பரிபாடல் திரட்டு 6 மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரை
பூவொடு புரையும் சீர் ஊர் பூவின்
இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில்
தாதின் அனையர் தண் தமிழ் குடிகள் 5
தாது உண் பறவை அனையர் பரிசில்_வாழ்நர்
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப
ஏம இன் துயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போல 10
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே
திருமாலின் தொப்புளில் தோன்றி மலர்ந்த தாமரைப்
பூவோடு ஒத்தது அழகிய ஊர், அந்தப் பூவின்
அக இதழ்களை ஒத்தன தெருக்கள்; அந்த இதழ்களின் நடுவே உள்ள
அரிய பொகுட்டினை ஒத்ததே பாண்டியனின் அரண்மனை;
அந்தப் பூவின் பூந்தாதுக்களைப் போன்றவர் இனிய தமிழ்க்குடி மக்கள்;
அந்தத் தாதுக்களை உண்ணும் பறவைகளைப் போன்றவர் பரிசில் பெற்று வாழ்பவர்;
அந்தத் தாமரைப் பூவில் தோன்றிய பிரமதேவனுடைய நாவில் பிறந்த
நான்கு வேதங்களையும் கேள்வியால் கற்றவர்கள் ஓதுகின்ற குரலால் எழுப்ப,
மிக்க இன்பமான துயிலிலிருந்து எழுதலன்றி,
வாழ்த்துப்பெற்ற வஞ்சியும் உறைந்தையும் போல
கோழி கூவ எழாது எமது பெரிய ஊர்மக்களின் துயில்;
பூவினுள் பிறந்தவனான ப்ரம்மாவின் நாவினுள் பிறந்த வேதத்தின் குரல் எழுப்புதல் அல்லாது சேரனின் வஞ்சியும் சோழனின் கோழி எனப்படும் உறையூரும் கோழி கூவி எழுவது போல மதுரை மா நகரம் கோவி கூவி எழாது என்பது பாடலின் பொருள்.