பாடியவர்: அவ்வையார். அவ்வையாரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87 - இல் காணலாம்.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. அதியமானைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: அதியமான் அரசனானவுடன் தன் முன்னோருடைய சிறப்பெல்லாம் தானும் அடைந்தான். அது மட்டுமல்லாமல் தன்னோடு போரிட வந்த ஏழு அரசர்களையும் வென்று அவர்களுடைய ஏழு சின்னங்களையும் தன் முத்திரையில் பொறித்துக் கொண்டான். இவ்வெற்றிகளோடு அமையாது, கோவலூர் மீது படையெடுத்து அந்நாட்டு வேந்தனையும் வென்றான். அதை அறிந்த பெரும் புலவர் பரணர் அதியமானைப் புகழ்ந்து பாடினார். இது போன்ற செய்திகளை இப்பாடலில் அவ்வையார் கூறுகிறார்.
திணை: வாகை. வாகைப்பூவைத் தலையில் சூடிப் பகைவரைக் கொன்று ஆரவாரித்தல்.
துறை: அரச வாகை. அரசனது வெற்றியைக் கூறுதல்.
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும்
அரும்பெறல் மரபின் கரும்புஇவண் தந்தும்
நீர்அக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின்நின் முன்னோர் போல
5 ஈகைஅம் கழற்கால் இரும்பனம் புடையல்
பூவார் காவின் புனிற்றுப் புலால் நெடுவேல்
எழுபொறி நாட்டத்து எழா அத்தாயம்
வழுவின்று எய்தியும் அமையாய்; செருவேட்டு
இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்
10 சென்றுஅமர் கடந்துநின் ஆற்றல் தோற்றிய
அன்றும் பாடுநர்க்கு அரியை; இன்றும்
பரணன் பாடினன் மற்கொல், மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறிநின்
அரண்அடு திகிரி ஏந்திய தோளே.
அருஞ்சொற்பொருள்:
1.அமரர் = தேவர்; பேணுதல் = போற்றுதல்; ஆவுதி = வேள்வி; அருத்தல் = உண்பித்தல். 2. இவண் = இவ்விடம். 3. இருக்கை = குடியிருப்பு, ஊர்; ஆழி = சக்கரம், கட்டளை, ஆணை; சூட்டுதல் = நியமித்தல். 5. ஈகை = பொன்; புடையல் = மாலை; இரு = பெரிய. 6. ஆர் = நிறைவு; கா = சோலை; புனிறு = ஈன்ற அணிமை (புதுமை). 7. நாட்டம் = ஐயம்; தாயம் = அரசு உரிமை. 8. செரு = போர்; வேட்டு = விரும்பி. 9. இமிழ்தல் = ஒலித்தல்; குரல் = ஓசை; முரணி = பகைத்து. 12. கொல் என்பது ஐயத்தைக் குறிக்கிறது. மன் - அசைநிலை 13. முரண் = மாறுபாடு, வலிமை; நூறி = அழித்து. 14. அடுதல் = அழித்தல்; திகிரி = சக்கரம்.
உரை: தேவர்களைப் போற்றி, அவர்களுக்கு வேள்வி நடத்தி, அதன் மூலம் உணவுப் பொருட்களை அவர்களுக்கு உண்பித்துப் பெறுதற்கரிய முறைமையுடைய கரும்பை இவ்வுலகத்திற்குக் கொண்டு வந்தது மட்டுமல்லாமல், கடலால் சூழப்பட்ட நிலத்தின்கண் தன் ஆணையை நிலைநாட்டிப் பழைய நிலைமை பொருந்திய மரபுடைய உன் முன்னோர் போல, காலில் பொன்னாலான அழகிய கழல்களும், கழுத்தில் பெரிய பனம்பூ மாலையும், பூக்கள் நிறைந்த சோலையும், பகைவரைக் குத்தியதால் ஈரத் தசைகளுடைய நெடிய வேலும், ஏழு சின்னங்களுடைய முத்திரையும் ஐயத்திற்கு இடமில்லாத அரசுரிமையும் தவறாமல் பெற்றிருந்தாலும், உன் மனம் நிறைவடையவில்லை. போரை விரும்பி, ஒலிக்கும் ஓசையுடன் கூடிய முரசோடு சென்று எழுவரையும் வென்ற பொழுது உன் ஆற்றல் வெளிப்பட்டது. அன்றும் நீ பாடுவதற்கு அறியவனாக இருந்தாய். கோவலூரில் பகைவரின் மிகுந்த வலிமையையும் அவர்களது அரண்களையும் அழித்து ஆட்சிச் சக்கரத்தை ஏந்திய உன் வலிமையைப் (தோளைப்) பாடுவது இன்றும் அரிதே. பரணனால் தானே உன்னைப் பாட முடிந்தது!
சிறப்புக் குறிப்பு: எவராலும் பாடற்கரிய அதியமானைப் பரணரால்தான் பாடமுடிந்தது என்று அவ்வையார் கூறுவது பரணரின் பெருமையைக் குறிக்கிறது. பரணரைப் புகழ்வதால் அவ்வையாரும் பெருமைக்கு உரியவராகிறார்.