வைக்கம் போராட்டம் என்ற வரலாற்று நிகழ்ச்சியின் நுட்பமான தகவல்களுக்குள் செல்ல இது தருணமல்ல. கேரளத்தில் அதைப்பற்றி ஏராளமாக எழுதப்பட்டிருக்கிறது. நினைவுகள், பதிவுகள். காங்கிரஸ் தரப்பிலும் நாராயண இயக்கங்களின் தரப்பிலும். வரலாற்றுக் கோணங்களில் மாறுபாடுகள் பல உள்ளன. சில தகவல்கள் கூட மாறுபடுகின்றன. ஆனால் தமிழகத்தில் ஈவேரா அவர்களால் முன்வைக்கப்பட்டதுபோல காந்தி அந்தப்போராட்டத்தை காட்டிக்கொடுத்தார், கைவிட்டார் என்று எவராலும் எழுதப்பட்டதில்லை. காந்தியின் போக்கை முழுமையாக மறுப்பவர்கள் கூட அதைச் சொன்னதில்லை. இந்த கோணம் ஈவேராவால் உருவாக்கப்பட்டு திராவிடர் கழகத்தால் தமிழகத்திற்குள் நிலைநாட்டப்பட்டிருக்கிறது அவ்வளவுதான்.
வைக்கம்போராட்டத்தில் பல்வேறு மாற்றுத்தரப்புகள் உருவாகி வந்தன. முதல் முரண்பாடு நாராயணகுருவுக்கும் டி.கெ.மாதவனுக்கும் இடையேயானதுதான். நாராயணகுரு இது ஒரு வீண்வேலை என்றே என்ணினார். மதியாத இடத்துக்கு ஏன் செல்லவேண்டும், ஈழவர்கள் தங்கள் ஆலயங்களை தாங்களே அமைத்தால் போதுமே என்பதே அவரது தரப்பு. இன்று புகழ்பெற்றுள்ள பல ஆலயங்களை அவர் உருவாக்கி வந்த காலகட்டம் அது. சமூக மோதல்கள் உருவாகி ஈழவர்கள் கல்விக்குள் வருவது தடைபடக்கூடாது என்று குரு நினைத்தார்.
ஈழவ தலைவர்களிடையேகூட கருத்துமுரண்பாடுகள் இருந்தன. அன்று செல்வாக்குமிக்க இதழாளராக இருந்த சி.வி.குஞ்šராமன் ஈழவர் மதம் மாறவேண்டும் என்றும் இந்துமதத்தை உதறவேண்டும் என்றும் வாதிட்டார். சகோதரன் அய்யப்பன் ஆலயமே தேவையில்லை என்ற நிலைபாடு கொண்டிருந்தார். பல ஈழவ செல்வந்தர்கள் இந்த போராட்டத்தை அஞ்சி ஈடுபாடு காட்ட மறுத்தார்கள்.
போராட்டம் இரண்டாம் கட்டத்தை அடைந்தபோது பலவிதமான சிக்கல்கள் உருவாயின. ஈழவர்கள் நடுவே எழுந்த கோபத்தைப் பயன்படுத்திக்கொண்டு அவர்கலை ஒரு ஒட்டுமொத்த மதமாற்றத்தை நோக்கி கொண்டு செல்லலாம் என கிறித்தவ சபைகள் முயன்று பேரங்களில் ஈடுபட்டன. விவகாரம் மதமோதலை நோக்கிச் சென்றது. ஆலயப்பிரவேசம் குறித்து சாதகமான எண்ணம் கொண்டிருந்தவர்கள் கூட மாற்றுமதத்தவர் உள்ளே வர ஆரம்பித்தபோது எதிர்நிலை எடுக்க ஆரம்பித்தார்கள்
ஆகவே காந்தி இந்தப்பிரச்சினை முழுக்க முழுக்க இந்துமதத்துக்குள் உள்ள பிரச்சினை என்றும் அன்னிய மதத்தவர் இதில் தலையிடவேண்டாம் என்றும் சொன்னார். மேலும் இது கேரளத்திற்குரிய பிரச்சினை, ஆகவே இதில் பிற பகுதியைச் சேர்ந்தவர்கள் ஈடுபடவேண்டாம் என்றும் விலக்கினார். ஆனால் இதை போராட்டத்திற்கு வந்த கிறித்தவர்களும் சீக்கியர்களும் ஏற்கவில்லை. ஈவேரா அவர்கள் அந்த தரப்புகளுடன் சேர்ந்துகொண்டு காந்தியின் கோரிக்கையை நிராகரித்தார் என்று அவரே எழுதியவற்றில் இருந்து தெரிகிறது.
ஆரம்பம் முதலே காந்தி இந்தப்பிரச்சினையை மிக எச்சரிக்கையாக கையாண்டார். சுதந்திரப்போராட்டத்தில் இந்தியா ஒற்றுமையாக திரண்டு ஒரே குரலாகப் பேசவேண்டுமென காந்தி எண்ணினார். சாதிய உரிமைப்போராட்டங்கள் சாதிகள் நடுவே கசப்பாகவும் மோதலாகவும் மாறினால் ஏற்கனவே இந்துமுஸ்லீம் பிரிவினையை வெற்றிகரமாகப் பயன்படுத்திக்கொண்ட பிரிட்டிஷார் அதையும் சாதகமாக்கிக்கொள்வார்கள் என அவர் எண்ணினார்.
காந்தியின் நோக்கம் என்ன என்று வரலாற்றை ஒட்டுமொத்தமாக இன்று பார்க்கும் வரலாற்றாசிரியர்கள் தெளிவாகவே எழுதியிருக்கிறார்கள். உயர்சாதிக்கு எதிராக தாழ்ந்த சாதியினரைத் தூண்டிவிடுவதாக போராட்டம் ஆகிவிடலாகாது என அவர் எண்ணினார். அவரது திட்டம் உயர்சாதியினர் உள்ளிட்ட அனைத்து இந்துக்களிலும் சாதிக்கொடுமைகள் மற்றும் தீண்டாமை குறித்த விழிப்பை உருவாக்குவதே. அதற்காக ஒரு பிரச்சாரக்கருவாகவே அவர் வைக்கத்தை அணுகினார். அங்கே செய்து பார்த்ததை அவர் இந்தியா முழுக்க பின்னர் விரிவுபடுத்தினார்.
ஆகவேதான் வைக்கத்தில் அது மாற்றுமதத்தவர் உள்ளே வரும் நிகழ்ச்சியாக ஆனபோது அதை அவர் விலக்கினார். இந்திய அளவில் அது என்ன விளைவை உருவாக்குமென அவர் அறிந்திருந்தார். ஓர் ஆலயப்பிரச்சினை அங்குள்ளவர்களாலேயே நடத்தப்படவேண்டும் என அவர் வலியுறுத்தியமைக்குக் காரணம் அத்தனை ஆலயங்களிலும் அந்த விளைவுகளை விரிவுபடுத்துவதற்கான அவரது திட்டமே. வைக்கம் போராட்டத்தை எவரும் தங்களுக்குச் சாதகமாகக் கடத்திக் கொண்டு செல்ல காந்தி விரும்பவில்லை.
காந்தியின் திட்டத்தை புரிந்துகொண்டிருந்தால் ஈவேரா அவர்கள் ஈரோட்டில் ஓர் ஆலயப்பிரவேசத்தை ஆரம்பித்து போராடியிருப்பார். ஆனால் தமிழகத்தில் எங்கும் அவர் அதைச் செய்யவில்லை. பிற்பாடும் அதில் ஆர்வம் காட்டவில்லை. ஈவேரா அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு அரசதிகாரம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்ட, அவரது ஆதரவுத்தளமான, தமிழ்நாட்டு பிற்படுத்தப்பட்ட சாதியினர் வைத்திருந்த ஆலயங்களில் தலித்துக்கள் நுழைவதற்கான போராட்டம் வைக்கம் போராட்டம் முடிந்து 84 வருடங்கள் கழித்து இப்போது தலித்துக்கள் அமைப்பாக திரண்ட பின்னர்தான் நடக்கிறது என்பதை நாம் மறக்கக் கூடாது.
வைக்கம் போராட்டத்தில் காந்தி சந்தித்த மிகப்பெரிய எதிர்ப்பு இந்து மடாதிபதிகளிடமிருந்து வந்தது. குறிப்பாக காஞ்சி மடாதிபதி சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் காந்தியை பாலகாட்டுக்குச் சென்று சந்தித்து ஆலயப்பிரவேசம் இந்து தர்மத்தை அழிக்கும் என்று வாதாடினார். சுருதிகளில் இருந்து அதற்கு ஆதாரம் அளிக்கும்படி காந்தி கேட்டுக்கொண்டபோது ஸ்மிருதிகளும் மாற்றக்கூடாதவையே என்று அவர் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. உடுப்பி, சிருங்கேரி மடங்களில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் உருவாகி வந்தன.
வைக்கம் போராட்டத்தில் அக்காலத்திலேயே பலர் உள்ளே புகுந்து பல வகையான திரிபுகளை உருவாக்கினார்கள். அது எந்த போராட்டத்திலும் நடக்கக்கூடியதே. அதில் ஒன்று நாராயணகுருவுக்கும் காந்திக்குமான முரண்பாடு. உண்மையில் அப்படி ஒரு முரண்பாடே இல்லை, அது தவறாக உருவாக்கப்பட்டது. நாராயணகுரு ஓர் அமைப்புக்கூட்ட உரையாடலில் ‘போராட்டம் நல்லதுதான். ஆனால் ஒருபோதும் பின்வாங்கிவிடக்கூடாது’ என்று சொன்னார். ‘ தடுக்கப்பட்ட இடத்திற்கு நாம் செல்லாமலிருந்திருக்கலாம், ஆனால் சென்றுவிட்டதனால் உத்தேசித்த விஷயத்தை நிகழ்த்திவிட்டே வரவேண்டும். இனி ஆலயப்பிரவேசம் இல்லாமல் இந்த சமர் நின்றுவிடகூடாது’ என்றார்
இது நாராயணகுரு தடைகளை மீறி கோயிலுக்குள் செல்ல தொண்டர்களை தூண்டுகிறார் என்று செய்தியாக வெளியிடப்பட்டது. இச்செய்தியை காந்திக்கு அனுப்பிய உயர்சாதியைச்சேர்ந்த ஒரு காந்தியவாதி ‘இது வன்முறை, ஆகவே போராட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும்’ என்று காந்தியிடம் கேட்டுக்கொண்டார். காந்தி எழுதிய பகிரங்கமான பதிலில் தடைகளை தாண்டிக்குதித்து உள்ளே போக நாராயணகுரு சொன்னார் என்றால் அது தவறு, அது வன்முறையேதான் என்று சொன்னார். ‘இந்தச் செய்தியை எனக்களித்த நண்பர் போராட்டத்தை திரும்பப்பெற நான் உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால் முன்னிலும் திடமாக தொடர்ந்து போராடும்படித்தான் நான் சொல்வேன்’ என்று எழுதினார் காந்தி
ஆனால் விரைவிலேயே அந்த தவறான புரிதல்கள் களையப்பட்டன. பிற்போக்குவாதிகளின் திரிபு நல்விளைவை உருவாக்கியது. நாராயணகுரு நேரடியாகவே போராட்டத்திற்கு வந்தார். தனக்குச் சொந்தமான வெல்லூர் மடத்தை சத்தியாக்கிரகிகளுக்கு அலுவலகமாக அளித்தார். அன்றைய காலத்தில் பெரும் தொகையான ஆயிரம் ரூபாயை போராட்டநிதியாக கொடுத்தார். சிவகிரி ஆசிரமத்தில் நன்கொடைப்பெட்டி ஒன்றையும் திறந்தார். போராட்டம் உச்சமடைந்தது. போராட்டத்திற்கு தன் துறவிகளான இருசீடர்களை குரு அனுப்பினார். அவர்களில் சுவாமி சத்யவிரதன் பின்னர் கேரளத்தில் பெரும்புகழ்பெற்றார்.
செப்டெம்பர் 27 அன்று நாராயணகுரு அவரே வைக்கத்திற்கு வந்தார். அவருக்கு காங்கிரஸ் சார்பில் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டு காந்தி கொடுத்தனுப்பிய காந்தியே தன்கையால் நெய்த துண்டு அளிக்கப்பட்டது. அப்போது காந்தி உண்ணாவிரதம் இருந்துவந்தமையால் அவரது உடல்நலனுக்காக நடத்தப்பட்ட மாபெரும் பொதுகூட்டத்தில் நாராயணகுரு மௌனமாக பிரார்த்தனை செய்தார். குரு பொது இடத்தில் பிரார்த்தனை செய்த ஒரே நிகழ்ச்சி அதுவே.
காந்தியின் அணுகுமுறை உயர்சாதியினரின் மனசாட்சியுடன் உரையாடுவதாக இருந்தது. மனசாட்சி உள்ள உயர்சாதியினர் வைக்கம் போராட்டத்தில் ஆதரவு தெரிவித்து போராட முன்வரவேண்டும் என அவர் அறைகூவல் விடுத்தார். விளைவாக நாயர் சர்வீஸ் சொசைட்டியின் நிறுவனரும் பழமைவாதியுமான மன்னத்து பத்மநாபன் போராட முன்வந்தார். 1924 நவம்பர் ஒன்றாம் தேதி மன்னத்து பத்மநாபன் தலைமையில் 500 பேர்கொண்ட ஊர்வலம் திருவனந்தபுரத்திற்கு கிளம்பியது. செல்லும் வழிதோறும் பெருகிய அப்பயணம் மாபெரும் ஊர்வலமாக சிவகிரியை அடைந்து நாராயணகுருவிடம் ஆசி பெற்று திருவனந்தபுரத்தைச் சென்றடைந்தது.
அதேபோல சுசீந்திரத்தில் இருந்து பெருமாள் நாயிடு தலைமையில் வேளாளர்களும் நாயர்களும் அடங்கிய ஒர் ஊர்வலம் கிளம்பி வைக்கத்தை அடைந்தது. நவம்பர் 14 ஆம் தேதி சங்கனாச்சேரி பரமேஸ்வரன் பிள்ளையின் தலைமையில் ஒரு உயர்சாதிக்குழு 27000 உயர்சாதிவாக்காளர்கள் கையெழுத்திட்ட ஒரு மனுவை அப்போதைய மகாராணி சேதுலட்சுமிபாய்க்கு அளித்து வைக்கம்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது
உண்மையில் வைக்கம் சத்தியாக்கிரகம் இந்த புள்ளியில் அதன் வெற்றியை அடைந்துவிட்டது. சாதியாசாரங்களில் மூழ்கிக்கிடந்த ஒரு சமூகத்தில் இருந்து மனசாட்சியின் இத்தனைபெரிய குரல் எழுவதற்கு அந்தப்போராட்டமே காரணம். 1924 நவம்பர் மாதமே புதிய கேரளத்தின் தொடக்கம் என்று கூட சொல்லப்படுவதுண்டு. தாழ்த்தப்பட்டோர் உரிமைக்காக உயர்சாதியினரை தெருவுக்குக் கொண்டுவருவதில் காந்தி வெற்றியடைந்தார்.
ஆனால் அன்று சீண்டப்பட்ட பழமைவாதிகள் கடுமையான நேரடி நடவடிக்கையில் இறங்கினார்கள். வைக்கம் போராட்டத்திற்கு முடிவெடுக்க மகாராணி கூட்டிய சட்டச்சபைக்கூட்டத்தில் தீர்மானத்தை ஒற்றுமையாக இருந்து தோற்கடித்தார்கள். அதிகமும் நியமன உறுப்பினர்கள் அடங்கிய அந்த சட்டச்சபை பழமைவாதிகளுக்கு ஆதரவாக இருந்தது. நேரடி வன்முறை தொடங்கியது. சத்யாகிரகிகள் தாக்கப்பட்டார்கள். கோயில்களை புறக்கணிக்கும்படி காங்கிரஸ் அறைகூவல் விடுத்தது. விளைவாக கோயில்கள் வெறிச்சோடின.
போராட்டம் வன்முறையை நோக்கி சென்றது. ஒவ்வொருநாளும் சத்யாகிரகிகள்தாக்கப்பட்டார்கள். அத்துடன் கேரள வரலாற்றின் ஆகப்பெரிய மழையும் சேர்ந்துகொள்ளவே சத்யாக்கிரகம் மெல்ல சோர்ந்து நின்றது. ஆகவே காந்தி அவரே கிளம்பி வைக்கத்துக்கு வந்தார். அவருடன் ராஜாஜியும் வந்தார். 1925 மார்ச் பத்தாம்தேதி காந்தி திருவனந்தபுரத்திற்கு வந்தார். அதற்கு அடுத்த நாள் அவர் நாராயணகுருவைக் கண்டார். அவர்களிடையே நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க உரையாடல் காந்திக்கு சாதி மற்றும் வர்ண அமைப்பு மீதிருந்த கருத்துக்களை முற்றாக மாற்றியமைத்தது. ஏற்றத்தாழ்வற்ற சாதிமுறை இருப்பது நல்லதே என்று காந்தி எண்ணியிருந்தார். அந்த எண்ணத்தை நாராயணகுரு மறுத்து மனிதர்கள் ஒன்றே என்று உபதேசம் செய்தார்.
மறுநாள் காந்தி வைக்கம் பழமைவாதிகளின் தலைவராக இருந்த ‘இண்டன்துருத்தில் தேவன் நீலகண்டன் நம்பூதிரி’யை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தார். காந்தியை கீழ்ச்சாதியரை தொட்டு அசுத்தமான ஒருவர் என்று சொல்லிய நம்பூதிரி அவரை வெளித்திண்ணையில் நிற்கச் செய்து பேசினார். காந்தி நடத்திய பேச்சுவார்த்தை எதற்குமே நம்பூதிரி இணங்கி வரவில்லை.
காந்தி நம்பூதிரியிடன் பேசியவை பதிவாகியுள்ளன. தீண்டாமைமுறைக்கு இந்து சாஸ்திரங்களில் அனுமதி உண்டு என்று நம்பூதிரி கருதுவாரென்றால் தான் நியமிக்கும் ஒரு இந்து மதபண்டிதருடன் அவரோ அவர் நியமிக்கும் இந்து மதபண்டிதரோ பொது விவாதத்திற்கு வரலாம் என்றார் காந்தி. அல்லது இதுசம்பந்தமாக வைக்கம் பகுதி இந்துக்கள் நடுவே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தலாம் என்றார். இரண்டு அறைகூவல்களையும் தேவன் நீலகண்டன் நம்பூதிரி நிராகரித்துவிட்டார்.
மீண்டும் போராட்டம் ஆரம்பித்தது. இம்முறை நம்பூதிரி தரப்பில் இருந்து ரவுடிகள் கொண்டுவரப்பட்டு சத்யாகிரகிகள் தாக்கப்பட்டார்கள். அவர்களின் குடும்பங்களும் தாக்கப்பட்டன. போராட்டத்திற்கு பெரும் சோர்வை இது உருவாக்கியது. உண்மையில் பின்னணியில் இருந்தது திருவிதாங்கூர் அரசை நடத்திய திவான்தான். ஆகவே திருவிதாங்கூர் மன்னருடனோ திவானுடனோ பேசிப்பலனில்லை என்று எண்ணிய காந்தி திருவிதாங்கூர் போலீஸ் கமிஷனராக இருந்த டபிள்யூ. எச். பிட் அவர்களுக்கு கடிதமெழுதி வன்முறைகள் மீது உண்மையான நடவடிக்கை எடுக்கும்படி கோரினார்
அந்த வெளிப்படையான வேண்டுதல் சங்கடமளிக்கவே பிட் மகாராணியைக் கண்டு கறாராக பேசினார். விளைவாக ஒரு சமரசத்திட்டம் உருவாக்கப்பட்டது. காந்தி சத்யாகிரகத்தை தற்காலிகமாக திரும்பப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் பதிலுக்கு வைக்கம் ஆலயத்தைச்சுற்றியிருக்கும் பாதைகளில் கிழக்குப்பாதை தவிர பிறவற்றை திறந்துவிட நம்பூதிரிகள் ஒத்துக்கொள்வார்கள் என்றும் வன்முறையாளர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிட் சொன்னார். காந்தி அதற்கு ஒத்துக்கொண்டார்.
விளைவாக 1925 அக்டோபர் எட்டாம் தேதி வைக்கம் சத்தியாக்கிரகத்தை திரும்பப்பெற காந்தி ஆணையிட்டார். அரசுக்கும் காந்தியவாதிகளுக்கும் இடையே சமரச ஒப்பந்தம் கையெழுத்தானது. ஒப்பந்தம் கையெழுத்தான பின்னரும்கூட விதிகள் நடைமுறைப்படுத்தப்பட மேலும் ஒரு மாதமாகியது. அதன்பின்னரே சத்யாகிரகம் வாபஸ் பெறப்பட்டது.
மேலோட்டமான பார்வைக்கு வைக்கம் சத்தியாக்கிரகம் அரைகுறை வெற்றி என்றே தோன்றும். வைக்கம் ஆலயத்தைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களில் மூன்றில்மட்டுமே எல்லா சாதியினரும் நுழையலாம் என்று ஒத்துக்கொள்ளப்பட்டது. கிழக்கு வீதி அப்போதும் நுழையக்கூடாததாகவே இருந்தது. ஆலயப்பிரவேசம் நிகழவேயில்லை. இந்த விஷயத்தை வைத்துத்தான் வைக்கம் போராட்டத்தில் காந்தி விட்டுக்கொடுத்தார், சமரசம் செய்துகொண்டார் என்றெல்லாம் ஈவேரா அனுதாபிகள் எழுதுகிறார்கள்.
உண்மையில் காந்தியின் போராட்டமுறையே இதுதான். போராட்டம் என்பதே அவரைப்பொறுத்தவரை ஒரு பிரச்சார முறைதான். ஒரு கருத்தை மிகப்பரவலாக எடுத்துச்செல்வதே ஜனநாயகப் போராட்டம். அக்கருத்தே சமூகமாற்றத்தையும் அதிகார மாற்றத்தையும் உருவாக்குகிறது. வைக்கத்தில் அதிரடியாக உள்ளே நுழைந்து சிலநூறு போராளிகளைப் பலிகொடுத்திருக்கலாம். ஆனால் நிரந்தரமான தீர்வு என்பது பழமைவாதிகள் தனிமைப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்படுவதில்தான் உள்ளது. அதிரடிகள் மூலம் அதைச் செய்ய முடியாது.
கோயிலுக்குள் வன்முறை நிகழ்ந்திருந்தால் மிதவாத நோக்கு கொண்டிருந்த உயர்சாதியினரையும் எதிர்பக்கம் தள்ளிவிடவே அது வழி வகுத்திருக்கும். போராடியவர்களில் கடும் இழப்பு உருவாகி ஆழமான மனச்சோர்வு ஏற்பட்டு போராட்டம் மேலும் தொடர முடியாமலாகிவிட்டிருக்கும். வன்முறைப்போராட்டம் எதிலும் இதைப்பார்க்கலாம். இருதரப்பினரும் மேலும் மேலும் கடுமையான நிலைபாடு எடுக்க பிரச்சினை முற்ற போராட்டம் ஏராளமான இழப்புகளை அடைந்தபின்னர் வேறு வழியில்லாமல் சமரசம்தான் பேச வேண்டியிருக்கும். அந்த சமரசப்பேச்சுவார்த்தையை முன்னரே வன்முறை இல்லாமலேயே நிகழ்த்துவதே காந்தியின் போராட்ட முறையாகும்.
காந்தி தன் தரப்பு கோரிக்கைகளில் ஒருபகுதியை விட்டுக்கொடுத்தார். வைக்கம் பழமைவாத தரப்பு ஒருபகுதியை விட்டுக்கொடுத்தது. கிழக்குவாயிலை தக்கவைத்துக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு கௌரவம் பாதுகாக்கப்பட்டது. இதுவே வைக்கம் சத்யாக்ரகத்தின் முடிவு. வைக்கம் போராட்டம் மட்டுமல்ல எல்லா போராட்டத்தையும் காந்தி இப்படித்தான் முடித்திருக்கிறார். போராட்ட சக்தியில் பெரும்பகுதி தன் தரப்பில் எஞ்சும்போதே சமரசம்செய்துகொண்டார்.