், திருமணச் சடங்குகள் ஒன்றாகவே இருந்துள்ளன.
இதற்கு,
“மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணி,
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட்
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து,
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி,
படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்று,
பூக்கணும் இமையார் நோக்குபு மறைய,
மென் பூ வாகைப் புன் புறக் கவட்டிலை,
பழங்கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மாஇதழ்ப் பாவைத்
தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டி,
தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி,
மழை பட்டன்ன மணல் மலி பந்தர்,
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி
, தமர் நமக்கு ஈத்த தலைநாள் இரவின்,
‘உவர் நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ,
பெரும் புழுக்குற்ற நின் பிறைநுதற் பொறிவியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற’ என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப,
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே பேணி,
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத் தொடை நீவி,
சுரும்பு இமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளதத்தே”
என்ற அகநானூறு 136ம் பாடலையும்,
“உழுதுதலைப் பெய்த கொழுங்கனி மிதவை
பெருஞ்சோற்று அமலை நிற்ப, நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி,
மனைவிளக் குறுத்து, மாலை தொடரிக்,
கனைஇருள் அகன்ற கவின்பெறு காலைக்,
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழுப்புகழ் நாள்தலை வந்தென,
உச்சிக் குடத்தர், புத்துகன் மண்டையர்,
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்,
புதல்வற் பயந்த திதலை! அவ் வயிற்று
வால்இழை மகளிர் நால்வர் கூடிக்,
கற்பினின் வழாஅ, நற்பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக” — என
நீரொடு சொரிந்த ஈர்இதழ் அலரி
பல்இருங்கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்,
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து,
‘பேர்இற் கிழத்தி ஆக’ எனத் தமர்தர;
ஓர்இற் கூடிய உடன்புணர் கங்குல்,
கொடும்புறம் வளைஇக், கோடிக் கலிங்கத்து
ஒடுங்கினள் கிடந்த ஓர்புறம் தழீஇ,
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப,
அஞ்சினள் உயிர்த்த காலை, யாழநின்
நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை என.
இன்நகை இருக்கை, பின்யான் வினவலின்
செஞ்சூட்டு ஒண்குழை வண்காது துயல்வர
அகமலி உவகையள் ஆகி, முகன் இகுத்து,
ஒய்யென இறைஞ்சி யோளே மாவின்
மடம்கொள் மதைஇய நோக்கின்
ஒடுங்குஈர் ஓதி, மாஅ யோளே”
என்ற அகநானூறு 86ம் பாடலையும் நச்சினார்கினியர் மேற்கோளாகக் காட்டியிருக்கிறார். இவை தொல்காப்பிய உரைக்கு மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. ஆதலின், இவை தொல்காப்பிய மரபைக் காட்டும் செய்திகளாகும்.

அகநானூறு 86, அகநானூறு 136 ஆகிய இவ்விரு பாடல்களிலும் தமிழர் தம் மரபு சங்ககாலத்தின் தொடக்க காலத்திலேயே பாடப்பெற்றதாக செய்திகள் இடம்பெற்றுள்ளன. ஒன்றில் மரக்கறி உணவும் இரண்டாவதில் மாமிச உணவும் விருந்தில் அளிக்கப்பட்டதை காண்கிறோம். அதனால் இது அந்தந்த சமுதாய மனிதர்களிடத்தும் நடைபெற்ற மணவிழா வழக்கு ஆகும். தமிழர் தம் மண விழாவில் வேத முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டன என்பது இப்பாடல்களால் உறுதி செய்யப்படுகிறது.

இவை தவிர திருமணம் முடிந்த நாளிலிருந்து மூன்று நாட்கள் மணமகனும், மணமகளும் சேர்ந்து இரவில் பள்ளியில் படுக்கார். நான்காம் நாள் இரவில் பள்ளியறையில் இணைந்து படுக்க விடுவது மரபு. இச்சடங்கைப் பற்றிக்கூறும்போது நச்சினார்க்கினியர், பின்வருமாறு கூறுகிறார்.

“கரணத்தின் அமைந்து முடிந்த காலை ஆதிக்கரணமும், ஐயர் யாத்த கரணமும் இருவகைச் சடங்காலும், ஓர் குறைபாடின்றி, மூன்று இரவில் மயக்கம் இன்றி, ஆன்றோர்க்கு அமைந்த வகையால், பள்ளி செய்து ஒழுகி, நான்காம் பகல் எல்லை முடிந்த காலத்து கற்பினும் மூன்றும் நாளும் கூட்டம் இல்லாமையானும் நாலாம் நாளின் கண்ணதாம்” என்று கூறுகிறார். “முதல் மூன்று நாட்களில் முதல் நாள் தண் கதிர்ச் செல்வர்க்கும் (சந்திரனுக்கும்) இடை நாள் கந்தருவருக்கும், பின்னாள் அக்னிக்கும் வழாது செய்து, நான் அங்கியங் கடவுட்கு எனக்கு நின்னை அளிப்ப நான் நுகர வேண்டிற்று. அங்ஙனம் வேதம் கூறுதலால் என்று தலைமகன் கூறுவன்” என்று நச்சினார்க்கினியர் குறிக்கிறார்.

இவ்வாறு வேத நெறியில் கரணமொடு மணந்த தலைமகன் எந்த இடங்களில் எவ்வாறு மரபுடன் பேசவேண்டும் என்று தொல்காப்பியர் ஒரு நீண்ட சூத்திரத்தில் 31 இடங்களை குறித்துள்ளார். இது சங்ககால மரபை முழுமையாக அறிய உதவும் சூத்திரம். அவை விரிந்த மரபு ஆதலின், ஓரிரண்டை மட்டும் காண்போம்.

இச்சூத்திரம், “கரணத்தின்அமைந்து முதிர்ந்த காலை” என்று தொடங்குகிறது. சூத்திரத்தில், “அந்தணர் திறத்திலும் சான்றோர் தேயத்தும் ஒழுக்கம் காட்டிய குறிப்பு” என்கிறார். இங்கு, உரையாசிரியர், “வேட்பித்த ஆசிரியனும் கற்பித்த ஆசிரியனும் ஆகிய பார்ப்பார் கண்ணும் முற்றும் உணர்ந்த ஐம்பொறியையும் அடக்கி பெரியார் கண்ணும் தேவர்கள் கண்ணும் ஒழுகும் ஒழுக்கத்தினை தான் தொழுது காட்டினன்” என்று கூறுகிறார்.

இதுகாட்டும் தமிழ் மக்களின் திருமண மரபை தொல்காப்பியர் சூத்திரத்தாலும், அவர்கள் காட்டியுள்ள சங்கநூல்களாம் அகநானூறு, முதலிய செய்யுட்களாலும் உரையாசிரியர்களின் விரிவுரையிலிருந்தும் அறிவது, தமிழர் திருமண மரபு வேதநெறிப்படி பார்ப்பாராகிய ஆசிரியர் வழி நடத்தியபடி நடந்தது என்றும், அது அவ்விதத்திலும் இந்திய நாட்டின் பிற இடங்களில் இன்றுவரை நடக்கும் ஒன்றுதான் என்பதும் அறிந்தோராகிறோம். இதை “தெய்வகற்பு” என்றும் சங்க நூல்கள் கூறுகின்றன.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard