தமிழர்களின் வழிபாட்டு தெய்வங்களில் இந்திரனும், இந்திர விழாவும் :
இங்கு பரவலாக "இந்திரன்" என்ற பெயரைக் கேட்டாலே அது ஆரிய கடவுள் என்றும் அது சமஸ்கிருத கடவுள் என்றும் அது கைபர் கணவாய் வழியாக வந்த கடவுள் என்றும் அவரவர் வாய்க்கு வந்ததைப் பேசுவதற்கு ஒரு கூட்டம் உண்டு. ஆனால் இந்திரன் என்ற தெய்வமானது தொல்காப்பியர் வகுக்கும் ஐந்திணை தெய்வங்களில் 'மருத' நிலத்தின் தெய்வம் தான் என்பதை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் திருவள்ளுவர் கூட இந்திரனைப் பற்றி குறிப்பிட்டு பேசுகிறார் என்ற செய்திகளையெல்லாம் யாரும் தேடி அறிந்தபாடில்லை. அப்படி அறிந்தாலும் தலைவன், முதல்வன் என்று ஆயிரம் விளக்கங்கள் கூறுவார்கள். இந்த விளக்கங்களைக் கேட்க வள்ளுவனோ/ மணக்குடவர்/பரிதியார் போன்றோரோ இல்லை என்பதுவரை திருப்தியாக உள்ளது.!
“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும் புளார்கோமான்
இந்திரனே சாலும் கரி”
- திருக்குறள்.
சமண முனிவர்களில் ஒருவரான மணக்குடவர் இக்குறளுக்கு விளக்க உரை எழுதுகையில் "நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று என்று குறிப்பிடுகிறார். அவர் மேலும் தன் விரிவுரையில், இந்திரன் சான்றென்றது; இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால், அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது. என்று போற்றுகிறார்.!
மேலும் "வேந்தன் மேய தீம்புனல் உலகமும் " என்ற தொல்காப்பிய வரிகளுக்கு உரை எழுதிய மூத்த உரை ஆசிரியர்கள் வேந்தன் என்பது இந்திரனையே குறிக்கும் என்று எழுதி உள்ளனர். ஆக இது ஆரிய இந்திரனா திராவிட இந்திரனா என்பதெல்லாம் தனிப்பட்ட விவாதம். ஆனால் இந்திரன் என்ற சொல்லாடல் திருக்குறளுக்கு முன்பு முதன் முதலில் சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூற்றில் நேரடியாக பயன்படுத்தப்படுகிறது.
பொருள்: தனக்கென முயலாமல் பிறருக்கு உதவுதற்காக முயலும் மிகப்பெருந் தாளாண்மை உடையவர் உலகில் வாழ்வதால்தான். அவர்கள் இந்திர உலகத்து அமிழ்தமே கிடைத்தாலும் ‘ஆ ஆ இனிது’ என்று எண்ணி தான்மட்டும் உண்ணமாட்டார்கள். உலகில் எது நடந்தாலும் வெறுத்துச் சினம் கொள்ளமாட்டார்கள். பிறர் அஞ்சி ஒதுங்கும் நற்பணிகளைச் செய்யும்போது தயங்கமாட்டார்கள். புகழ் வரும் என்றால் அதனைப் பெறத் தன் உயிரையும் கொடுப்பர். பழி வரும் என்றால் உலகையே சேர்த்துக் கொடுத்தாலும் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். அயராமல் உழைத்துக்கொண்டே இருப்பர். இத்தகையர் வாழ்வதால்தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.!
விளக்கம்: வலிய தேர்களை இரவலர்க்கு அளித்த, குளிர்ந்த மாலையணிந்த ஆய் அண்டிரன் வருகிறான் என்று, ஒளி பொருந்திய வளையல்களையும், வச்சிரம் என்னும் ஆயுதத்தையும், பெரிய கையையும் உடைய இந்திரனின் கோயிலில், போர்த்தப்பட்ட முரசுகள் முழங்கப்பட்டன. அந்த ஒலி வானத்தில் ஒலித்தது. அதாவது இந்த இரு புறப்பாடல்களின் மூலம் இந்திரன், அமிழ்தம், வஜ்ராயுதம், கோயில்
போன்ற சொல்லாடல்களால் வஜ்ரத்தை உடைய இந்திரன் கோயில் சங்க சங்க காலத்திலியே இருந்தது தெளிவு. அதோடு இந்திரன் தொடர்புடைய அமிழ்தம் என்ற சொல்லாடல் இருந்ததை தெளிவாக அறியலாம். மேலும்,
"இந்திரன், பூசை: இவள் அகலிகை; இவன்
சென்ற கவுதமன்; சினன் உறக் கல் உரு
ஒன்றிய படி இது' என்று உரைசெய்வோரும்"
- பரிபாடல்.
அதாவது திருப்பரங்குன்றத்தில் அன்றைய காலத்தில் உள்ள ஓவியங்களை விளக்குகையில், சிலர் அங்குத் தீட்டப்பட்டிருந்த ஓவியக் காட்சியில் இவன் காமன், இவள் இரதி எனக் காட்டினர், சிலர் இவர்களைப் பற்றி வினவ, சிலர் இவர்களது கதையை விளக்கினர். சிலர் இவன் இந்திரன், இது பூனை, இவள் அகலிகை, இவன் கௌதமன், இது கௌதமன் சினத்தால் கல்லாகிய சிலை, என்றெல்லாம் காட்டிக் கதையைக் கூறினர்.!
"மூஎயில் முருக்கிய முரண்மிகு செல்வனும்
நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறுபல்
வேள்வி முற்றிய வென்றுஅடு கொற்றத்து
ஈர்இரண்டு ஏந்திய மருப்பின் எழில்நடை
தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை
எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும்"
- திருமுருகாற்றுப்படை.
அதாவது ஆயிரம் கண்களை உடையவனும், நூற்றுக்கு மேற்பட்ட வேள்விகளைச்
செய்து முடித்தலால் பகைவரை வென்று அவர்களைக் கொல்லும் வெற்றியை உடையவனும், முன்பக்கம் உயர்ந்த நான்கு கொம்புகளையும் அழகிய நடையினையும், நிலத்தைத் தொடுமாறு நீண்ட வளைந்த
(ஐராவதம்) யானையின் பிடரியின் மீது அமர்ந்தவாறு இந்திரனும்" என்று நாற்பெரும் தெய்வங்களாக சிவன் திருமால் பிரம்மா வை குறிப்பிட்ட பின் இந்திரனை குறிப்பிடுகிறார் நக்கீரர்.!
ஆக இந்த மூன்று இலக்கியங்களும் இந்திரனை, அமிழ்தத்தை உடையவன், வஜ்ராயுதத்தை உடையவன், ஆயிரம் கண்ணுடையவன், வேள்விகளை செய்பவன், ஐராவதம் எனும் யானையை வாகனமாக கொண்டவர் என்றெல்லாம் சுட்டும் தமிழ் நூல் எதுவென்று தேடி இந்திரன் யார்? அதாவது தமிழ் கடவுளா? வேத கடவுளா? இறந்த அரசனா? என்பதை உங்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன்.!
அடுத்ததாக இந்திரனுக்கு விழா எடுத்த தகவல்களையும் ஐங்குறுநூறு மற்றும் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற பழம்பெரும் நூல்கள் தருகின்றன.!
"இந்திர விழவிற் பூவி னன்ன
புன்றலைப் பேடை வரிநிழ லகவும்
இவ்வூர் மங்கையர்த் தொகுத்தினி எவ்வூர் நின்றன்று மகிழ்நநின் றேரே. இதுவுமது"
- ஐங்குறுநூறு.
இந்திர விழாவில் கலந்து மகிழ வருவார் பலரும் சூடியிருக்கும், வேறுவேறு வகையான பூக்களைப்போன்ற அழகுடைய, இவ்வூர்ப் பரத்தையரை எல்லாம் ஓரிடத்தே கொண்டு தொகுத்ததன் பிடினல், புல்லிய குயிற்பேடையானது வரிப்பட்ட நிழற்கண் இருந்து அகவும் இவ் ஆரைவிட்டு, வேற்றுார் மகளிரையும் கொணர்தலின் பொருட்டுச் சென்று, இப்போது நின் தேர் நின்ற ஊர் எது என்று தலைவி கேட்பதாக அமைந்த இந்த பாடல் சங்க காலத்தில் இந்திரனுக்கு விழா எடுத்த செய்தியை நமக்கு தருகிறது..!
மிக முக்கியமாக இந்திரவிழாவை கரிகால் வளவன் ஆட்சிகாலத்தில், சங்ககாலச் சோழர்களின் துறைமுகப் பட்டினமாகத் திகழ்ந்த காவிரிப்பூம்பட்டினத்தில், பிரபலமாகக் கொண்டாடப்பட்ட செய்தியினைச் சிலப்பதிகாரத்தில் இந்திர விழவு ஊர் எடுத்த காதையும், கடலாடு காதையும் மணிமேகலையில் விழாவறை காதையும் பெருமளவில் விவரிக்கின்றன.
அவ்வகையில் மணிமேகலையில் ஆயிரங்கண்ணோனுக்கு (இந்திரன்)விழா நடத்த முடிவு செய்வது முதல் வாழ்த்து கூறுவது வரை விரிவாக காணப்படுகிறது.!
"மாயிரு ஞாலத்து அரசுதலை ஈண்டும்
ஆயிரங் கண்ணோன் விழாக்கால் கொள்க"
- மணிமேகலை.
அகத்தியரின் அறிவுரையின் பேரில் புகார் நகரத்தின் நன்மைக்காக ஆயிரம் கண்ணோனுக்கு(இந்திரன்) விழா எடுத்த நிகழ்வை மேற்கூறிய வரிகள் பதிவு செய்கின்றன. விழாவுக்கு மக்களை அழைக்க வள்ளுவன் முரசு அறிவிக்கும் செய்தியை மணிமேகலையின் கீழ்க்காணும் வரிகள் எடுத்தியம்புகின்றன.!
"திருவிழை மூதூர் வாழ்கஎன் றேத்தி
வானமும் மாரி பொழிக! மன்னவன்
கோள்நிலை திரியாக் கோலோன் ஆகுக"
இப்படி மணிமேகலையும் சிலப்பதிகாரமும் இந்திர விழாவை பெருமளவில் பேசுகின்றன. இவற்றிற்கெல்லாம் ஒரு படி மேலாக ஆதித்த சேழனின் பள்ளிப்படை கல்வெட்டில் இந்திர விழா எடுத்தது பற்றிய விரிவான தகவல் உள்ளது. இக்கல்வெட்டில் இந்திர விழாவின் போது பிராமணர்கள் உட்பட ஆறு சமய ஞானிகளும் உணவருந்திய தகவல்களும் உள்ளது.!
(கல்வெட்டு தகவல்களை தந்தவர் தொல்லியல் ஆய்வாளர் திரு மாரிராஜன் அவர்கள்)
இதன் அடிப்படையில் ஆதித்த சோழனுக்கு அவரை புதைத்த இடத்தில் முதலாம் பராந்தக சோழன் எடுத்த பள்ளிப்படை கோயிலில் உள்ள இந்த கல்வெட்டானது திருவிழா எடுக்கும் விதியின்படி ஆறு சமயத்து தவசிகள் 200 பேரும், பிராமணர்கள் 300 பேரும், பல சமயத்து பக்தர்கள் ஐநூறு பேரும் கலந்துகொண்ட தகவலை தகவலை தருகிறது.!
இதே கல்வெட்டின் இறுதியில் இத்திருவிழா இந்திர விழாவாகவும் கொண்டாடப்பட்டது என்ற தகவலையும் மேற்கூறிய கல்வெட்டுத் தகவல் குறிப்பிடுகிறது. அதாவது சங்க காலம் மற்றும் காப்பிய காலங்கள் மூலம் நாம் அறிந்த இந்திர விழாவானது பத்தாம் நூற்றாண்டில் சோழர்களாலும் பெருமளவில் கொண்டாடப்பட்டுள்ளது என்பதை இதன்மூலம் தெளிவாக அறியலாம். ஆக இந்திரன் ஆரிய கடவுள் அன்று என்பதையும் அவர் தமிழர்களின் கடவுள் தான் என்பதற்கும் இந்திரவிழா என்பது தமிழர்கள் கொண்டாடிய விழா தான் என்பதற்கும் இப்பதிவு தகுந்த சான்றாக அமையும் என்று நம்புகிறேன்.!