தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 2. போரும் சோறும்! புறநானூறு - பாடல் 2


Guru

Status: Offline
Posts: 1049
Date:
2. போரும் சோறும்! புறநானூறு - பாடல் 2
Permalink  
 


2. போரும் சோறும்!

https://puram1to69.blogspot.com/2010/12/2.html

 
பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகனார். இப்பாடலை இயற்றியவரின் பெயர் முரஞ்சியூர் முடிநாகனார் என்றும் அப்பெயரை ஓலைச் சுவடியிலிருந்து எழுதும்பொழுது முரஞ்சியூர் முடிநாகராயர் என்று பிற்காலத்தில் யாரோ தவறாக எழுதியதாக அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார். டாக்டர் உ. வே. சுவாமிநாத ஐயர் அவருடைய உரையில் இப்பாடலை இயற்றியவர் முரஞ்சியூர் முடிநாகராயர் என்று குறிப்பிடுகிறார். மற்றும், தலைச்சங்க காலத்தில் முரஞ்சியூர் முடிநாகராயர் என்னும் பெயருடைய புலவர் ஒருவர் இருந்ததாக இறையனார் களவியலுரை கூறுகிறது. அவர் வேறு இப்பாடலை இயற்றியவர் வேறு என்றும் அறிஞர்கள் கருதுகின்றனர்.
ஆகவே, இப்பாடலை இயற்றியவர் முடிநாகனார் என்ற பெயருடையவரா அல்லது முடிநாகராயர் என்னும் பெயருடையவரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன். இச்சேர மன்னன் உதியன் என்றும், உதியஞ்சேரல் என்றும், உதியஞ்சேரலன் என்றும் அழைக்கப்பட்டான். அவன் வாழ்ந்த காலம் சுமார் கி.பி. 27 என்று வரலாற்று ஆசிரியர் N. சுப்பிரமனியன் அவர்களும் சுமார் கி.பி. 131 என்று வரலாற்று ஆசிரியர் K.A. நீலகண்ட சாஸ்திரி அவர்களும் கூறுகிறார்கள். இவன் இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனின் தந்தை என்பதும் வரலாற்றில் காணப்படுகிறது.

இச்சேரமன்னன் பஞ்ச பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நிகழ்ந்த பாரதப் போரில் இருதிறத்தார்க்கும் உணவு அளித்தாதாக இப்பாடல் கூறுகிறது. இவன் பாரதப் போரில் ஈடுபட்டவர்களுக்கு பெருமளவில் உணவளித்ததால் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்று அழைக்கப்பட்டான் என்றும் கருதப்படுகிறது. பாரதப்போர் உண்மையிலே நடைபெற்றதா என்பதை உறுதியாகக் கூறுவதற்கான சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை. அப்போர் நடைபெற்றதாகக் கருதுபவர்கள் அது நடைபெற்ற காலம் கி.மு. 1000 த்துக்கு முந்தியது என்று வானவியல் மற்றும் இலக்கியங்களிலிருந்து முடிவு செய்கின்றனர். இம்மன்னன் வாழ்ந்த காலத்துக்கு ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்குமுன் சுமார் 2000 மைல்களுக்கு அப்பால் நடைபெற்ற போரில் இவன் உணவு அளித்திருப்பானா என்பது ஆய்வுக்குரியது.

எது எவ்வாறாயினும், உதியஞ்சேரலாதன் நாம் வரலாற்றில் காணும் சேர மன்னர்கள் அனைவரிலும் காலத்தால் முந்தியவன் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்து.

பாடலின் பின்னணி: இப்பாடலில், இச்சேரன் நிலம், வானம், காற்று, தீ, நீர் என்ற ஐம்பெரும் பூதங்களைப் போல் பொறுமை, ஆராய்ச்சி, வலிமை, அழிக்கும் ஆற்றல், அருள் ஆகியவை உடையவன் என்றும் பாரதப்போரில் பாண்டவர்களுக்கும் கௌவரவர்களுக்கும் பெருமளவில் உணவளித்தான் என்றும், கிழக்குக் கடலுக்கும் மேற்குக் கடலுக்கும் இடையே உள்ள தமிழகம் இவனுக்கு உரியது என்றும், இமயமும் பொதியமும் போல் இவன் சோர்வின்றி நிலைபெற்று வாழவேண்டும் என்றும் முடிநாகனார் வாழ்த்துகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆகும்.
செவியறிவுறூஉ. அரசன் செய்ய வேண்டிய கடமைகளை முறைதவறாமல் செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்தல்.
வாழ்த்தியல். தலைவனை வாழ்த்துதல்

மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
5 தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அளியும், உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
10 வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ பெரும!
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
15 ஈரைம் பதின்மரும் பொருது களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
20 நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்றே.

அருஞ்சொற்பொருள்:
1. திணிந்த = செறிந்த. 2. விசும்பு = வானம். 3. தைவரல் = தடவுதல்; வளி = காற்று. 4. தலைஇய = தலைப்பட்ட, வளர்ந்த. 5. முரணிய = மாறுபட்ட . 7. போற்றார் = பகைவர்; சூழ்ச்சி = ஆராய்ச்சி; நுண்ணறிவு; அகலம் = விரிவு. 8. வலி = வலிமை; தெறல் = அழித்தல்; அளி = அருள். 10. புணரி = பொருந்தி; குட = மேற்கிலுள்ள. 11. யாணர் = புது வருவாய்; வைப்பு = ஊர் நிலப் பகுதி. 11பொருநன் = அரசன். 12. பெருமன் = தலைவன்
13. அலங்கல் = அசைதல்; உளை = பிடரி மயிர்; புரவி = குதிரை; சினைஇ = சினந்து. 14. தலைக்கொள்ளுதல் = கொடுத்தல்; பொலம் = பொன். 15. பொருதல் = போர் செய்தல். 16. பதம் = உணவு; வரையாது = குறையாது. 19. சேண் = நெடுங்காலம். 20. நடுக்கு = சோர்வு; நிலியர் = நிற்பாயாக; அடுக்கம் = மலைச்சரிவு. 21. நவ்வி = மான் கன்று; மா = மான்; பிணை = பெண்மான். 22. இறுத்தல் = செலுத்தல். 23. துஞ்சுதல் = தூங்குதல். 24. கோடு = மலை, மலைச்சிகரம்.

கொண்டு கூட்டு: போற்றார்ப் பொறுத்தல் முதலிய குணங்களை உடையோய், பொருந, வரையாது கொடுத்தோய், வானவரம்ப, பெரும, நீ பால் புளிப்பினும், பகல் இருளினும், நால் வேத நெறி திரியினும் இமயமும் பொதியமும் போல் நடுக்கின்றிச் சுற்றமொடு விளங்கி நிற்பாயாக எனக் கூட்டுக.

உரை: மண் செறிந்தது நிலம்; அந்நிலத்திற்கு மேல் உயர்ந்து இருப்பது வானம்; அவ்வானத்தைத் தடவி வருவது காற்று; அக்காற்றில் வளர்ந்து வருவது தீ; அத்தீயிலிருந்து மாறுபட்டது நீர். மண், வானம், காற்று, தீ, நீர் ஆகிய ஐந்தும் ஐம்பெரும் பூதங்கள் என்று சொல்லப்படுகின்றன. அவற்றுள் நிலத்தைப் போன்ற பொறுமையும், வானத்தைப் போன்ற அகன்ற ஆராய்ச்சியும், காற்றைப் போன்ற வலிமையும், தீயைப் போல் அழிக்கும் ஆற்றலும், நீரைப் போன்ற அருளும் உடையவனே! உன்னுடைய கிழக்குக் கடலில் எழுந்த கதிரவன் வெண்ணிற நுரையையுடைய உன்னுடைய மேற்குக் கடலில் மூழ்கும் புதுவருவாயோடு கூடிய நிலப்பகுதிகளுடைய நல்ல நாட்டுக்குத் தலைவனே! அரசே! நீ வானத்தை எல்லையாகக் கொண்டவன். அசைந்து ஆடும் பிடரி மயிரோடு கூடிய குதிரைகளையுடைய ஐவரோடு (பாண்டவர்களோடு) சினந்து அவர்களின் நிலத்தைத் தாம் கவர்ந்து கொண்ட, பொன்னாலான தும்பைப் பூவை அணிந்த நூற்றுவரும் (கௌவரவர்களும்) போர்க்களத்தில் இறக்கும் வரை பெருமளவில் அவர்களுக்குச் சோற்றை அளவில்லாமல் நீ கொடுத்தாய்.

மலைச்சரிவில் சிறிய தலையையுடைய மான் குட்டிகளோடு கூடிய பெரிய கண்களையுடைய பெண்மான்கள் மாலைநேரத்தில் அந்தணர்கள் தங்கள் கடமையாகக் கருதிச் செய்யும் அரிய வேள்விக்காக மூட்டிய முத்தீயில் உறங்கும் பொற்சிகரங்களையுடைய இமயமமும் பொதியமும் போல் , பால் புளித்தாலும், பகல் இருண்டாலும், நான்கு வேதங்களில் கூறப்படும் ஒழுக்க நெறிகள் மாறினாலும் மாறாத சுற்றத்தாரோடு நீண்ட நாள் புகழோடு விளங்கிச் சோர்வின்றி நிலைத்து வாழ்வாயாக!
 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard