தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே -காஞ்சித் திணை


Guru

Status: Offline
Posts: 898
Date:
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே -காஞ்சித் திணை
Permalink  
 


 

காமம் சான்ற ... தொல். கற்பியல் சூத்திரம் பற்றி தெ. ஞானசுந்தரம் கட்டுரை (2008)

 

காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம் புரி மக்களொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
- தொல். பொருள். கற்பியல் (சூத்திரம் 51)

நுட்பமான இந்த நூற்பாவை மின்தமிழ் குழும அறிஞர்களுடன் நானும் படித்து வருகிறேன். ‘சிறந்தது பயிற்றல்’ என்றால் என்ன? என்பதில்தான் கருத்து வேற்றுமைகள். பயிற்றல் = செய்தல், செய்வித்தல், நிகழ்வித்தல் என்றும் பொருள்கள் உள்ளன. வழிபாடு பயிற்றினான் = வழிபாடு இயற்றினான். நச்சினார்க்கினியர் பிராமணர்க்குரிய வானப்பிரஸ்தம் துறவறம் என்று குறித்துள்ளார்கள். ஆனால், தமிழ் வரலாற்றில், தம்பதியராக வானப்பிரஸ்தம் புகுந்தார் இல்லை.

சிறந்தது பயிற்றல் என்பது – இல்லறத்தின் வாயிலாக, நிலையாதவற்றைத் துறத்தல் என்பது பொருளாகும்.

நம்பியகப் பொருளும், இலக்கண விளக்கமும் தரும் விளக்கம் காண்போம்.

மக்களொடு மகிழ்ந்து மனையறம் காத்து
மிக்க காமத்து வேட்கை தீர்ந்துழி
தலைவனும் தலைவியும் தம்பதி நீங்கித்
தொலைவில் சுற்றமொடு துறவறம் காப்ப.


தம்பதி (dampati) = மண-இணையரின் புணர்நுகர்ச்சி, matrimonial sex. தம்பதி நீங்கி - ’தாம்பத்திய உடலுறவை ஒழித்து’. தொலைவில் = முடிவே இல்லாத, என்றும் பிரியாத என்று பொருள். முடிவிலாச் “சுற்றமொடு துறவறம்” என்றால் என்ன?

தொல்காப்பியர் சமணர் என்று உறுதிபட விளக்கிக் கட்டுரைகள் படைத்த தமிழ்ப் புலவர் பலர்: எஸ். வையாபுரி பிள்ளை, மே. வீ. வேணுகோபாலபிள்ளை, சுவெலெபில், ...
காமம் நீங்கிய பாலராய் வயோதிக காலத்தில் தம்பதியர் வாழ்வதைச் சொல்லும் சூத்திரம் இது. காமம் நீக்க உறுதுணையாய் என்ன செய்ய வேண்டும்? என்பதைச் சமண சித்தாந்தத்தில் இருந்து நோக்கினால் “சிறந்தது பயிற்றல்” என்றால் என்ன என்று ஒருவாறு புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன்.

சொர்ணம்பிள்ளை என்பவர் இளம்பூரனர் மீது ஒரு போலிப்பாயிரத்தை 20-ஆம் நூற்றாண்டில் செய்தார் அல்லவா? அதைப் பற்றி ஏற்கெனவே இங்கே எழுதியுள்ளேன். உங்களுக்கு நினைவிருக்கலாம்:
http://nganesan.blogspot.com/2009/11/ilampuranar.html
இளம்பூரணர் கற்பியல் 51-ஆம் நூற்பாவுக்கு அளிக்கும் உரை என்ன?

”இது தலைவற்கும் தலைவிக்கும் உரியதோர் மரபு உணர்த்திற்று.
(இ-ள்) சிறந்தது பயிற்றலாவது - அறத்தின் மேல் மன நிகழ்ச்சி.
*சூத்திரத்தாற் பொருள் விளங்கும்.”

தொல்காப்பியச் சூத்திரத்தின் ஈற்றடியில் உள்ள ‘பயிற்றல்’ என்பதன் பொருள்:

பயிற்றல் = செய்தல்/நிகழ்த்துதல்/பண்ணல் என்ற பொருள் தரும் தமிழ் இலக்கியங்கள் சிலவற்றைப் பார்ப்போம். எடுத்துக்காட்டுகள்:

[1] முறுவலின் இன்னகை பயிற்றி
-- ஐங்குறுநூறு 403
= முறுவற் புன்னகை செய்து.

[2] ”சோர்ந்த போல சொரிவன பயிற்றி”
-- அகநானூறு 374
= கருமேகங்கள் கவிழ்ந்தன போல ஆகி பெருமழை பொழிதலைச் செய்து.

[3] ”இன்னா இசைய பூசல் பயிற்றலின்”
-- அகநானூறு 52
= குறமகள் இன்னாமை தரும் ஆரவாரத்தைச் செய்தலின். இங்கு, பயிற்றல் = புலி, புலி என ஒலி செய்தல்.

[4] ”கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே”
-- பதிற்றுப்பத்து 69.
= பகைவரைக் கொன்ற போரின் பின் அதனால் கெட்ட குடிகளை மீண்டும் அவர் நாட்டிலே வாழச் செய்த வேந்தன். இங்கே, பயிற்றுதல் = வாழப் பண்ணுதல்.

[5] ”குருந்து அவிழ் குறும்பொறை பயிற்ற”
- நற்றிணை 321
= தலைவன் தேர் குருந்த மரங்கள் பூத்த காட்டை நெருங்கலைச் செய்யும்போது/நிகழ்த்தும்போது. பயிறல் - கெழுமல் (பிங்கலந்தை) எனவே, இந்த நற்றிணைப் பாட்டில் நெருங்கி அடைதலாகிய செய்கை = பயிற்றல்.

[6] ”பகைவெல் சித்திரம் பலதிறம் பயிற்றி”
-- பெருங்கதை, உஞ்சைக் காண்டம், 37 விழாக் கொண்டது (வரி 43).
= பகைவரை வெல்லுதற்குரிய வித்தகச் செயல் பலவேறு வகைகளையும் செய்து

[7] ”பலபல அறங்களே பயிற்றி” - சம்பந்தர் தேவாரம்.
= ஓவாது பற்பல தர்மங்களைச் செய்து

[8] ”வாளொடு பரிசை யேந்தி மண்டலம் பயிற்றி”
-- வில்லி பாரதம்
= வாளும் கேடகமும் ஏந்தி மண்டலமாய்ச் சுற்றி வருதலைச் செய்து. பயிற்றி = செய்து.

[9] பாதகங்கள் செய்திடினுங் கொலைகளவு கள்ளுப்
பயின்றிடினு நெறியல்லா நெறிபயிற்றி வரினுஞ்
-- உண்மைநெறிவிளக்கம் 6.
இங்கு, பயிற்றல் - தீயொழுக்கம் செய்தல்/நிகழ்த்தல்.

[10] அன்ன மங்கலம் பயிற்றி - சோறு ஊட்டலாகிய
விழாவைச் நடத்தி (திருவிளையாடற் புராணம்).

பயிற்றல் செய்தல் என்பதிலும் மீட்டும் மீட்டும் செய்தல் என்ற பொருள் விசேடித்து வருகிறது. பயிர்/பயிறு என்ற சொல்லும் மீண்டும் மீண்டும் செய்தல் என்னும் பொருளதே. வேளாண்மை மீண்டும் மீண்டும் பயிர்களை வளரச் செய்து அறுவடை செய்தல். கொங்குநாட்டில் மாடு சினை ஆதலையும் “பயிறாகி இருக்குது” என்போம். வம்சம் அறுபடாமல் தழைக்க பயிறாதல் (மீண்டும் மீண்டும் சினையாதல்) தேவை. அதனால், பயிறல் = மீண்டும் மீண்டும் செய்தல், இங்கே வேளாண்மை.

விவசாயம் தழைக்கலை என்றால் இந்தியா வாடும். இப்போது அரசு உழப்பி, பயிர்விலை விவசாயியைச் சேராமல் நடுவில் இருப்போன் திருடுவதால் ஒவ்வொரு நாளும் எத்தனையோ விவசாயி தற்கொலை செய்துகொள்கிறார்கள். பாரதியார் அன்றே அறிவுரை தந்துள்ளார்:

வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்! - இங்கு
வாழும் மனிதரெல் லோருக்கும்;
பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்! - பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.

பயிற்றுதல் - மீட்டும் மீட்டும் பயிர் செய்தல்
(வீணை பயிற்றல் = வீணை மீட்டல் போலே.)
http://bharathiarsongs.blogspot.com/2009/06/blog-post_5423.html

மறை ஓதுதல் மீண்டும் மீண்டும் ஒரே சொற்கோவைகளை பல முறை சொல்லுதல். அதனால் கிளிகளின் பேச்சுக்கு மறை ஓதுதலை உவமை ஆக்கும் சங்க இலக்கியம். கிளிகள் மீள மீள ஒரே விளியைப் பயிற்றும். அதாவது, ஒன்றே போல் மறுபடியும், மறுபடியும் ஒலிசெய்யும்.

’கிளிவிளி பயிற்றும் வெளில்ஆடு பெருஞ்சினை’ (அகநானூறு)

’பாம்புமணி யுமிழப் பல்வயிற் கோவலர்
ஆம்பலந் தீங்குழற் றெள்விளி பயிற்ற’ - குறிஞ்சிப்பாட்டு

’பருந்து இருந்து உயாவிளி பயிற்றும்’ - அகநானூறு

இங்கெல்லாம் மீட்டும்மீட்டும் ஒத்தோசை எழுதற் செய்கை. - கிளிவிளி, குழல்விளி பயிற்றல்

உதாரணமாக, ”கவைமுள் கருவியின் வடமொழி பயிற்றிக் கல்லா இளைஞர் கவளம் கைப்ப, (முல்லைப்பாட்டு 29 – 36). இதற்கு வேந்தன் அரசு இட்ட உரை: ”யானைக்கு யாரும் வடமொழி சொல்லிக்கொடுப்பது இல்லை. வடமொழியில் ஏவல் செய்ய வைக்கிறார்கள். அதனால் பயிற்றல் என்றால் மீண்டு மீண்டும் செய்தல்.” அதாவது பயிற்றல் = training.
சிறந்தது பயிற்றல் (தொல்.) என்பது மனத்தை விரதங்களால் training செய்வது.

”சிறந்தது பயிற்றல்” - தொல். நூற்பாவில் காம நுகர்ச்சி நீக்கமும் அதற்காகச் சிறந்த விரதங்களை - அடிப்படையாக பற்று நீக்கமும் கடைப்பிடித்தலை வயோதிக தம்பதிகள் செய்தலைக் குறிப்பிடுகிறது. நிர்வாணம் (வீடுபேறு) அடையப் பற்று அறுதல் வேண்டும். அதற்கு இல்லறத்தில் என்ன செய்ய வேண்டும்? என்று சமணம் வற்புறுத்துகிறது என்று பார்ப்போம். உதாரணம்: காமத்துக்கு அடிப்படை உணவுதான். எனவே, உணவுப் பற்றை முடிந்தவரை குறைத்தல்/விடுதல் அவசியம் என்கிறது சமணம். இன்சொல்லர்,
செல்வத்தை மக்களுக்கு ஈதல், உணவு குறைத்தல், ... ஆகிய விரதங்களை மீட்டும் மீட்டும் கைக்கொள்ளல் காமம் நீத்த பாலரின் கடைசிக்காலத்தில் சிறப்பு.

வயோதிகரான தம்பதியர் “சுற்றமொடு துறவறம்” - மக்களோடு வாழ்ந்து பயிற்ற வேண்டியதான (= செய்ய) தவம்/மன நிகழ்ச்சியாகிய துறவுபற்றி சமண நோக்கில் விரிவாக அடுத்துக் காண்போம். இச் சூத்திரத்துக்குப் பொருள் அறிஞர் சமணர் என்று கொள்ளும் இளம்பூரணரால் தெளிவாகிறது.

அதற்கு முன்னதாக, முனைவர் தெ. ஞானசுந்தரம் (பச்சையப்பன் கல்லூரி, சென்னை) 2008-ல் தினமணியில் எழுதிய கட்டுரையைப் படித்து விடுங்கள். அதில் நாம் பேசும் தொல். கற். 51 சூத்திரத்துரை (நச்சினார்க்கினியர்) தந்துள்ளார். முனைவர் வ. சுப. மாணிக்கம் “சிறந்தது” = “விருந்தோம்பல்” என்று எடுக்கிறார். ஆனால், விருந்தோம்பல் வயோதிக தம்பதியர் மக்கள் செய்ய வேண்டியது. காமம் நீத்த வயது முதிர்ந்தோரின் மனத் துறவுக்கு என்னென்ன செய்தல் வேண்டும்? அடுத்ததாகப் பார்ப்போம்.

”இது தலைவற்கும் தலைவிக்கும் உரியதோர் மரபு உணர்த்திற்று.* - இளம்பூரணம் குறிக்கும் மரபு என்னை? இனி அடுத்து ”சிறந்தது பயிற்றல்” என்னும் தொல்காப்பியத் தொடரில் சிறந்தது பயிற்றல் என்னும் தொடரின் பொருளை ஆராய்வோம்.

நா. கணேசன்

உரையாசிரியர்களும் மறு ஆய்வும்!
பேரா. தெ. ஞானசுந்தரம், தினமணி, ஆகஸ்ட் 2008

தமிழ் ஆயிரமாயிரம், ஆண்டுகளாகியும் அடிப்படை அமைப்பில் வேற்றுமை இல்லாமல் இருக்கிறது. இஃது அதன் தனிச்சிறப்பு எனினும் புறக்கட்டுமானத்தில் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பழங்காலத் தமிழுக்கும், இன்றைய தமிழுக்குமிடையே வேறுபாடுகள் எழுத்துத் தொடங்கி அனைத்துப் பிரிவிலும் நிரம்ப உண்டு. மொழி, காலத்துக்குக் காலம் மாறிக் கொண்டிருக்கிறது. அதன்

- தொடர் அமைப்பு,
- சொற்பொருள்

முதலியவற்றில் மாற்றங்கள் நிகழ்கின்றன.

மொழி சில பழஞ்சொற்களை இழக்கிறது; புதுச்சொற்களை ஏற்கிறது. பழஞ்சொற்கள் புதிய பொருள்களில் ஆள இடம் அளிக்கிறது. இவை எல்லா மொழிகளிலும் நிகழ்கின்றன. ஒரு மொழியில் தோன்றும் இலக்கணங்கள் காலப்போக்கில் நிகழும் இந்த மாற்றங்களை ஒழுங்குபடுத்தி விதிகள் சமைக்கின்றன.

ஒரு நூல் எழுந்த காலத்தில் இருந்த மொழிநிலை அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் அப்படியே இருப்பதில்லை. அதனால் பண்டைய இலக்கியங்களைக் கற்கத் தலைப்படுவோர் கால இடைவெளியில் நிகழ்ந்த மாற்றங்களால் அவற்றின் சரியான பொருளை உணர முடியாமல் துன்பப்படுகின்றனர். ஒரு நூற்றாண்டுக்கு முன் தோன்றிய நூல்களின் பொருள்களை உணர்ந்து கொள்வதற்குக்கூட இன்று உரைகளின் உதவி தேவைப்படுகிறது.

இன்று தொல்காப்பியத்தையும், சங்க இலக்கியங்களையும், திருக்குறளையும் உரையின் உதவியின்றி நேரடியாகப் படித்து அறிவது அரிய முயற்சியாக அமைகிறது. தமிழில் உரையாசிரியர்கள் சிலர் மூல நூலாசிரியர்களுக்கு இணையாகக் கொண்டாடப்படுகிறார்கள்.

தொல்காப்பிய உரையாசிரியர்களில்

- இளம்பூரணர்,
- நச்சினார்க்கினியர்,
- சேனாவரையர்,
- கல்லாடர்,
- தெய்வச்சிலையார்

ஆகியோர் பெருமதிப்புக்கு உரியவர்களாகத் திகழ்கிறார்கள். உரையாசிரியர்கள்

- காகிதம்,
- பேனா,
- மின்சார விளக்கு,
- வசதியான கல்விக்கூடம்,
- விரைந்த தொடர்பு சாதனம்

போன்ற வசதிகள் இல்லாத காலத்தில் வாழ்ந்தவர்கள். அது பனையோலையும்,எழுத்தாணியும் எழுதுபொருளாக இருந்த காலம். அக்காலத்தில் வாழ்ந்த அப்பெருமக்கள் தங்கள் ஆர்வத்தால் அறிவுச் செல்வத்தைத் தேடிப் பெற்றவர்கள். உரையாசிரியர்களும் மனிதர்களே. முக்குணவயப்பட்டவர்களே. இக்காரணங்களால் அவர்கள் சிற்சில இடங்களில் பிழைபட நேர்ந்தது. *பண்டைய உரையாசிரியர்களைப் போற்றிக் கற்கும் வேளையில் அவர்கள் எழுதியுள்ளனவே இறுதியானவை என்றும், அவர்கள் கருத்துக்கு மாறாகச் சிந்தித்தல் கூடாது என்றும் கருதுவது அறிவார்ந்த அணுகுமுறை ஆகாது.*

தொல்காப்பிய பொருளதிகார நூற்பா ஒன்று இன்றளவும் பிழையாகப் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. அப்பிழையான பொருளைக் கடைக்காலாகக்கொண்டு அறிஞர் பலர் தங்கள் இலக்கிய மாளிகைகளை எழுப்பியுள்ளனர். அம்மாளிகைகளின் கடைக்கால் சரியாக அமையாமையால் அரிய முயற்சியில் உருவான அக்கட்டடங்கள் தகர்ந்து சிதறும் தவிர்க்க இயலாத நிலை உருவாகியுள்ளது.

"காமஞ் சான்ற கடைக்கோட் காலை
ஏமஞ் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே." (கற்பியல், நூற்பா - 51)
என்பதே அந்நூற்பா.

இந்நூற்பா கற்பியலில் பிரிவுகளைக் குறித்து விளக்கும் நூற்பாக்களுக்குப் பின்னும், பிரிந்த தலைமகன் திரும்பிய நிலையில் தலைமகளோடு அவனைச் சேர்த்து வைக்கும் வாயில்களைப் பற்றியும், திரும்பி வரும் தலைமகன் இடையில் தங்கமாட்டான் என்பது பற்றியும் கூறும் நூற்பாக்களுக்கு முன்னும் அமைந்துள்ளது.

இதற்கு உரை எழுதிய இளம்பூரணர் "இது (இந்நூற்பா) தலைவற்கும்,தலைவிக்கும் உரியதோர் மரபுணர்த்திற்று," என்றும் "சிறந்து பயிற்றலாவது -அறத்தின்மேல் மனநிகழ்ச்சி," என்றும் குறித்து, "சூத்திரத்தானே பொருள் விளங்கும்," என்று முடித்துவிட்டார். அவர் இந்நூற்பாவின் பொருளை விரித்து எழுதியிருந்தால் குழப்பம் ஏற்பட்டிருக்காது.

நச்சினார்க்கினியர் இந்த நூற்பாவுக்கு எழுதியுள்ள உரை முழுவதும் மாறாக அமைந்துள்ளது. அவர் "இது முன்னர் இல்லற நிகழ்த்திய தலைவனும் தலைவியும் பின்னர் துறவற நிகழ்த்தி வீடு பெறுப என்கிறது," என்று குறிப்பு எழுதிவிட்டு நூற்பாவின் பொருளைக் கீழ்வருமாறு தெரிவித்துள்ளார். "தலைவனும் தலைவியும் உரிமைச் சுற்றத்தோடே கூடிநின்று இல்லறஞ் செய்தலை விரும்பிய மக்களோடே தமக்கு முன்னர் அமைந்த காமத்தினையுந் தீதாக உட்கொண்ட காலத்திலே அறம்பொருளின்பத்திற் சிறந்த வீட்டின்பம் பெறுதற்கு ஏமஞ்சான்றவற்றை அடிப்படுத்தல் யான் முற்கூறிய இல்லறத்தின் பயன் என்றவாறு."

மேலும், விளக்கவுரையில், "சான்ற காமம்" என்றார், நுகர்ச்சியெல்லாம் முடிந்தமை தோன்ற. இது கடையாயினார் நிற்கும் நிலையென்று உரைத்தற்குக் "கடை" என்றார். ஏமஞ்சான்றவாவன: வானப்பிரத்தமுஞ் சந்நியாசமும். எனவே, "இல்லறத்தின் பின்னர் இவற்றின் கண்ணே நின்று பின்னர் மெய்யுணர்ந்து வீடு பெறுப என்றார். இவ்வீடுபேற்றினை இன்றியமையாது இவ்வில்லறமென்பது இதன் பயன்" என்று குறித்துள்ளார். அதன் பிறகு துறவினைக் கூறும் இப்பகுதி அகப்பொருட்பகுதியில் அடங்கும் என்பதனைத் தம் புலமையால் காட்ட முற்பட்டுள்ளார்.

அவர் "காமம் சான்ற கடைக்கோல்" என்பதற்குக் கிடந்தவாறே பொருள் காணாமல், "சான்ற காமம்" என்று மாற்றிக்கூட்டிப் பொருள் கொண்டுள்ளார். "ஏமஞ் சான்ற மக்களொடு" என்பதில் "ஏமஞ் சான்ற" என்னும் இருசொற்களைத் தனியே பிரித்து "சான்ற" என்பதனை வினையாலணையும் பெயராகக் கொண்டு வானப்பிரத்தமுஞ் சந்நியாசமும் என்று உரை கூறியுள்ளார். இவை தம் கருத்தை எவ்வாறேனும் நிலைநாட்ட முயலும் முனைப்பினையே காட்டுகின்றன. இக்கருத்தையே மெய்ப்பொருளாக மயங்கிய நாற்கவிராசநம்பி தம் "அகப்பொருள் விளக்கம்" என்னும் நூலில்,

"மக்களொடு மகிழ்ந்து மனையறங் காத்து
மிக்க காம வேட்கை தீர்ந்துழித்
தலைவனுந் தலைவியுந் தம்பதி நீங்கித்
தொலைவில் சுற்றமொடு துறவறங் காப்ப." (நம்பியகப்பொருள் - 116)

என்று நூற்பாவாக்கி அதனை அகத்திணையியல் இறுதியில் அமைத்துள்ளார். தொல்காப்பிய உரையாசிரியர்களுள் நச்சினார்க்கினியர் குறிப்பிடத்தக்கவர். அவர் இலக்கணத்திற்கு மட்டுமன்றி இலக்கியங்களுக்கும் உரைகண்டவர்.

தொல்காப்பியத்தில்,

- அகத்திணையியல்,
- புறத்திணையியல்,
- களவியல்,
- கற்பியல்,
- பொருளியல்,
- செய்யுளியல்
ஆகிய ஆறு இயல்களுக்கு மட்டுமன்றிப்

- பத்துப்பாட்டு,
- கலித்தொகை,
- சிந்தாமணி
ஆகியவற்றிற்கும் உரை கண்ட சிறப்புக்குரியவர்.

அவர் தந்துள்ள மேற்கோள்கள் அவரது பரந்த அறிவிற்குச் சான்றாக அமைந்துள்ளன. அவர் தமிழும், வடமொழியும் ஆழ்ந்து கற்ற அறிஞர். அவரை *"உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர்"* என்று புலவர் உலகம் போற்றியது. அவர் சொன்னதே மெய்ம்மை என்று கொண்டு அதற்குமேல் பெரும்பாலோர் சிந்திக்க விரும்பவில்லை. இந்தத் "தலைமை வழிபாடு" (Hero Worship) இந்த நூற்பாவின் சரியான பொருளைக் காணத் தடையாக அமைந்து விட்டது.

இன்றுவரை வந்துள்ள தொல்காப்பிய வெளியீடுகளில் "தவம்" என்னும் தலைப்பிட்டு இந்நூற்பா தரப்பட்டுள்ளது.

- "ஒருங்கு தவம் பயிலல்" என்னும் உள்தலைப்போடு புலியூர்கேசிகனும்,
- தலைவனும் தலைவியும் "சிறந்தது பயிற்றும் தவம்" என்னும் தலைப்போடு டாக்டர்
சொ.சிங்காரவேலனும்,
- "தவம்" என்னும் மகுடத்தோடு முனைவர் ச.வே.சுப்பிரமணியனும்,

இந்நூற்பாவைப் பதிப்பித்துள்ளார்கள். இவர்கள் எல்லோரும் நச்சினார்க்கினியரின் கருத்தையே எளிமைப்படுத்தித் தந்துள்ளனர். தொல்காப்பிய நூற்பாக்களுக்கு உரையாசிரியர்களின் விளக்கத்தையே முற்றும் ஏற்றுக் கொள்ளாமல் விலகித் தங்கள் சொந்த சிந்தனையால் சென்ற நூற்றாண்டில்,

- நாவலர் சோமசுந்தர பாரதியார்,
- வ.சுப.மாணிக்கனார்

போன்ற அறிஞர்கள் சிலர் விளக்கம் காண முனைந்தார்கள். அவர்களால் சில புதிய விளக்கங்கள் கிடைத்தன.

இந்த நூற்பாவில் தொல்காப்பியனார் வானப்பிரத்தத்தையோ, துறவறத்தையோ கூறவில்லை. இதற்கு நச்சினார்க்கினியர் கருத்தை ஒதுக்கிப் புதிய விளக்கம் தந்தவர் முனைவர் வ.சுப.மாணிக்கனார் ஆவார். அவர் "தொல்காப்பியக் கடல்" என்னும் தம் நூலில் தந்துள்ள விளக்கம்: "காமம் நிறைந்த உறுதியான காலத்தில் நலம் சிறந்த மக்களொடு கூடி இல்லறம் புரியும் சுற்றத்தாரொடு தலைவனும் தலைவியும் சிறந்ததாகிய விருந்தோம்பலை இடைவிடாது செய்தொழுகுவதே களவிலிருந்து கற்பிற்கு வந்த பயனாகும்," என்பதாகும்.

அவரது விளக்கத்தால் இது துறவறம் குறித்த நூற்பா அன்று என்பதும் அக வாழ்க்கைக்கு உரியது என்பதும் தெளிவாகிறது. இந்நூற்பாவுக்கு மெய்ப்பொருள் காணும் முயற்சியில் ஒளிக்கீற்றுகள் சிலவற்றைப் பாய்ச்சுகிறது அவரது விளக்கம்.

அவர் "சிறந்தது" என்பதற்கு விருந்தோம்பல் என்று பொருள் கண்டுள்ளது பொருத்தமாக அமைகிறது. அவ்வறம் தனியே இருக்கும் ஆணாலும் பெண்ணாலும் செய்யமுடியாது. கணவன் மனைவியரால் மட்டுமே செய்யக்கூடியது. அவர்களும் சேர்ந்து வாழும் நிலையிலேயே அதனைச் செய்ய இயலும். ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் அமைப்பே இல்லறவாழ்வு. அதில் விருந்தோம்பல் என்னும் அறம் செய்யப் பெறாவிட்டால் அவ்வாழ்வே பயனின்றிப் போகும்.

கற்பு வாழ்க்கையின் நோக்கம் விருந்தினர்க்கு உணவிட்டு எஞ்சியதை உண்பது என்பதனைப் பத்துப்பாட்டும் தெரிவிக்கிறது. குறிஞ்சிப்பாட்டில், தலைமகன் தலைமகளிடம், "பெருந்தகையாளே, நெய் நிறைந்த ஊன்சோற்றினை உயர்ந்தவர்கள் தங்கள் சுற்றத்தினரோடு விருந்தாக உண்டு செல்ல எஞ்சியவற்றை நீ இட, யான் உண்பது மேலான செயலாகும்" என்று கூறிய குறிப்புக் காணப்படுகிறது.

"பைந்நிணம் ஒழுகிய நெய்ம்மலி அடிசில்
வசையில் லாந்திணைப் புரையோர் கடும்பொடு
விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது." (குறிஞ்சிப்பாட்டு 204 - 207)

என்பது கபிலர் பாட்டு.

இப்படிச் "சிறந்தது" என்பதற்கு அறிஞர் வ.சுப.மா தந்த விளக்கம் சிறப்பாக அமைந்துள்ளது. ஆனால் அவர் அந்நூற்பா களவிலிருந்து கற்புக்கு வந்த பயனைச் சொல்வதாகத் தெரிவிக்கும் கருத்தும், "கடைக்கோட் காலை" என்பதற்கும் "இறந்ததன் பயனே" என்பதற்கும் தந்துள்ள விளக்கமும் பொருத்தமாக அமையவில்லை.

இந்நூற்பா நச்சினார்க்கினியர் சொல்வதுபோலத் துறவறத்தைச் சொல்வதாயின் புறத்திணையியலிலோ பொருளியலிலோ இடம் பெற்றிருத்தல் வேண்டும். அறிஞர் வ.சுப.மா அவர்கள் சொல்வதுபோல் களவு வாழ்க்கையிலிருந்து கற்பு வாழ்க்கைக்குக் கடந்து வந்ததன் பயனைத் தெரிவிப்பதாயின் கற்பியலில் முதலிலோ இறுதியிலோ இடம் பெற்றிருத்தல் வேண்டும். அவ்வாறு அமையாமல், இந்நூற்பா கற்பியலில் இறுதி இரு நூற்பாக்களுக்கு முன்னே இடம் பெற்றுள்ளது. அதனால் வ.சுப.மா அவர்கள் கருத்தினை ஏற்றுக்கொண்டால் இந்நூற்பா முன் பின் நூற்பாக்களோடு எவ்வித இயைபும் இல்லாமல் திடீரென்று கற்பு வாழ்க்கையின் பயனைச் சொல்வதாக அமைகிறது. அப்படி நூற்பாக்களை அமைப்பது இலக்கண ஆசிரியர்களின் நெறி அன்று. ஆதலால் இது களவிலிருந்து கற்புக்குக் கடந்து வந்ததன் பயனைத் தெரிவிப்பதன்று என்பது தேற்றம். அறிஞர் வ.சுப.மா அவர்கள், "கடைக்கோட் காலை" என்பதற்கு, "உறுதிப்பட்ட காலத்தில்" என்று பொருள்கொள்வது இயல்பாக அமையவில்லை. "சான்ற" என்பது உரிச்சொல்லடியாகப் பிறந்த வினைச்சொல். அதற்கு நிறைந்த என்பது பொருள். அச்சொல்லை அடுத்துள்ள கைகோள் என்னும் சொல்லோடு சேர்க்காமல் இடையிட்டுக் "காலை" என்னும் பெயரோடு சேர்ந்துச் "சான்ற காலை" என்று பெயரெச்சத்தொடராகக் கொண்டுள்ளார். இதனினும் அடுத்துள்ள "கடைக்கோள்" என்னும் அடையெடுத்த பெயரினோடு சேர்த்துச் "சான்ற கடைக்கோள்" என்று பெயரெச்சத்தொடராகக் கொள்வதே சிறப்பாகும்.

"கடைக்கோள்" என்பதில் "கடை என்பது அடைமொழி. கோள் என்பது கைக்கோள் என்னும் பெயரின் முதற்குறை. அது தாமரை மலரை "மரைமலர்" என்பது போன்றது. கைகோள் இரண்டு என்பதும் அவை

- களவு,
- கற்பு

என்பதும் தொல்காப்பியம் தெரிவிக்கும் கருத்தாகும். கைகோள் இரண்டனுள்,

- களவு தலைக்கோளும்,
- கற்புக் கடைக்கோளும்

ஆகும்.

இவ்விரு கைகோள்களுள் காமம் நிறைவது களவினும் கற்பொழுக்கம் நிகழும் காலத்திலேயே ஆகும். களவில் அஞ்சி அஞ்சி ஊர் அறியாமல் கூட்டம் நிகழும். அதனால் அங்கு அது நிறைவதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் கற்பு வாழ்க்கையில் அஞ்சாமல் தலைமகனும் தலைமகளும் தங்கள் இல்லத்திலிருந்து இன்பம் நுகர்கிறார்கள். அதனால் அது கற்பு வாழ்க்கையிலேயே நிறைகிறது. எனவே, "காமஞ் சான்ற கடைக்கோள்" என்னும் தொடருக்குக் "காமம் நிறைந்த இறுதிக் கைக்கோளாகிய கற்பொழுக்கம் நிகழும் காலத்தில்" என்று பொருள் விரிப்பதே நேரிதாகும்.

எனவே இந்நூற்பாவிற்குக் *"காமம் நிறைந்த கற்பொழுக்கம் நிகழும் காலத்தில் நலம் நிறைந்த மக்களொடு விளங்கி, அறத்தை விரும்புகின்ற உறவினர்களோடு கூடித் தலைமகனும் தலைமகளும் விருந்தோம்பல் என்னும் அறத்தினைப் பலகாற் செய்தல் பொருள்வயிற் பிரிந்ததன் பயனாகும்"* என்று பொருள்கொள்வதே தக்கது.

தமிழ் செம்மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் நிலையில், *உரையாசிரியரிகளின் கட்டுக்குள் இருந்து விலகிச் சுதந்திரமாகச் சிந்தித்து விளக்கங்கள் வருதல் பயனுடைய பணியாக அமையும். அறிஞர்கள் இத்துறையில் கருத்துச் செலுத்தினால் பெரும் பயன் விளையும்.*

முனைவர் தெ.ஞானசுந்தரம்
மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்,
பச்சையப்பன் கல்லூரி
சென்னை



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard