தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வைக்கமும் ஈவேராவும்


Guru

Status: Offline
Posts: 898
Date:
வைக்கமும் ஈவேராவும்
Permalink  
 


 வைக்கமும் ஈவேராவும்

அன்புள்ள ஜெ

அண்ணா ஹசாரே பதிவில் வைக்கம்பற்றி எழுதியிருந்தீர்கள்

வைக்கம் போராட்டம் பற்றி சிலர் எழுப்பியிருக்கும் வினாக்களுக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்று ஒரு தரப்பினர் ஃபேஸ்புக்கில் பேசிக்கொண்டிருப்பதைக் காண்கிறேன். உங்கள் பதில் என்ன?

கே

அன்புள்ள கே,

அந்தக்கட்டுரைக்கு உண்மை உட்பட பெரியாரிய இதழ்களில் முப்பதுக்கும் மேற்பட்ட நீளநீளமான ’பதில்’கள் வந்துள்ளன. ஒன்றில்கூட அக்கட்டுரையில் எழுதப்பட்டிருக்கும் அடிப்படையான கருத்தை மறுக்கும் ஒரு சிறு ஆதாரம்கூட முன்வைக்கப்படவில்லை.

நான் வைக்கம்போராட்டம் பற்றி எழுதிய கட்டுரையில் சொல்லியிருப்பது இதுதான். ‘வைக்கம் போராட்டத்தை ஈவேரா தொடங்கவில்லை, தலைமைதாங்கி வழிநடத்தவில்லை, முடிக்கவில்லை’

அதற்கான விரிவான ஆதாரங்களுடன் வைக்கத்தில் உண்மையில் என்ன நடந்தது என எழுதியிருக்கிறேன். வைக்கம்போராட்டம் யாரால் ஏன் ஆரம்பிக்கப்பட்டது, எவரெவரால் நடத்தப்பட்டது, எப்படி அது முடிந்தது என்பதை உண்மையான வரலாற்றாதாரங்களுடன் சொல்லியிருக்கிறேன்.

ஈவேரா வைக்கம்போராட்டத்தில் பங்குபெற்றார், அவ்வளவுதான். அவர் பங்கெடுக்கும் முன்னரே அது ஆரம்பித்தது. அவர் விலகியபின்னும் நடந்தது. அவர் பங்கேற்றபோதுகூட அதை தலைமை தாங்கி வழிநடத்தியவர்கள் வேறு சரித்திரநாயகர்கள். ஈவேராவின் பங்களிப்பு அதில் மிகச்சிறியதே

ஆனால் ஈவேரா வைக்கம்போராட்டத்தை ‘நடத்தினார்’ [பாடநூல்களில் கூட launched என இருக்கிறது] அங்கே தாழ்த்தப்பட்டவர்கள் நடமாட உரிமையை ‘வாங்கிக்கொடுத்தார்’ என்றெல்லாம் இங்கே எழுதப்பட்டுவருகிறது. இவை அப்பட்டமான வரலாற்றுத்திரிபுகள் என்பதே நான் சொல்வது.

வைக்கம்போராட்டம் நாராயணகுருவின் சீடர்களான காந்தியவாதிகளால் நடத்தப்பட்டது. அது அவர்களால்நாராயணகுருவின் உதவியுடன் முடிக்கப்பட்டது. அது ஒரு தொடக்கம். அதன்பின் கேரளத்திலும் இந்தியாமுழுக்கவும் அப்போராட்டம் காந்தியால் முன்னெடுக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில்.

இந்த கூற்றுக்கு இன்றுவரை எவரும் எந்த தர்க்கபூர்வமான, ஆதாரபூர்வமான மறுப்பையும் முன்வைக்கவில்லை. மாறாக, பக்கம்பக்கமாக வைக்கம்போராட்டம் பற்றி ஈவேரா சொன்னவற்றையும், ஈவேரா பற்றி வேறு யாராவது சொன்னவற்றையும் எடுத்து வைக்கிறார்கள். ஈவேரா வைக்கத்தில் பங்கெடுக்கவில்லை என்று நான் சொன்னதாக வலிந்து காட்டி அதற்குப்பதில் சொல்கிறார்கள்.

வைக்கம்போராட்டத்தை ஈவேரா ‘தொடங்கியதற்கு’ ‘முழுமையாக தலைமைதாங்கி வழிநடத்தியதற்கு’ ‘முடித்துவைத்து உரிமைகளை பெற்றுத் தந்தமைக்கு’ ஒரே ஒரு ஆதாரத்தையாவது வரலாற்றிலிருந்து காட்டுவார்கள் என்றால் பேசலாம். மற்றபடி யார் என்ன திரித்தாலும் கோலத்தில் பாய்ந்தாலும் வசைபாடினாலும் நான் சொன்னவை நிறுவப்பட்ட வரலாற்று உண்மைகளாகவே நீடிக்கும்.

ஜெ



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

ஈவேரா பற்றி சில வினாக்கள்…

 

ஈவேரா பற்றி நான் எழுதிய கட்டுரைகளை ஒட்டி பல கேள்விகள் கடிதங்களாக வந்தன. அவற்றில் முக்கால்வாசிக் கடிதங்கள் வழக்கம்போல என்னை மலையாளியாக, ஆகவே ஓர் அயோக்கியனாக முன்னரே முடிவுசெய்துவிட்டு விவாதத்துக்கு அழைப்பவை. அவற்றை வழக்கம்போல நானும் முழுமையாகவே ஒதுக்கிவிடுகிறேன். என்னை எவர் வேண்டுமென்றாலும் அயோக்கியன் என்று தாரளமாக எண்ணவோ எழுதவோ செய்யலாம்.

நான் நம்பும் வாசகன், என் புனைவுகளையும் கட்டுரைகளையும் வாசித்தால் புரிந்துகொள்ளக்கூடியவன், இந்த விவாதங்களை கவனித்துக்கொண்டிருக்கிறான் என்றும் விவாதங்களின் தரப்புகளில் உள்ள தரத்தை மதிப்பிட்டுக்கொண்டிருக்கிறான் என்றும் நம்புகிறேன். அவனிடம் மட்டுமே நான் உரையாட முடியும். விரல் விட்டு எண்ணத்தக்க சிலராக அவர்கள் இருக்கலாம். அவர்கள்போதும் என்பது நான் இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னரே எடுத்துவிட்ட முடிவு.

என்.கெ.சிவக்குமார், சரவணன் முத்துக்குமரன் ஆகியோர் நான் ஈவேரா என்று எழுதுவது ஏன் என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு ஒரு சிறு பின்னணி உண்டு. பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் பிழையாகவே ஒரு கட்டுரையில் ஈவேரா என்று எழுதியிருந்தேன். என்ன காரணம் என்றால் தமிழில் திருப்பதியின் பெயர் வேங்கடம்தான். வெங்கடம் அல்ல. அந்த அடிப்படையில்தான் கி.வேங்கடசுப்ரமணியன் என்றும் ஆ.இரா.வேங்கடாசலபதி என்றும் எழுதுகிறார்கள். ஈவேரா அவரது பெயரை அப்படித்தான் எழுதுவார் என்று ஓர் அனிச்சையான நம்பிக்கையால் அப்படி எழுதினேன்.

ஆனால் எனக்கு ஆக்ரோஷமான நாலைந்து கடிதங்கள் வந்தன. ஈவேரா அவர்களின் தந்தைபெயர் வெங்கிட்ட நாயக்கர் என்றும் ஆகவே அவரது பெயரை ஈவெரா என்றுதான் எழுதவேண்டும் என்றும் அவர்கள் சொன்னார்கள். ஆனால் என் பெயரை செயமோகன் என்று எழுதியிருந்தனர். அத்தனை பெயரையும் தமிழ்ப்படுத்தி எழுதக்கூடியவர்கள் அவர்கள். சுந்தர இராமசாமி என்று எழுதக்கூடியவர்கள். இன்றைக்கும் தமிழ் விக்கிபீடியாவில் இந்தக்கொள்கை உடையவர்கள்தான் நிறைந்திருக்கிறார்கள்.

நான் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். ஒரு பெயரை அப்பெயருக்குரியவர் எப்படி எழுதுகிறாரோ அப்படி எழுதவேண்டும் என்பதுதான் மரபு. உலகளாவிய ஒரு நாகரீகம் அது. ஆனால் நீங்கள் பிறர் பெயரை உங்கள் கொள்கைப்படி மாற்றி எழுதுகிறீர்கள். அதற்கு மொழிசார்ந்த நியாயங்களைச் சொல்கிறீர்கள். அந்த நியாயம் உங்கள் தலைவருக்குச் செல்லுபடியாகாதா என்ன? அவரது பெயரை ஏன் தமிழ்முறைப்படி எழுதக்கூடாது? ஈ.வே.இராமசாமி என்றுதானே அவரை எழுதவேண்டும்? ஏன் தெலுங்கு உச்சரிப்பைத்தான் எழுதவேண்டும் என்கிறீர்கள்?

’சரி, கொள்கையளவில் ஒரு பொதுமுடிவுக்கு வருவோம். பெயர்களை மாற்ற பிறிதொருவருக்கு உரிமை இல்லை. தன் பெயரை ஒருவர் எப்படி எழுத விரும்பினாரோ அப்படித்தான் அனைவரும் எழுதவேண்டும். ஏனென்றால் அது ஓர் ஆவணம், ஓர் அடையாளம், அவ்வளவுதான். அது உங்களுக்கும் எனக்கும் பொருந்தும் விதி, ஆனால் ஈவேரா அவர்களுக்கு விதிவிலக்கு என்றால் அதை நான் ஏற்கமாட்டேன்’ என அவர்களுக்கு எழுதினேன். அதற்கு 16 பக்க வசைதான் பதிலாக வந்தது. நான் பிடிவாதமாக ஈவேரா என்று –தமிழ் மரபுப்படி – எழுத ஆரம்பித்தேன். அப்படியே கை பழகிவிட்டது.

இப்போதுகூட ஈவெரா என்று தெலுங்கு உச்சரிப்பையே எழுதத்தயார். பிற பெயர்களில் கைவைப்பது பிழை என இதைச் சுட்டிக்காட்டுபவர்கள் கொள்கையடிப்படையில் ஒத்துக்கொள்ளட்டும்.பிற தெலுங்கு, இந்தி பெயர்களையும் அவர்களின் மொழிமரபுப்படியே எழுதட்டும்.

*

ஈவேரா பற்றிய என்னுடைய இருகட்டுரைகளின் ‘முரண்பாடுகளை’ கார்த்திக் குமார், முனைவர் நாகராஜன், பிரபா ஆகியோர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

சமீபத்தில் சுப.வீரபாண்டியன் அவர்கள் நான் இன்றையகாந்தி நூலில் காந்தியை அவமதித்திருப்பதாக ஒரு கட்டுரை எழுதியிருந்தார். காந்தியை கீழ்த்தரமாக வசைபாடவே எழுதப்பட்ட நூல் அது என்று அவர் வாதாடியிருந்தார். என்னிடம் பேசிய சிலர்கூட ‘காந்திய கிழி கிழின்னு கிழிச்சிருக்கீங்க சார்…’ என்று சொன்னார்கள்.

சுபவீயின் கட்டுரைக்கு ”டியர் சுபவீ, ஜெயமோகன் எவரையும் உயர்த்தி பேசியோ, எழுதியோ பார்க்க முடியாது. எதையும் குரை கானும் குருக்கு புத்திகாரர். தர்போது சுன்ட்ர ராமசாமியை உயர்த்திக் கொன்டிருக்கிரார். எப்போது தரையில் வீசி எரிவாரோ? தெரியவில்லை.போகட்டும் விடுங்கல். உலகம் என்பதில் பன்ட்ரிகலும் அடக்கம்தானெ.” என்று அற்புதமான எதிர்வினையும் இருந்தது

காந்தியின் பாலியல் சோதனைகள், அவரது காமம்சார்ந்த நம்பிக்கைகளை நான் விமர்சனம்செய்திருந்ததைத்தான் சொல்கிறார்கள். அந்நூலில் பல்நூறு பக்கங்களுக்கு காந்தியை ஆதரித்திருந்ததை அவர்கள் கவனிக்கவேயில்லை. இது நம்முடைய ஒரு மனப்பழக்கம். ஒரு கட்டுரை அல்லது நூல் ஆதரித்து எழுதப்பட்டிருக்கிறதா எதிர்த்து எழுதப்பட்டிருக்கிறதா என்பதுதான் அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரே விஷயம்.

என்னுடைய எல்லா கட்டுரையைப்பற்றியும் இந்தச்சிக்கல் வந்துகொண்டே இருக்கிறது. நான் சுஜாதாவை ஆதரித்து எழுதியிருக்கிறேனா இல்லை எதிர்த்தா என்று வருடக்கணக்காக விவாதிக்கிறார்கள். வணிக எழுத்து தேவை என்று சொல்கிறேனா இல்லையா என்று திரும்பத்திரும்பக் கேட்கிறார்கள். சுந்தர ராமசாமி நல்ல எழுத்தாளர் என்று சொல்கிறேனா இல்லையா என்று குழம்பிக்கொண்டே இருக்கிறார்கள். ’முரண்பாடுகளை’ திரும்பத்திரும்ப கண்டுபிடிக்கிறார்கள். திரும்பத்திரும்ப நான் விளக்கிக்கொண்டே இருக்கிறேன்.

என் கட்டுரைகளை நான் என்னுடைய ஆய்வுநோக்கில் அமைக்க முயல்கிறேன். எப்போதுமே நான் சொல்லும் முரணியக்க அணுகுமுறைதான் அது. ஒவ்வொன்றிலும் நேர்நிலை கூறுகளையும் எதிர்மறைக் கூறுகளையும் விரிவாகவே விவாதிக்கிறேன். ஒரு நூல்மதிப்புரையில்கூட அந்தச் சமநிலை வரவேண்டுமென நான் எதிர்பார்க்கிறேன்.

பொதுவாக ஒற்றைப்படையான கட்டுரைகளை, மேடையுரைகளை எதிர்கொண்டு பழகிய பொதுவாசகர்கள் எப்போதுமே குழம்பித்தவிக்கிறார்கள். சுந்தர ராமசாமி ஜே.ஜே.சிலகுறிப்புகளில் இதைச் சொல்லியிருக்கிறார். ‘பொதுமக்களுக்கு எப்போதுமே தேவையானவை ஒற்றைப்படையான கருத்துக்கள். பிரச்சினைகள் ஒன்றுடன் ஒன்று சிக்கலாகப் பிணைந்திருப்பதையோ வேர்கள் பலவாறாக கிளைவிட்டிருப்பதையோ சொன்னால் அவர்கள் பொறுமையிழப்பார்கள். ஒன்றைச்சொல்லு என்று கூச்சலிடுவார்கள்’ இதுதான் நிகழ்கிறது இங்கேயும்.

காந்தியைப்பற்றிய என் நூலில் காந்தியும் காமமும் என்ற கட்டுரை முழுக்கமுழுக்க அவரை கடுமையாக விமர்சிக்கிறது. அது ஒருபக்கம். காந்தியின் அகிம்சை அரசியலை, சூழியல்உணர்வை நான் பாராட்டி மதிப்பிடுவது இன்னொரு பக்கம். இரண்டும் சமன்செய்யக்கூடிய ஒரு புள்ளியில் இருந்துதான் என் கருத்தை உருவாக்குகிறேன். இதையே ஈவேராவுக்கும் சொல்வேன்.

அந்தமையப்புள்ளி எந்தப்பக்கமாகச் சாய்ந்திருக்கிறது என்பதே என் மதிப்பீட்டின் இயல்பை தீர்மானிக்கிறது. காந்தியை நான் சாதகமாக மதிப்பிடுகிறேன் என்றால் அது அவரது எதிர்மறை அம்சங்களையும் கருத்தில்கொண்டுதான். ஈவேராவை பெரும்பாலும் எதிர்மறையாக மதிப்பிடுகிறேன் என்றால் அது அவரது பங்களிப்பை பெருமதிப்புடன் கணக்கிட்டபடித்தான்.

நான் எப்படி ஈவேராவை அணுகுகிறேன்?

 நான் என் குருவாக எண்ணும் ‘நித்ய சைதன்ய யதி’ நாராயணகுருவின் வழி வந்தவர். நித்யா துறவு பூண்டபோது அன்று திருச்சியில் இருந்த ஈவேராவைச் சென்றுகண்டு ஆசிபெற்றுத்தான் துறவை மேற்கொண்டார். ஆகவே ஈவேரா என் குருவுக்கு குரு

இந்துமதத்தின் நசிவுப்போக்குகளுக்கு எதிரான போராட்டக்காரராகவே நான் ஈவேராவை கருதுகிறேன். மூடநம்பிக்கைகள், புரோகித ஆதிக்கம் ஆகியவற்றுக்கு எதிரான அவரது போராட்டம் எனக்கு முற்றிலும் உடன்பாடானதே. நான் கடவுள் நம்பிக்கை கொண்டவனல்ல. மதச்சடங்குகள் எதையுமே செய்பவனுமல்ல. முற்றிலும் புரோகித ஆதிக்கத்துக்கு எதிரானவன். .

….ஆனால் ஈவேரா மீது எனக்கு சில விமரிசனங்கள் உண்டு. அவர் இருந்திருந்தால் ‘நான் நித்யாவின் மாணவன்’ என்றுசொல்லி அவரை நேரில் சந்தித்து அவற்றைச் சொல்லியிருப்பேன்.”வாங்க தம்பி ” என எனக்கு ஒரு இருக்கை கொடுத்து அவற்றை அவர் கேட்டிருப்பார். இன்று ஈவேரா பற்றி கூச்சலிடுபவர்களை விடவே நான் அவரை அறிந்தவன், ஒருவகையில் நெருக்கமானவன். [பெரியார் ஒரு கடிதம் ]

ஈவேரா பற்றி நான் எழுதிய முதல் குறிப்பிலேயே இதை தெளிவுற, திட்டவட்டமாகச் சொல்லிவிட்டே என்னுடைய அத்தனை விவாதங்களயும் நான் ஆரம்பித்திருக்கிறேன். திரும்பத்திரும்ப எல்லா விவாதங்களிலும் இதைக் கோடிகாட்டிவிட்டே மேலே பேசியிருக்கிறேன்.

ஈவேரா அவர்களின் தனியாளுமை பற்றி எனக்குப் பெருமதிப்பு உண்டு. அவரது செயல்பாடுகளில் காந்தியவாதிகளுக்கு நிகரான அர்ப்பணிப்பு எப்போதும் இருந்துள்ளது. நான் எப்போதும் அவரை காந்தி அல்லாத இன்னொருவரிடம் ஒப்பிட்டதில்லை. [ஈவேராவும் சந்திரசேகரரும் ]

ஈவேரா அவர்களின் தனிப்பட்ட ஆளுமையை எப்போதுமே மதிப்புடன் மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன். அவரது தனிப்பட்ட நேர்மை, அவரது சீர்திருத்த நோக்கம், அவரது பங்களிப்பு ஆகியவற்றை இந்த தளத்திலேயே மீண்டும் மீண்டும் பதிவுசெய்தபின்னரே மேலே பேசுகிறேன். அனேமாக அத்தனை கட்டுரைகளிலும். இந்தத்தளத்தில் இருபதுக்கும் மேல் கட்டுரைகளில் அக்குறிப்பை நீங்கள் காணலாம்.

அதற்குமேல் அவர் மீதான என் விமர்சனங்களை முன்வைக்கிறேன். அவ்விமர்சனங்கள் பொதுவாக ஐந்து அடிப்படைகள் சார்ந்தவை.

ஈவேரா அவர்கள் பகுத்தறிவை முன்வைத்தவர். ஆனால் அவரது வரலாற்று அணுகுமுறை மிகமிக தட்டையானது, ஒற்றைப்படையானது. ஆகவே நுட்பமான பகுப்பாய்வுகொண்டு மட்டுமே புரிந்துகொள்ளப்படவேண்டிய பல விஷயங்களை எளிமைப்படுத்தவே அவரால் முடிந்தது. சாதி போன்ற சமூக விஷயங்களிலும் இலக்கியம் போன்ற பண்பாட்டு விஷயங்களிலும் அவரது புரிதல்கள் பாமரத்தனமான நம்பிக்கைளாகவே உள்ளன

ஈவேரா அவர்கள் பெரும்பாலான கருத்துக்களை கோபமும் வெறுப்பும் கொண்டு வசைகளாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தன் சாதிய ஆழ்மனத்தை பரிசீலனைசெய்துகொள்வதை அந்த வசைகள் தடுத்துவிட்டன என்றே நினைக்கிறேன்.

அவரது ஒட்டுமொத்த இயக்கத்திலும் சில மக்கள்மீது முன்வைத்த காழ்ப்பு ஒரு சிந்தனையாளனுக்குரியதல்ல. அத்தகைய விஷங்கள் நீடித்த அளவில் அழிவையே உருவாக்கும்

எல்லா அரசியல்வாதிகளையும் போல அவருக்கும் ஓர் அரசியல் அடித்தளம் இருந்தது. அந்த பிற்படுத்தப்பட்டோர் சாதியரசியலின் எல்லைக்குள்தான் அவர் செயல்பட்டார்

அவரது இந்த இயல்புகளை அவருக்குப்பின் வந்தவர்கள் அரசியல் அதிகாரத்திற்காகப் பயன்படுத்திக்கொண்டார்கள். திராவிட இயக்கம் ஒரு பரப்பியம் சார்ந்த இயக்கமாக மாற அவரது அடிப்படைக்கொள்கைகளின் இயல்பே காரணம்.இதை ஏற்கனவே திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன், கல்வாழைநாத்திகம் ஆகிய கட்டுரைகளில் மிக விரிவாகவே சொல்லியிருக்கிறேன்.

பரப்பியம் சார்ந்து செயல்பட்ட திராவிட இயக்கத்தின் சாதனைகளை இவ்வாறு சொல்கிறேன்

திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பங்களிப்பு என்ன? அவற்றை சுருக்கமாக வரையறுத்து இவ்வாறு சொல்லலாம்.

1. திராவிட இயக்கம் தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஒருங்கிணைந்து அரசியல் அதிகாரத்தை அடைவதற்கு ஒரு ஊடகமாக செயல்பட்டது.பிற்படுத்தப்பட்டமக்கள் அரசியலதிகாரம் நோக்கிச் சென்றது என்பது இந்தியாவில் எங்கும் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி. அந்த பயணத்திற்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு இயக்கம் பங்காற்றியிருக்கிறது. கேரளத்தி இடதுசாரி இயக்கம். கர்நாடகத்தில் சோஷலிச இயக்கம். தமிழ்நாட்டில் அது திராவிட இயக்கத்தால் நடந்தது. அந்த அதிகார மாற்றம் என்பது இயல்பான இன்றியமையாத ஒரு ஜனநாயக நிகழ்வே.

2. ஒரு பரப்பிய இயக்கம் என்ற முறையில் திராவிட இயக்கம் கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்தது. ஆகவே அது எடுத்துப்பேசிய சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களும் தமிழ் முதன்மைக் கருத்துக்களும் தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் அறிமுகமாயின. அறிவியக்கங்களின் கொள்கைகள் மக்களுக்கு சென்றுசேர மிகவும் தாமதமாகும். பரப்பிய இயக்கம் சில வருடங்களிலேயே அவற்றை நிகழ்த்தும். பெரும்பாலான தமிழக மக்களின் சிந்தனையில் சாதி எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பழைமைவாத எதிர்ப்பு போன்ற முற்போக்குக் கருத்துக்கள் திராவிட இயக்கம் மூலமே சென்று சேர்ந்தன. [திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?]

திராவிட இயக்கத்தின் சாதனைகளையும் தோல்விகளையும் ஆராயும் கட்டுரை அது. திராவிட இயக்கம் ஒரு பரப்பிய இயக்கம் என்பதனாலேயே அது கொள்கைகளை அதிகாரத்துக்கான கோஷங்களாக மட்டுமே முன்வைத்தது. ஆகவே இங்கே அக்கொள்கைகள் எந்த சமூக மாற்றத்தையும் உருவாக்கவில்லை என்று அக்கட்டுரையில் விளக்குகிறேன்

நீண்ட கட்டுரைகளில் இந்த இரு பக்கங்களையும் மிகத் துல்லியமாக விளக்கி பலமுறை எழுதியிருக்கிறேன். முரண்பாடுகள் அல்ல இவை, உண்மையின் இரு பக்கங்கள் என இக்கட்டுரைகளில் எவற்றையேனும் வாசித்த எவரும் உணரமுடியும். அப்படி உணரமுடியாதவர்களுக்காகவே ஒரு தலைப்பையும் வைத்திருக்கிறேன். ’அறுவைசிகிழ்ச்சைக்கு கடப்பாரை- ஈவேராவின் அணுகுமுறை’ நோய் இருப்பது உண்மை, அவர் சிகிழ்ச்சை செய்ய முயன்றது உண்மை, அவரது அக்கறை நேர்மையானது, அவரது கருவி அதற்கானதல்ல. அது அழிவை உருவாக்கியது.

சமீபத்தில் எழுதிய இக்கட்டுரையிலும் அதையே சொல்லியிருக்கிறேன். ஈவேரா அவர்கள் தமிழ்நாட்டில் உருவாக்க எண்ணிய விழிப்புணர்ச்சியைத்தான் அதில் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அந்த முயற்சி முற்றிலும் தோல்விஅடைந்தது என்ற என் எண்ணத்தையே மீண்டும் பதிவு செய்திருக்கிறேன். அதற்கான காரணங்களை நாம் தேடவேண்டுமென்றே மீண்டும் கோரியிருக்கிறேன்.

அதற்கு வேறெங்கும் ஆதாரம் தேடவேண்டியதில்லை, ஈவேரா ஆதரவாளர்கள் விவாதங்களை எதிர்கொள்ளும் விதத்தையே கவனித்தால்போதும். ஈவேரா எழுதியவற்றை வாசித்ததில்லை. வாழ்நாளெல்லாம் ஈவேரா எதற்கு எதிராகப் போராடினாரோ அந்த மனநிலை, கண்மூடித்தனமான உணர்ச்சிவேகம், மட்டுமே அவர்களில் வெளிப்பட்டது.

நீங்கள் சுட்டிக்காட்டிய கட்டுரைகளிடையே எந்த முரண்பாடுமில்லை என்பதை கூர்ந்து வாசித்துப்பார்த்தால் உணரமுடியும். ஈவேரா அவர்களை மாபெரும் சிந்தனையாளர் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்லும்போது அக்கூற்றை மறுத்து எழுதப்பட்ட கட்டுரை ‘அறுவைசிகிழ்ச்சைக்குக் கடப்பாரை’. அதில் தெளிவாகவே தமிழ்ச்சிந்தனைக்கு ஈவேரா அவர்களின் பங்களிப்பு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம் ஈவேரா ஆதரவாளர்கள் கண்மூடித்தனமான பக்திக்கொந்தளிப்பை மட்டும் வெளிப்படுத்தியபோது அது ஈவேரா அவர்கள் சொன்னவற்றுக்கு எவ்வளவு எதிரானது என்று சுட்டிக்காட்ட எழுத்துரு விவாதங்கள் எழுதப்பட்டது. அதில் ஈவேராவின் அணுகுமுறையின் குறைபாடும் சுட்டப்பட்டுள்ளது.

முதல் கட்டுரையில் உள்ள விமர்சனத்தையும் இரண்டாம்கட்டுரையில் உள்ள மதிப்பீட்டையும் வெட்டி ஒட்டி அருகருகே வைத்து அலம்புவதெல்லாம் எப்போதுமே இங்கே நடந்துகொண்டிருப்பதுதான். ஈவேரா ஆதரவாளர்களிடம் நாம் காணும் பிரச்சினையே இதுதான். அவர்களால் பகுத்தறிவுடன் முழுமையாகச் சிந்திக்கமுடியாது.இதையே இன்னொரு சான்றாக முன்வைக்கிறேன்

கடைசியாக மீண்டும் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். ஃபேஸ்புக்கிலும் டிவிட்டர்களிலும் ஒற்றைவரி அசடுகள் சொல்வனவற்றைக்கொண்டு இத்தகைய எழுத்துக்களை மதிப்பிடாதீர்கள். ஒரு சந்தேகத்தை எழுதுவதற்கு முன் குறைந்தபட்சம் கூகிள் செய்தாவது பாருங்கள். உதாரணமாக பெரியார்- கடிதம் என்ற கட்டுரையில் நீங்கள் இப்போது கேட்கும் இந்தவினாவுக்கான துல்லியமான பதில் உள்ளது. இந்துத்துவா தரப்பில் இருந்து ஈவேராவைப்பற்றி எழுதப்பட்டவற்றுக்கு மறுப்பாக எழுதப்பட்ட கட்டுரை அது. இருபக்கத்தையும் சுருக்கமாக ஆணித்தரமாகச் சொல்லக்கூடியது.

உங்கள் வினாவுக்கு புதியதாக நான் ஏதும் சொல்லவேண்டியதில்லை. நான் ஏற்கனவே எழுதியவற்றை வாசிக்கும்படி மட்டுமே கோருகிறேன். நீங்கள் வாசிக்க விரும்பினால் அக்கட்டுரைகளுக்கு மீண்டும் சுட்டி தருகிறேன்



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard