தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர் வந்தது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES
கட்டுரை தகவல்
எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன்
பதவி,பிபிசி தமிழ்
11 நிமிடங்களுக்கு முன்னர்
தமிழ் ஆண்டுகள் ஒவ்வொன்றும் சமஸ்கிருதப் பெயர்களைச் சொல்லியே குறிப்பிடப்படுகின்றன. அறுபதாண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் பயன்படுத்தப்படும் இந்தப் பெயர்ப் பட்டியல் தமிழ் ஆண்டுகளோடு இணைந்தது எப்படி?
தமிழ்நாட்டில் ஒவ்வொரு புத்தாண்டு நெருங்கும்போதும், "தமிழ் புத்தாண்டு என்பது தை மாதம் பிறக்கிறதா அல்லது சித்திர மாதம் பிறக்கிறதா?" என்ற சர்ச்சையோடு, தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வியும் அவை எப்போதிருந்து புழக்கத்திற்கு வந்தன என்ற கேள்வியும் எழுப்பப்படும். இது ஒரு முடிவில்லாத சர்ச்சை.
தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களைப் பயன்படுத்தும் வழக்கம் துல்லியமாக எப்போதிருந்து துவங்கியது, ஏன் துவங்கியது என்பது குறித்த தெளிவான தகவல்கள் கிடையாது.
இந்தியாவைப் பொறுத்தவரை, ஆண்டுகளைக் குறிப்பிட பல்வேறு காலகட்டங்களில் தோன்றிய பல்வேறு காலக் கணிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கலி வருடம், கொல்லம் வருடம் (கேரளத்தில் பயன்படுத்தப்படும் முறை. உதயமார்த்தாண்ட வர்மாவால் துவங்கப்பட்டதாக கருதப்படுகிறது. கி.பி. 823ஆம் ஆண்டிலிருந்து இந்த முறையை பயன்படுத்த ஆரம்பித்தனர்), விக்ரமாதித்ய வருடம் (விக்ரமாதித்ய மன்னரால் கி.மு. 57 துவங்கப்பட்டதாகக் கருதப்படும் வருடம்), சாலிவாகன சகாப்தம் (சாலிவாகனன் எனப்படும் சாதவாகன மன்னன் கி.பி. 78ல் துவங்கி வைத்த முறை), ஃபஸ்லி (அக்பர் அரியணை ஏறிய ஆண்டில் துவங்குவது. அறுவடையை மையமாகக் கொண்ட காலக் கணிப்பு முறை), ஹிஜ்ரி (இஸ்லாமிய காலக்கணிப்பு முறை) என்று நீளும் கணக்கீட்டு முறைகளில் இந்த சம்வத்சரம் எனப்படும் 60 ஆண்டு சுழற்சி முறையும் ஒன்று.
இது தவிர, தமிழ்நாட்டில் திருவள்ளுவர் ஆண்டு என்ற கணக்கீட்டு முறை தமிழ்நாடு அரசால் பின்பற்றப்படுகிறது. கிரிகேரியன் நாட்காட்டியோடு ஒப்பிட்டால், திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் அதிகமாக இருக்கும். உதாரணமாக, 2023ஆம் ஆண்டு என்பது திருவள்ளுவர் ஆண்டில் 2054ஆம் ஆண்டாகும். 1972 முதல் இது தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ ஆண்டு முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது.
மற்ற கணக்கீட்டு முறைகளுக்கும் சம்வத்சர முறைக்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் உண்டு. மற்ற ஆண்டு முறைகள், தொடர்ச்சியான எண்களைக் கொண்டவை. ஆனால், இந்த சம்வத்சர முறை, எண்களுக்குப் பதிலாக 60 பெயர்களைப் பயன்படுத்துகிறது. ஆகவே, 60 ஆண்டுகள் முடிந்த பிறகு, மீண்டும் முதலில் இருந்து அந்தப் பட்டியல் துவங்கும். இந்தப் பட்டியலில் முதல் பெயர் 'பிரபவ' என்று துவங்குகிறது. 'அக்ஷய' என்ற பெயரோடு இந்தப் பட்டியல் முடிவுக்கு வருகிறது.
வராகமிக்ரர் எழுதிய வானியல் நூலான பிருகத் சம்ஹிதையில்தான் (கி.பி. 505 - 587) முதன்முதலாக, இந்த 60 பெயர்களும் நாம் இப்போது பயன்படுத்தும் வரிசையில் காணப்படுகின்றன. சம்வத்சரம் என்பது ஒரு ஆண்டைக் குறிக்கிறது. ஆனால், 'வருஷ' என்ற வார்த்தையால் குறிக்கப்படும் ஆண்டிற்கும் 'சம்வத்சரம்' என்ற வார்த்தையால் குறிக்கப்படும் ஆண்டிற்கும் வித்தியாசம் உண்டு. 'வருஷம்' என்பது பூமியின் ஒரு சூரிய வருடத்தைக் குறிக்கிறது. ஆனால், 'சம்வத்சரம்' என்பது வியாழனின் சுழற்சியை மையமாகக் கொண்டது.
அதாவது, ஒரு சம்வத்சர ஆண்டு என்பது 361.026721 நாட்களைக் கொண்டது. பூமியை அடிப்படையாகக் கொண்ட சூரிய ஆண்டைவிட, 4.232 நாட்கள் குறைவு. இதனைச் சரிசெய்ய, ஒவ்வொரு 85 சம்வத்சர ஆண்டுகளுக்கும் ஒரு முறை, இந்த 60 பெயர்களில் ஒன்று தாண்டிச் செல்லப்படும். அதாவது அந்த ஆண்டு 'பிரபவ' என்ற பெயர் சூட்டப்படவிருந்தால், அதற்கு அடுத்த பெயரான 'விபவ' என்ற பெயர் சூட்டப்படும்.
ஆனால், காலப்போக்கில் இது கைவிடப்பட்டது. சம்வத்சரமும் வருஷமும் ஒரே காலகட்டத்தைக் குறிப்பதாக மாறிவிட்டன.
பட மூலாதாரம்,GETTY IMAGES
எப்போதிலிருந்து 'சம்வத்சர' பட்டியல் கடைப்பிடிக்கப்படுகிறது?
வட இந்தியாவில் நீண்ட காலமாக இந்தப் பட்டியல் பயன்படுத்தப்பட்டாலும் தமிழ்நாட்டில் 13-14ஆம் நூற்றாண்டில் இருந்துதான் இந்த முறை தொடர்ச்சியாக பயன்படுத்தப்படுவதாகச் சொல்கிறார் ஆய்வாளர் அ.கா. பெருமாள்.
"தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுகளில் 13-14ஆம் நூற்றாண்டு காலத்தில் இருந்துதான் இந்த பெயர்களைக் குறிப்பிட்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குறிப்பாக தென்காசி கோவிலில் பல இடங்களில் இந்த வருடப் பெயர்களைக் கொண்ட கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இந்த சுழற்சி ஆண்டு முறையையும் இந்தப் பெயர்களையும் தமிழ்நாட்டில் பரவலாக்கியது பாண்டிய மன்னர்கள்தான். சோழமன்னர்களின் கல்வெட்டுகளில் இவை கிடையாது" என்கிறார் அ.கா. பெருமாள்.
இலக்கியங்களைப் பொறுத்தவரை, இடைக்காடர் எழுதிய வருடாதி வெண்பாவில் இந்த அறுபது ஆண்டுப் பெயர்களும் வருகின்றன. இந்தப் பெயர்களையும் சொல்லி, அந்தந்த ஆண்டுகள் எப்படியிருக்கும் எனப் பாடியிருக்கிறார் இடைக்காடர். இவரது காலம் 15ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தமிழ் இலக்கியத்தில் முதன்முதலில் இந்த அறுபது ஆண்டுகளும் வரிசைப்படி காணப்படுவது இந்த வருடாதி வெண்பாவில்தான். "கல்வெட்டுகள், இடைக்காடரின் பாடல்கள் ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது 14-15ஆம் நூற்றாண்டில் இது பிரபலமாக ஆரம்பித்திருக்கலாம்" என்கிறார் அ.க. பெருமாள்.
இதே கருத்தையே முன்வைக்கிறார் கல்வெட்டு ஆய்வாளரான குடவாயில் பாலசுப்ரமணியன். "15ஆம் நூற்றாண்டில்தான் இது பிரபலமாகியிருக்க வேண்டும். ராஜராஜசோழனின் கல்வெட்டுகளிலோ, அவனுக்குப் பிந்தைய சோழ மன்னர்கள் கல்வெட்டுகளிலோ இந்த வருடப் பெயர்கள் கிடையாது. அவர்களைப் பொறுத்தவரை ஆட்சியாண்டையும் சக ஆண்டையும்தான் கல்வெட்டுகளில் குறிப்பிட்டிருக்கிறார்கள்" என்கிறார் அவர்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி நெருங்கும்போது, தமிழ் ஆண்டுகளுக்கு சமஸ்கிருதப் பெயர்களைப் பயன்படுத்துவது குறித்து எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன. இதனை அப்படிப் பார்க்கத் தேவையில்லை என்கிறார் ஆய்வாளர் பொ. வேல்சாமி.
"தமிழ் இங்கிருந்து வந்ததாகவும் சமஸ்கிருதம் வெளியில் இருந்து வந்ததாகவும் சொல்லி, இந்த எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள். தமிழ்நாட்டில் சங்க காலத்திலேயே சமஸ்கிருதமும் தமிழும் நெருக்கமாக இருந்திருக்கின்றன. இரு மொழிகளுக்கும் இடையில் ஒரு நீண்ட காலத் தொடர்பு இருக்கிறது. தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் தொடர்பில்லை என்பவர்கள் மொழியியலாளர்கள் அல்ல. அவர்கள் தாம் சார்ந்திருக்கும் அரசியல் சித்தாந்தம் சார்ந்து அந்தக் கருத்தைச் சொல்கிறார்கள். ஆகவே இந்தப் பெயர்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு நீண்ட காலத் தொடர்ச்சி இருக்கிறது" என்கிறார் அவர்.
ஆனால், இந்த சம்வத்சர முறையிலான பெயர்களை ஆண்டுகளுக்கு பயன்படுத்துவதில் வேறு ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது, இந்தப் பெயர்கள் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை திரும்பவும் அதே பெயர் வருமென்பதால், சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு நாம் குறிப்பிட விரும்பும் ஆண்டு எது என்ற குழப்பம் ஏற்படும்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
"கல்வெட்டுகளைப் பொறித்த மன்னர்கள் இதில் தெளிவாக இருந்தார்கள். அவர்கள் இந்த சுழற்சி ஆண்டைக் குறிப்பிட்டாலும் சக ஆண்டு, சாலிவாகன ஆண்டு போன்ற பிற ஆண்டுகளையும் சேர்த்தே குறிப்பார்கள். இதனால், அவர்கள் எந்த வருடத்தைச் சொல்கிறார்கள் என்பதில் குழப்பம் கிடையாது. ஆனால், 19ஆம் நூற்றாண்டில் பதிப்பாளர்களாக இருந்தவர்கள், தங்கள் புத்தகங்களில் கிரிகேரியன் ஆண்டையோ, வேறு ஆண்டையோ குறிக்காமல், வெறும் இந்தப் பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்போது 150 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், இவை குழப்பத்தை ஏற்படுத்துகின்றன" என்கிறார் அ.கா. பெருமாள்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, காலத்தைக் கணக்கிட்டுக் குறிப்பிடுவது சங்க காலத்தில் இருந்தே இருந்துவருகிறது. அதற்கு நல்ல உதாரணம், புறநானூற்றின் 229வது பாடல். கூடலூர் கிழார் பாடிய இந்தப் பாடல், கோச்சேரமான் யானைகட்சே எய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பற்றியது. அவன் குறிப்பிட்ட நாளில் இறப்பான் எனக் கணித்து, அதேபோல அவன் இறந்துவிட கையறு நிலையில் பாடிய பாடல் இது.
இந்தப் பாடலின் பல இடங்களில், ராசிகள், நட்சத்திரத்தின் நிலை, மாதத்தின் பெயர் ஆகியவை வருகின்றன.
ஆனால், காலத்தைக் குறிப்பிட தங்களுக்கென தொடர்ச்சியான ஒரு ஆண்டு முறையை தமிழர்கள் ஏன் உருவாக்கவில்லை என்பது ஒரு சுவாரஸ்யமான கேள்வி.