தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: காந்தியும் சந்திரசேகர சரஸ்வதியும்


Guru

Status: Offline
Posts: 1049
Date:
காந்தியும் சந்திரசேகர சரஸ்வதியும்
Permalink  
 


காந்தியும் சந்திரசேகர சரஸ்வதியும்

காந்தி எந்த மடாதிபதியையும் சந்தித்ததில்லை, ஆசி வாங்கியதில்லை. அவர் சந்தித்த இந்து துறவியர் இருவர். சகோதரி நிவேதிதா மற்றும் நாராயணகுரு. அவர் மதித்த துறவி நாராயணகுரு மட்டுமே.

காந்தி ஒரு முறை காஞ்சி மஹாபெரியவாளை சந்தித்தார்.

//Though Periyavaa did not get directly into politics, he was interested in the happenings. At Nellichery in Palakkad (Present Day Kerala), Rajaji and Mahatma Gandhi met the Acharya in a cow shed. It was a practice in the mutt to wear silk clothes.// >;>;>; http://en.wikipedia.org/wiki/Chandrashekarendra_Saraswati

மகேஷ்

அன்புள்ள மகேஷ்,

இந்த விஷயங்களை நான் இன்றையகாந்தி நூலில் எழுதியிருக்கிறேன். இந்தக்கட்டுரையிலேயே கூட ஒரு வரியில் குறிப்பிட்டிருக்கிறேன்.

காந்தி எந்த மதத்தலைவரையும் அவராகச்சென்று சந்தித்து ஆசி வாங்கியதில்லை என்றே நான் எழுதியமைக்குப் பொருள். அந்த வரியில் உள்ள அரைப்புள்ளியை கவனியுங்கள். அவராகச்சென்று, அவர்களின் இடத்திற்குச் சென்று சந்தித்தது சகோதரி நிவேதிதை, நாராயணகுரு இருவரையுமே.

காந்தி கேரளத்திற்கு 1920இல் முதல்முறையாக வந்தார். ஆகஸ்ட் 20ஆம் தேதி கோழிக்கோட்டுக்கு வந்திறங்கிய காந்தி கிலாஃபத் இயக்கத்தை அங்கே பெருந்திரளான மக்கள் நடுவே ஆரம்பித்து வைத்தார். இரண்டாவது வருகை 1925இல். அது காந்தி ஆரம்பித்திருந்த ஹரிஜன இயக்கத்தையும் அதையொட்டி வைக்கத்தில் நாராயணகுருவின் மாணவரான காந்தியவாதி டி.கெ.மாதவன் அவர்கள் ஆரம்பித்திருந்த வைக்கம் ஆலயம் மற்றும் தெருநுழைவுப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக.

காந்தி மார்ச் 8ஆம் தேதி திருவனந்தபுரம் வந்திறங்கினார். மார்ச் 19 வரை கேரளத்தில் இருந்தார். மார்ச் 9ஆம் தேதி அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு வைக்கத்தில் அளிக்கப்பட்டது. மார்ச் 10ஆம் தேதி அன்றைய திருவிதாங்கூர் அரசி சேதுலட்சுமிபாயை சந்தித்து வைக்கம் ஆலயநுழைவுப் போராட்டத்தைப் பற்றிப் பேசினார்.

மார்ச் 12ஆம்தேதி காந்தி வர்க்கலைக்கு வந்தார். நாராயணகுருவை அவரது வர்க்கலா ஆசிரமத்துக்குச் சென்று சந்தித்துப் பேசினார். காந்திக்கு நாராயணகுருகுலத்தில் அதிதிபூஜை செய்யப்பட்டது. அப்போது நாராயணகுருவின் மாணவர் மூர்க்கோத்து குமாரன், டி.கெ.மாதவன் போன்றவர்கள் உடனிருந்தனர். கோட்டயம் ஆட்சித் தலைவரும் நாராயணகுருவின் சீடருமான என்.குமாரன் உரையாடலை மொழியாக்கம் செய்தார்.

இரண்டரை மணிநேரம் இந்த உரையாடல் நிகழ்ந்தது. இந்தச் சந்திப்பு விரிவாக எழுதப்பட்டுள்ளது. அன்றுமாலை காந்தி திருவனந்தபுரத்தில் உரையாற்றினார். அதில் நாராயணகுருவுடனான சந்திப்பைப்பற்றி மிக உணர்ச்சிகரமாகக் குறிப்பிட்டார். ‘உண்மையான மகான் ஒருவரின் அருகே அமர்ந்து விவேகம் மிக்க வார்த்தைகளைக் கேட்கும் வாய்ப்பு இன்று கிடைத்தது’ என்றார்.

அதன் பின்னர் மார்ச் 13ஆம்தேதி வைக்கம் போராட்டத்தில் வைதிகர்களின் தரப்பை எடுத்த பழைமைவாதியான இண்டன்துருத்தில் நீலகண்டன் நம்பூதிரிப்பாடை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்துப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். வீட்டுக்கதவைப் பூட்டிவிட்டு நம்பூதிரிப்பாடு உள்ளேயே இருந்தார். தீண்டாமையைப்பற்றி ஒரு பொதுவிவாதத்துக்கு வரமுடியுமா என காந்தி அவரிடம் சவால் விடுத்தார். நாராயணகுருவுடனான உரையாடலே இந்தத் தெளிவை அவருக்கு அளித்தது.

1925 அக்டோபர் எட்டாம் தேதி வைக்கம் போராட்டம் சமரச ஒப்பந்தத்துக்கு வந்தது. காந்தி ஒட்டுமொத்த விளைவுகளை ஆராயும்படி வைக்கம் வீரரான டி.கெ.மாதவனுக்கு ஆணையிட்டார். அடுத்தபடியாக கேரளம் முழுக்க இதே ஆலயநுழைவுப்போரை முன்னெடுக்க முடியுமா என காந்தி எண்ணினார்.

இக்காலகட்டத்தில்தான் காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி காந்தியைச் சந்திக்க விரும்பி தூதனுப்பினார். அப்போது சந்திரசேகரருக்கு 31 வயதுதான். அவரோ அவரது மடமோ புகழ்பெற்ற ஒன்றாக இருக்கவில்லை. ஆனால் காந்தியைச்சுற்றி இருந்த பிராமணர்கள் காந்தி சந்திரசேகரரைச் சந்திக்கவேண்டுமென ஆசைப்பட்டார்கள்.

காந்தி சந்திரசேகரரைத் தவிர்த்ததாகத் தெரிகிறது. காரணம் வெளிப்படை. காந்தி தீண்டாமை குறித்துப் பேசிவந்த கருத்துக்கள் சந்திரசேகரருக்குப் பிடிக்கவில்லை. அது இந்துமதத்தை அழித்துவிடும்,அதற்கு சாஸ்திர சம்மதம் இல்லை என சந்திரசேகரர் சொல்லியனுப்பியிருந்தார். தாழ்த்தப்பட்ட மக்கள் பிறவி இழிவு கொண்டவர்கள், அவர்களை உயர்சாதியினர் பார்ப்பதும் தீண்டுவதும் பெரும் பாவமே ஆகும் என வாதிட்டார்.

இதே நிலைப்பாட்டுடன் காந்தியை எதிர்த்து, அவரை சந்திக்கவிரும்பிய பழம்பெருமை மிக்க மடாதிபதியான பூரிசங்கராச்சாரியாரையும் காந்தி முற்றாகத் தவிர்த்துவிட்டிருந்தார். மேலும் பல வைதிகர்களை அவர் தவிர்த்திருந்தார்.

உண்மையில் காந்திக்குக் குழப்பம் இருந்தது. இந்து மூலநூல்களில் தலித்துக்களைத் தீண்டப்படாதவர்களாகவே நடத்தவேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகம் அவருக்கே இருந்தது. மேலும் காந்தி அன்று காங்கிரஸுக்குள்ளேயே கடுமையான வைதிக எதிர்ப்பைச் சந்தித்துக்கொண்டிருந்தார். உண்மையில் நீண்ட சமரசங்கள் வழியாக காங்கிரஸ் உடையாமல் கொண்டுசென்றார்.

ஆகவே அவர் சந்திரசேகரரிடம் நேரடிச்சந்திப்பை தவிர்த்தார். இருவரிடம் அவர் தனக்கு வழிகாட்டும்படி கோரினார். ஒருவர் தாகூர். தாகூர் தன் நண்பரான ஷிதிமோகன் சென் [அமார்தியா சென்னின் தாத்தா] என்ற பேரரறிஞரிடம் கலந்து பேசியபின் இந்துமதத்தின் அடிப்படை மூலநூல்களில் இனவாதமோ சாதியவேறுபாடோ இல்லை எனத் தெளிவாக்கினார்.

காந்தி நாராயணகுருவைச் சந்தித்தும் இதே ஐயத்தையே கேட்டார். நாராயணகுரு இந்துமதத்தில் உள்ள ஸ்மிருதி-சுருதி வேறுபாட்டை விளக்கினார். ஸ்மிருதிகள் காலந்தோறும் மாறும் என்றும் யம ஸ்மிருதி, நாரதஸ்மிருதி முதலியவை அகற்றப்பட்டே மனு ஸ்மிருதி வந்துள்ளது என்றும் சொன்னார்.

ஒவ்வொரு ஸ்மிருதியும் ஒவ்வொரு நீதியை சொல்லக்கூடியது. ஆனால் சுருதிகள் மாறுவதில்லை. அவையே ஞானத்தின் அடிப்படை. சுருதி எனக் கருதப்படும் நூல்களில் சில இடைச்செருகல்களைத் தவிர்த்தால் எங்கும் சாதிவேறுபாடு சொல்லப்படவில்லை என்றார். அதன்பின்னரே நீலகண்டன் நம்பூதிரிப்பாடிடம் பொதுவிவாதத்துக்கு காந்தி தயாரானார். அப்போதும் சந்திரசேகரரைச் சந்திக்கத் தயாராகவில்லை.

மீண்டும் காந்தி கேரளத்துக்கு வந்தது 1927 அக்டோபர் 9இல். அக்டோபர் 15 வரை அவர் கேரளத்தில் இருந்தார். இம்முறை காந்தி கேரளத்துக்கு வந்தது வைக்கம் போராட்ட வெற்றியைத் தொடர்ந்து அவர் டி.கெ.மாதவன் தலைமையில் கேரளம் முழுக்கத் தொடங்கியிருந்த ஆலய நுழைவுப்போராட்டத்தை முன்னெடுப்பதற்காக.

காந்தி அக்டோபர் 10ஆம் தேதி திருவிதாங்கூர் மகாராணி சேதுலட்சுமிபாயையும் இளவரசரையும் சந்தித்தார். திருவார்ப்பு கோயிலில் டி.கெ.மாதவன் தலைமையில் நிகழும் போராட்டத்தை ஒடுக்க அடக்குமுறையை ஏவவேண்டாமெனக் கேட்டுக்கொண்டார். அதன்பின்னர் அவர் எர்ணாகுளம் வழியாக திரிச்சூர் வந்தார். அங்கே கதர் நூற்புப் போட்டியைத் தலைமை தாங்கிப் பரிசளித்தார்.

காந்தி அக்டோபர் 15 அன்று பாலக்காடு வந்தார். அப்போது மாலையில் 15 நிமிடங்களை சந்திரசேகரருக்கு ஒதுக்க ஒத்துக்கொண்டார். காந்தியின் இந்த கறார்த் தன்மைக்குக் காரணம் அவரால் விரிவாக சாஸ்திர விவாதங்களில் ஈடுபட முடியாதென்பதும், அறிஞரான சந்திரசேகரரை சந்தித்துப்பேச அவர் அஞ்சினார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையாகவும் இருக்கலாம்.

பாலக்காட்டில் நெல்லிச்சேரியில் காந்தி தங்கியிருந்த இடமருகே பாலக்காட்டு காங்கிரஸ்காரரின் இல்லத்துக்கு சந்திரசேகரர் வந்தார். காந்தி சூத்திரர் ஆதலால் சந்திரசேகரர் அவருக்கு முறையான ‘தரிசனம்’ கொடுக்க விரும்பவில்லை. சந்திப்பை காங்கிரஸ்காரரின் தொழுவத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார். அதை காந்திக்கு ராஜாஜி சிரித்துக்கொண்டே தெரிவித்தபோது காந்தி ‘தொழுவம் சுத்தமாக இருந்தால் எனக்கு ஆட்சேபணை இல்லை’ என்றார்.

சந்திப்பு 15 நிமிடத்துக்கும் குறைவாகவே நடந்தது. ராஜாஜியும் பாலக்காட்டைச்சேர்ந்த இரு காங்கிரஸ்காரர்களும் கலந்துகொண்டார்கள். உரையாடலில் இருவரும் இந்துஸ்தானியில் பேசிக்கொண்டார்கள். சந்திரசேகரர் கண்ணீருடன் இந்துமதத்தை அழிக்கவேண்டாம் என காந்தியைக் கேட்டுக்கொண்டார். இந்தக் கோரிக்கையை விடுப்பதற்காகவே அவர் பல நூறு கிலோமீட்டர் நடந்து தஞ்சாவூரில் இருந்து வந்திருந்தார்.

காந்தி மிக்க பணிவுடன் ‘ஒரே ஒரு சுருதி நூலில் ஒரே ஒரு வரியையாவது ஆதாரமாகக் காட்டுங்கள். நான் யோசிக்கிறேன்’ எனக் கேட்டுக்கொண்டார். சந்திரசேகரர் கீதையைச் சுட்டிக்காட்ட காந்தி கீதையின் அந்த வரி தவறாக விளக்கப்படுகிறது, ஏனென்றால் அந்தப் பொருளுக்கு முற்றிலும் மாறாகவே மொத்த கீதையும் உள்ளது என்று சொன்னார்.

சந்திரசேகரரால் மேலே பேசமுடியவில்லை. காந்தி ‘உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. நான் ஒரு மௌல்வியைச் சந்திக்கவேண்டும்’ என்று சொல்லி சந்திப்பை முடித்துக்கொண்டார். அது வைக்கம் மௌலவி என பின்னாளில் புகழ்பெற்ற வைக்கம் அப்துல்காதர் மௌலவி. நாராயணகுருவின் இயக்கத்துடன் நெருக்கமான தொடர்புடையவராக இருந்த காந்தியவாதி அவர். சுவதேசாபிமானி என்ற நாளிதழின் நிறுவனர்

சந்திரசேகரரிடம் காந்தி கொஞ்சம் உதாசீனமாகவே நடந்துகொண்டதாக அன்று பிராமணர்கள் நினைத்தனர். அது உண்மையும் கூட. காந்தி பக்தரான கல்கி போன்றவர்கள்கூட சந்திரசேகரரை கடுமையாக, நேரடியாகத் தாக்கி எழுதியமைக்கும் இந்நிகழ்வு ஒரு தூண்டுகோல். தீண்டாமையை ஒழிப்பது வழியாக காந்தி இந்துமதத்தை அசுத்தமாக்குகிறார் என சந்திரசேகரர் சொன்னதற்கு ‘நீங்கள் ஒன்றும் ஜகத்குரு [உலகின் குரு] அல்ல, ஒரு மடாதிபதி மட்டுமே. அந்த இடத்தில் இருந்தால் போதும்’ என கல்கி பதில் எழுதினார்.

கல்கி ஸ்மார்த்தர்.அன்றைய பிராமணர்களால் வழிபடப்பட்டவர். ஆகவே இந்த தாக்குதல் சந்திரசேகரரை அதிர்ச்சி அடையச்செய்தது. அதன்பின் தீண்டாமைக்கு ஆதரவாக நேரடியாகப்பேசுவதைக் கட்டுப்படுத்திக்கொண்டார். அல்லது அந்த அமைப்பு அவரை கட்டுப்படுத்தியது. ஆனால் கடைசிக்காலம் வரை அவர் சாதிநோக்கும் தீண்டாமைநோக்கும் கொண்டவராகவே நீடித்தார். அவரது நூல்களே சான்று

இன்றும்கூட சம்பிரதாய ஸ்மார்த்தர்கள் காந்தியை வெறுக்கிறார்கள். ராதாராஜன் போன்ற [போலிப்] பிராமண வெறியர்களின் நூல்களில் காந்தி சங்கராசாரியாரை மதிக்கவில்லை என நீடிக்கும் குற்றச்சாட்டுக்கு இந்நிகழ்வே காரணம்.

அன்று மாலை கோயம்புத்தூருக்கு வந்த காந்தி அங்கே கோவை அய்யாமுத்து ஏற்பாட்டில் நடந்த கூட்டத்தில் பேசினார். ஒருவர் சந்திரசேகரருடனான சந்திப்பு பற்றிக் கேட்டபோது காந்தி ‘சொல்லும்படி ஏதுமில்லை. ஒரு தனிப்பட்ட உரையாடல் மட்டுமே’ என்றார்.

சந்திரசேகரர் பின்னரும் பல உரைகளில் அவரது தீண்டாமைச் சிந்தனையை முன்வைத்துப் பேசினார். அவை அச்சாகியும் உள்ளன. தீண்டாமை சட்ட விரோதமாக ஆனபின் அந்த உரைகள் பலவும் திருத்தி எழுதப்பட்டன. இன்று காந்தியை சந்திரசேகரர் சந்தித்தது ஸ்மார்த்த பிராமணர்களின் நூல்களில் பலவாறாகத் திரித்து எழுதப்படுகிறது. காந்தி அவரைச் சந்தித்து காலில் விழுந்து ஆசிபெற்றார் என்றுகூட எழுதியிருக்கிறார்கள்.

இன்னும் நூறுவருடம் ஆகாத ஒரு வரலாற்றுக்கே இத்தனை திரிபுகள். ஒருபக்கம் திராவிடத் திரிபு இன்னொரு பக்கம் பிராமணத் திரிபு. காந்தியை மீட்டெடுப்பது தாரில் சிக்கிய வண்ணத்துப்பூச்சியை மீட்பது போலத்தான்.

ஜெ

 



__________________


Guru

Status: Offline
Posts: 1049
Date:
Permalink  
 

சந்திரசேகரரும் ஈவேராவும்

அன்புள்ள ஜெ,

நீங்கள் ஈவேரா பற்றி எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். என்னுடைய நெடுநாள் ஆதங்கம் இது. நீங்கள் சந்திரசேகரரை அவரது குறைகளுடன் சமநிலைப்பார்வையில் பார்க்கிறீர்கள். அதே சலுகையை ஏன் பெரியாருக்கு அளிக்கமாட்டேன் என்கிறீர்கள்? ஏன் பெரியாரை மட்டும் எப்போதும் எதிர்த்தே எழுதுகிறீர்கள்? இதை விளக்கமுடியுமா?

செம்மணி அருணாச்சலம்

அன்புள்ள செம்மணி அருணாச்சலம்,

நீங்கள் தொடர்ந்து என் கருத்துக்களை வாசிப்பவர், நாம் ஓர் உரையாடலில் இருக்கிறோம். ஈவேரா பற்றி நான் எழுதியவற்றை வாசியுங்கள். நான் எங்காவது ஈவேரா அவர்களைப் பற்றி அவமதிப்பாக எதையாவது சொல்லியிருக்கிறேனா? எங்காவது அவரது வரலாற்றுப்பாத்திரத்தை அல்லது அவர் தமிழ்ச்சமூகத்துக்கு அளித்த சேவையைக் குறைத்து மதிப்பிட்டிருக்கிறேனா? நான் ஒரு முறைகூட அவரைப்பற்றிய மதிப்பையும் அவரது பங்களிப்பையும் பற்றிய ஒரு குறிப்பு இல்லாமல் அவரை விமரிசித்ததில்லை.

ஆனாலும் விமர்சனங்களே அதிகம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்கான காரணத்தை நம்முடைய பெரியாரியர்களிடம்தான் நீங்கள் பார்க்கவேண்டும். ஸ்மார்த்த பிராமணர்கள் எப்படி சந்திரசேகர சரஸ்வதி அவர்களை முனிவர் என்றும் ஞானி என்றும் மனித தெய்வம் என்றும் அற்புதங்கள் நிகழ்த்தியவர் என்றும் சொல்கிறார்களோ அதே மனநிலைதான் பெரியாரியர்களிடமும் உள்ளது. அவர்கள் ஈவேரா அவர்களை தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர் என்றும் தமிழக வரலாற்றின் தலைசிறந்த சீர்திருத்தவாதி என்றும் தமிழக முற்போக்கு அரசியலின் முன்னோடி என்றும் சொல்கிறார்கள்.

சந்திரசேகர சரஸ்வதி அவர்களை ஞானி அல்லது மகான் என்று ஒருவர் சொல்வது அவரது சொந்தச் சாதிப்பிடிப்பினால். அதற்குமேல் அந்தக் கூற்றுக்கு மதிப்பேதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் உண்மையான தீவிரத்துடன் சந்திரசேகர சரஸ்வதி பிராமணர்களின் ஆசாரங்களை வலியுறுத்தியதனால் அந்தக் கட்டுப்பாடுகளை ஏற்கமுடியாத, அதேசமயம் வைதிகர் என்ற இடத்தையும் விரும்பக்கூடிய லௌகீக பிராமணர்களால் ஒரு போர்த்தந்திரமாகவே சந்திரசேகர சரஸ்வதி ஒரு ஞானி என்னும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.

வைதிகரல்லாத ஒருவர் உண்மையிலேயே அப்படிச் சொன்னாரென்றால் ராமகிருஷ்ணர், ரமணர், வள்ளலார், நாராயணகுரு போன்றவர்களிடமிருக்கும் அனுபூநிநிலையை சுட்டிக்காட்டி அந்த கடந்த நிலை ஒருபோதும் ஆசாரவாதிகளுக்குக் கைகூடுவதில்லை, அவர்களால் அதைப் புரிந்துகொள்ளவும் முடியாது என்பேன். அவர்களின் நூல்களையும் தனிவாழ்க்கையையும் சுட்டிக்காட்டுவேன்.

ஆனால் பெரியாரியர்கள் ஈவேரா அவர்களைத் தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனையாளர் என்று சொல்வது மட்டுமல்ல அதை ஒரு அதி உக்கிரமான பிரச்சாரமாகவே சொல்லி சூழலில் நிலைநாட்டி வருகிறார்கள். அவர் இல்லாவிட்டால் தமிழகத்தின் பெரும்பாலான மக்கள் மாடுதான் மேய்த்துக்கொண்டிருப்பார்கள் என்ற ஒற்றைவரியை எந்த வரலாற்றுப்பிரக்ஞையும் இல்லாமல் சொல்லி நிறுத்தி வருகிறார்கள். அதன் விளைவாக தமிழகத்தின் தலித் அரசியல் முன்னோடிகளை,தொழிற்சங்க முன்னோடிகளை,சீர்திருத்த முன்னோடிகளை இருட்டில் தள்ளுகிறார்கள்.

இந்நிலையில் ஈவேரா அவர்களின் உண்மையான மதிப்பைச் சொல்லியாகவேண்டியிருக்கிறது. ஈவேரா அவர்கள் தமிழ்ப்பண்பாட்டின் மிகமுக்கியமான சமூக சீர்திருத்தவாதி என்பதில் ஐயமில்லை. தமிழ்ச்சமூகத்தின் சிந்தனை வளர்ச்சியில் அவருடைய பங்கு மறுக்கமுடியாதது. ஆனால் அவரை அசல்சிந்தனையாளர் என்று சொல்வது சிந்தனை என்றால் என்ன என்றே தெரியாத நிலைக்கே கொண்டுசெல்லும். அவருடைய பேச்சும் எழுத்தும் சிந்தனையாளனுக்குரியதல்ல.

ஈவேரா அவர்களின் அணுகுமுறை எல்லாவற்றையும் செவிவழியாக பொதுவாகப் புரிந்துகொள்ளும் கிராமிய அணுகுமுறையாகவே இருந்தது. அவர் மிகச்சிக்கலான இந்தியப்பண்பாட்டுப் பின்னலை, மதச்சிந்தனைகளை, இந்தியவரலாற்றின் நெடுங்காலப்பரிணாமத்தை அறிய எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை. மிகப்பொத்தாம்பொதுவாக முரட்டுத்தனமாக அதை அணுகி அதன்மூலம் பெற்ற முடிவுகளை ஓங்கிச் சொன்னார்.

ஈவேரா அவர்களுக்கு முன்னாலும் அவரது சமகாலத்திலும் இந்தியச் சமூகத்தின் பண்பாட்டையும் வரலாற்றையும் நுட்பமாகவும் விரிவாகவும் ஆராய்ந்த சிந்தனையாளர்கள் பலர் உண்டு. அவர்களை நோக்கிச் செல்லத் தடையாக இருப்பது ஈவேரா அவர்களைப்பற்றி உருவாக்கப்படும் இந்த மிகை மதிப்பீடுதான்.

ஈவேரா அவர்களின் கருத்துவெளிப்பாட்டுமுறை என்பது கருத்துப்பூசல் சார்ந்தது. சொல்லப்போனால் ‘கன்னாபின்னாவென்று’ வசைபாடுவது அது. அது நம்முடைய கிராமத்துப் பெரியவர்களிடம் உள்ளது. வசைபாடுவது என்பதே ஒரு சாதாரணத் தமிழ் மனநிலை. எங்காவது எவரையாவது யாராவது ஒருவர் வசைபாடுவதை நாம் தமிழகத்தில் கேட்டுக்கொண்டே இருக்கலாம். இந்தக் காரணத்தால்தான் ஈவேரா அதிகமாக ரசிக்கப்பட்டார், படுகிறார். ஆனால் அது சிந்தனையாளனின் வழி அல்ல. இக்காரணத்தால்தான் அவரை அவர் காலத்துச் சிந்தனையாளர்கள் எவரும் ஒரு பொருட்டாக நினைக்கவில்லை. ஏனென்றால் அவரிடம் ஒரு விவாதமே சாத்தியமல்ல.

ஈவேரா அவர்களின் இந்த பொத்தாம்பொது பார்வையும் முரட்டு வெளிப்பாடும் தமிழில் ஆழமாக வேரூன்றிவிட்டது. ஏனென்றால் இது பின்பற்ற எளிதானது. எந்த அறிவார்ந்த உழைப்பையும் கோராதது. அதேசமயம் சிந்தனையாளராக செயல்படுகிறோம் என்ற நிறைவையும் அளிப்பது. ஒருவர் அம்பேத்கரையோ இ.எம்.எஸ்ஸையோ பின்பற்றினால் எதை எதிர்க்கிறோமோ அதையே ஆழமாகக் கற்கவேண்டும் என்ற கட்டாயத்தை அடைவார். ஈவேரா அவர்களைப் பின்பற்றினால் தீவிரமாக வசைபாடினால் மட்டும் போதும். தமிழகத்தில் தலித்தியரும் மார்க்ஸியரும்கூட ஈவேராவின் அணுகுமுறையைப் பின்பற்றுகிறார்கள் என்பதற்கான காரணம் இதுவே.

ஆகவேதான் ஈவேரா அவர்களை விமர்சித்தாகவேண்டியிருக்கிறது. அவரது வழிமுறைகள் ஒரு சிந்திக்கும் சமூகத்துக்கு உரியன அல்ல என்று சொல்ல வேண்டியிருக்கிறது. அவருடைய பங்களிப்பை ஏற்றபடியே அதைச் சொல்லியாகவேண்டும். சொல்லப்போனால் ஈவேரா அவர்களிடம் எனக்கிருக்கும் ஒரே விமர்சனம் இது மட்டும்தான். இதையே எப்போதும் சொல்லிவருகிறேன்.

ஈவேரா அவர்களின் வைதிக எதிர்ப்பு எனக்கு ஏற்புடைய கருத்துதான் என்பதை என் எழுத்துக்களைப் பார்க்கும் எவரும் அறிந்துகொள்ளலாம். இந்திய ஞானமரபுக்குள் உள்ள அவைதிகப்போக்குகளை அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து நான் பல்லாண்டுக்காலமாக எழுதி வருகிறேன். ஈவேரா அவர்களின் சமூக சீர்திருத்தக் கருத்துக்களில் அனேகமாக அனைத்திலுமே எனக்கு உடன்பாடுதான் உள்ளது. நேர்மாறாக சந்திரசேகர சரஸ்வதி அவர்களின் சமூகக் கருத்துக்களில் எவற்றுடனும் உடன்பாடு இல்லை.

ஆனால் நான் ஈவேரா அவர்களை விமர்சிப்பது அவர் சிந்தனையாளராக எனக்கு எதையுமே அளிக்கவில்லை என்பதைக்கொண்டுதான். கிட்டத்தட்ட அவரது அதே தரப்பை எடுத்த அம்பேத்கரின் ஒவ்வொரு பக்கமும் என்னை வளரச்செய்கிறது. இ.எம்.எஸ்ஸும் கெ.தாமோதரனும் தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவும் ராகுல்ஜியும் எனக்குக் கற்பிக்கிறார்கள். இந்த வேறுபாட்டை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். என் விமர்சனம் அதற்காகவே.

ஈவேரா அவர்களின் தனியாளுமை பற்றி எனக்குப் பெருமதிப்பு உண்டு. அவரது செயல்பாடுகளில் காந்தியவாதிகளுக்கு நிகரான அர்ப்பணிப்பு எப்போதும் இருந்துள்ளது. நான் எப்போதும் அவரை காந்தி அல்லாத இன்னொருவரிடம் ஒப்பிட்டதில்லை. ஈவேரா அவர்களை என்னுடைய குருமரபு தங்கள் குருநாதர்களில் ஒருவராகவே எண்ணி வந்திருக்கிறார்கள். நித்ய சைதன்ய யதி துறவு பூண முடிவெடுத்தபோது நடராஜகுருவின் ஆணைப்படி நேரில்சென்று ஈ.வே.ரா. அவர்களிடம் விபூதி வாங்கி ஆசி பெற்றார் என்பதை நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன். நான் ஈவேரா அவர்களை வைத்திருப்பதும் அந்த இடத்தில்தான்.

ஏற்கனவே நான் சொல்லியதுதான் இது. இன்று நான் ஈவேராவைச் சந்தித்தால் என் ஆசிரியரின் ஆசிரியராக அவரை எண்ணி முதலில் காலில் விழுந்து வணங்கி ஆசிபெறுவேன். அதன்பின்னர் அவரிடம் அவரைப்பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்து பேசுவேன். அவரைப்பற்றி நான் அறிந்தவரையில் அவர் என்னை முழுமனதுடன் ஆசியளிக்கவும் நான் சொல்லும் எல்லா விமர்சனங்களையும் கேட்கவும் கொஞ்சமும் தயங்கமாட்டார்.

பெரியாரியர்கள் ஈவேரா அவர்களை நிலைநாட்டும் அரசியல் நோக்குடன் உருவாக்கும் மிகைகளையும் வரலாற்றுத்திரிபுகளையும்தான் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். வைக்கம் போராட்டம் ஓர் உதாரணம். இந்தத் திரிபுகள் மூலம் அவர்கள் உண்மையான போராளிகள் பலரை மறைக்கிறார்கள் என்பதே என்னுடைய விமர்சனம். பக்தர்களால் வரலாறு திரிபு செய்யப்படுவதென்பது இங்கே சாதாரணம். சந்திரசேகர சரஸ்வதி அவர்களுக்கும் காந்திக்குமான சந்திப்பின் வரலாறு திரிக்கப்பட்டது போல. இரண்டையுமே மறுத்து நானறிந்த உண்மையைச் சொல்கிறேன்.

சந்திசேகர சரஸ்வதி அவர்கள் ஒரு மடத்தாலும் அதைச்சேர்ந்தவர்களாலும் ஊடகத்தில் நிலைநிறுத்தப்படுகிறார். ஆனால் ஈவேரா அவர்களுக்கு ஐம்பதாண்டுக்கும் மேலாக பிரம்மாண்டமான அரசு ஆதரவு உள்ளது. சந்திரசேகர சரஸ்வதி அவர்களைத் தமிழில் எவரும் விமர்சிக்கலாம். பெரியாரியர்கள் ஈவேரா அவர்களை விமர்சனத்துக்கே அப்பாற்பட்டவராக நினைக்கிறார்கள். ஈவேரா அவர்களின் பெயரைச் சொல்வதே அவமதிப்பு என்னும் கெடுபிடிநிலையை உருவாக்குகிறார்கள். அம்மனநிலையில்தான் ஈவேரா பற்றி நான் சொல்லும் சாதாரணமான விமர்சனங்களும் வரலாற்றுத்தகவல்களும் எல்லாம் பெரும் தாக்குதல்களாகக் கொள்ளப்படுகின்றன.

நடுநிலையாளர்கள் சிலர் தவிர எவரும் என்னுடைய தரப்பைப் புரிந்துகொள்ளப்போவதில்லை என நான் அறிவேன். சந்திரசேகர சரஸ்வதி பற்றிய கட்டுரையை ஆசார பிராமணர்கள் அவர்களின் ‘மகாப்பெரியவா’ பற்றிய கடும் விமர்சனமாகவே பார்ப்பார்கள். பெரியாரியர்களுக்கு அது ‘சங்கராச்சாரி’யைப் பாராட்டும் கட்டுரையாகத் தெரியும். என்னுடைய ஈவேரா விமர்சனங்கள் அவரைப் புகழ்ந்து எழுதப்பட்டவை என ஆசாரபிராமணர்கள் நினைக்கிறார்கள். பெரியாரியர்கள் அவற்றை வசைபாடல்களாக எண்ணுகிறார்கள்.

இரண்டுநாட்களுக்கு முன்னால் ஒருவர் ஈவேரா அவர்கள் மணியம்மையை மணந்துகொண்டதைப்பற்றிக் கடுமையான விமர்சனம் முன்வைத்து அதனடிப்படையில் ஈவேரா அவர்களை மதிப்பிட்டார். நான் சொன்னேன் ‘உங்களுக்கு ஒரு சுயநலமில்லாத உக்கிரமான சீர்திருத்தவாதி ஒருவர் தேவை என்றால் நீங்கள் அவரது மிகைநடத்தைகளையும் சேர்த்துத்தான் வாங்க வேண்டும்.’ அவர் உடனே என்னை ஒரு பெரியாரியர் என வசைபாட ஆரம்பித்தார். கொஞ்ச நேரத்தில் எனக்கே சந்தேகமாகிவிட்டது, நான் யார் என்று. இதை எழுதி அதை நானே தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.

ஜெ



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard