3. காலம்தோறும் தமிழர் திருமணம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர் திருமணம் வேதநெறிப்படி நடந்தது என்பதை தொல்காப்பியம் மற்றும் அகநானூறு, நற்றிணை, கலித்தொகை, குறிஞ்சிப்பாட்டு முதலிய பாடல்கள் மூலமும் அவற்றுக்கான உரையாசிரியர்களின் எழுத்திலும் காண்கிறோம். இதே மரபுகள் காலம்தோறும் வேதநெறியைப் பின்பற்றி இன்று வரையும் தமிழ் மக்கள் பின்பற்றி நடாத்துகிறார்கள். இந்த மரபினை சிலப்பதிகாரம், கம்பராமாயணம், ஆண்டாள் பாசுரம் வழியாக இங்கே காண்போம். சிலப்பதிகாரத்தில், கோவலன் - கண்ணகி மணவிழாவை மங்கல வாழ்த்துக் காதையில் விரிவாக இளங்கோவடிகள் பாடியுள்ளார். புகார் நகர் வாணிகன் மாநாயக்கனின் மகள் கண்ணகி. அவள் வயது பன்னிரண்டு. கோவலனின் தந்தை மாசாத்துவானும் செல்வவணிகன். கோவலன் வயது பதினாறு. இரு குடும்பத்தினரும் ஒரு நல்ல நாளில் மணவிழா நிகழ்த்த நாள் குறித்து, திருமணத்தின் தொடக்கமாக இளம்பெண்களை யானையின் மீது அமரச்செய்து மத்தளம் கொட்டி, முரசு எழுப்பி, நகர்வலம் வந்து, கண்ணகி கோவலன் திருமணச் செய்தியை அறிவிக்கின்றனர்.
மங்கல அணி நகரில் வலமாக வந்தது என்பதை மங்கலசூத்ரம் நகர் வலமாக எடுத்து வரப்பட்டது என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர். மகளிரை யானைமேல் ஏற்றி வலம் வந்து அறிவித்தல் மரபு என்கிறார் அடியார்க்கு நல்லார். கண்ணகியைக் கூறுமிடத்து கற்பில் அருந்ததி போன்றவள் என்றும் அருங்குணத்தாள் என்றும், ஆன்றகுடி வழி நிற்போள் என்பதையும் குறிப்பாகக் காட்டுவார். அதேபோல் கோவலனைக் கூறும்போது “காதலால் கொண்டேத்துங் கிழவன்” என்று இளங்கோ கூறுகிறார். கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமண விழாவினை மிக எழிலாக இளங்கோ படைத்துள்ளார். பின்வரும் காட்சிகள், கவிநயம் மிகுந்தவை. தமிழர் மரபையும் காட்டுபவை. மாலை தாழ் சென்னி வயிர மணித் தூண் அகத்து, நீல விதானத்து, நித்திலப் பூம் பந்தர்க் கீழ், வான் ஊர் மதியம் சகடு அணைய, வானத்துச் சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன், மா முது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை! “காதலற் பிரியாமல், கவவுக்கை ஞெகிழாமல், தீது அறுக!” என ஏத்தி, சின்மலர் கொடு தூவி, அங்கண் உலகின் அருந்ததி அன்னாளை மங்கல நல்அமளி ஏற்றினார் அன்று நடந்த திருமணத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறார். நீல விதானத்து நித்திலப் பூம்பந்தலின் கீழ் முதிய பார்ப்பான் மறைவழி காட்டிட தீ வலம் செய்து மணம் முடிக்கின்றனர். தமிழர் தம் மணவிழா முத்துப்பந்தல் கீழ் அலங்கரிக்கப்பட்ட மணப்பந்தலின் கீழ் நடைபெற்றதும், வேதம் கற்றறிந்த அந்தணர் வேதநெறிப்படி மணவினை நடத்தி வைத்தனர் என்பதையும் இவை தமிழர் வாழ்வியல் மரபாக இருந்ததையும் காண்கிறோம். இந்நாளிலும் மணப்பந்தலை அவரவர் சக்திக்கேற்ப அலங்கரித்து, மலர்கள், நறும்புகைகள், அந்தணர் மறைவழி காட்டிட மங்கலக்கயிற்றை மணமகள் கழுத்தில் கட்டுதல் போன்றவை தமிழகத்தில் வீடு தோறும் நடைபெறுகின்றன. மணவிழாவில் கூடியிருந்த அனைவரும் காதலர் இருவரும் பிரியாமல், பற்றிய கைகள் நழுவாமல் தீது அறுக என்று வாழ்த்துகின்றனர். மலர்களையும் அட்சதையையும் மணமக்கள்மீது தூவுகின்றனர். அவ்வாறாக அருந்ததி போன்ற கண்ணகி திருமணத்தை நடத்தினர் என்கிறார் இளங்கோ அடிகள். கோவலன், கண்ணகியைக் கைப்பிடித்தான் என்பதை “கவவுகைப் பிடித்து” என்கிறார். இதை தமிழ் இலக்கண நூல்கள் கைக்கோள் என்றும் “கற்பு” என்றும் கூறினர். வேதநெறியில் இதை “பாணிக்ரஹனம்” என்கின்றனர். அதனால் தமிழ்த் திருமணங்களில் நல்லநாள், நட்சத்திரம் பார்த்தல், மறைவழியில் (வேதமரபில்) தீ வலம் வருதல், நோன்பு முடித்தல், கைத்தலம் பற்றல், உன்னை பிரியேன் என்று உறுதி கூறி மணத்தல் எல்லாமும் அன்றும் இன்றும் மாறவில்லை.