தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர் முத்தீப் புரையக் காண்தக


Guru

Status: Offline
Posts: 898
Date:
ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர் முத்தீப் புரையக் காண்தக
Permalink  
 


 புறநானூறு   367. வாழச் செய்த நல்வினை

பாடியவர்: ஔவையார்.பாடப்பட்டோர்: சேரமான் மாவண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவேந்தர்கள்.

நாகத் தன்ன பாகார் மண்டிலம்

தமவே யாயினும், தம்மொடு செல்லா

வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;

ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங்கை நிறையப்

பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து                  5

பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய

நாரரி தேறல் மாந்தி மகிழ்சிறந்து

இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி

வாழ்தல் வேண்டும்இவண் வரைந்த வைகல்;

வாழச் செய்த நல்வினை அல்லது                           10

ஆழுங் காலைப் புணைபிறிது இல்லை;

ஒன்றுபுரிந்து அடங்கிய இருபிறப் பாளர்

முத்தீப் புரையக் காண்தக இருந்த

கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்,

யான்அறி அளவையோ இதுவே; வானத்து             15

வயங்கித் தோன்றும் மீனினும் இம்மென

இயங்கும் மாமழை உறையினும்

உயர்ந்துமேந் தோன்றிப் பொலிகநும் நாளே!

 

அருஞ்சொற்பொருள்: 1. நாகம் = நாகலோகம் = தேவலோகம்; பாகார் = பாகு+ஆர்; பாகு = பங்கு; ஆர்தல் = பொருந்துதல்; மண்டிலம் = வட்டம், நாடு. 3. நோன்மை = வலி; நோற்றார் = வலிமையுடையோர். 4. ஏற்றல் = இரத்தல். 6. பாசிழை = பாசு + இழை; பாசு = பசுமை; பொலம் = பொன். 7. நாரரி = நாரால் வடிக்கப்பட்ட; தேறல் = கள்ளின் தெளிவு; மாந்துதல் = குடித்தல், உண்ணுதல். 8. அருகாது = குறையாது; வீசுதல் = குறையாது கொடுத்தல். 9. வைகல் = நாள். 11. ஆழ்தல் = மூழ்குதல் (இறத்தல்); புணை = தெப்பம். 12. ஒன்று – இங்கு வீடுபேற்றைக் குறிக்கிறது; புரிதல் = விரும்பல்; இருபிறப்பாளர் = பார்ப்பனர். 13. முத்தீ = வேள்வி செய்யும் பொழுது அந்தணர்கள் வளர்க்கும் மூன்று வகையான தீ (ஆகவனீயம், தட்சிணாக்கினி, காருகபத்தியம்); புரைய = போல; காண் = அழகு; தக= பொருந்த. 16. வயங்குதல் = விளங்குதல்; இம் – ஒலிக் குறிப்பு. 17. உறை = மழைத்துளி. 18. பொலிதல் = சிறத்தல், செழித்தல்; கொண்டு கூட்டு: வேந்திர், மண்டிலம் செல்லா ஒழியும்; சொரிந்து, சிறந்து வீசி, வாழ்தல் வேண்டும்;  புணைபிறிது இல்லை, மீனினும் உறையினும் தோன்றிப் பொலிக எனக் கூட்டுக.

உரை: தேவலோகத்தைப் போன்ற பகுதிகளையுடைய நாடு, அந்த நாட்டு வேந்தனுடையதாக இருந்தாலும், அவ்வேந்தன் இறக்கும்பொழுது அது அவனுடன் செல்வதில்லை.  அது அவனுக்குப் பின்னர் வரும் தொடர்பில்லாத வலியோர்க்குப் போய்ச் சேரும். பொருளை வேண்டி இரந்த பார்ப்பனர்களுக்கு, அவர்களின் ஈரக்கை நிறைய பூவும் பொன்னும் நீர்வார்த்துக் கொடுத்தும், நல்ல அணிகலன்களை அணிந்த மகளிர் பொற்கலங்களில் கொண்டுவந்து கொடுக்கும், நாரால் வடிகட்டப்பட்ட கள்ளின் தெளிவை அருந்தியும், மகிழ்ச்சியோடும், சிறப்பாகவும், இரவலர்க்கு அரிய அணிகலன்களைக் குறையாது கொடுத்தும், இவ்வுலகில் நீங்கள் வாழ்வதற்காக வரையறுக்கப்பட்ட நாட்கள் முழுதும் வாழ்க. நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர, நீங்கள் மறுவுலகிற்குச் செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை. வீடுபேறு ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும் முத்தீயைப் போல அழகுடன் வீற்றிருக்கும் வெண்கொற்றக் குடையையும் கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே! நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும். வானத்தில் விளங்கும் விண்மீன்களையும் இம்மென்ற ஒலியுடன் பெய்யும் பெரிய மழைத்துளிகளையும் விட நும்முடைய வாழ்நாட்கள் மேம்பட்டு விளங்குவன ஆகுக.

சிறப்புக் குறிப்பு: புறநானூற்றில் உள்ள நானூறு பாடல்களில், இந்த ஒரு பாடல் மட்டுமே மூவேந்தர்களும் ஒருங்கிருந்தபொழுது பாடப்பட்ட பாடல்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard