தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 23. உத்தரமேருர் கல்வெட்டு


Guru

Status: Offline
Posts: 898
Date:
23. உத்தரமேருர் கல்வெட்டு
Permalink  
 


23. உத்தரமேருர் கல்வெட்டு
________________________________________
சரியாக 1000 ஆண்டுகளுக்கு மேலான ஒரு கல்வெட்டு அது. தமிழ் நாட்டில் சபைகளுக்கு எவ்வாறு தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலுக்கு நின்றவர்கள் வயது, கல்வித்தகுதி, பொருள், உடைமை என்பவற்றை எல்லாம் அக்கல்லில் வெட்டி வைத்துள்ளார்கள். உலகத்தோர் வியத்தகும் வகையில் உள்ள அக்கல்வெட்டு தமிழ்நாட்டில்தான் உள்ளது.
இந்திய நாட்டிலேயே ஏன் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அளவுக்கு தேர்தல்பற்றிய விவரமான செய்திகளைக் குறிக்கும் ஒரே சாஸனம் இதுவொன்றே. இந்திய நாட்டில் பழைய காலங்களில் குடியாட்சி முறையை விவரிக்கும் சாஸனம் இது. “இந்திய தேசிய குடியாட்சிமுறை” என்று வரலாற்று ஆசிரியர் கூறுவர். இது சென்னைக்கு அருகில் 50 கல் தொலைவில் உள்ள உத்தரமேரூர் என்ற ஊரில் உள்ளது.
அக்காலத்தில் இப்பகுதி சோழர் ஆட்சியின் கீழ் இருந்த பராந்தக சோழன் என்ற மன்னன் காலத்தில் இக்குடியாட்சி சாஸனம் கல்லில் எழுதப்பட்டது. “உங்கள் ஊரில் குடியாட்சி முறைப்படி சபைக்கு மக்களைத் தேர்ந்தெடுத்து ஊராட்சியும் நடத்திக்கொள்ளுங்கள்” என நான் “ஆணையிடுகிறேன்” என்று அரசன், ஓலையை தன் அதிகாரி மூலம் அனுப்பினான். அவ்வதிகாரி இவ்வூர் வந்து ஊர் சபைக்கு தேர்ந்தெடுக்கும்முறையை ஆராய்ந்து, எழுதும்போது உடன் இருந்து மேற்பார்வை இட்டான். கல்வெட்டு 9ம் ஆண்டு எழுதப்பட்டது. முதலில் இங்கு தேர்வுக்கு நிற்பவர் தகுதிகள் என்ன என்று சாஸனம் கூறுகிறது. முதலில் ஊரார் தாங்கள் எடுத்த முடிவைக் கூறுகின்றனர்.
“காளியூர் கோட்டத்து தன் கூற்று உத்திரமேரு சதுர்வேதிமங்கலத்து சபையோம்” என்று தொடங்குகிறது. இது ஊர் பற்றிய குறிப்பாகும். இம்முடிவை ஊர் சபையார் முடிவு செய்தனர் என்று குறிக்கிறது.
“இவ்வாண்டு முதல் எங்களுக்கு பெருமானடிகள் ஸ்ரீ வீரநாராயணன் ஸ்ரீ பரகேசரி மன்னருடைய ஸ்ரீமுகம் வரக்காட்ட ஸ்ரீமுகப்படி ஆணையினால்” என்று தொடங்குகிறது.
இது தேர்தல் ஆணையத்தின் ஆணையை தேர்தல் அதிகாரி கொண்டுவந்து இதன்படி நீங்கள் தேர்தல் நடத்துங்கள் என்பது போன்றது. அந்தத் தேர்தல் அதிகாரியின் பெயர் கொண்டைய கிரமவித்தன் என்ற சோமாசிப் பெருமான் என்பதாம். அவன் சோழநாட்டை சேர்ந்தவன், அங்கு புறங்கரம்பை நாட்டு ஸ்ரீவங்கநகர் என்னும் ஊரைச் சேர்ந்தவன். பின்னர் “எங்கள் ஊரில் ஒவ்வொரு ஆண்டு ஊர்ச்சபைக்கு ஆண்டாண்டு ஆளும் வாரியத்துக்கும், தோட்ட வாரியத்துக்கும், ஏரி வாரியத்துக்கும், மக்களை எப்படித் தேர்வு செய்வது என்பதுபற்றி நாங்கள் தீர்மானித்த முடிவாவது” என்று கூறுகிறது.

இம்மூன்று வாரியங்களும் ஊரின் முழு சபையின் பிரிவுகளாகும். மொத்தமாக சபைக்கு வேண்டிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை மூன்று பகுதிகளாக பிரித்து 1) ஊராட்சி 2) தோட்டங்களை அபிவிருத்திச் செய்யும் பணி 3) ஏரியைச் சரியாகப் பராமரித்து வேளாண்மைக்குப் பயன்படுத்தும் முறை என இன்றைய “கமிட்டிகள்” போல அன்று “வாரியம்” என்ற பெயரில் அப்பணிகளைச் செயல்படுத்துவது ஆகும். அதனால் மொத்தத்தில் அவ்வூர் சபைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வகையை இது குறிக்கிறது. இவ்வூரில் பன்னிரண்டு சேரிகள் இருந்தன. அவற்றில் வசிப்போரை முப்பது குடும்பு என்பதாகப் பிரித்தனர். குடும்பு என்றால் இன்றைய தொகுதி என்பதுபோன்றது. ஒவ்வொரு குடும்புக்கும் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும். ஒவ்வொரு குடும்பிலிருந்தும் யார் தேர்ந்தெடுக்கப்படுபவர் என்று தீர்மானிப்பது அந்தந்த குடும்பைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள்தான் அந்த நபரைத் தேர்ந்தெடுக்கவேண்டும். வெளியிலே இருந்து இங்கு வந்த ஒருவரை தேர்ந்து நிறுத்த முடியாது.

அண்மையில் ஒரு கட்சித் தலைவர் ஒரு பெண்மணியை, “ஏன் நாங்கள் நிறுத்தியவர் இங்கு தோற்றுப் போனார்?” என்று கேட்டார். அதற்கு அப்பெண்மணி, “நீங்கள் எங்கள் ஊரைச் சேர்ந்தவரை இங்கு நிறுத்தாமல் எங்கேயோ இருந்து ஒருவரை இங்கு கொண்டுவந்து திணித்தீர்கள். ஆதலால் எங்களைச் சேர்ந்தவரல்லாத, எங்களை அறியாத எங்கள் தேவைகளைப் புரிந்து கொள்ளாமல் தன்னிச்சைப்படி செயல்படும் ஒருவரை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்?” என்று கேட்டார். உண்மையில் குடியாட்சி என்றால் என்ன என்பதை அன்று அப்பெண் தெளிவாக்கினார். குடியாட்சியின் தத்துவத்தை அப்பெண் விளக்கினார். அவர் ஒரு கிராமத்துப்பெண்.

கிராமப்புற மக்களுக்கு ஒன்றும் தெரியாது என்று எண்ணிவிடக் கூடாது. இதை ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே நம் மக்கள் உணர்ந்திருந்தனர் எனலாம்.
உத்தரமேரூர் கல்வெட்டு தொடர்கிறது.

குடும்பு முப்பது
முப்பது குடும்பிலும் அந்தந்த குடும்பிலாரே கூடித் தகுதி உள்ள ஒருவரை தேர்தலுக்கு நிறுத்தவேண்டும் என்று முடிவு எடுத்தனர். அவ்வாறு தேர்ந்தெடுப்பவர் கீழ் வரும் தகுதிகள் உடையவராக இருந்தால்தான் அவர் தேர்தலுக்கு நிற்க முடியும்.
கால் நிலத்துக்கு மேல் அரை நிலமுடையான்
தான் நிற்கும் தொகுதியில் கால் நிலத்துக்கு மேல் அரை வேலி நிலமாவது உடையவனாக இருக்கவேண்டும். அந்தந்தத் தொகுதியில் நிலமுடையவனாக இருந்தால்தான் அவனுக்கு அத்தொகுதிக்கு உழைக்கும் உணர்வு நிற்கும். அக்காலத்தே நிலம் ஓர் இன்றியமையாத தகுதியாகக் கருதப்பட்டது. அது இன்றி நிற்கமுடியாது.
தன் மனையிலேயே அகம் எடுத்து கொண்டிருப்பவன்
இது இரண்டாவது விதி. ஒருவன் தேர்தலுக்கு நிற்கவேண்டும் என்றால் அவனுக்கென அத்தொகுதியிலேயே ஒரு மனை இருத்தல் வேண்டும். அந்த மனை அவனுடைய மனையாக இருக்கவேண்டும். அபகரித்தோ, ஊர்ப்புறம்போக்கு, ஏரிக்கரை, நடை பாதை, அரசு மனை என தனது அல்லாத மனையில் வீடு கட்டிக்கொண்டு இருப்பவன் தேர்தலுக்கு நிற்க முடியாது. அண்மைக் காலத்தில், ஊ ர்ப்புற ஏரி குளங்கள் எல்லாம் வறண்டு போனாலும், அல்லது வறண்டுபோக அடித்துவிட்டு, கட்சிச் செல்வாக்கைப் பயன்படுத்தி அந்நிலங்களை எல்லாம் தனதாக்கிக்கொண்டு அதில் தான் மாளிகை எடுத்துக்கொண்டு வாழ்வோர் அல்லது அவற்றை பிளாட்டாகப் போட்டு விற்று அப்பணத்தால் பட்டண மத்தியிலேயே மாளிகை எடுத்துக்கொண்டு இருப்போர் தேர்தலுக்கு நிற்க முடியாது.
அதைத்தான் “தன் மனையிலே அகம் எடுத்துக்கொண்டிருப்பான்” என்றனர். அப்படி இல்லாதவர் அப்பகுதி மக்களால் தேர்தலில் நிறுத்தப்பட மாட்டார்கள். நடைபாதையை ஆக்கிரமித்தவனும், மாடு கன்றுகள் மேய்ப்பதற்காக விடப்பட்டிருந்த மேய்ச்சல் நிலத்தை அபகரித்து வீடு கட்டிக்கொள்பவன், கோயில் நிலத்தைக் கூறுபோட்டுக்கொண்டவன் போன்றோர் தேர்தலில் நிற்க முடியாது எனக் கல்வெட்டு கூறுகிறது.
எழுபது பிராயத்துக்கு கீழ்
35 பிராயத்துக்கு (வயதுக்கு) மேல் உள்ளவன் நிற்க முடியும். பொது மக்களுக்கு சேவை செய்ய வருபவன் ஒரு குறிப்பிட்ட வயது வரையில் வாழ்க்கையில் அனுபவம் பெற்றவனாக இருக்கவேண்டும். இளம் வயது போட்டியும், பொறாமையும், நிறைந்திருக்கும். ஆதலால், முதிர்ந்த முடிவெடுக்கும் மனநிலை 35 வயதிற்கு மேல் அனுபவம் உடையவனுக்குத்தான் ஏற்பட்டிருக்கும். எனவே தேர்தலில் நிற்பவன் 35 வயதுக்கு மேற்பட்டவனாக இருத்தல்வேண்டும்.

அதே போல் 70 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். குடுகுடு கிழவன் ஆனபின்பும், பேச முடியாதவன், எழுத முடியாதவன் போன்றோர் பொதுப்பணிக்கு அனுமதிப்பதிற்கில்லை. நான் கட்சிக்காரன் 90 வயதுவரையில் நானே நிற்க வேண்டும் என்று எண்ணினால் — அவன் எண்ணலாம் ஆனால் சட்டம் 70 வயதுக்கு மேல் யாரையும் அனுமதிக்காது.
மந்திர பிராமணம் வல்லான்
அதாவது குறைந்தது ஒரளவு கல்வி தகுதி அதாவது சட்ட நுணுக்கங்களும், சட்டம் இயற்றும் அறிவாற்றலும் உள்ளவராக இருக்கவேண்டும். எந்த மனிதனாயிருந்தாலும் உடலில் உழைக்கும் தன்மையும், உள்ளத்து உற்சாகமும் அறிவின் நுணுக்கமும் 35வது முதல் 70 வயதுவரை சராசரி மனிதனின் வயதாகக் கணித்து சிறப்பாக பணிபுரிய முடியும் என்று கணித்து அதற்குட்பட்டவர்களாக இருத்தல் அவசியம் என்று அக்காலத்தார் கருதியுள்ளனர்.

கல்வி அறிவு மட்டும் போதாது. பொது வாழ்வுக்கும் உரியவற்றைச் செயல்படுத்த, பிறர்க்கும் எடுத்துக் கூறும் ஆற்றலும் இருத்தல் வேண்டும். இதை “ஓதுவித்து அறிவு” என்று கூறுகிறது கல்வெட்டு. மேற்கூறிய தகுதிகளும் இன்றி அமையாதவை யாகும் என்று குறிக்கிறது.

ஒரு மாற்றுத் தகுதியும் கூறப்பட்டுள்ளது. முதலில் தகுதியாக கால்வேலி நிலத்துக்கு மேல் அரைவேலி நிலம் வரை உடைத்தானாக இருக்கவேண்டும் என்பதை சற்றுத் தளர்த்தி அரைக்கால் நிலம் உடையவனாயினும், மேல் படிப்பு படித்தவனாக இருந்தால் அவனது படிப்புக்கு மதிப்பளித்து — எம்.ஏ - என்ற அளவுக்கு படித்திருந்தானானால் அவனுக்கு ஒரு சிறப்பு சலுகை அளிக்கலாம் என்று கூறுகிறது.

இவை அனைத்தும் நம்மிடம் இருக்கவேண்டிய தகுதிகள். இனி தேர்தலுக்கு வேண்டிய குணங்கள் யாவை என்பதையும் கல்வெட்டு கூறுகிறது.

மேற்கூறியவை தவிர தேர்தலில் நிற்கத் தகுந்தவன் காரியத்தில் நிபுணனாக இருக்கவேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது. மேற்கூறியவை இருந்தபோதிலும் செயல்பாடுகளில் சிறந்தவனாக இருந்தால்தான் பொதுமக்களின் பணியை அவனிடம் (efficiency in administration) ஒப்படைக்க முடியும்.
ஆசாரம் உடையான்
ஆசாரம் என்பது “ஒழுக்கம்” என்பதாகும். இதை வள்ளுவர் “ஒழுக்கத்து நீத்தார்” என்று கூறுகிறார். ஒழுக்கம் அற்றவன் பொது மக்களின் வாழ்வை வளமாக்க முடியாது.
“அர்த்த சௌசமும் ஆன்ம சௌசமும் உள்ளான்”.
“சௌசம்” என்றால் தூய்மை என்று பொருள். “அர்த்த சௌசம்” என்றால் அவன் சம்பாதித்துள்ள பொருள்களை எல்லாம் நேர்மையான வழியிலே சம்பாதித்து இருக்கவேண்டும். பணக்காரன் ஆனவுடன் தேர்தலுக்கு நிற்க முடியாது. முற்காலங்களில் நேர்மை இருந்தது. தவறான வழியிலே சம்பாதித்தவனாக இருந்தால் ஊர் மக்களுக்கு தெரியாமல் போகாது. அதனால் அந்தந்தத் தொகுதி மக்கள்தாம் தொகுதிக்கு ஒருவரை நிறுத்த முடியும். இதைத்தான் “அர்த்த சௌசம்” என்று கல்வெட்டுக் கூறுகிறது.
தற்காலத்தில் திடீர் திடீர் என்று ஊர்ப்புறங்களிலே, மந்திர ஜாலம் செய்யும் சாமியார்கள்போல சிலர் தோன்றுகிறார்கள். இவர்கள் மக்களின் எளிமையையும் துன்பங்களையும் பயன்படுத்திக்கொண்டு பெரும்பொருள் சம்பாதிக்கிறார்கள். இவர்களுக்குத் தெரியும், தான் மக்களை ஏமாற்றுகிறோம் என்று. மக்களைத் தெரிந்தே ஏமாற்றுபவர்கள் ஆன்மிகத் தூய்மை உடையவர் அல்ல. இவர்கள் கோடீஸ்வரன் ஆனாலும் தேர்தலில் நிற்க முடியாது. ஊர் மக்களே அவர்களை விரட்டி அடித்து விடுவார்கள். அதனால் “ஆன்ம தூய்மை” என்பதை கல்வெட்டு கூறுகிறது.

அடுத்து ஒரு மிக முக்கியமான விதியைக் கல்வெட்டு கூறுகிறது.

இனி ஒரு தேர்தலில் நின்று ஜெயித்துப் பணி புரிந்தவன், அடுத்து வரும் தேர்தலில் நிற்க முடியாது. குடியாட்சி என்பது எல்லா மக்களும் தங்களைத் தாமே ஆண்டு கொள்ள வாய்ப்பு அளிப்பதுதான்.

குடியாட்சி என்பது மக்களால், மக்களுக்காக மக்களே ஆண்டு கொள்வது என்பது. இதை மேலை நாட்டார் கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்னர் வழி வகுத்த இலக்கணம் ஆதலால், இது மேலை நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குடியாட்சி ஆகும். ஆனால் இதற்கும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் ஊரில் மக்களை மக்களே ஆண்டுகொள்ளும் குடியாட்சி கிராமப்புறம் தொடங்கி மேல்மட்டம் வரையிலும் மேல் குறித்த விதிகளுக்கு உட்பட்ட ஆண்ட ஒரு மாபெரும் மக்களாட்சி என்பதாகும். மேலும் தற்காலத்தில் ஒருவர் ஒருமுறை தேர்ந்தேடுக்கப் பட்டால், பதினைந்துமுறைகூட தாங்களே மீண்டும் மீண்டும் தாமே தொடர்ந்து நிற்க முடியும். அக்காலத்தில் ஒருவனே சாகறவரை நிற்க முடியாது.

மக்களை ஆள்வதற்கு தேர்தலில் நிற்பவன் அப்பழுக்கற்ற மனத்தூய்மை உடையனாக இருக்கவேண்டும். எல்லோரிடத்திலும் பாரபட்சமின்றி நடுநிலை வகிப்போனாக இருத்தல்வேண்டும். அவன் எல்லா மக்களின் பிரதிநிதி. தனி ஒரு கோட்பாடு கொண்டவர்களுக்கு மட்டுமல்ல. மக்களில் ஏராளமானவர்கள் தெய்வ பக்தி உள்ளவர்களாக இருக்கின்றனர். பலர் நம்பிக்கை அற்றவர்களாகவும் இருக்கலாம். இருவரிடமும் விருப்பு வெறுப்பற்ற மனமுடையனாக இருத்தல்வேண்டும். ஒரு பால் சார்ந்து மற்றவர்களைப்பற்றி நான் கவலைப்படமாட்டேன் என்ற கோட்பாடுடையவன் தேர்தலுக்கு நிற்க முடியாது. தேர்ந்தெடுத்தவுடன் இவன் எடுத்துகொள்ளும் சத்திய பிரமாணத்துக்கு மாறாக நடக்க முடியாது. ஒருவன் ஒரு சாராரைப்பற்றி, நான் கவலைப்படமாட்டேன் என்று தேர்தலுக்கு முன்னரே கூறினால், அது பட்சபாதம் உள்ள கட்சி என்று தீர்மானித்து தேர்தல் கமிஷன் அந்தக் கட்சிக்கு தேர்தலில் நிற்க அனுமதி மறுக்க விதி இடம் தருகிறது.
குடியரசு திட்ட சட்டத்தின் அடிப்படைக் கொள்கை எல்லோரையும் சமமாக நடத்தல்வேண்டும் என்பதாம். நாங்கள் ஒரு சாராரை ஒதுக்குவோம் என்பவர் பட்சபாதமாகத்தான் நடப்பர் என்பதால் அவர் மீது நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கலாம். அவன் மனதில் தூய்மை ஆனவன் அல்லன் என்பதாம். அதைத்தான் “ஆன்ம சௌசம்” என்று கல்வெட்டு கூறுகிறது. இதைத்தான் வள்ளுவர் “பற்றற்றான் பற்றினை” என்ற குறளில் கூறுகிறார்.

24. கணக்கு காட்டய்யா
சமீபத்தில் நமது இந்திய உச்ச நீதிமன்றம் ஓர் ஆணை பிறப்பித்துள்ளது. தேர்தலுக்கு நிற்பவர் தமக்கு எவ்வளவு சொத்து உள்ளது? அது அவருக்கு நேர்மையாக வந்ததா என்பதற்கு சான்றுகள் என்ன? அவர் மனைவி, மக்கள், சுற்றம், இன்னம் நெருங்கியவர்களின் சொத்துக்கள் எவ்வாறு வந்தன என்பதை தமது தேர்வு விண்ணப்பத்தில் குறிக்கவேண்டும். அது எல்லாப் பொதுமக்களுக்கும் தெரியும்வகையில் விளம்பரம் செய்யவேண்டும் என உத்திரவு இட்டுள்ளது. இது இன்னம் செயல்முறைக்கு விதியாக வரவில்லை.
கடந்த 70 ஆண்டுகளில் நமது குடியாட்சியில் இந்த மாதிரி சொத்து குவிப்பைப்பற்றி சட்டவிதி வராமல் தங்களைக் காத்துக்கொண்ட பெருமை நம்மை ஆண்டவர்களைச் சாரும். அதாவது தேர்தலில் நின்று ஜெயித்து எத்தனையோ வழிகளில் சொத்துக்களைக் குவித்தனர். தன் பெயரிலும் தன் குடும்பத்தின் பெயரிலும், சுற்றம், உற்றார் பெயரிலும், பினாமியாக எவ்வளவு வேண்டுமானாலும் குவித்துக் கொள்ளலாம். எந்தக் கணக்கும் யாருக்கும் காட்டத் தேவையில்லை என்ற சலுகையை கண்ணும் கருத்துமாக இது வரையிலும் ஆண்டவர்கள் காத்து நிறுத்தி வைத்தார்கள். அதன் விளைவு இப்பொழுது எதிலும் லஞ்சம் எங்கும் லஞ்சம் என்ற சூழ்நிலையில் சிக்கி பொதுமக்களைத் திணற வைக்கிறது.
ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தேர்தலுக்கு நிற்பவன் தனது சொத்துக் கணக்கு காட்டவேண்டும். கணக்கு காட்டாதவன் தேர்தலில் நிற்கமுடியாது என்ற விதியை உத்தரமேரூர் கல்வெட்டில் சிறப்பாகக் குறிக்கப்பட்டுள்ளது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. இது இரண்டு விதிகளால் குறிக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப் பட்டவர் தன் பதவிக்காலத்தில் என்ன என்ன பணிகள் செய்தார் என பொதுமக்களுக்கு கணக்கு காட்டவேண்டும். இரண்டாவது, தன் பதவி காலத்தில் சேர்த்த சொத்து எவ்வளவு என்றும் காட்ட வேண்டும். இது காட்டினால் ஒழிய அவர் மீண்டும் தேர்தலுக்கு நிற்கத் தகுதியற்றவர் என உத்தரமேரூர் கல்வெட்டு கூறுகிறது. ஏற்கெனவே ஒரு விதியில் தேர்தலுக்கு நிற்பவர் தன்னுடைய சொத்து நேர்மையான தொழிலாலோ பரம்பரையாலோ வந்தது எனச் சான்று காட்ட வேண்டும் என்றும் உள்ளது.

இவர் சமீபகாலத்தில் சேமித்த சொத்துக்கு கணக்குக் காட்ட வேண்டும். காட்டத் தவறினால் இவரும், இவர் சுற்றமும், உற்றோரும் தேர்தலில் நிற்கவே முடியாது என பட்டியல் இட்டே கல்வெட்டு காட்டுகிறது.
அப்பட்டியலைக் கீழே பாருங்கள்.
எப்பேர்பட்ட வாரியங்களும் செய்து கணக்கு காட்டது இருந்தான்.
எப்பேர்ப்பட்ட கமிட்டியிலிருந்தும் கணக்கு காட்டாதவன்.
எப்பேர்ப்பட்ட கையூட்டும் கொண்டான்
கையூட்டு என்றால் லஞ்சம் என்பது பொருள். அது எந்த வழியில் பெற்றிருந்தாலும் சரி அவன் தேர்தலில் நிற்க முடியாது. அதுமட்டுமல்ல அவன் உற்றார் உறவினர் யாருமே நிற்க முடியாது. அந்தத் தேர்தலில் மற்றொரு குடும்பத்தினர்தான் நிற்க முடியும். இதுபோல பலதிறப்பட்ட மக்களும் தேர்தலுக்கு நிற்க வாய்ப்பு ஏற்படுவதால் குடியாட்சி பரவலாக எல்லோராலும் அனுபவிக்கத் தக்கதாக இருந்தது. அக்காலத்தில் ஒரு குடும்பத்தின் கையில் சிக்கி நாடு அடிமையாகத் திணறவில்லை.
யாரெல்லாம் நிற்க முடியாது என்ற பட்டியலை காணுங்கள்.
1. இவர்களுக்கு சிற்றவை பேரவை மக்கள்
2. இவர்களுக்கு அத்தை, மாமன் மக்கள்
3. இவர்களுக்கு தாயோடு உடன் பிறந்தான்
4. இவர்கள் தகப்பனோடு உடன் பிறந்தான்
5. மனையாளோடு உடன் பிறந்தான்
6. மனையாளோடு உடன் பிறந்தாளை வேட்டான் ( மச்சினி பையன் )
7. இவர்களுக்கு பிள்ளை கொடுத்த மாமன்
8. தன்னோடு உடன் பிறந்தான்
9. தன்னோடு உடன் பிறந்தான் மக்கள்
10. தன் மகளை வேட்ட மருமகன்
11. தன் தகப்பன்
12. தன் மகன்
13. பிற பெண்களை பலாத்காரமாக கற்பழித்தவன்
14. எவ்வித பலாத்காரத்திலும் ஈடுபட்டவன்
15. தன் உடன் பிறந்தாளை பலாத்காரம் செய்து கற்பழித்தவன்
16. ஊரில் சாஹஸம் செய்பவன் (பொய் புனை சுருட்டு முதலிய நம்ப தகாத செயல்களில் ஈடுபட்டவன்)
17. பிறர் பொருளை அபகரித்தவன்
18. பஞ்ச மகாபாதகங்களில் ஏதாகினும் செய்தவன்
19. பிராயசித்தம் செய்து விட்டேன் என்று சொல்பவன்
20. இது போன்றோர்க்கு துணை போனவன்
21.
இப்படிப்பட்ட எவரும் தேர்தலில் நிற்க முடியாது. சுருக்கமாகக் கூறினால் ஏழு தலைமுறைக்கு இவர்களில் யாருமே தேர்தலில் நிற்க முடியாது என்று கல்வெட்டு கூறுகிறது.

இது ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய சாசனம். ஈடு இணையற்ற குடியாட்சி அரசியல் சட்டம். இதை இந்திய நாடு உலகுக்கு அளித்த பெருமை கொண்டது.
இதுதான் நமது “தேசிய குடியாட்சி முறை”. இவ்வாறு ஒரு சாசனம் இருக்கிறது என்று கண்டுகொள்ளாமல் “இறக்குமதி குடியாட்சியை” புகுத்தி, லஞ்சமும், பொய்யும், களவுமே நிறைந்த நாடாக நம்மை மாற்றியோரை என்ன சொல்ல?

இந்த விதிகளில் ஒரு சில ஆராயத்தக்கதாகும்.

நம் தொகுதிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தன் பதவி இறுதியில் என்ன செய்தார் என்று தொகுதி மக்களிடத்தில் அச்சிட்டுக் கொடுத்தல் வேண்டும். எழுத்து மூலம் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரையும் தட்டிக் கேட்கும் உரிமை மக்களிடத்தில் இருத்தல்வேண்டும். இவர்கள் சொத்துக் கணக்கையும் மக்களிடத்தில் அச்சுப் போட்டுக் கொடுக்கவேண்டும். தம்மீது எவ்வித குற்றப் பத்திரிகையும் இல்லை என்று உறுதி கூறவேண்டும். தொகுதி மக்களிடம் பட்சபாதம் இன்றி நடந்ததற்கு சான்று வேண்டும். ஒழுக்கத்தின் சிறந்தோனாக இருக்க வேண்டும். நாட்டுக்கு விரோதமான செயல்களில் ஈடுபட்டவன் யாராக இருந்தாலும் தேர்தலில் நிற்க முடியாது என்று செயல்படுத்த வேண்டும்.

கிராம கண்டகராய் இருப்பார் தேர்தலில் நிற்க முடியாது என்று கல்வெட்டு கூறுகிறது. கண்டகன் என்றால் முள் போன்றவன் என்பதாம். சுருக்கமாகச் சொன்னால் பேட்டை ரௌடிகளுக்கு தேர்தலில் கண்டிப்பாக இடம் இல்லை. ஜகஜ்ஜால புரட்டாக இருப்பவனுக்கும் இடம் இல்லை. இதைத்தான் “ஸாஹஸியராய்” இருப்பவன் என்று கல்வெட்டு கூறுகிறது.

இவ்வளவு தூய்மை உடையவர்கள்தான் பல்லவர், சோழர் காலத்தில் ஊரார்களாக, நாட்டார்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாகத் திகழ்ந்தார்கள். அதனால் வேளாண்மை சிறந்தது. பொருளாதாரம் சிறந்தது. கல்வி சிறந்தது. கலை சிறந்தது. வியத்தகும் கட்டடங்கள் எழுந்தன. குடியாட்சி என்பது வலுவுள்ள, பரவலான, சக்தியாகத் திகழ்ந்தது. எவ்வளவு ஆற்றல் உடையாரே ஆயினும், குறிப்பிட்ட கால கெடுவுக்குப் பின் மற்றவர்க்கு இடம் கொடுத்து விலக வேண்டும் என திட்டவட்டமாக நம் மக்கள் ஆண்டனர். வெள்ளைக்காரன்கூட நம் ஊர்களில் இருந்த மரபுகளைக்கண்டு வியந்திருக்கிறான்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard