தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 33. பெயரை மாற்றவா? திருத்தவா?


Guru

Status: Offline
Posts: 898
Date:
33. பெயரை மாற்றவா? திருத்தவா?
Permalink  
 


33. பெயரை மாற்றவா? திருத்தவா?
தமிழ்நாடு அரசு, வரும் டிசம்பருக்குள், திரிந்த ஊர் பெயர்களையும், தெருப்பெயர்களையும், ஜாதி பெயர் உள்ள ஊர் பெயர்களையும் மாற்றி விட ஒரு குழு அமைத்து செயல்படப்போவதாக செய்தி வெளி வந்துள்ளது. திருவல்லிக்கேணி என்ற அழகிய தமிழ் பெயரை “ட்ரிப்லிக்கேன்” என்ற பெயரால் இன்னும் அழைப்பது பொருளற்ற செயல். இது போன்றவை மாற்றப்படவேண்டும் என்பதில் யாருக்கும் கருத்து வேற்றுமை இருக்க இயலாது. இச்செயல் பாட்டை வரவேற்கிறேன்.

“பல நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்த ஊர் பெயர்கள் யாவை? அதை எவ்வாறு மாற்றலாம்” என அறிந்தோர் குழுவாகத்தான் அமைத்திருப்பார்கள் என எதிர்பார்க்கலாம். இதற்கு 90 விழுக்காடுகளுக்கு மேல் கல்வெட்டு அறிந்தோர்தான் இடம் பெற வேண்டும். தமிழ் என்ற சொல்லை மட்டும் கூறி, தமிழ் வரலாறு அறியாதோர் இடம் பெற்றுவிடக்கூடாது. பண்டைய ஊர்களின் பெயரை கல்வெட்டு சான்றுகளால்தான் ஆதாரத்துடன் கூற முடியும். எடுத்துக்காட்டாக ஓர் ஊர் பெயரை எடுத்துக் கொள்ளுங்கள். சென்னையின் ஒரு பகுதி “பூந்தமல்லி” என்பது. இதை “பூவிருந்தவல்லி” என்று புராண கதை கட்டிவிட்டிருக்கிறார்கள். ஆனால் 1250 ஆண்டுகளுக்கு முந்திய கல்வெட்டில் இது “பூந்+தண்+மலி” என்று காணப்படுகிறது. மலர்கள் நிறைந்த குளுமை நிறைந்த ஊர் என்ற பொருளில் இருந்த பெயர். இதை “பூவிருந்தவல்லி” என்பது, இந்த ஊரின் தன்மையை மாற்றி விடும்.

வேறு எந்த இந்தியப் பகுதியிலும் இல்லாத அளவுக்கு 1500 அல்லது 2000 ஆண்டுகளாக பெயர் கொண்டு விளங்கும் ஊர்களாக தமிழகத்தில்தான் ஏராளம் உள்ளன. இவற்றை மாற்றும்போது அவசரம் அவசரமாக மாற்றி விடக்கூடாது. ஏனையோர்கள் தங்களுடைய கற்பனைத் திறன்களால் புதிதாக்கக் கூடாது. ஊர்ப்புறங்களின் வரலாறு எழுத முயற்சிகள் எடுத்து வரும் இச்சமயத்தில் இதை சற்றுக் கவனத்துடன் செய்யவேண்டிய கடமையும் நமக்கு உண்டு. இச்செயல்பாட்டில் எதிர்நோக்கக்கூடிய பல இடர்பாடுகளும் உண்டு. அதை காண்பது இந்த அத்தியாயத்தின் நோக்கம். இதேபோல் முன்னர் எடுத்த முயற்சிகளின் வரலாற்றையும் காணல் வேண்டும். அண்மைக் காலத்தில் எடுத்த சில முயற்சிகளை மட்டும் இங்கு முதலில் காண்போம்.
1961-62 வாக்கில் எம்.பக்தவத்சலம் முதல்வராக இருந்தபோது மேற்கொண்டது. அக்காலகட்டத்தில், மத்திய அரசிலிருந்து தமிழகத்துக்கு வரும் குறிப்புகள், கடிதங்களில் எல்லாம் “ஸ்ரீ” என்ற சொல்லைப் பயன்படுத்துவது வழக்கம். “ஸ்ரீ” பக்தவத்சலம், “ஸ்ரீ” கிருஷ்ணசுவாமி என்று வருவது வழக்கம். முதல்வர் பக்தவத்சலம் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். தமிழகத்தில் பெயர்களுக்கு முன் “திரு” என்ற சொல்லைத்தான் பயன்படுத்துவது வழக்கம். அதனால் “ஸ்ரீ” என்பதற்குப் பதில் இனி “திரு” என்ற தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்த ஒப்பவேண்டும் என்று எழுதியதை ஏற்று “திரு” என்ற தமிழ் சொல்லை மத்திய அரசு ஒப்புக்கொண்டது.
இரண்டாவது சி.என். அண்ணாதுரையின் முயற்சியால் “மதராஸ் பட்டினம்” அதன் பழைய பெயரான “சென்னை” என்று பெயர் மாற்றப்பட்டது. இது எல்லோராலும் பாராட்டப்பட்டது. மு. கருணாநிதி முதல்வராக இருந்தபோது ஊர் அல்லது பகுதியின் பெயரை மாற்றுவதில் கவிதை நயம் செறிந்த ஆற்றலோடு மாற்றுவது வழக்கம். அதில் தமிழின் இனிமை தொனிக்கும். எடுத்துக்காட்டாக சென்னையின் ஒரு பகுதி “பாரீஸ் கார்னர்”, என்பதை கடை ஏழு வள்ளல்களின் ஒருவரான “பாரி”யின் பெயரால் “பாரிமுனை” என்று மாற்றினார். எளிய கிராம மக்களாலும் விரைவில் அறிந்துகொள்ளும் வகையில் அது அமைந்திருந்தது.

அடுத்து எம்.ஜி. ராமசந்திரன். ஊர், தெரு, பெயர்களில் இருந்து ஜாதி பெயரை எடுத்து விடவேண்டும். ஜாதியை ஒழிப்பதற்கு அதே முன்னெடுப்பாக அமையும் என்று முனைந்தார். சென்னையில் சர்.சிபி. இராமசாமி அய்யர் சாலையில் இருந்த அய்யரை எடுத்து விட்டு இராமசாமி சாலை என்று பெயர் மாற்றினார். நாட்டுக்கு உழைத்த சிறந்தவர்களின் பெயரை வைப்பது அவர்களைப் போற்றுவதற்காக வைப்பது மரபு. அவர் வாழ்ந்த காலத்தில் எவ்வாறு அழைக்க பெற்றார்களோ அதே பெயரால் வைப்பது சிறப்பு. அதை விட்டு அவர் பெயரை சிதைத்து பெயர் வைப்பதைக் காட்டிலும் அப்பெயரை நீக்கி விட்டு வேறு பெயரை வைத்து விடுவது சிறப்பாகும். இவ்வாறு ஜாதி பெயரை அகற்றுவதில், சில பெயர்களை மாற்றமுடியாத சிக்கல் ஏற்பட்டது. தி.நகரில் “நாயர் சாலை” என்று ஒன்று உள்ளது. அதில் உள்ள “நாயர்” என்பது ஒரு ஜாதியைக் குறிக்கும் பெயர்தான். அதை எடுக்க முடியவில்லை.
அத்தோடு அச்செயல்பாடு வேகம் குன்றி மறைந்தது. இங்கு தமிழ் காக்க மேற்கொண்ட மற்றொரு செயலையும் குறிக்க வேண்டும். அக்காலத்தில் அமைச்சர் பெருமக்களை “மாண்புமிகு” என்று அழைப்பது சிறப்பாக விளங்கியது. அப்பொழுது ஒரு தமிழ் ஆர்வலர் ஒருவர் அரசியல் செல்வாக்கு பெற்றிருந்தார். அவர், தான் தமிழுக்கு ஒரு சிறப்பு செய்யவேண்டும் என்ற வேகம் கொண்டார். அவர் சமயவாதி ஆதலால், கோயில்களில் கை வைத்தார். கோயில்களில், திரு அரங்கம், திரு அல்லிக்கேணி, திருநெல்வேலி கோயில் என்பதை எல்லாம் திருவை எடுத்துவிட்டு, “மாண்புமிகு” என்ற சொல்லைப் போலே “அருள்மிகு” என்ற சொல்லை அரசுக்கும் பரிந்துரைத்தார். சமய சார்பற்ற அரசே ஆயினும், இதை ஏற்று எல்லா கோயில்களிலும் திருவை எடுத்துவிட்டு “அருள்மிகு கபாலீஸ்வரர் கோயில்”, “அருள்மிகு சம்புகேச்வரம்” என மாற்ற ஆணை பிறந்தது.

“திரு” என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உண்டு. இதை “ஒரு சொல் பல பொருள்” என்று தமிழ் இலக்கணம் கூறும். “திரு” என்றால், அழகு, செல்வம், தூய்மை, அருள், தெய்வத்தன்மை என பல பொருள்கள் உண்டு. ஆயினும் 1600 ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரம் கோயில்களில் பலகைகளிலும் கடிதத் தலைப்பிலும் “அருள்மிகு” என்ற ஒரு பொருளை மட்டும் குறுகிய பொருளுடை சொல் எழுதப்பட்டது. இதற்காக ஏழை கோயில்களுக்கு மொத்தமாக ஆன செலவு 30 கோடிக்கு மேற்பட்டது ஆகும். 30 ஆயிரம் கோயில்கள் நமது இந்து சமய அற நிலைய துறையின் கீழ் உள்ளன. ஒவ்வொரு பெயர் பலகைக்கும் 1500லிருந்து 2000வரையில் ஆகும் செலவைக் கூட்டுங்கள். வேறு எங்கும் இல்லாத 20000 தெய்வீகப் பாடல்களில் இடம் பெற்றதும், பல பொருள்கள் உள்ளடக்கியதும் சான்றோர்களால் உச்சரிக்கப்பட்டதுமான “திரு”வை அற நிலைய துறை அறவே நீக்கிவிட்டது. அது மட்டுமின்றி ஒரு புதிய மரபையும் அறநிலையத்துறை கொண்டு வந்தது. “அருள்மிகு” என்ற சொல் நீளமாக உள்ளது; அதனால் அதை குறுக்கி “அ.மி.” என்று அத்தனை கோயில் செயல் அதிகாரிகளும் எழுதத் தலைப்பட்டனர்.

“திரு” போய், “அருள்மிகு” போய், “அ.மி”யாக மாறியது. இதை சுட்டிக்காட்டி, அதற்கான விரயமான செலவையும் சுட்டிக்காட்டி நான் ஒரு கட்டுரை எழுதினேன். அதன் தலைப்பு “திரு போய் அம்மி வந்தது” என எழுதியிருந்தேன். அதை தினமலர் நாளிதழில் வெளியிட்டு இருந்தனர். அப்பொழுது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா அந்தக்கட்ருரையில் உள்ளதை மனதில் கொண்டு, இனி யாரும் “அ.மி” என்று எழுதக்கூடாது என ஆணை இட்டார். அவசர அவசரமாக, பல பெருங்கோயில்களில், “அ.மி”யை நீக்கிவிட்டு, “அருள்மிகு”வைக் கொண்டுவந்தனர்.
அவ்வம்மையார் அந்த ஆணையின் உட்கருத்தை அறிந்து “திரு”வை மீண்டும் கொண்டுவந்திருக்கலாம். “திரு” திரும்பிவிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் இன்னும் “அ.மி” எழுதும் பல கோயில்கள் உள்ளன. நமது அற நிலைய துறை ஒரு புதிய மரபை ஏற்படுத்தி உள்ளது. யார் எது சொன்னாலும் தாங்கள் எந்த முடிவு எடுக்கிறார்களோ அந்த முடிவை பின்பற்றுவோம் என்ற மரபில் உள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகூட தமது ஆணையில் “அறநிலையத் துறை” தமது கொள்கையை மாற்ற முடியாது என்ற கருத்தை முதலில் மாற்றிக்கொள்ளவேண்டும் என்று ஆணை பிறப்பித்து இருக்கிறார். அதனால் அதைவிட்டு ஊர் பெயர்களிலிருந்து ஜாதி பெயரை நீக்குவதால், ஜாதியை ஒழித்து விடுவோம் எனக் கொள்ளமுடியாது.

சென்னை மாநகரத்தை எடுத்துக்கொள்வோம். பின்வரும் சில பெயர்களைப் பாருங்கள். இவற்றில் என்ன மாற்றம் செய்ய முடியும். அடிக்கோடிட்ட பெயர்கள் ஜாதி ஒட்டுக்களைக் கொண்ட இடப்பெயர்கள்.
வில்லிவாக்கம், அய்யனாவரம், வண்ணாரப்பேட்டை, ராயப்பேட்டை, ராயபுரம்
இதில் உள்ள ஜாதிப் பெயர்களை எடுத்துவிட்டால் வேறு ஒரு புதுப்பெயர் கொடுத்தால்தான் முடியுமே ஒழிய வேறு வழியில்லை. தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஊர்களின் பெயர்களைப் பாருங்கள்.
1. தேவன் ஊர்,
2. தேவன் குளம்
3. தேவர் குணமணி,
4. மறவன் குளம்,
5. மறவன் ஏரி,
6. இருளண்சேரி
7. கள்ளன்குடி
8. பாண்டியூர்
9. அய்யம்பேட்டை
10. பிள்ளைப்பாக்கம்
11. செக்கார்குளம்
12. கொத்தனூர்
13. தச்சன்பாடி
14. தேவடியாள் குப்பம்
15. கூத்தியாகுண்டு
16. ஐய்யங்கார் குளம்
17. கூத்தனூர்
18. சாளுவன் குப்பம்
19. தோட்டி பாளையம்
20. வாணியம்பாடி
21. பூசாரிப்பட்டி
22. இடையன் பந்தல்
23. வள்ளுவர் தெரு
24. குசவன்பட்டி
25. செட்டிக்குளம்
26. செங்குந்தர்புரம்
27. தாசரிப்பட்டி
28. டொம்பசேரி
29. கணியனூர்
30. கவுண்டன்பாளையம்
31. வேடந்தாங்கல்
32. லிங்கம் நாயகன் பாளையம்
33. டனாயாகன் கோட்டை
34. அம்மை நாயக்கனூர்
35. கொண்டப்ப நாயகன் பட்டி
சேரன், சோழன் பல்லவன், பாண்டியன் பெயர் கொண்டவை.
இப்படிப்பட்ட பெயர்களைத் திருத்தவா? மாற்றவா? - வல்லுநர் குழு முடிவு செய்யும். தமிழ் அய்யாக்களை கேட்பதுடன், பொது மக்களின் கருத்துக்களையும் “மீடியா” மூலம் கேட்டும் செய்யலாமா?
இத்துடன் பெயர்களை மாற்றுவதால் REVENUE ரெகார்டுகளை திருத்த வேண்டும். ரயில்வே போர்டுகளை மாற்ற வேண்டும். தபால் தந்தி செயலகங்களின் பெயர்களையும் மாற்ற வேண்டும். முக்கியமாக கிராமப்புறங்களில், விற்றல் வாங்கல் நடைபெறும் பொழுது நிலங்களின் எல்லைகளைக் குறிக்கும்போது முன் பெயருக்கும் புது பெயருக்கும் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. கூகுள்வரை படங்களில் பெயர்களை மாற்றவேண்டும் முதலிய செயல்பாடுகளை மனதில்கொள்ளவேண்டும்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard