வள்ளுவர் உணவை பகிர்ந்து உண்ண வேண்டும் எனும் அறத்தை வலியுறுத்த நூலோர் தொகுத்த அறங்களில் தலை சிறந்தது(அன்ன தானம்) என்கிறார்
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள் 322 கொல்லாமை
கிடைத்த உணவை தானும் உண்டு மற்றவர்களுக்கும் கொடுத்து பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த நீதி நூல்கள் கூறும் அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
இங்கே நூலோர் என்பது நீதி நூல்கள்(தர்ம சாஸ்திரங்கள்) என்பது தெளிவாகும்
திருவள்ளுவர் பாயிரத்தில் மூன்றாவது அதிகாரமாக நீத்தார் பெருமை என முன்னோர் - மெய்யியல் ஞானமரபை தொடர்வதை உறுதி செய்துள்ளார்.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. குறள் 21: நீத்தார் பெருமை. ஒழுக்கத்தில் நிலைத்து உறுதியான துறவிகளின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். குறள் 28:
நிறைவான மொழியில் உரைக்கும் துறவிகள் சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிலைத்து நிற்கும் அவர்களது அறவழி ( மறை-மந்திரச் சொற்கள் - எழுதாக் கற்பு) நூல்களே எடுத்துக் காட்டும்
திருவள்ளுவர் பாயிரம் எனும் முன்னுரை அமைப்பில், கடவுள் வணக்கத்தின் பயன் என கடவுள் வாழ்த்து பின்னர், இயற்கையை இறைவன் வெளிப்பாடாக காணும் மரபில் வான் சிறப்பு எனவும், இந்திய ஞான தத்துவ மரபில் அளவையியலில் மிக முக்கியமான அளவைகள் - காணல், கருதல் மற்றும் உரை அளவை. வான் சிறப்பு கருதல் அளவை முறை, மெய்யியல் மரபில் ஆன்றோர்/மெய்ஞான நூல் கருத்து அளவையே உச்சம் என நீத்தார் பெருமையை வள்ளுவர் வைத்து உள்ளார்.
திருக்குறளில் அமைச்சியலில் வள்ளுவர் கூறியது ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா மாற்றங் கொடுத்தற் பொருட்டு. குறள் 725: அவை அஞ்சாமை. மணக்குடவர் உரை: அவை அஞ்சாது மறுமாற்றம் சொல்லுதற்காக நெறிமையானே நூல்களை அளவறிந்து கற்க வேண்டும்.நூல் கற்றலாவது (1) மெய்யாராய்ச்சியாகிய நூலைக்கற்றலும் (2) வேதமும் ஆகமமும் கற்றலும் (3) உழவும் வாணிகமும் கற்றலும் (4) படைவாங்கல் மநுநீதி முதலியன கற்றலுமென நான்குவகைப்படும்.
அரசன் தன் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க தகுதியில் நீதி நூல்கள் கற்றலை வலியுறுத்தும் சில குறட்பாக்கள்
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும் தெற்று என்க மன்னவன் கண் குறள் 581 ஒற்றாடல் திறமையான ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேணடும்.
நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு. குறள் 683: தூது. மணக்குடவர் உரை: எல்லா நூல்களையும் கற்றார்முன்னர் அந்நூல்களைத் தானுஞ் சொல்ல வல்லவனாதல், வேலுடையார் முன்னின்று தன்னரசனுக்கு வெற்றியாகிய வினையைச் சொல்லுமவனது இயல்பாம்.
தன் நாட்டின் எதிர் அரசனை தர்ம - நியாயங்களை ஏற்கும்படிக் கூறுமளவிற்கு தர்ம சாஸ்திர நூல்களுள் நல்ல நுட்பமான கற்றலும், எடுத்து உரைக்கும் திறனும் தூது செல்பவருக்கு அவசியம் என வள்ளுவர் கூறுகிறார்
வள்ளுவர் அறவழியில் வாழும் பெரியோர் என்பதற்கு அறம்-பொருள்(தர்ம சாஸ்திரங்கள்) நூல்களைக் கற்றவர் என்கிறார்
இவ்வுலகில் நீதி நூல்களுள் அறம் பொருள் கற்று அறிந்தவர் அடுத்தவன் மனைவி மீது ஆசைப்பட்டு வாழும் அறியாமை இருப்பது இல்லை.
எந்த செயலைச் செய்யவும் அறம் தவறாமல் இருக்க "நீதி நூல்கள் கற்றவர்" என்பதை ஆய்ந்தவர் கோள் என்கிறார். ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். வினைத்திட்பம். குறள் 662: இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்தபின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே நீதிநூல் பல ஆராய்ந்தவரின் கோட்பாடு
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். குறள் 91: இனியவைகூறல். அன்புடன் உள்நோக்க வஞ்சம் இல்லாத சொற்கள், அற நூல்கள் அறிந்தவர் பேசும் வாய்ச்சொற்கள் இன்சொற்களாகும்.
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை திறனறிந்து தேர்ந்து கொளல். குறள் 441: பெரியாரைத் துணைக்கோடல். அற நூல்கள் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பைக், கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல் அறங்கூற்றும் ஆக்கத் தரும். புறங்கூறாமை. குறள் 183: காணாதபோது ஒருவனைப் பற்றிப் புறம்பேசிக், காணும்போது பொய்யாக அவனுடன் பேசி வாழ்வதைக் காட்டிலும் இறந்து போவது அற நூல்கள் கூறும் உயர்வைத் தரும்.
வள்ளுவர் நீதி நூல்கள் என்ப்தைக் குறிக்க அறம் என்ற சொல்லையே பயன்படுத்தி உள்ளார்.
அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. குறள் 179: வெஃகாமை.
நீதி நூல்கள் காட்டும் அறவழி அறிந்து பிறர் பொருளை கைப்பற்ற விரும்பாத அறிவுடையாரைத் லட்சுமி தேவி தானே அவரிடம் போய் இருப்பாள்.
வள்ளுவர் நீதி நூல்களை அறத்தாறு, ஆற்றின் என பயன்படுத்தி உள்ளார்.
அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. குறள் 37: அறன்வலியுறுத்தல். நீதி நூல்கள் காட்டும் அறவழியின் பயன் என்ன என்பதை பல்லக்கில் அமர்ந்து செல்பவரையும், அதை சுமந்து செல்பவரை காணின் கண்டு கொள்ளலாம்; வேறு விளக்கம் தேவை இல்லை
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில் போஒய்ப் பெறுவ எவன். குறள் 46: இல்வாழ்க்கை. நீதி நூல்கள் காட்டும் அறவழியில் குடும்ப வாழ்க்கை நடதுதுபவர் இல்லறத்திற்கு மாறான பிற வழிகளில் போய்ப் பெறும் பயனில்லை.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை உடைத்து. குறள் 48: இல்வாழ்க்கை. நீதி நூல்கள் காட்டும் அறவழியில் நடந்து, மற்றவர்களையும் அவ்வழியில் நடக்கச் செய்திடுவோரின் இல்வாழ்க்கை, துறவிகள் கடைப்பிடிக்கும் நோன்பைவிடப் வலியுடைத்து.
வள்ளுவர் கால பண்டை தமிழகத்தில் சட்டமும் நீதியும் C.M.கணபதி (மார்கிசிஸ்டு)
மார்க்சீய அறிஞர் கணபதி அவர்கள் தொல்லியல் அடிப்படையில் - கல்வேட்டுகள், செப்பேடுகள் இத்தோடு சங்க இலக்கியம் - இரட்டை காப்பியம் என தொடர்பு படுத்தி - தமிழக மன்னர்கள் பயன்படுத்திய நீதி - சட்ட நூல் வழிகாட்டிகள் மனுஸ்மிருதி போன்ற வடமொழி நூல்கள் தான் எனத் தெளிவாய் காட்டியுள்ளாரே
வேத தர்ம சாஸ்திரங்களைக் குறிப்பவை 543,560, 21, 28, 134, 183, 322,37 & 46 அரசியல் நூல்களை 636, 693, 743, 581, 727 பொதுவாக நூல்களை 533, 401, 726, 783, 373 மருத்துவம் சம்பந்தமானவை 941..
திருவள்ளுவர் போற்றும் முந்தைய நூல்கள் 1. ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர் காவலன் காவான் எனின் - குறள் 56:10 கொடுங்கோன்மை 2. பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை - குறள் 322 கொல்லாமை கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும். மணக்குடவர் உரை: பல்லுயிர்களுக்குப் பகுத்துண்டு அவற்றைப் பாதுகாத்தல், நூலுடையார் திரட்டின அறங்களெல்லாவற்றினும் தலையான அறம். இஃது எல்லாச் சமயத்தார்க்கும் நன்றென்றது. 3. விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல் கற்றாரொடு ஏனையவர் - குறள் 410 கல்லாமை அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர். 4. நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும் - குறள் 373 ஊழ் ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும். 5. நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு - குறள் 69:3 தூது அரசனிடம் சென்று தன் அரசனுடைய வெற்றிக்கு காரணமானச் செயலைப் பற்றித் தூது உரைப்பவன் திறம் நூலறிந்தவருள் நூல் வல்லவனாக விளங்குதல் ஆகும். 6. பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து அஞ்சுமவன் கற்ற நூல் - குறள் 727 அவையஞ்சாமை கற்றவர் கூடிய அவையில் பேசப் பயப்படுபவன் கற்ற நூல், பகைமுன்னே நடுங்கும் பேடியின் கையில் இருக்கும் வாளுக்குச் சமம். 7. உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின் அமைவு அரண் என்று உரைக்கும் நூல் - குறள் 743 அரண் உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை ஆகிய இந்த நான்கும் அமைந்திப்பதே அரண் என்று நூலோர் கூறுவர். 8. நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும் பண்பு உடையாளர் தொடர்பு - குறள் 783 நட்பு பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின் நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப் போன்றதாகும். 9. நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள் வென்றி வினை உரைப்பான் பண்பு - குறள் 683 தூது அனைத்து அரசியல் அறத்தை, நீதி நூல்களை அறிந்தவர்களுக்குள்ளே அதிகம் அறிந்தவனாய் ஆவது, ஆயுதபலம் கொண்ட பகை அரசரிடையே, தன் நாட்டுக்கு நலம் தேடிச் செல்லும் தூதரின் பண்பாகும். 10. ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும் தெற்று என்க மன்னவன் கண் குறள் 581 ஒற்றாடல் ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக் கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளியவேணடும். மணக்குடவர் உரை: ஒற்றினையும் முறையமைந்த நூலினையும் தெளியவறிந்த மன்னவனுக்கு இவையிரண்டையும் கண்களாகத் தெளிக. அரசர்க்குக் கல்வி இன்றிமையாததுபோல ஒற்றும் இன்றிமையாததென்றவாறு. இஃது ஒற்றுவேண்டுமென்றது. 11.மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம் யா உள முன் நிற்பவை - குறள் 636 அமைச்சு இயற்கையான நுட்ப அறிவை நூலறிவோடு ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன. மணக்குடவர் உரை: மேற்கூறிய நூற்கல்வியோடு கூட நுண்ணியதாகிய மதியினையும் உடையார்க்கு அதனினும் நுண்ணியவாய் மாற்றாராலெண்ணப்பட்டு எதிர் நிற்கும் வினைகள் யாவுள? இது மேற்கூறியவற்றோடு மதியும் வேண்டு மென்றது. 12. வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என் நுண் அவை அஞ்சுபவர்க்கு - குறள் 726 அவையஞ்சாமை நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?. 13. அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய நூல் இன்றி கோட்டி கொளல் குறள் எண்:401 கல்லாமை அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசுதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது. 14.மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 941 மருந்து மருத்துவ நூலோர் சொல்லும் வாதம், பித்தம், சிலேட்டுமம் என்னும் மூன்றாம் ஒருவனின் உணவாலும், செயலாலும் அவற்றுக்கு ஒத்து இல்லாது. மிகுந்தோ, குறைந்தோ இருந்தால் நோய் உண்டாகும். 15.பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து எபால் நூலோர்க்கும் துணிவு - குறள் 533 பொச்சாவாமை மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மையில்லை, அஃது உலகத்தில் எப்படிப்பட்டநூலோர்க்கும் ஒப்ப முடிந்த முடிப்பாகும்.
வள்ளுவத்தில் அறநூல்கள் கூறும் அறம் என்பதைக் காட்ட "என்ப" "என்பர்" எனவும் காட்டியுள்ளவற்றில் சில காண்போம்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து. குறள் 361: அவாவறுத்தல். எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் மீண்டும் மீண்டும் பிறக்கும் பிறவித்துன்பத்தை உண்டாக்கும் விதைதான் ஆசை என (அறநூல்கள் காட்டுகிறது) பெரியோர் கூறுவர்.
மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள். குறள் 617: ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே லட்சுமி (திருமகள்) தேவி வாழ்கின்றாள் என (அறநூல்கள் காட்டுகிறது) பெரியோர் கூறுவர்.
நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும் வகையென்ப வாய்மைக் குடிக்கு. குறள் 953: குடிமை நல்ல உயர்ந்த குடியில் பிறந்தவர்க்கு முகமலர்ச்சி, இருப்பதைக் கொடுத்தல், இனிமையாகப் பேசுதல், பிறரை இகழ்ந்து கூறாமை ஆகிய நான்கு உயரிய நல்ல குணங்கள் காண இயலும் (அறநூல்கள் காட்டுகிறது) என்பர்.
அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு. குறள் 73: அன்புடைமை பெறுவதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் முந்தைய பிறவி வாழ்க்கையின் பயன் என (அறநூல்கள் காட்டுகிறது) பெரியோர் கூறுவர்.
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. குறள் 21: நீத்தார் பெருமை. சீரிய ஒழுக்கத்தில் நின்று துறந்த தவ முனிவர்களது பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் துணிவாக சொல்கின்றன.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும். குறள் 28: நீத்தார் பெருமை. செம்மையான மொழி முனிவர்கள் பெருமையை அவர்கள் இவ்வுலகில் சொன்ன எழுதாக் கற்பு எனும் மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.