4. சூடிக்கொடுத்த சுடர்கொடி கண்ட கனா சிலப்பதிகாரப் பாடலைத் தொடர்ந்து, தமிழர் திருமண விழாவை அறிய சூடிக் கொடுத்த சுடர் கொடியாம் ஆண்டாள் பாசுரங்கள் பெரிதும் உதவுகின்றன. ஒவ்வொரு கண்ணியின் இறுதியிலும் “கனாக் கண்டேன் தோழி” என்ற இனிய தொடர்கொண்டு அமைந்த பாடல் இன்றும் தமிழர் மனங்களில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இனிமையாகப் பாடப்பட்டு வருகிறது. ஆண்டாள் கூறும் திருமணம்: யானைகள் நகரை வலம் வர, நம்பியை பூரண பொற்குடங்களை ஏந்தி எதிர்கொண்டு அழைக்கின்றனர். எங்கும் தோரணங்கள் கட்டி அலங்கரித்துள்ளனர். இது மாப்பிள்ளையை வரவேற்றல். வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து, நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர், பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும், தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்! நாளை மணநாள். மணப்பந்தலை பாளைகளாலும், கமுகு, வாழை மரங்களாலும் அலங்கரித்துள்ளனர். அந்தப் பந்தலின் கீழ் தலைமகன் நுழைகின்றான். இது மணநாளுக்கு முதல் நாள் மாப்பிள்ளை அழைப்பு. நாளை வதுவை மணம் என்று நாளிட்டு, பாளை கமுகு பரிசடைப் பந்தற் கீழ், கோளரி மாதவன் கோவிந்தன் என்பான், ஓர் காளை புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்! மணநாளன்று இந்திரன் முதலிய தேவர்கள் எல்லாம் வந்து மந்திரங்கள் கூறி வாழ்த்தி, இப்பெண்ணைக் கொடுக்கப் பேசி (மகள் பேசல்), மந்திரம் கூறிக் கோடி புடவை கொடுத்து, மணமாலை மற்றும் அணிகலன்களால் அலங்கரித்து நெற்றிச்சூடகம் முதலிய சூடுகின்றனர். இது மணமகள் அலங்காரம். இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம், வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து, மந்திரக் கோடியுடுத்தி மண மாலை, அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழி நான்! நாற்றிசையிலும் இருந்து கொண்டுவந்த புனித நீரால் பார்ப்பன சிரேஷ்டர்கள் மறை ஓதி நீர் தெளித்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கண்ணியை தலைமகன் சூடியிருக்க இருவருக்கும் கையில் காப்பு கட்டுவர். நாற்றிசைத் தீர்த்தங்கொணர்ந்து நனி நல்கி, பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி, பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னை, காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழி நான்! கையில் தீபமும் கலசமும்கொண்டு இளமங்கையர்கள் எதிர்கொள்ள மதுரை மன்னன் (தலை மகன்) சிறந்த ஆரவாரத்துடன் பந்தலில் புகுவான். அப்போது மத்தளம் கொட்டிற்று. வரிசங்கம் ஊதப் பட்டது. பெண்ணின் கைத்தலம் பற்றினான் (இது பாணிக்ரஹனம்).
கதிரொளி தீபம் கலசம் உடன் ஏந்தி, சதிரிள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள, மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்!
மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத, முத்துடைத் தாம நிரை தாழ்ந்த பந்தற் கீழ், மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து, என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்! அவ்வமயம் வேதம் ஓதும் அந்தணர்கள் (வாய் நல்லார்) மந்திரங்கள் ஓத. பசும் இலை (தர்ப்பை புல்) பரப்பி, தீ வளர்த்து தலைமகன் பெண்ணின் கையைப் பற்றிக்கொண்டு தீயை வலம்வருவர் (அக்னியை வலம் வந்து அவள் சாட்சியாக இப்பெண்ணை மணக்கிறேன் என்று வாக்கு கூறி மணக்கிறான்). இதை “தீ வலம்வருதல்” என்று பெயர். அக்னி தூய்மையின் சின்னம். இவ்வுலகிற்கு முழுவதும் தூய்மைக்கு அக்னிதான் அதிபதியாக உள்ளான். அவன்தான் தலையாய இம்மணவிழாவுக்கு தெய்வ சாட்சி. வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால், பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து, காய்சின மாகளி றன்னான் என் கைப்பற்றி, தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்! இப்பிறப்பிலும் அடுத்தும் வரும் ஏழேழ் பிறவிக்கும் இவளைக் காப்பேன் என்று கூறும் அவன் அப்பெண்ணின் காலைப்பற்றி, அம்மிக்கல்போல் நமது மணவினை உறுதியாக நிலைத்து நிற்கும் என்பதை விளக்கும் விதமாக அம்மி மிதிக்கச் செய்து அழைத்து வருவான். ஆண்மகன், மணந்தவுடன் முதன் முதலில் காலைப் பிடிப்பது தன் மனையாளின் காலைத்தான். இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான், நம்மை உடையவன் நாராயணன் நம்பி, செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி, அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான்! இதை அடுத்து பெண்ணின் அண்ணன்வந்து அக்னியை நோக்கச் செய்து, அவள் கையை அவன் கை மேல் வைத்துபொரி கொடுத்து அதை தீயில் போடும்படிக் கூறுவான். இதை “லாஜ ஹோமம்” என்றும் “பொரி ஹோமம்” என்றும் கூறுவர். வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம் வந்திட்டு எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி, அரிமுகன்அச்சுதன் கைம்மேலென் கைவைத்து, பொரிமுகந் தட்டக் கனாக் கண்டேன் தோழி நான்! அதன்பின் பெண்ணுக்கு குங்குமம் இட்டு, சந்தனம் பூசி, அவர்களை வீதி வலம் செய்து, யானை மேல் சென்று மஞ்சனம் ஆடுவது மரபு. குங்குமம் அப்பிக் குளிர்ச் சாந்தம் மட்டித்து, மங்கல வீதி வலம் செய்து மண னநீர், அங்கவனோடு முடஞ்சென்றங் கானைமேல், மஞ்சன மாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்! சொல்நயமும் பொருள் நயமும் கவிநயமும் கொண்ட இன்பம்தரும் இந்தப் பாடலால் ஒரு கற்புத் திருமணத்தைக் காட்டுகின்றாள் “சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாள்”. தமிழர் திருமணத்தை சடங்குகளை எழிலுற, படிப்படியாக ஓர் ஒப்பற்ற பாடலாக, ஒவ்வொரு சடங்கையும் “கனாக் கண்டேன் தோழி நான்” என்று தமிழர் திருமண முறையைக் காட்டியுள்ளார். 1200 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் தமிழ்மக்கள் தங்கள் பெண்களுக்கு மணவிழா செய்யும்போது எல்லோரும் கூடி மகிழ்கிறார்கள். மணவிழாவில் எங்கும் அய்யர் வேதமந்திரத்துக்கு சமமாக பாடப்படும் பாடல் இது. இதனை தமிழர் மணவிழா மந்திரம் என்றே கூறலாம்.