தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 30. ‘திப்பு’ எத்தனை திப்பு சுல்தான்களடி!


Guru

Status: Offline
Posts: 1049
Date:
30. ‘திப்பு’ எத்தனை திப்பு சுல்தான்களடி!
Permalink  
 


30. ‘திப்பு’ எத்தனை திப்பு சுல்தான்களடி!
டீப்பு சுல்தான் — என்றுதான் தமிழ் நாட்டில் அப்போது இருந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இப்பொழுது திப்புவைப்பற்றி காரசாரமான செய்திகள் வருகின்றன. தேர்தல் நம் நாட்டில் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது, நமது எதிரியான நாட்டின் பிரதமர் இம்ரான்கான், திப்புவைப் புகழ்ந்து பேசியுள்ளது கேள்விக்குறியாக உள்ளது. நமது நாட்டுத் தேர்தலை பாதிக்கும் வண்ணம், புகழ்ந்திருப்பது உள்நோக்கோடு குறிக்கப்பட்டதே ஒழிய, திப்புவின் மீது இருந்த உயர்ந்த சிறப்பால் அல்ல. இது தமது சமயத்தை பின்பற்றுபவர்கள் ஓட்டளிக்க வசமாகச் செய்தது என்பது தெளிவு. அது நிற்க, நமது நாட்டு காங்கிரஸ் கட்சியினர், இதை வரவேற்றுள்ளது தேசாபிமானம் உள்ளவர்களை புண்படுத்தி உள்ளது. திப்புவைப்பற்றி பலர் எழுதியுள்ளார். இதுவரையிலும் தெரியாத சில செய்திகளை இங்கே காணலாம்.

மைசூர் பகுதியைக் கைப்பற்றி தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்த “ஹைதர் அலி கான்”, ஒரு பெரும் போர் படையைத் தயார் செய்து, சேலம், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, மலபார், கண்ணூர் முதலிய பகுதிகளின் மேல் படை செலுத்தி, வெற்றி கண்டான். ஹைதர் அலி, 1782இல் இறக்கவே அவன் மைந்தனான திப்பு மைசூர் அரியணை ஏறினான். அப்பொழுது சர். தாமஸ் மன்றோ என்ற வெள்ளைக்காரத் துரை சென்னையில் பதவி ஏற்றான். மன்றோ ஹைதர், திப்பு இவர்களின் சம காலத்தவன் ஆதலால், இவர்களைப் பற்றி பல செய்திகளை எழுதியுள்ளான். “திப்பு”, தனது மிக வலிமையும் சிறப்பும் பெற்ற தனது தந்தை ஹைதரை தோற்கடிக்கும் வகையிலும் கடுமையாகவும் ஆட்சி நடத்தினான். ஒரு லட்சம் படை வீரர்களைச் சேர்த்து, கடும் பயிற்சி கொடுத்து, ஆங்கிலேயர்கள் தன் பெயர் கேட்டாலே பயப்படும்படி ஆண்டான்.

1791 இல் திப்பு தமிழகத்தின்மீது படை எடுத்தான். “ஹைதர்-திப்பு” படையெடுப்புகளாலும், வெள்ளைக்காரர்கள் செய்த குளறுபடிகளாலும், “வலியிழந்த உள்ளூர் மக்களும், உழுகுடி மக்களும் மிகவும் பாதிக்கப்பட்டனர். விவசாயம் மிகவும் சரிந்து போயிற்று. பெரிய நிலம் உடையோர்கள் என ஒருவரைக்கூட காண முடிய வில்லை” என்று மன்றோ எழுதியுள்ளான்.

திப்புவைப் பற்றி மன்றோ எழுதும்போது, “திப்பு ஒரு தீவிர சமயவாதி. தந்தையும் திப்புவும் மதம் மாற்றம் செய்வதிலும் தீவிரம் காட்டினர்” என்றும், ஹைதர் காலத்தில் நெல்லை முதலிய மாவட்டங்களில் மிகவும் அடி மட்ட விலைக்கு நிலங்களை வாங்க தங்கள் ஆட்களை நியமித்தான். பெரும்பாலான வேளாண் குடியினர், “ஒரு மாடுகூட வைத்துகொள்ள முடியாத நிலை” என்று மன்றோ கூறுகிறான்.

மன்றோவின் சமகாலக் குறிப்பில் திப்புவின் சமயத் தீவிரம் மேலோங்கி நின்றதைக் காணலாம். “முகம்மதியர் எங்கும் பரவி நிலைக்கவேண்டும், அதற்காக இவ்வுலகையே அழிக்கவேண்டும் என்றாலும் திப்பு தயங்க மாட்டான்” என்று மன்றோ குறித்துள்ளான். 1799 இல் திப்பு ஸ்ரீரங்கப்பட்டினப் போரில் கொல்லப்பட்ட பின் அப்போது கிடைத்த ஆவணங்களில் இருந்து, அவன் “ஆங்கிலேய பாதிரிமார்களை இந்தியாவைவிட்டுத் துரத்தவேண்டும்” என்பது திப்புவின் தீவிர விருப்பம் என்று அறியலாயிற்று.

திப்பு, கான்ஸ்டான்டி நோபெலுக்கு ஒரு தூதுவனை அனுப்பி. ஆப்கானிஸ்தான் ஷாவை தொடர்புகொண்டு இந்தியாவின்மீது படை எடுக்கக் கேட்டுக்கொண்டான். அப்படை “இந்தியா முழுவதையும் பிடிக்கவேண்டும் என்றும், தனது படை அப்படை எடுப்பில் பங்கு பெற்று இந்தியா முழுவதும் வென்று இந்திய நாட்டை முற்றிலும் முகம்மதிய நாடாக மாற்றவேண்டும்” என்றும் திட்டம் தீட்டியிருந்தான் என்று மன்றோ குறிப்பிட்டுள்ளான். அதற்குள் அவனே போரில் கொல்லப்பட்டு விட்டான்.

1791 இல் திப்பு படை எடுத்தபோது அவன் தமிழகத்தில் புகுந்து முன்னேறும்பொழுது எழுதப்பட்ட மூன்று கடிதங்களை இங்கே காணலாம். இவை டென்மார்க் நாட்டு, “கோபென்ஹெகனில்”, அரசு ஆவணக் காப்பகத்தில் உள்ளன. இக்கட்டுரை ஆசிரியர், 1978இல் டென்மார்க் சென்றிந்தபோது அரசாங்கக் காப்பகத்தில் இருந்தது கண்டு படியெடுத்து வந்தார். அவற்றை இங்கே பதிப்பிக்கிறோம். அக்காலத்தில் தரங்கம் பாடியில் டேனிஷ் கோட்டை இருந்தது. தரங்கம் பாடியில் குலாம் முஹம்மது சாயுபு என்பவர் வக்கீலாக இருந்தார். அவருக்கு ஷேக் இஸ்மாயில் என்பவர் இன்றைய கடலூரில் இருந்தவர், இரண்டு கடிதத்தையும் எழுதியுள்ளார்.

அக்காலத்தில் இன்றைய கடலூர், கூடலூர் என்ற பெயரால் அழைக்கப்பட்டது. முதல் கடிதம் 1791 ல் தை மாதம் 22ஆம் தேதி எழுதப்பட்டது. இரண்டாவது கடிதமும் அதே 1791ல் மாசி மாதம் ஒன்றாம் தேதி எழுதப்பட்டது. முதல் கடிதத்தில் திப்புவின் “தூசிப்படை” (முதலில் வரும் படை) பெண்ணை ஆற்றைத் தாண்டி பத்து பன்னிரண்டு குதிரைகள் திசைகள் உள்ளே வந்து, வயலிலே அறுவடை செய்துகொண்டிருந்த வேலைக்காரர்களைப் பிடித்து, அடித்தும், பயிர்களை மாடுகளைவிட்டு அழித்தும் வீடுகளை எல்லாம் எரித்தும் விட்டு, நெல்லிக்குப்பம் முதலிய இடங்களில் குதிரைகள் நடமாடியதையும் கடிதம் குறிக்கிறது. இக்குதிரை ஆட்களை அடுத்து “திப்பு” தானே தலைமை ஏற்று வெளிச்சம் பாளையம், விக்கிரவாண்டி முதலிய இடங்களில், வீடுகளை அழித்ததையும், பயிர்களை சேதப்படுத்திக்கொண்டு வருகிறான் என்றும், அவனுடைய குதிரை வீரர்கள் மூவாயிரம் பேர், தெற்கே சென்றுகொண்டிருப்பதாகவும் முதல் கடிதத்தில் காண்கிறோம்.

சுமார் ஒரு வாரத்திற்கு மேலாக திப்பு இந்த பகுதியை கலக்கடித்து, வீணாக்கி, வழுதாவூரில் 1791, மாசி மாதம், 16ம் தேதி வந்து படையோடு இறங்கியதையும் கூடலூரையும் (கடலூர்) சுற்றியுள்ள ஊர்களையும் எரித்து உலவுகிறான் என்றும், மேலும் இரண்டாயிரம் குதிரை வீரர்கள் தெற்கே சென்றுகொண்டிருப்பதையும் குறிக்கிறது. கடலூருக்கு சென்னைப் பட்டினத்திலிருந்து இரண்டு கப்பல்கள் வந்துள்ளதையும் தெரிவிக்கிறது. இவ்விரண்டு கடிதங்களும், திப்பு எவ்வளவு கொடுமையாக நிலங்களையும் சீரழித்தான் என்றும் விளங்குகின்றன்.

டென்மார்க் கடிதம் — 1
இவை வைக்கில் குலாம் முஹம்மது சாயுபு அவர்களுக்குக் கொடுப்பது — தரங்கம்பாடியில் குலாம் முஹம்மது சாயுபு அவர்களுக்கு தங்கள் சேக்கிஸ்மால் பெரிய தம்பி சலாம் பந்தகி. இப்போது தேவராயப் பிள்ளை ஓலையும் ரெண்டு தவால் காறரும் வந்து சேதியும் தெரியலாச்சுது. ஒருத்தனை கூடலூரில் வச்சுக்கொண்டு ஒருத்தனை புதுச்சேரியில் பாளையத்துக்குப் போய் உத்தமா சாரம் கொண்டு வரச் சொல்லி தை மீ 20 தேதி சனிக்கிழமை காலமே அனுப்பியிருக்கிறோம். தை மாதம் 21ம் தேதி சாயுங்காலம் பத்து பன்னிரெண்டுக் குதிரை, பொன்னை ஆத்துக்கு உள்ளே வந்து அறுப்பறுத்த ஆளுகளை புடிச்சு அடிச்சு பயிர்களை மாடுகளை விட்டு அழிச்சு கூடலூர்க்கு மேற்கே பட்டம் பாக்கம் செல்லிக் குப்பம் யிதுகளுக்கு குதிரை வந்து நடமாடுது.
இதெல்லாமல் “டீப்பு” பாளையம், வானூர், புளிச்சப் பாளையம், வெள்ளிமோடு, விக்கரவாண்டி யிந்தப்ப பிறாந்களிலே எறங்கியிருந்து கொண்டு, பழையக்காடு வரைக்கும் பயிர்களை அழிச்சு, வூடுகளை கொளுத்தி சேதப்படுத்துகிறான். தெக்கே மூவாயிரம் குதிரை போகுதென்னு சொல்லிக்கொள்ளுகிறார்கள். ஆனாலது ச்சச் சேதியயிருக்கவில்லை. யின்னம் விசாரித்து எழுதியினுப்பி விக்கிறோம் இங்கிரீஸ் பாளையம் ஆறணி திருவினாமலை கலசப்பாக்கம் யிந்தப் பிறத்தில் ஏறங்கியிருக்கு தெண்ணு சொல்லிக் கொள்ளுகிறார்கள். தங்களுக்கு ரெண்டு மூணு கடுதாசி எழுதியும் னாங்கள் அசட்டை பண்ணுகிறோமென்று நம்முட பிள்ளை ஆண்டான் கிட்டே சொன்னதாக சேதி கேட்டோம். கண்கள் துப்பாக்கி அனுப்பின போதும் பட்டுப் பிடவை அனுப்பின போதும் தவாலில் அனுப்பினதுக் கெல்லாம் இதுகளுக்கெல்லாம் தாங்கள் வந்து சேந்து தெண்றும் சேரயில்லை எண்றும் எழுதாமலிருக்க, எங்கள் பேரில் தாங்கள் மனஸ்தாவமாய் சொல்லுகிறது ஞாயமல்ல. யிவடத்தல் நெல்லு விக்கிற சேதி 22ஆம் தேதி வரைக்கும் விலை 1600 மட்டுக்கும் வித்து, செலுத்தி ரசீது வாங்கியிருக்கிறோம். யிது சேதி தாங்கள் அறிய வேண்டிது. பாளையத்துக்கு அனுப்பியிருக்கிற தவால் வந்த உடனே சேதி யனுப்பி விக்கிறோம். மத்தப்படி னாங்கள் நடந்து கொள்ள வேண்டியதுக்கு யின்னபடி எண்று எழுதியனுப்பிவிக்க வேண்டியது. இப்படிக்கு பெரிய தம்பி சேக்கிஸ்மால் சலாம் வேணும் உ 1791 தைய் மீ ஆம் தேதி பகல் மனி — உக்கு ரவானா.

டென்மார்க் கடிதம் — 2 Bundle No.21856,
1791ஆம் ஆண்டு அரக்க்ஷதக்க்ஷத்துப்பிதிலி தெய்வராயன் ஆதாபத் சிலிமாத்து — இப்பவும் தைய் மீ 29 ம் தேதி காலமே மணி ஆறு. காதர் வசம் காகிதம் அனுப்புவிச்ச பிறகு மனுசாளை மேற்க்கே அனுப்புவிச்சு சேதி விசாரிக்குமிடத்தில், இரண்டாயிர, மூவாயிரங் குதிரை ராத்திரியிலே நிலாவுலே புவனகிரி வந்தது, வெள்ளாற்றுக் கரை ஏறி மன்னார்குடி தாலுக்கா பண்ணைப்பட்டுக்கு போயி அந்தவூர் நாட்டான் அம்பல வானப்பிள்ளையை பிடிச்சுக் கொண்டு அரசூர் கொள்ளடக் கரையண்டை அந்த மட்டும் வழி காட்டச் சொல்லிக் கொண்டு போனான். கொள்ளிடக் கரை ஏறின பிறகு அவனை விட்டு விட்டான். அவன் சொன்ன சேதி. மறுபடி வடக்கேயிருந்து குதிரை சாஞ்ச வண்ணமாயிருக்குது. முன்னாலேத்தி போனவர்கள் சனங்களை ரோஷட்டு பண்ணயில்லை. மறுபடி வந்த குதிரைக்காரர் வெட்டுக்குத்து ரொம்ப காயக்காறர் சிதம்பரத்துக்கு வருகிறார்கள். சிதம்பருத்துக்கு மேற்கே ஒருழைக்கு மேற்கே கண்ண(வா)டியிலே பாரா குதிரை பூட்டுயிருக்குது. புவனகிரியிலேயும் குதிரையிறங்கி யிருக்குது. அறிக்காற சாஷ்த்திரி அய்யரை மேற்க்கே அனுப்பியிருந்தேன். பறலித்தூரகத்து மட்டும் போயி சேதி கொண்டு வந்தார். குதிரை வடக்கேயிருந்து தெற்கே போன படியிருக்குற தென்று வந்து சொன்னார். துணிஞ்சவர் கெட்டிக்காறர் யிந்த சேதி ராத்திரியே கொண்டு வந்து சேறு வெண்ணு என் கையிலே கடுதாசி வாங்கி வந்திருக்கிறார். அவருக்கு எசமாங்களுக்கு சொல்லி சந்தோஷம் பண்ணி அனுப்புவிக்க வேண்டியது. தெற்கே குதிரை போன சேதி நிக்க்ஷயமாயி சொல்லுகிறார்கள். மேற்கே திருமடத்திலே குதிரை போச்சு தென்னு சொல்லுகிறார்கள். யின்னம் தண்டுராப் போனவன் வரயில்லை. வந்தவுடனே சேதி அனுப்புகிறேன். மற்றபடி யிது காரியத்திலே சாக்கிரதையாயி நடந்து கொள்ள வேண்டியதுக்கு எழுதி அனுப்புவிக்க வேண்டியது. வேணும். ஆதாபத் சிலிமாத்து அவசரமாயி எழுதின காகிதம் 1791 தைய் மீ 29 ம் தேதி சனிக்கிழமை றாத்திரி ஏழு றவானா.
டென்மார்க் கடிதம் - 3
ராஜா தம்பி ப்றாகசம் பிள்ளையாவர்களுக்கும் சாயபு அவர்கள் குலா முகம்மது சாயபு அவர்களுக்கும் பெரிய தம்பி செக்கிஸ்மால் சலாம். யிப் போது முன் உங்களக்கு எழுதின காகிதம் அவடத்துக்கு அனுப்பிக்க வழி நடப்பில்லாத படியினாலே யிதி கூட வ(ரு)குது. “டீப்பு” பாளையம் மாசி மாதம் 1 ஆம் தேதி வழுதாவூரிலிருந்து யிரங்கினான். கூடலூரைச் சேர்ந்த கிறாமமெல்லாம் கொள்ளையிட்டு கொளுத்திப் போடுகிறான். கூடலூர் மெத்தத் தணிவாயிருக்குது. யிந்த கடுதாசி எழுதிகிற அண்ணக்கி சென்ன பட்டணத்திலிருந்த ரெண்டு கப்பல் கண்டுது. அதிலே சனங்களும் குண்டும் மருந்தும் வருது தெங்கிற சேதி அந்தக் கப்பல் வந்தவுடனே அந்தச் சேதியும் எழுதி அனுப்பி விக்கிறோம். னாங்கள் அவடம் வந்து செருகிறதுக்கு கரை வழியாய் வரக் கூடாததனிலே வருகிற சலங்குகளின் பேரில் வந்து சேருகிறோம். தெற்கே இரண்டாயிரம் குதிரை போச்சென்றும் போகுதேன்றும் யிவடத்தில் ... பிறக்குது. எங்களுக்கு யிவடத்தில் கொஞ்ச நஞ்சம் நிலுவை கிடக்கறதை தண்டிக்கொண்டு ஊர் வந்து சேர்கிறோம். மறு சேதிகளுல்லாம் இதன் கூட வருகிற கடுதாசியைப் பார்க்கத் தெரிய வரும். மத்தபடி யிவடத்து நடந்து கொள்ள வேண்டிய காரியங்களுக்கு யின்னபடி யென்று எழுதியனுப்பி விக்கும்படி செய்ய வேண்டியது. யிப்படிக்கு பெரிய தம்பி சேக்கீச்மால் சலாம்.
1791 வருஷம் மாசி மீ — 1 ம் தேதி
இவை ரா. பிள்ளையவர்கள் பிறகாசம் பிள்ளையவர்களுக்குக் கொடுப்பது தரங்கம்பாடியில்

திப்பு எவ்வாறு தீவிர சமயவாதியாகவும், ஈவு இரக்கமற்ற கொடுங்கோலனாகவும், இந்திய நாட்டை அழிப்பதற்கு வெளி நாட்டு உதவியை நாடினான் என்பதும் தெளிவாகிறது. இவை அவன் படை எடுத்து வந்தபோது நேர் முகமாகப் பார்த்த ஒரு முகம்மதியரே எழுதிய சான்று. இன்றைய நிகழ்ச்சிகளை பார்க்கும்போது திப்புவை வாழ்த்தும் புகழும் நம் நாட்டின் பேர்வழிகள் இன்றும் இங்குள்ளதைக் காணும்போது இவர்கள் எல்லாம் திப்புவின் மறு தோற்றங்களே என்பதில் ஐயம் இல்லை.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard