தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 00 செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி நூல் - அணிந்துரை அறிமுகவுரை


Guru

Status: Offline
Posts: 1049
Date:
00 செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி நூல் - அணிந்துரை அறிமுகவுரை
Permalink  
 


செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி நூல்
பொருளடக்கம் | அணிந்துரை | அகெடமி
________________________________________
தமிழின் தோற்றம் குறித்து வரலாறு என்ன சொல்கிறது? இலக்கிய, இலக்கணத் தரவுகள் கொண்டு செந்தமிழ்நாட்டை வரையறை செய்வது சாத்தியமா? தமிழைத் திராவிட மொழி என்று அழைக்கலாமா? சமஸ்கிருதமும் இந்தியும் தமிழுக்கு எதிரானவையா? வடமொழிக் கலப்பற்ற தூயத் தமிழ் என்றொன்று எப்போதேனும் இருந்திருக்கிறதா? வேத பண்பாடும் தமிழ்ப் பண்பாடும் எதிரெதிரானவையா?
வரலாற்றை அவ்வப்போது மீள்பார்வை பார்க்க வேண்டியது அவசியம். புதிய ஆய்வுகளின் ஒளியில், புதிய புரிதல்களின் அடிப்படையில் திரிபுகளைச் சரி செய்வதும் இடைவெளிகளை நிரப்பவதும் முக்கியம். அவ்வாறு செய்வது கடந்த காலத்துக்கு மட்டுமல்ல எதிர்காலத்துக்கும் நல்லது.
அந்த மகத்தான பணியைத்தான் தன் வாழ்நாள் எல்லாம் செய்து வந்திருக்கிறார் உலகப் புகழ்பெற்ற தொல்லியல் அறிஞர் இரா. நாகசாமி. சங்ககாலம் தொடங்கி சமீபத்திய காலம்வரை பல்வேறு தலைப்புகளில் 'தினமலர்' இதழில் அவர் எழுதி வந்த குறிப்பிடத்தக்க கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். வரலாறு, இலக்கியம், இலக்கணம், தொன்மம், பண்பாடு, மதம், மொழி, சமூகம் என்று பல விரிவான தளங்களில் பயணம் செய்வதோடு அவற்றையெல்லாம் ஒரு புள்ளியில் இணைத்துப் புதிய தரிசனங்களையும் அளிக்கிறது இந்நூல்.
தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் கடந்த காலத்தை நடுநிலையோடும் அறிவியல் நோக்கோடும் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்கும் இது ஒரு பொக்கிஷம்.
கிழக்கு பதிப்பகம்
செந்தமிழ் நாடும் பண்பும் இரா. நாகசாமி கிழக்குப் பதிப்பகம் 2021
அணிந்துரை
அறிமுகவுரை
1. செந்தமிழ் நாடும் பண்பும்
2. களவும் கற்பும்
3. சங்ககால தமிழர் திருமணம்
4. காலம்தோறும் தமிழர் திருமணம்
5. சூடிக்கொடுத்த சுடர்கொடி கண்ட கனா
6. அழகுக்கு அழகு செய்தான்
7. சேக்கிழார் சித்திரிக்கும் தமிழர் திருமணம்
8. தொல்காப்பியமும் தமிழர் வாழ்வும்
9. தொல்காப்பியமும் பரத சாஸ்திரமும்
10. புறத்திணை என்னும் நாடக வழக்கு
11. புறத்திணையும் நாட்டிய வழக்கே!
12. நடுகல் மரபு: உலகியல் மரபும் நாடக மரபும்
13. தொல்காப்பியர் கூறும் அட்டாங்க யோகம்
14. சமஸ்க்ருதத்தால் வளம் பெற்றது தமிழ்
15. ப்ராக்ருதமும், தமிழும், சமஸ்க்ருதமும்
16. சங்கத் தமிழகத்தில் அந்தணர்கள்
17. உணவெனப்படுவது நிலத்தொடு நீரே
18. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
19. கௌதம புத்தர் போதித்தது யோகமார்க்கம்
20. தருமம் தலை காக்கும்
21. இராமன் வழி வந்தவர்கள் சோழ மன்னர்கள்
22. இந்திய நாட்டின் முதல் அரசியல் சாஸனம்
23. உத்தரமேருர் கல்வெட்டு
24. கணக்கு காட்டய்யா
25. கிராமப்புற சுயாட்சி
26. ஊர் - நாடு - அரசு
27. கொடி கட்டிப் பறந்த குடியாட்சியும்,
28. இந்திர விழா
29. தமிழகம் தடம் புரண்டது 1750-1850
30. ‘திப்பு’ எத்தனை திப்பு சுல்தான்களடி!
31. வேலூர் சிப்பாய் எழுச்சி
32. தானமும் தாசிகளும்
33. பெயரை மாற்றவா? திருத்தவா?
34. வள்ளுவரும் பதஞ்சலி முனிவரும்
35. பீகாரில் ஓர் ஆயிரத்தளி
36. நால் வேதமும் தமிழ் வேதமும்

அணிந்துரை
பொருளடக்கம் | நூல் | அறிமுகவுரை | அகெடமி
________________________________________
அன்பான வாசகர்களுக்கு,
வரலாற்றை மீள்பார்வை செய்வதென்பது நிகழ்கால வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்று. கடந்த காலத்தின் அறிவையும் அனுபவத்தையும் திரும்பிப் பார்க்கின்றபோது, மானுடத்தின் பெருமையும் அதன் தவறுகளும் சேர்ந்தே புலப்படும். அத்துடன், இதுநாள்வரை நம்மிடம் சொல்லப்பட்டு வந்திருக்கின்ற வரலாற்றுத் திரிபுகளும் அம்பலமாகும்.
இத்தகைய வரலாற்றுத் திரிபுகளை அவ்வப்போது அம்பலப்படுத்தி, சமூகம் தடம் மாறாமல் செல்வதற்கு வழிகாட்டுபவர்கள் காலம் தோறும், அடர்வனத்தில் ஒற்றையடிப்பாதைபோல, நமக்கு மௌனமாக வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய தமிழ்ச்சமுதாயத்தில் அத்தகைய வழிகாட்டிகளில் ஒரு நூறு பேரை பட்டியலிட்டால், அதில் இடம்பெறும் சான்றோர்களில் ஒருவராக இருப்பவர் - தொல்லியல் அறிஞர் பத்மபூஷண் இரா. நாகசாமி அவர்கள்.
தமிழ்கூறும் நல்லுலகுக்கு அவர் செய்துள்ள சேவை அளப்பரியது. இன்றைய தலைமுறை அறியாதது.
கொடுமுடியில் சிறிய பள்ளியில் படித்து, சென்னை விவேகானந்தர் கல்லூரியில் முதுநிலை பட்டம் பெற்று, புனே பல்கலைக்கழகத்தில் இந்தியக் கலை வரலாறு பற்றிய ஆய்வுக்கு டாக்டர் பட்டம் பெற்றவர். 1959 ம் ஆண்டு சென்னை அருங்காட்சியத்தின் கலைத்துறை தலைவராக பணியாற்றியபோது, முதல்முறையாக சுப்ரமண்ய பாரதியாரின் கவிதைகளின் மூலப்பிரதிகளை மக்கள் பார்வைக்கு வைத்தார். எட்டயபுரம் பாரதியாரின் வீடு நினைவுக்கூடமாக மாறியது இவரது முயற்சியால்தான்.
1963 பிரிட்டிஷ் கவுன்சில் அழைப்பை ஏற்று தொல்லியல் ஆய்வு படிக்க இங்கிலாந்து சென்றவர், பாரீஸ், லண்டன் அருங்காட்சியங்களைப் பார்த்தவர் என்பதால், மதுரை நாயக்கர் மகாலில் அரசு அலுவலகம் இயங்குவதைவிட, அதை நினைவு மண்டபமாக மாற்றி, தமிழக வரலாற்றை வெளிப்படுத்தலாம் என்ற யோசனையை அரசுக்குத் தெரிவித்தார். அன்றைய முதல்வர் பக்தவத்சலம் உடனே அதை நிறைவேற்றினார். இன்றளவும் மதுரை நாயக்கர் மகால் ஒரு நினைவுக்கூடமாகத் திகழ்கிறது.
இப்போது சிதம்பரத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை அறிமுகம் செய்தவர் இவர்தான். சுந்தரமூர்த்தி நாயனார் நாடகத்தை பிரிட்டிஷ் மியூசியத்தில் நடத்தியவர்.
தமிழக அரசு தனியாக ஒரு தொல்லியல் துறையை உருவாக்கிய போது அதற்கு தலைமை ஏற்றார். தமிழ் கல்வெட்டுத் துறையை உருவாக்கினார். தமிழ்க்கல்வெட்டியல் இன்றைய தினம் இளநிலை பாடத்திட்டமாகவே உள்ளது.
1960களில் தமிழர்களின் கோயில் கட்டடக் கலை குறித்து, ஒரு கண்காட்சியை நடத்தினார். இந்த கண்காட்சி, மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் ஓர் அரங்காக அமைந்து, பாராட்டுகள் பெற்றது.
பத்தூர் நடராஜர் சிலையை லண்டனில் இருந்து மீட்டு வந்த வழக்கில் அரசு சார்பில் இவர் அளித்த சாட்சி வரலாற்றுப் பூர்வமானது. நீதிபதி அயான் கென்னடி என்பவர் தனது தீர்ப்பில், “இந்திய கலைச் செல்வங்களைக் கண்டறிவதில் ஈடுஇணையற்ற வல்லுனர்” எனப் பாராட்டி, இவரது சாட்சியத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழக்கினார். இன்றும்கூட வெளிநாடு கலைச்செல்வம் திரும்பி வர, சிலைத்திருட்டுத் தடுப்பு மற்றும் மீட்புத் துறைக்கு அறிவுரை, சான்றுகள் கொடுத்து வருகிறார்.
மாமல்லபுரம் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரையும் அயோத்தி ராமர் கோயில் பற்றிய இவர் எழுதிய கட்டுரைகளும் உலக தொல்லியல் அறிஞர்களால் பாராட்டப்பட்டவை. யுனெஸ்கோ சார்பில் தஞ்சைப் பெருங்கோவில் பற்றிய ஆவணப்படம் எடுக்கப்பட்டபோது இவரைத்தான் ஆலோசகராக நியமித்தனர். தமிழகத்தில் கிராம தேவதை வழிபாடு பற்றி இவர் எழுதிய கட்டுரை, யுனெஸ்கோ கூரியர் இதழில் வெளியாகி, 30 மொழிகளில் உலகம் முழுதும் சென்று சேர்ந்திருக்கிறது.
தமிழக சிற்பங்கள், கோயில்கள் குறித்து இவர் நிறைய நூல்கள் எழுதியுள்ளார். சென்ற ஆண்டு “Tamil Nadu - The Land of Vedas” என்ற புத்தகத்தை வெளியிட்டார். இதை “வேதம் நிறைந்த தமிழ்நாடு” என்று தமிழிலும் கொண்டு வர முயன்று வருகிறார். 90 வயதான போதும் ஓர் இளைஞனின் உத்வேகத்துடன் எழுதி வருகிறார்.
“செந்தமிழ் நாடும் பண்பும்” என்ற இந்நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும், தமிழர் பெருமையையும், மறக்கப்பட்ட, மறைக்கப் பட்ட தமிழர் வாழ்வியல் மற்றும் இலக்கிய உண்மைகளையும் பேசுகின்றன.
திரு. இரா. நாகசாமி அவர்களது கட்டுரைகளை, தொடர்ந்து தினமலரில் வெளியிட்டதை எமக்குக் கிடைத்த வாய்ப்பாகவும், கடமையாகவும், நற்பேறாகவும் கருதுகிறோம்.
திரு கோபால்ஜி
நிர்வாகி, தினமலர்
அறிமுகவுரை
இந்நூலில் 36 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தினமலர் நாளிதழில் பல காலகட்டங்களில் வெளியிடப்பட்டவை.
இதுபோன்ற கருத்துகள் தமிழ் மக்களைச் சென்றடைய வேண்டும் என்றும் அவை தினமலர் நாளிதழில் இடம்பெற வேண்டும் என்றும் எனக்கு ஊக்கமளித்து, தொடர்ந்து எழுதும்படி உற்சாகமூட்டிப் பெருமைப்படுத்திய நிர்வாகி திரு. கோபால்ஜி அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரே இந்தக் கட்டுரைகளின் தொகுப்பை ஒரு நூலாக வெளியிடவும் ஏற்பாடு செய்துள்ளார். 'யான் இதற்கு இல்லேன் ஓர் கைம்மாறே'.
நான் எழுதியவற்றை, வாரம்தோறும் பிழையின்றி மின்அச்சு செய்து உதவிய என் நண்பர் முரளி அவர்களுக்கு நன்றிகள். வாரம் தோறும் தவறாது இக்கட்டுரைகளை கேட்டுப் பெற்று, அதற்கு மேலும் சிறப்பூட்டும் வகையில் உரிய ஓவியங்களை தேர்வு செய்து, வடிவமைத்த தினமலர் ஆசிரியர் குழுவினருக்கும் என் நன்றிகள். இந்நூலில், முதலில் செந்தமிழ்நாடு எனில் யாது என பண்டைய இலக்கண ஆசிரியர்களின் உரை கொண்டும், வரலாற்றுத் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையிலும் காவிரி பள்ளத்தாக்கு என காட்டியுள்ளேன்.
தமிழ் மக்களின் திருமண மரபு தொன்றுதொட்டு இன்றுவரை எவ்வாறு உள்ளது என்பதை இலக்கிய சான்றுகளுடன் அன்றிருந்த அறிஞர், தெய்வப்புலவோர் வாயிலாக நாட்டியுள்ளேன். சங்க காலந்தொட்டு தமிழ்த் திருமண மரபு வேதமுறைப்படி நடந்து வந்துள்ளது என்பதைக் காட்டியுள்ளேன்.
தொல்காப்பியத்துக்கும் பரத முனிவரின் நாட்டிய சாத்திரத்துக்கும் உள்ள தொடர்பைத் தெளிவுபடுத்தியுள்ளேன். அதேபோல தொல்காப்பியத்தில் பதஞ்சலி முனிவரின் யோக மார்க்கமும் கௌதம புத்தர் போதித்த யோக சாத்திரத்தையும் குறித்து விளக்கியிருக்கிறேன்.
ஈராயிரம் ஆண்டுகளாக, தமிழகத்தை அறநெறிப்படுத்தும் நூலாக மனுவின் தர்மசாத்திரம் இருந்து வந்திருப்பதை பெரியபுராணத்தின் வாயிலாகவும், திருவாரூரில் நீதிகேட்ட பசுவுக்கு கோயில் எடுத்த இரண்டாம் குலோத்துங்க சோழனையும், மனு நெறி தழைத்தோங்க அவர்கள் ஆண்ட சீர்மையை சோழர்கால கல்வெட்டுகள் வாயிலாகவும் விவரித்துள்ளேன். தமிழ் மக்களின் அன்றைய ஏற்றத்தையும் வாழ்க்கை நெறியையும் விளக்கும் இக்கட்டுரைகள், பொய்யுரை கேளாது மெய்யுரை விரும்பும் அன்பர்களுக்கு பயனளிக்கும் என்ற எண்ணத்துடன், 90 வயது கடந்த எனது அனுபவங்களின் அச்சு வடிவமாக வெளிவருகிறது.
இரா. நாகசாமி
பெசன்ட் நகர், சென்னை



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard