அன்புள்ள ஜெ
அண்ணா ஹசாரே பதிவில் வைக்கம்பற்றி எழுதியிருந்தீர்கள்
வைக்கம் போராட்டம் பற்றி சிலர் எழுப்பியிருக்கும் வினாக்களுக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்று ஒரு தரப்பினர் ஃபேஸ்புக்கில் பேசிக்கொண்டிருப்பதைக் காண்கிறேன். உங்கள் பதில் என்ன?
கே
அன்புள்ள கே,
அந்தக்கட்டுரைக்கு உண்மை உட்பட பெரியாரிய இதழ்களில் முப்பதுக்கும் மேற்பட்ட நீளநீளமான ’பதில்’கள் வந்துள்ளன. ஒன்றில்கூட அக்கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் அடிப்படையான கருத்தை மறுக்கும் ஒரு சிறு ஆதாரம்கூட முன்வைக்கப்படவில்லை.
நான் வைக்கம்போராட்டம் பற்றி எழுதிய கட்டுரையில் சொல்லியிருப்பது இதுதான். ‘வைக்கம் போராட்டத்தை ஈவேரா தொடங்கவில்லை, தலைமைதாங்கி வழிநடத்தவில்லை, முடிக்கவில்லை’
அதற்கான விரிவான ஆதாரங்களுடன் வைக்கத்தில் உண்மையில் என்ன நடந்தது என எழுதியிருக்கிறேன். வைக்கம்போராட்டம் யாரால் ஏன் ஆரம்பிக்கப்பட்டது, எவரெவரால் நடத்தப்பட்டது, எப்படி அது முடிந்தது என்பதை உண்மையான வரலாற்றாதாரங்களுடன் சொல்லியிருக்கிறேன்.
ஈவேரா வைக்கம்போராட்டத்தில் பங்குபெற்றார், அவ்வளவுதான். அவர் பங்கெடுக்கும் முன்னரே அது ஆரம்பித்தது. அவர் விலகியபின்னும் நடந்தது. அவர் பங்கேற்றபோதுகூட அதை தலைமை தாங்கி வழிநடத்தியவர்கள் வேறு சரித்திரநாயகர்கள். ஈவேராவின் பங்களிப்பு அதில் மிகச்சிறியதே
ஆனால் ஈவேரா வைக்கம்போராட்டத்தை ‘நடத்தினார்’ [பாடநூல்களில் கூட launched என இருக்கிறது] அங்கே தாழ்த்தப்பட்டவர்கள் நடமாட உரிமையை ‘வாங்கிக்கொடுத்தார்’ என்றெல்லாம் இங்கே எழுதப்பட்டுவருகிறது. இவை அப்பட்டமான வரலாற்றுத்திரிபுகள் என்பதே நான் சொல்வது.
வைக்கம்போராட்டம் நாராயணகுருவின் சீடர்களான காந்தியவாதிகளால் நடத்தப்பட்டது. அது அவர்களால்நாராயணகுருவின் உதவியுடன் முடிக்கப்பட்டது. அது ஒரு தொடக்கம். அதன்பின் கேரளத்திலும் இந்தியாமுழுக்கவும் அப்போராட்டம் காந்தியால் முன்னெடுக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில்.
இந்த கூற்றுக்கு இன்றுவரை எவரும் எந்த தர்க்கபூர்வமான, ஆதாரபூர்வமான மறுப்பையும் முன்வைக்கவில்லை. மாறாக, பக்கம்பக்கமாக வைக்கம்போராட்டம் பற்றி ஈவேரா சொன்னவற்றையும், ஈவேரா பற்றி வேறு யாராவது சொன்னவற்றையும் எடுத்து வைக்கிறார்கள். ஈவேரா வைக்கத்தில் பங்கெடுக்கவில்லை என்று நான் சொன்னதாக வலிந்து காட்டி அதற்குப்பதில் சொல்கிறார்கள்.
வைக்கம்போராட்டத்தை ஈவேரா ‘தொடங்கியதற்கு’ ‘முழுமையாக தலைமைதாங்கி வழிநடத்தியதற்கு’ ‘முடித்துவைத்து உரிமைகளை பெற்றுத் தந்தமைக்கு’ ஒரே ஒரு ஆதாரத்தையாவது வரலாற்றிலிருந்து காட்டுவார்கள் என்றால் பேசலாம். மற்றபடி யார் என்ன திரித்தாலும் கோலத்தில் பாய்ந்தாலும் வசைபாடினாலும் நான் சொன்னவை நிறுவப்பட்ட வரலாற்று உண்மைகளாகவே நீடிக்கும்.
ஜெ