பொருநராற்றுப்படை இலை இல் மராத்த எவ்வம் தாங்கி 50 வலை வலந்து அன்ன மெல் நிழல் மருங்கில் காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றைப் பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள் முரசு முழங்கு தானை மூவரும் கூடி அரசவை இருந்த தோற்றம் போல 55 இலையில்லாத மரத்தின் அடியில், (ஆறுசெல்) வருத்தம் தாங்கி, 50 வலையைப் போர்த்தியது போன்ற மெல்லிய நிழலில், காட்டில் தங்குகின்ற தெய்வத்திற்குச் செய்யும் முறைமைகளைச் செய்துவிட்ட பின்பு - பெருமை பொருந்தின செல்வத்தையும், பெரும் புகழையும், வலிய முயற்சியினையும், முரசு முழங்கும் படையினையும் உடைய மூவேந்தர்களும் சேர்ந்து (திருவோலக்க மண்டபத்தே)அரசு வீற்றிருக்கும் காட்சியைப் போல - 55
ஆர உண்டு பேர் அஞர் போக்கிச் செருக்கொடு நின்ற காலை மற்று அவன் திருக் கிளர் கோயில் ஒரு சிறைத் தங்கித் 90 தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது அதன் பயம் எய்திய அளவை மான ஆறு செல் வருத்தம் அகல நீக்கி அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும் மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து 95 நிறைய உண்டு, பெரிய வருத்தத்தைப் போக்கி, மகிழ்ச்சியோடே (யான்)நின்ற போது - மேலும், அம் மன்னனுடைய
செல்வம் விளங்குகின்ற அரண்மனையில் ஒரு பக்கத்தில் தங்கியிருந்து, 90 (மிக்க)தவத்தைச் செய்யும் மக்கள் தம்முடைய (தவம் செய்த)உடம்பைப் பிரியாமல் இருந்தே (இம்மை உடம்போடு)அத்தவத்தால் பெறும் பயனைப் பெற்ற தன்மையை ஒப்ப, வழிபோன வருத்தத்தை என்னிடத்துச் சிறிதும் நில்லாமல் போக்கி, கள்ளின் செருக்காலுண்டான மெய்நடுக்கமல்லது வேறு மனக்கவர்ச்சி (சிறிதும்)இல்லாமல், துயின்று (பின்னர் உணர்ந்து)எழுந்து, 95
இன்மை தீர வந்தனென் வென் வேல் உருவப் பஃறேர் இளையோன் சிறுவன் 130 முருகன் சீற்றத்து உரு கெழு குரிசில் தாய் வயிற்று இருந்து தாயம் எய்தி எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச் செய்யார் தேஎம் தெருமரல் கலிப்பப் பவ்வம் மீமிசைப் பகல் கதிர் பரப்பி 135
(என்)இல்லாமை (முற்றிலும்)அற்றுப்போக வந்தேன், வென்ற வேலினையும் அழகினையும் பல தேர்களையும் உடைய இளயவனான சிறுவன், 130 முருகனது (சீற்றம் போலும்)சீற்றத்தையுடைய அஞ்சுதல் பொருந்திய தலைவன், (தன்)தாய் வயிற்று இருந்த போதே அரசவுரிமை பெற்று(ப் பிறந்து), (தன் வலிமை)அறியாத பகைவர் ஏவின தொழிலைச் செய்ய, (ஏவல்)செய்யாத பகைவர் நாடு மனக்கவற்சி பெருக, கடல் மேற்பரப்பு முழுக்கப் பகலைச் செய்யும் தன் கதிர்களைப் பரப்பி, 135
தரவிடைத் தங்கல் ஓவு இலனே வரவிடைப் பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தித் தெற்றெனச் செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் பல புலந்து 175 நில்லா உலகத்து நிலைமை தூக்கிச் செல்க என விடுக்குவன் அல்லன் ஒல்லெனத் திரை பிறழிய இரும் பௌவத்துக் கரை சூழ்ந்த அகன் கிடக்கை மாமாவின் வயின்வயின் நெல் 180
(இவன் பிறர்க்குக் கொடை)தரும்போது(அதில்)நிலைகொள்ளலில் ஒழிதல் இலன், (உமக்கு வந்த)வரவின் போது பெற்ற பொருளை மற்ற ஒவ்வொருவருக்கும் நிறையத் தந்து, விரைவாக (உமது இந்த)பயணத்தை முடிவுக்குக் கொண்டுவருவீராயின், பலமுறை வருத்தப்பட்டு, 175 (ஒன்றும் நிலைத்து)நில்லாத (இவ்)உலகத்தின் நிலைமையை ஆராய்ந்து பார்த்து, ‘(நீயிர்)செல்வீராக' என விடுவான் அல்லன், ஒல் எனும் ஓசையுண்டாகத் திரை முரிந்த கரிய கடலின் கரைகள் சூழ்ந்த அகன்ற நிலப்பரப்பில்,
ஒவ்வொரு மா அளவிலான சிறு நிலங்கள்தோறும், நெல்லின் - 180