தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருவள்ளுவமாலை 46 - 50


Guru

Status: Offline
Posts: 898
Date:
திருவள்ளுவமாலை 46 - 50
Permalink  
 


திருவள்ளுவமாலை - 46:அக்காரக்கனி நச்சுமனார் - 46 Akkaarakkani Nacchumanaar
கலைநிரம்பிக் காண்டற்கு இனிதாகிக் கண்ணின்
நிலைநிரம்பு நீர்மைத்து எனினும்- தொலைவிலா
வானூர் மதியம் தனக்குண்டோ வள்ளுவர்முப்
பானூல் ந்யத்தின் பயன்.
மதியமும் முழுமதியும் முப்பால் நூலும் முறையே பதினாறு கலைகளாலும் அறுபத்துநான்கு கலைகளாலும் நிறைந்து காண்பதற்கும் ஆராய்ச்சி செய்வதற்கும் இனிதாகி, நம் முகப் புறக் கண்ணிற்குத் தண்மையும் அகக்கண்ணிற்குப் பண்பும் உடையது ஆயினும், திருவள்ளுவரின் முப்பால் நூலால் விளையும் பயன் அந்த நிலாவின் இடத்திடம் உண்டோ?

-ள். கலை நிரம்பிக் காண்டற்கு இனிதாகிக் கண்ணி னிலை நிரம்பு நீர்மைத்து எனினும்- மதியமும் முப்பா னூலும் பதினாறு கலைகளாலும் அறுபத்து நாலு கலைகளாலும் நிறைந்து, காண்டற்கு இனிதாகி-ஆராய்ச்சி செய்தற்கு இனிதாகி, கண்ணின் நிலை நிரம்பும் நீர் மைத்து எனினும் - முகக் கண்ணி னிலையில் அகக் கண்ணி னிலையில் நிரம்புகின்ற தன்மை யுடைத்தாயினும், குண முடைத் தாயினும், வள்ளுவர் முப்பா னூல் நயத்து இன் பயன் தொலைவு இலா வான் ஊர் மதியந் தனக்கு உண்டோ- திருவள்ளுவரது முப்பா னூலினது நயத்தால் விளைவதாகிய இனிய பயனானது ஒழிவின்றி ஆகாசத்தின்கண்ணே திரிகின்ற மதியினிடத்து உண்டோ?

மதியந் தனக் கென்றது வேற்றுமை மயக்கம். 'ஓகாரம்' எதிர்மறை.

ஆதாரமாகக் கொள்ளுதற்கு ஏற்புடைத் தல்லாத வானை ஆதாரமாகக் கோடலின், இழிவு தோன்றத் தொலை விலா வானூர் மதிய மென்றார். நயம் - மறுப்படாமை, மழுங்காமை, குறைவுறாமை முதலியன. பயன்- இம்மை மறுமை வீட் டின்பங்கள்.

ஒப்புமை சொல்லுதற்கு நூல்களில் ஒன்றும் இன்மையால், ஏனைப் பொருள் பலவற்றினுஞ் சிறந்த மதியை யாயினும் சொல்லுதுமெனப் புகின் அதுவும் இதனாற் றகுவ தன் றென்ற படி.(௪௰௬)

(கு-உ) கலைநிரம்பி- கதிர்நிறைந்து. கண்ணின் நிலை-கண்ணால் பார்க்கும் நிலையில். நிரம்பும் நீர்மைத்து- நிறைந்திருக்கும் தன்மையுடையது. தொலைவுஇலா- அழிவில்லாத. வான்- வானம். “வள்ளுவர் முப்பால் நூல் நயத்தினால் வரும் வயன் தொலைவுஇலா வான்ஊர் மதியம் தனக்கு உண்டோ” என்று மாற்றிப் பொருள் கொள்க.



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை - 47:நப்பாலத்தனார் - Nappaalatthanaar
அறம் தகளி ஆன்ற பொருள் திரி யின்பு
சிறந்தநெய் செஞ்சொல் தீத் தண்டு-குறும்பாவா
வள்ளுவனார் இயற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள் இருள் நீக்கும் விளக்கு.
திருவள்ளுவர் அறத்தை அகலாகவும், பொருளைத் திரியாகவும் இன்பத்தை நெய்யாகவும், சொல்லை நெருப்பாகவும், குறட்பாவைத் தண்டாகவும் கொண்டு, உலகத்தோரின் உலகத்தோரின் மனத்து இருளை நீக்கும் விளக்கை ஏற்றினார்.

-ள். அறம் தகளி - தருமம் அகலும், பொருள் திரி-பொருள் திரியும், இன்பு நெய்-காமம் நெய்யும், செஞ் சொல் தீ-செவ்விய சொல் நெருப்பும், குறும் பாத் தண்டா - குறட் பாத் தண்டும் ஆக, வள்ளுவனார் வையத்து வாழ்வார்கள் உள் ளிருள் நீக்கும் விளக்கு ஏற்றினார் - திருவள்ளுவ நாயனார் பூமியின்கண் வாழ்வோரது அகத் திருளை ஒழிப்பதாகிய விளக்கு ஏற்றினார்.

ஆன்றல் - மேம்படுதல். அகத் திருள் - அஞ்ஞானம். தீச் சுடர், தகளி, முதலியவற்றோடு கூடிப் புறத் திருளை எப்படியோ, அப்படி நாயனாரது திருவாயிற் பிறந்த செஞ்சொல், அறம், முதலியவற்றோடு கூடி அகத் திருளைக் கெடுத்தலின், இங்ஙனம் உருவகஞ் செய லாயிற்று. மனையகத் தேற்றப்படுகிற விளக்கு அம் மனையகத் துள்ளார்க்கு மாத்திரமே உபயோகியாய் நிற்றலாலும், அகத் திருளைக் கெடுக்க வல்ல தன்மையாலும், இஃது உலகத்து வாழ்வோர் பலர்க்கும் உபயோகியாய் நிற்றலாலும், அகத்திருள் கெடுத்தலாலும், அதனின் இது பல கோடிமடங்கு மிக்குச் சிறந்து நிற்கின்றமை உணர்த்திய படி.(௪௰௭)

 

 

(கு-உ) திருக்குறள் மக்கள் மன இருட்டை நீக்கும் விளக்காகும். அறம் அகல்; பொருள்திரி; இன்பம் நெய்; செஞ்சொல் தண்டு; குறள்வெண்பா தீ. இவ்வாறு அமைந்தது திருக்குறள் விளக்கு. ஆன்ற-சிறந்த. ‘செம்சொல் தண்டு; தீ குறும்பாவா’ என்று மாற்றிப் பொருள் கொள்ளுக.



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை - 48:குலபதிநாயனார் -Kulapathi Naayanaar
உள்ளக் கமலம் மலர்த்தி யஉளத்துள்ள
தள்ளற்கு அரிய இருள் தள்ளுதலால்-வள்ளுவனார்
வெள்ளைக் குறட்பாவும் வெங்கதிரும் ஒக்கும் எனக்
கொள்ளத் தகும் குணத்தைக் கண்டு.
மனித நெஞ்சம் ஆகியத் தாமரை மலரைத்தி விரியச் செய்து மக்களது அகத்தில் உள்ள அஞ்ஞான இருளை நீக்குதலால் வள்ளுவனார் திருக்குறளும்; தன் வெப்பக் கதிரால் குளத்தில் உள்ள தாமரை மலரை மலர்த்தி விரிக்கின்ற சூரியன் செய்வதால் -இந்தச் செய்கையை கொண்டு ஒக்கும் என்று கொள்ளத்தகும்

-ள். உள்ளக் கமலம் மலர்த்தி உளத்து உள்ள தள்ளற்கு அரிய இருள் தள்ளுதலால் - நெஞ்சமாகிய தாமரை மலரை மலர்த்தி மக்களது அகத்தி லுள்ள பிறி தொன்றனாலே நீக்கப்படாத அஞ்ஞான விருளை நீக்குதலால், வள்ளுவனார் வெள்ளைக் குறட்பாவும் வெங் கதிரும் குணத்தைக் கொண்டு ஒக்கும் எனக் கொள்ளத் தகும்-திருவள்ளுவரது குறள் வெண்பாவும் புறத்துத் தாமரை மலரை மலர்த்திப் புறத் திருளை நீக்குகின்ற சூரியனும் அச் செய்கையைக் கொண்டு ஒக்கு மென்று கொள்ளத் தகும்.

செயலும் தொழிற் பண் பெனப்படுதலின், குண மெனப் பட்டது; அது மலர்த்தலும் தள்ளுதலு மாம். குணத்தைக் கொண்டெனவே, செயப்படு பொருளைக் கொண்டு ஒக்கு மெனக் கொள்ளத் தகா தென்ற தாயிற்று. உலகுக் கெல்லாம் பே ரொளியாகிய சூரியனும் இதற்கு ஒரு புடை யொப்பா மென்ற படி.(௪௰௮)

(கு-உ) குறளும் சூரியனும் ஒரு தன்மையுடையன என்று கூறுகிறது இச்செய்யுள். தள்ளற்கு அரிய இருள்- நீக்க முடியாத அறியாமை என்னும் இருட்டை. வெள்ளைக்குறட்பா- குறள் வெண்பா.



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை - 49:தேனீக் குடிக்கீரனார் -Thaenee Kudikkeeranaar
பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் அல்லாத
மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே-முப்பாலில்
தெய்வத் திருவள்ளுவர் செப்பிய குறளால்
வையத்து வாழ்வார் மனத்து.
தெய்வத்தின்மையை உடைய திருவள்ளுவ நாயனார் முப்பால் என அறம்-பொருள்-இன்பம் என்ற மெய்யியல் நூலை கற்று/கேட்டு அறிவதால் இந்த உலகத்தில் வாழ்வோர் மனதினுள் இருந்த பொய்யின் பகுதியில் பட்டவை எல்லாம் பொய்யாகவே போயின; கசடற கற்றவர்கள் பொய் இல்லாத மெய்களை மெய் என உணர்ந்து கொண்டனர்

-ள். தெய்வத் திருவள்ளுவர் முப்பாலிற் செப்பிய குறளால்-தெய்வத் தன்மையை யுடைய திருவள்ளுவ நாயனார் மூன்று பால்களை யுடைய தாகக் கூறிய குறணூலைக் கேட்டறிதலால் வையத்து வாழ்வார் மனத்துப் பொய்ப் பால் பொய்யேயாய்ப் போயின; - உலகின்கண் வாழ்வாருடைய மனத்துப் பொய்யின் பகுதியிற் பட்டவை யெல்லாம் பொய்யேயாய்ப் போயின; பொய் யல்லாத மெய்ப் பால மெய்யாய் விளங்கினபொய்மை யல்லாத மெய்யின் பகுதியிற் பட்டவை யெல்லாம் மெய்யேயாய் விளங்கின.

குறளாற் பொய்ப் பால பொய்யேயாய்ப் போயின மெய்ப் பால மெய்யேயாய் விளங்கின. எனவே, இதற்கு முன்னெல்லாம் உண்மை துணியப் படாமையின் பொய்ப் பால மெய்ப் பால போன் மேற் கொள்ளப் பட்டும், மெய்ப் பால பொய்ப் பால போற் கைவிடப் பட்டும் மயங்கிக் கிடந்தன வென்ற தாயிற்று, இதன் மெய்யுணர்வு பயத்தற் சிறப்புச் சொல்லிய படி.(௪௰௯)

(கு-உ) ‘முப்பாலில்....மனத்து, பொய்ப்பால ....விளங்கினவே’ என மாற்றுக. பொய்ப்பால- பொய்த் தன்மையுடையன. மெய்ப்பால- மெய்யாயின.



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

திருவள்ளுவமாலை - 50:கொடிஞாழன் மாணிபூதனார் - KodiNyaazlan Maaniboothanaar
அறன் அறிந்தேம் ஆன்ற பொருள் அறிந்தேம் இன்பின்
திறன் அறிந்தேம் வீடு தெளிந்தேம்- மறன் எறிந்த
வாளார் நெடுமாற வள்ளுவனார் தம்வாயால்
கேளாதன எல்லாம் கேட்டு.
பகைவரை தன் வாள்ப்படையால் வென்ற பாண்டிய அரசனே! திருவள்ளுவர் அருளிய திருக்குறள் வழியாக, இதற்கு முன்பு அறியாமல் இருந்தவை எல்லாம் கேட்டு; அறத்தின் பயனையும், பொருளின் தன்மையையும், இன்பத்தின் த்றத்தையும்; மனிதன் பிறந்து-இறந்து மீண்டும் பிறந்து எனத் தொடரும் பிறவிபெருங்கடல் நீந்திக் கடந்து மோட்சம் எனும் வீடு அடையும் வழியினை நாற்பொருளின் இயல்பையும் நன்றாய் அறிந்து கொண்டோம்.

-ள். மறன் எறிந்த வாள் ஆர் நெடு மாறபகைவரை யெறிந்த வாட்படை தங்கிய வீறோங்கும் பாண்டிய ராசனே, வள்ளுவனார் தம் வாயாற் கேளாதன வெல்லாம் கேட்டு அறன் திறன் அறிந்தோம்திருவள்ளுவ நாயனாரது வாக்கால் இதற்கு முன் கேட்கப்பட் டில்லாதவை யெல்லாம் இப்போது கேட்டு அறத்தின் றிறத்தை யறிந்தேம்; பொருட் டிறன் அறிந்தேம்-பொருளின் றிறத்தை அறிந்தேம்; இன்பின் திறன் அறிந்தேம்இன்பத்தின் றிறத்தை அறிந்தேம்; வீட்டுத் திறன் தெளிந்தேம்வீட்டின் றிறத்தை அறிந்தேம்.

திறன் அறம் முதலியவற்றோடுங் கூட்டப்பட்டது, 'மறன்ஆகு பெயர். கேளாதனபிற நூலாசிரியர்க் கெல்லாம் அறிந்து சொல்லுதற் கெட்டாதிருந்த அறம் முதலியவற்றி னுட்பங்கள். இம்மை மறுமை வீடுகளைக் குறித் துணர்தற் குரிய உறுதிப் பொரு ணான்கு முணர்தலின், இனி யாதொன்றாலுங் குறைவில்லை யென்ற படி.(௫௰)

(கு-உ) “மறன் எறிந்த.... கேட்டு, அறன் அறிந்தேம்... தெளிந்தேம்” என்று மாற்றிப் பொருள் கொள்க. ஆன்ற- சிறந்த. மறன் எறிந்த- பகைவரைக்கொன்ற. வாள்ஆர்- வாளாயும் ஏந்திய.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard