இந்தியா முழுவதும் மக்கள் மெய்யியல் வழிமுறையைக் குறிக்கும் சொல் சனாதன தர்மம் என்றால் எப்போதும் கடை பிடிக்க வேண்டிய அறக் கடமைகள், கோட்பாடுகள். . இந்து மதம் என்பது எளிதான பெயர்.
மனிதப் பிறவி என்பது குற்கிய காலம் வாழ்வது; ஆனால் உயிர் என்பது நிலையானது, பிறந்து இறந்து மீண்டும் பிறந்து இறந்து மீண்டும் எனும் தொடர்சியானது. இதை வள்ளுவர் மன்னுயிர் எனக் கூற்வார் மேலும் எளிதாகப் புரிய
இந்துமதத்தின் புராதனப் பெயரே சனாதன தர்மம்.
திருக்குறள் உலகப் பொதுமறை, உலகப் பெருநூல். அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் உறுதியான கருத்துக்களைக் கூறுவதே திருக்குறளின் சிறப்பு.
திருவள்ளுவர் எந்த மதத்தையும் குறிப்பிட்டு உணர்த்தவில்லை என்றாலும், திருக்குறளின் உட்கிடையாகப் பெறப்படுவது சனாதன தர்மம் என்னும் இந்து மதமே.
திருக்குறளின் முதல் குறள் இறைவன் உண்டு என்பதை வலியுறுத்துகிறது. எனவே திருக்குறளில் நாத்திக வாதத்திற்கு இடமே இல்லை.
உடம்பிற்கு வேறாக உயிர் என ஒன்றுண்டு, மறுபிறப்பு உண்டு என்பது இந்துக்களின் நம்பிக்கை.
“குடம்பை தனித்தொழியப் புட்பறந்தற்றே உடம்போ டுயிரிடை நட்பு”
“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு”
இப்பாடல்கள் உடம்பிற்கு வேறாக உயிர் என ஒன்றில்லை ,மறுப்பிறப்பு இல்லை எனக் கூறும் கிருஸ்தவ, இஸ்லாம் மதங்களின் கருத்துகளுக்கு மாறானது.
“இருள்சேர் இருவினையும் சேரா
இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” என்ற குறள் வினைப்பயனே இல்லை என்பவர்களுக்கும், வினைப்பயனை வகுத்து வழங்க இறைவன் வேண்டாம் என்போருக்கும் மாறானது.
சுருங்கச் சொன்னால், இறைவனே நமது செயல்களின் பயனை தொகுத்து வழங்கிறான் என்ற இந்துமதக் கருத்தை இப்பாடலில் திருவள்ளுவர் கூறுகிறார்.
திருக்குறளில் கடவுள், ஏழுபிறவிகள், வினைப்பயன் , பாவப் புண்ணியங்களுக்கேற்ற மறுபிறப்பு ஊழிக்காலம் ( யுகம்) என்ற இந்துமதக் கருத்துக்களே நூல் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. வானுலகம் ,தேவர்கள்,இந்திரவிழா போன்ற இந்துமதக் கருத்துக்களை திருவள்ளுவர் கூறுகிறார்.
“வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குத் துய்த்தல் அரிது” ஊழைத் தொகுத்து வழங்கும் இறைவனால் அன்றி முயன்று கோடிக்கணக்கான செல்வத்தைச் சேர்த்தவருக்கும் அவற்றை அனுபவிக்க முடியாது என்பதே இக்குறளின் பொருள்.
கோடிக்கணக்காகச் செல்வத்தைச் சேர்த்தாலும் அதை அனுபவிக்க உனது ஊழ்வினைப்பயனைத் தொகுத்து வழங்க இறைவன் வேண்டும் என்கிறார் திருவள்ளுவர். ஊழ்வினை என்பதை இந்துக்களைத் தவிர வேறு யாரும்
கூறுவதில்லை. “ஊழ்” என்றே ஒரு அதிகாரம் அமைத்து பாடியுள்ளார் திருவள்ளுவர்.
ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்”
ஊழ்வினையைவிட வலிமையானது வேறெதுவும் இல்லை. ஊழை விலக்கும் பொருட்டு இன்னொரு வழியைத் தேடினால் அங்கும் ஊழே முன்நிற்கும் _
என்பதே இப்பாடலின் பொருள்.
ஊழ்=பழவினை,தலைவிதி(பூர்வஜென்ம புண்ணியம்)
பூர்வ புண்ணியம் எனப் பேசுவது இந்துக்களின் மரபு எனச் சொல்லத் தேவையில்லை.
ஒருவன் தான் தேடிய செல்வத்தை அனுபவிக்கவும் இறைவனின் அருள் வேண்டும் என்ற திருவள்ளுவரின் கருத்து புத்தம், சமணம் போன்ற சமயங்களுக்கு மாறுபட்டது.
சமண முனிவரின் நாலடியார்
‘ வினைப்பயனை ,வினைசெய்தோருக்கு கொண்டு சேர்க்க இறைவன் என ஒரு முதல்வன் வேண்டாம் ‘ என்கிறது.எனவே திருக்குறள் புத்த,சமண மத நூலல்ல என்பது தெளிவு. எனவே
‘வகுத்தான் வகுத்த வகையல்லால்’
என்ற பாடல் கூறும் கருத்து இந்துக்களுடையதே என்பது உறுதி
இந்திரலோகம் ,வானோர்,அமரர் உலகு, இந்திரவிழா _ என திருக்குறளில் பலப்பாடல்களில் வருகின்றன. இவை இந்துமதக் கருத்துக்களே.
“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்
விசும்புளார் கோமகன்
இந்திரனே சாலுங் கரி”
“சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு”
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் தேவர்களுக்காக நடைபெறும் விழாவும் நடைபெறாது என்பதே இப்பாடலின் பொருள்.
மழை பொழிய வேண்டுமென்று இந்திரனுக்கு விழா எடுப்பது இந்துக்களின் மரபு.
“நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு”
புத்தேள் உலகு= தேவர்கள் உலகு.
இதுவும் இந்துமதக் கருத்தே.
ஊழிபெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்
ஊழிபெயரினும் என வள்ளுவர் கூறுவது யுக வேறுபாடே. கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபரயுகம்,கலியுகம் என இந்துக்களின் வேதங்கள் கூறுவதையே திருவள்ளுவரும் கூறுகிறார். செய்த பாவ, புண்ணியங்களுக்கு ஏற்ப ஆன்மா சொர்க்கத்திற்கோ, இருள் உலகமான நரகத்திற்கோ செல்கிறது என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதே கருத்தையே வள்ளுவர் தனது குறளில் கூறியுள்ளார். “அருள்சேர்ந்த நெஞ்சினார்கில்லை இருள்சேர்ந்த இன்னா உலகம் புகல்”
புண்ணியம் செய்தவர்கள் நரகத்திற்குச் செல்லமாட்டார்கள் என்கிறார் திருவள்ளுவர்;திருமூலரின் திருமந்திரமும் இதையே உரைக்கிறது. கீதை கூறும் அத்வைதக் கருத்தைப் பல பாடல்களில் திருவள்ளுவரும் கூறுகிறார். “யானென தென்னுஞ் செறுக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்” __ யான்,எனது என்ற ஆணவம் இல்லாதவன் உயர்ந்த உலகத்தை அடைவான் என்கிறார் திருவள்ளுவர்.
கீதையில் கண்ணன் இதையே மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.
“ஒழுக்கத்து நீத்தார் பெருமை
விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிபு”
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைப் போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்_ என்பதே இப்பாடலின் பொருள்.
‘ ஒழுக்கத்தில் நின்று பற்று விடுவது என்பது பகவத் கீதை கூறும் வழியாகும்.
அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையவர் அற்றாக அற்றது இலர் திருவள்ளுவர் கூறும் பற்றின்மை கீதையின் சாராம்சமே. “மடியில்லா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாவிய தெல்லாம் ஒருங்கு” சோம்பலில்லாத மன்னனுக்குத் திருமால் தாவி அளந்த உலகெல்லாம் கிட்டும் என்கிறார் வள்ளுவர்.
திருஞானசம்பந்தர் கோளறு பதிகத்தில் “மலர்மிசையோன்” எனப் பிரம்மாவைக் குறிப்பிடுகிறார். தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மா என்பதே இதன் பொருள். திருவள்ளுவரும் “மலர்மிசை ஏகினான்” என்கிறார். “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்” “அறவாறி அந்தணன் ” என்கிறார்திருவள்ளுவர். இவ்வாறு பிரம்மாவையே கூறுவர். “அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீத்தல் அரிது” “பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்
இவ்வாறு பிறவியைப் பெருங்கடலாக இந்துக்கள் மட்டுமே கூறுவர். புத்த , சமண ,இஸ்லாமியரோ, ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குப் பின்வந்த கிருஸ்தவர்களோ இவ்வாறு கூறமாட்டார்கள். “எழுமையும் எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு”
“ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு டைத்து” “ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக்கு கழந்தும் அளறு” _ இவ்வாறு ஏழு பிறவிகள் உண்டென்பதை பலபாடல்களில் கூறுகிறார் திருவள்ளுவர். ஏழுபிறவிகள் உண்டென்பது இந்துக்கள் மட்டுமே நம்புவதாகும். அனைத்துயிர்க்கும் காவலாகிய தவநெறியை சிவனது நெறியாகக் கொண்டு வழிபடுவது தமிழ் நெறி வழக்கம். “தாழ்சடைப் பொலிந்த அருந்தவத்தோர்க்கே”(புறநானூறு_1) “அருந்தவ முதல்வன்”
(கலித்தொகை100 :7) “ஆல்கெழு கடவுள்(திருமுருகாற்றுப்படை) _ என பழந்தமிழ் இலக்கியங்கள் தவக் கோலம் கொள்வதைச் சிவபெருமானின் அடையாளமாகக் கொள்கின்றன.
திருவள்ளுவ நாயனாரும் சிவனின் தவக்கோலத்தைக் குறித்தே
“பொறிவாயில் ஐந்தவித்தான்” என்றார்
“கோளில் பொறியிற் குணமிலவே
எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை”
இதில் இறைவனின் எட்டு குணங்கள் எவையென பரிமேலழகர் பொருள் எழுதும்போது சைவ ஆகமங்களின்படியே பொருள் கூறுகிறார்.
தன்வயத்தனாதல், தூயவுடம்பினனாதல்,
இயற்கை உணர்வினனாதல்,முற்றும் உணர்தல்,இயல்பாகவே பாவங்களை நீக்குதல்,பேரருளுடைமை,முடிவில்லா ஆற்றலுடைமை
_ என்பவையே அவை. இவை சிவனின் குணங்களாகும்.
” அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறுகிறார்.
திருவள்ளுவரோ “அடிசேர்தல்”,”தாள்தொழல்” என்றெல்லாம் கூறுகிறார். இவ்வாறான
சொல்லாட்சிகள் இந்துக்களுக்கே உரியது. எனவே திருக்குறளின் அடிநாதமாக விளங்குவது சனாதன தர்மம் என்னும் இந்து மதமேயாகும்.
-கீதப்பிரியை. உமா ராதாகிருஷ்ணன்
ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து - ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு. -ஔவையார், தனிப்பாடல் திரட்டு பா. 64
ஈதல் அறம் = மற்றவர்களுக்கு தருவது அறம்
தீவினைவிட்டு ஈட்டல்பொருள் = தீய வழிகளை தவிர்த்து, நல்ல வழியில் உழைத்து சேர்ப்பது பொருள்
எஞ்ஞான்றும் = எப்போதும்
காதல் இருவர் = காதலர் இருவர் (கணவன் மனைவி என்று சொல்லவில்லை)
கருத்து ஒருமித்து = ஒத்த கருத்துடன் (சண்டை போடாமல், வேண்டா வெறுப்பாகச் செய்யாமல்)
ஆதரவு பட்டதே இன்பம் = ஒருவருக்கு ஒருவர் துணையாக இருந்து ஆதரவு தருவதே இன்பம்
பரனை நினைந்து = இறைவனை நினைத்து
இம்மூன்றும் = இந்த மூன்றையும் (பேரின்பம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தையும் சேர்த்து)
விட்டதே பேரின்ப வீடு. - = விடுவதே பெரிய இன்பம், வீடு பேறு