அகநானூறு181 பாலை பரணர்
துன் அரும் கானமும் துணிதல் ஆற்றாய்
பின் நின்று பெயர சூழ்ந்தனை ஆயின்
என் நிலை உரைமோ நெஞ்சே ஒன்னார்
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெரும் தானை
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ 5
முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப
ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு
வம்ப புள்ளின் கம்பலை பெரும் தோடு
விசும்பு இடை தூர ஆடி மொசிந்து உடன் 10
பூ விரி அகன் துறை கணை விசை கடு நீர்
காவிரி பேரியாற்று அயிர் கொண்டு ஈண்டி
எக்கர் இட்ட குப்பை வெண் மணல்
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர்
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை 15
நான்மறை முது நூல் முக்கண்_செல்வன்
ஆலமுற்றம் கவின் பெற தைஇய
பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர்
கை செய் பாவை துறை-கண் இறுக்கும்
மகர நெற்றி வான் தோய் புரிசை 20
சிகரம் தோன்றா சேண் உயர் நல் இல்
புகாஅர் நன் நாட்டதுவே பகாஅர்
பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால்
பணை தகை தடைஇய காண்பு இன் மென் தோள்
அணங்கு சால் அரிவை இருந்த 25
மணம் கமழ் மறுகின் மணல் பெரும் குன்றே
#181 பாலை பரணர்
செல்லுவதற்குக் கடினமான காட்டையும் கடக்கத் துணியமாட்டாய்!
எனக்குப் பின்னே நின்று வீட்டுக்குத் திரும்பிச் செல்ல நினைத்தாயென்றால்
நீ மட்டும் போய் அவளிடம் எனது இந்த நிலைமையைக் கூறு! நெஞ்சமே! பகைவர்
பாதுகாக்கும் அரண்களை வென்று கடந்த மிகுந்த பெரிய சேனையையுடைய
போரில் கொல்வதில் வல்ல மிஞிலி என்பவனுடன், போர்க்களத்தில் வேலைச் செலுத்தி,
முருகனைப் போன்ற வலிமையுடன் குருதியால் போர்க்களம் சிவக்கப் போரிட்டு
ஆய் எயினன் என்பவன் இறந்துபட, ஞாயிற்றின்
ஒளிவிடும் கதிர்களின் வெப்பம் அவன் உடலில்படாதபடி மறைய, ஒரே தன்மையாக
புதிய பறவைகளின் ஒலிமிகுந்த பெரும் கூட்டம்
விசும்பிடம் மறையும்படி வட்டமிட்டு ஒன்றுகூடி -
பூக்கள் விரிந்த அகன்ற துறையினில் அம்பு போன்ற விசையுடன் விரைந்து வரும் நீரானது
காவிரியாகிய பெரிய ஆற்றின் நுண்மணலை வாரிக் கொணர்ந்து வந்து குவித்து
மேடாக்கிய குவியலான வெண் மணலையும்,
புது வருவாயை உடைய ஊர்களையும் உடைய செல்வம் மிக்க சோழ வேந்தரால் பாதுகாக்கப்படும்,
உலகமெல்லாம் பரவும் நன்மை பொருந்திய நற்புகழையுடைய
நான்கு வேதங்களான பழைய நூலை அருளிய முக்கண்ணையுடைய பரமனின்
ஆலமுற்றம் என்னுமிடத்தில் அழகுபெற உருவாக்கப்பட்ட
பொய்கையைச் சூழ்ந்த பொழிலினில், இல்லத்திலுள்ள பேதை மகளிர்
கையாலே செய்த மணல்பொம்மையையுடைய துறையினில் வந்து தங்குகின்ற -
மகரக் கொடியினை உச்சியில் கொண்ட, வானை உரசிக்கொண்டு நிற்கும் கோட்டை மதிலையும்,
உச்சிப்பகுதி அறியப்படாதபடி மிகவும் தூரமாக உயர்ந்து நிற்கும் நல்ல மாடங்களையும்
புகார் என்னும் பட்டினத்தையுடைய நல்ல சோழநாட்டில் உள்ளதாகும் - விற்பவர்களின்
நறுமணப் பண்டங்களின் மணங்கள் மணக்கின்ற, வண்டுகள் மொய்க்கும் கூந்தலினையும்
மூங்கிலைப் போன்ற அழகையுடையதாய் வளைந்த, காண்பதற்கு இனிய மெல்லிய தோளினையும் உடைய
நம்மைப் பிரிந்ததால் துன்பம் மிக்கு இருக்கும் நம் காதலி அமர்ந்திருந்த
மலர் மணம் கமழும் தெருக்களையுடைய மணலையுடைய பெரிய குன்றம் - (புகார் நன் நாட்டதுவே)
-- Edited by Admin on Saturday 8th of April 2023 07:08:53 PM
புறநானூறு 6 காரிகிழார்
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும்
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்
கீழது மு புணர் அடுக்கிய முறை முதல் கட்டின் 5
நீர் நிலை நிவப்பின் கீழும் மேலது
ஆனிலை_உலகத்தானும் ஆனாது
உருவும் புகழும் ஆகி விரி சீர்
தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம்
பற்றல் இலியரோ நின் திறம் சிறக்க 10
செய்_வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து
கடல் படை குளிப்ப மண்டி அடர் புகர்
சிறு கண் யானை செவ்விதின் ஏவி
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து
அ எயில் கொண்ட செய்வு_உறு நன் கலம் 15
பரிசில்_மாக்கட்கு வரிசையின் நல்கி
பணியியர் அத்தை நின் குடையே முனிவர்
முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கே
இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே 20
வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார்
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே
செலியர் அத்தை நின் வெகுளி வால் இழை
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே
ஆங்க வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய 25
தண்டா ஈகை தகை மாண் குடுமி
தண் கதிர் மதியம் போலவும் தெறு சுடர்
ஒண் கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெரும நீ நில மிசையானே
6 காரிகிழார்
வடக்கிலிருக்கும் பனி தங்கிய நெடிய இமயமலையின் வடக்கும்,
தெற்கிலிருக்கும் அச்சந்தரும் குமரியாற்றின் தெற்கும்,
கிழக்கிலிருக்கும் கரையை மோதுகின்ற சகரரால் தோண்டப்பட்ட கடலின் கிழக்கும்,
மேற்கிலிருக்கும் பழையதாய் முதிர்ந்த பெருங்கடலின் மேற்கும்,
கீழேயிருக்கும், நிலம், வான், சுவர்க்கம் என்ற மூன்றும் சேர்ந்து அடுக்கிய முறையில் முதலாவதான
நீர்நிலையிலிருந்து உயர்ந்து தோன்றும் நிலத்திற்குக் கீழேயும், மேலேயிருக்கும்
ஆனிலையுலகம் எனப்படும் கோ லோகத்திலும் அடங்காத
அச்சமும் புகழும் உன்னுடையதாகி, பெரிய அளவில்
சமமாக ஆராயும் துலாக்கோலின் நடுவூசி போல ஒரு பக்கத்தில்
சாயாது இருப்பாயாக; உன் படை, குடி முதலியன சிறந்துவிளங்கட்டும்;
போர் செய்ய எதிர்த்துவந்த பகைவரின் நாடுகளில்
உனது கடல் போன்ற படை உள்ளே புகுந்து முன்செல்ல, அடர்ந்த புள்ளிகளையும்
சிறிய கண்களையும் உடைய யானைப்படையை தடையின்றி நேரே ஏவி,
பசுமையான விளைநிலப் பக்கத்தையுடைய பல அரிய அரண்களைக் கைப்பற்றி
அந்த அரண்களில் கொள்ளப்பட்ட அழகுபடச் செய்த அணிகலன்களைப்
பரிசிலர்க்கு முறையாக வழங்கி,
தாழ்வதாக நின் வெண்கொற்றக்குடை, முனிவர்களால் துதிக்கப்படும்
முக்கண் செல்வரான சிவபெருமான் கோயிலை வலம்வருவதற்கு;
வணங்குக, பெருமானே உன் மணிமுடி, சிறந்த
வேதங்களை ஓதும் அந்தணர்கள் உன்னை வாழ்த்த எடுத்த கைகளின் முன்னே;
வாடிப்போகட்டும் இறைவனே, உன் தலைமாலை, பகைவரின்
நாடுகளை எரிக்கின்ற மணக்கின்ற புகை தடவிச்செல்வதால்;
தணியட்டும் உன் கோபம், வெண்மையான முத்தாரத்தையுடைய
உன் தேவியரின் சிறுசினம் சேர்ந்த ஒளிமிகு முகத்தின் முன்னே;
இதுவரை வென்ற வெற்றியினால் எழும் இறுமாப்பை வென்று, அவற்றை உன் மனத்துள் அடக்கிய,
குறைவுபடாத கொடைக்குணம் கொண்டு தகுதி மிகுதியும் பெற்ற குடுமியே!
குளிர்ந்த கதிர்களைக் கொண்ட திங்கள் போலவும், சுடுகின்ற தீச்சுவாலைகளைக் கொண்ட
ஒளி பொருந்திய கதிர்களைக் கொண்ட ஞாயிறு போலவும்
நிலைபெறுவாயாக, பெருமானே! நீ இந்த நிலத்தின் மேல்.
# 93 புறநானூறு ஔவையார்
திண் பிணி முரசம் இழுமென முழங்க
சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர்
தார் தாங்குதலும் ஆற்றார் வெடிபட்டு
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர்
நோய்_பால் விளிந்த யாக்கை தழீஇ 5
காதல் மறந்து அவர் தீது மருங்கு அறும்-மார்
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி
மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த
நீள் கழல் மறவர் செல்வு_உழி செல்க என 10
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து
அண்ணல் யானை அடு_களத்து ஒழிய
அரும் சமம் ததைய நூறி நீ
பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே 15
93 ஔவையார்
திண்ணிதாகப் பிணிக்கப்பட்ட முரசம் ‘திடும்' என முழங்கப்
புறப்பட்டுப்போய் போரில் வெற்றிபெறுவதற்கு இனிப் பகைவர் ஏது? உன்னை எதிர்த்து வந்தவர்கள்
உனது முன்னணிப்படையினையும் தாங்கமாட்டாதவராய், சிதறி
ஓடத்தொடங்கிய பெருமை இல்லாத மன்னர்கள்,
நோயினால் இறக்கும் உடம்பைப் பெற்று
தமது ஆசையை மறந்து, அவர்கள் வாளால் மடியாத குற்றம் அவர்களை விட்டு நீங்குமாறு
அறத்தை விரும்பிய கொள்கைகளையுடைய நான்கு வேதங்களையுடைய அந்தணர்
நன்கு வளர்ந்த தருப்பைப்புல்லைப் பரப்பி, அதில் அவரைக் கிடத்தி,
தனது வீரமே பற்றுக்கோடாக நல்ல போரில் மடிந்த
சிறந்த வீரக்கழலை அணிந்த மறவர் செல்லும் உலகத்திற்குச் செல்க என்று
வாளால் அறுக்கப்பட்டு அடக்கம்செய்யப்படுவதிலிருந்து தப்பித்தனர்,
வரியையுடைய வண்டுகள் ஒலிக்கும் வாய்க்குள் வந்து புகுகின்ற மதத்தினையுடைய
தலைமை பொருந்திய யானை போர்க்களத்தில் மடிய
தாங்குவதற்கு அரிய போரில் சிதறி ஓடும்படி வெட்டிக்கொன்று நீ
பெருந்தகையே! விழுப்புண் பட்டு நின்றதால் - (போரில் வெற்றிபெறுவதற்கு இனிப் பகைவர் ஏது?)
மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளி தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்று ஆங்கு 5
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல
போற்றார் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய்
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண் தலை புணரி குட கடல் குளிக்கும் 10
யாணர் வைப்பின் நன் நாட்டு பொருந
வான வரம்பனை நீயோ பெரும
அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ
நிலம் தலைக்கொண்ட பொலம் பூ தும்பை
ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய 15
பெரும் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்
பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியா சுற்றமொடு முழுது சேண் விளங்கி
நடுக்கு இன்றி நிலியரோ அத்தை அடுக்கத்து 20
சிறு தலை நவ்வி பெரும் கண் மா பிணை
அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொன் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே
# 2 முரஞ்சியூர் முடிநாகராயர்
மண் செறிவாய் அமைந்துள்ள நிலமும்,
அந்த நிலம் ஏந்திநிற்கும் ஆகாயமும்,
அந்த ஆகாயத்தைத் தடவிவரும் காற்றும்,
அந்தக் காற்றினால் எழுந்த தீயும்,
அந்தத் தீயுடன் மாறுபட்ட நீரும் என்று
ஐந்துவகையான பெரிய பூதத்தினது தன்மை போல
பகைவரைப் பொறுத்தருளுதலும், சிந்திக்கும் அறிவாற்றலில் விசாலமும்
வலிமையும், பகைவரை அழித்தலும், அவர் வணங்கினால் அவருக்கு அருள்செய்தலும் உடையவனே!
உன் கடலில் தோன்றிய ஞாயிறு, மீண்டும் உன்
வெள்ளிய தலை (நுரை) பொருந்திய அலைகளையுடைய மேற்குக் கடலில் மூழ்கும்,
புதுவருவாயை இடையறாது கொண்ட ஊர்களையுடைய நல்ல நாட்டிற்கு வேந்தனே!
வானத்தை எல்லையாக உடையவனே! பெருமானே! நீயே
ஆடுகின்ற தலையாட்டம் அணிந்த குதிரைகளையுடைய பாண்டவர் ஐவருடன் சினந்து
அவரின் நிலத்தைத் தம்மிடம் எடுத்துக்கொண்ட பொன்னாலான தும்பைப் பூவினையுடைய
கௌரவர் நூற்றுவரும் போரிட்டுப் போர்க்களத்தில் மடியுமட்டும்
பெரும் சோறாகிய மிக்க உணவை இரு படைக்கும் குறைவின்றிக் கொடுத்தவனே!
பால் புளித்துப்போனாலும், சூரியன் இருண்டுபோனாலும்,
நான்கு வேதத்தினது ஒழுக்கம் மாறுபட்டுப்போனாலும்,
மாறுபடாத அமைச்சர், படைத்தலைவர் முதலிய சுற்றத்துடன் குறைவின்றி நெடுங்காலம் புகழுடன் விளங்கி
மனக்கலக்கம் இன்றி நிற்பாயாக, பக்க மலையில்
சிறிய தலையையுடைய குட்டிகளுடன் பெரிய கண்களைக் கொண்ட பெண்மான்கள்
மாலையில் அந்தணர் தம் அரிய கடனாகிய ஆவுதியைப் பண்ணும்
முத்தீயாகிய விளக்கின்கண்ணே தூங்கும்
பொற்சிகரங்களைக் கொண்ட இமயமலையும் பொதிகை மலையும் போன்றே.
மதுரைக் காஞ்சி அந்தி விழவில் தூரியம் கறங்க 460
திண் கதிர் மதாணி ஒண் குறு_மாக்களை
ஓம்பினர் தழீஇ தாம் புணர்ந்து முயங்கி
தாது அணி தாமரை போது பிடித்து ஆங்கு
தாமும் அவரும் ஓராங்கு விளங்க
காமர் கவினிய பேரிளம்_பெண்டிர் 465
பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சி
சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும்
சிறந்த வேதம் விளங்க பாடி
விழு சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
அந்திப் பொழுதின் விழாவில் இசைக்கருவிகள் முழங்க - 460
திண்ணியதாய் ஒளிரும் பேரணிகலன்களையுடைய இயற்கையாகவே அழகுள்ள சிறுபிள்ளைகளைப்
பேணியவராய் (அவரைத்)தழுவி, தாம் (மேலும்) இறுக மார்புற அணைத்து,
தாது சேர்ந்த தாமரைப்பூ (அதன்)மொட்டைப் பிடித்தாற் போல
தாமும் அம் மக்களும் ஓரிடத்தே சேரநின்று திகழும்படி,
ஆசைப்படும்படி அழகுபெற்ற இளமை முதிர்ந்த மகளிர், 465
பூவையுடையவராய், புகையையுடையவராய், வணங்கியவராய் புகழ்ந்து வாழ்த்தி
சிறப்பாக (அவர்களாற்)பாதுகாக்கப்படும் கடவுளின் (பௌத்தப்)பள்ளியும் -
சிறந்த வேதங்களைத் திருத்தமாக ஓதி,
சீரிய தலைமையோடு பொருந்தின ஒழுக்கங்களை மேற்கொண்டு,
குறிஞ்சிப்பாட்டு
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ 220
பாம்பு மணி உமிழ பல்-வயின் கோவலர்
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற
ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட வள மனை
பூ தொடி மகளிர் சுடர் தலை கொளுவி
அந்தி அந்தணர் அயர கானவர் 225
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த
வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்ப கானம்
கல்லென்று இரட்ட புள்_இனம் ஒலிப்ப
சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்ப
உயர்ந்த பெரிய பனையின்கண் உள்ள உள்மடலில் (இருந்து தம் பெடையை)அழைக்க 220,
பாம்பு தம் மணிகளை உமிழ, பற்பல இடங்களிலுள்ள இடையர்கள்
ஆம்பல் எனும் பண்ணினையுடைய இனிய குழலில் தெளிந்த இசையைப் பலமுறை எழுப்ப,
ஆம்பல் மலரின் அழகிய இதழ்கள் தளையவிழவும், செல்வம் நிறைந்த இல்லங்களில்
பொலிவுள்ள வளையல் அணிந்த மகளிர் விளக்கின் திரியை ஏற்றி
அந்திக்கடனை அந்தணர்(போல்) ஆற்ற, காட்டில் வாழ்வோர் 225
வானத்தைத் தீண்டுகின்ற (தம்)பரணில் தீக்கொள்ளிகளை மூட்ட,
மேகங்கள் பெரிய மலையிடத்துச் சூழ்ந்து கறுப்ப, கானகம்
கல்லென்னுமாறு மாறிமாறி ஒலியெழுப்ப, பறவையினங்கள் ஆரவாரிக்க,
சினங்கொண்ட மன்னன் படையெடுத்துச் செல்லும் போரைப் போன்று
புறநானூறு 367 ஔவையார்
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லா
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறைய
பூவும் பொன்னும் புனல் பட சொரிந்து 5
பாசிழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய
நார் அறி தேறல் மாந்தி மகிழ் சிறந்து
இரவலர்க்கு அரும் கலம் அருகாது வீசி
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்
வாழ செய்த நல்வினை அல்லது 10
ஆழும்_காலை புணை பிறிது இல்லை
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீ புரைய காண்_தக இருந்த
கொற்ற வெண்குடை கொடி தேர் வேந்திர்
யான் அறி அளவையோ இதுவே வானத்து 15
வயங்கி தோன்றும் மீனினும் இம்மென
பரந்து இயங்கும் மா மழை உறையினும்
உயர்ந்து மேந்தோன்றி பொலிக நும் நாளே
367 ஔவையார்
நாகலோகத்தைப் போன்ற வளமான பகுதிகளையுடைய நாடு
தம்முடையதாகவே இருந்தாலும், இறக்கும்பொழுது அது அவர்களுடனே செல்வதில்லை;
அது அவனுக்குப் பின்னர் வரும் வேற்று நாட்டவராயினும், வலிமையுடையோர்க்குப் போய்ச் சேரும்;
பொருளை வேண்டி இரந்த பார்ப்பனர்களுக்கு, அவர்களின் ஈரக்கை நிறைய
பூவும் பொன்னும் நீர்வார்த்துக் கொடுத்து,
நல்ல அணிகலன்களை அணிந்த மகளிர் பொற்கலங்களில் கொண்டுவந்து கொடுக்கும்,
நாரால் வடிகட்டப்பட்ட கள்ளின் தெளிவை அருந்திக் களித்து,
இரவலர்க்கு அரிய அணிகலன்களைக் குறையாது கொடுத்து,
இவ்வுலகில் நீங்கள் வாழ்வதற்காக வரையறுக்கப்பட்ட நாட்கள் முழுதும் வாழவேண்டும்;
நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர,
நீங்கள் இறக்கும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை.
வீடுபேறு ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும்
முத்தீயைப் போல காண்பதற்கினிமையாய் வீற்றிருக்கும்
வெண்கொற்றக் குடையையும், கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே!
நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும்; வானத்தில்
ஒளிர்ந்து தோன்றும் விண்மீன்களையும் இம்மென்ற ஒலியுடன்
பெய்யும் பெரிய மழைத்துளிகளையும் விட
மேம்பட்டு விளங்குவன ஆகுக, நும்முடைய வாழ்நாட்கள்.
திருமுருகாற்றுப்படை நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய 160
உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக
ஏமுறு ஞாலம்-தன்னில் தோன்றி
தாமரை பயந்த தா இல் ஊழி
நான்முக ஒருவர் சுட்டி காண்வர 165
பகலில் தோன்றும் இகல் இல் காட்சி
நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு
ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர்
மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு
வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளி இடை 170
தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட
உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய
உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொள்-மார்
அந்தர கொட்பினர் வந்து உடன் காண
தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் 175
ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று
இரு_மூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி
அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு
ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை 180
மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து
இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண்
புலரா காழகம் புலர உடீஇ
உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து 185
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி
நா இயல் மருங்கில் நவில பாடி
விரை உறு நறு மலர் ஏந்தி பெரிது உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று
நான்கு பெரும் தெய்வங்களுள் வைத்து நல்ல நகரங்கள் நிலைபெற்றுள்ள 160
உலகத்தை ஓம்புதல் தொழில் ஒன்றையே விரும்பும் கோட்பாட்டையுடைய
பலராலும் புகழப்படுகின்ற (அயனை ஒழிந்த ஏனை)மூவரும் தலைவராக வேண்டி,
பாதுகாவலுறுகின்ற (இம்)மண்ணுலகில் (வந்து)தோன்றி,
தாமரை பெற்ற குற்றமற்ற ஊழிகளையுடைய
நான்முகன் ஒருவனை(ப் பழைய நிலையிலே நிறுத்தலை)க் கருதி, அழகுண்டாக, 165
பகுத்துக் காணுங்கால் (வேறுபடத்)தோன்றியும், தம்முள் மாறுபாடில்லாத அறிவினையுடைய
நான்காகிய வேறுபட்ட இயல்பினையுடைய முப்பத்து மூவரும்,
பதினெண்வகையாகிய உயர்ந்த நிலையைப் பெற்றவரும் -
விண்மீன்கள் மலர்ந்ததைப் போன்ற தோற்றத்தையுடையவராய், மீன்களின்(இடத்தைச்)சேர்ந்து
காற்று எழுந்ததைப் போன்ற செலவினையுடையராய், காற்றிடத்தே 170
நெருப்பு எழுந்ததைப் போன்ற வலிமையினையுடையராய், நெருப்புப் பிறக்க
உருமேறு இடித்ததைப் போன்ற குரலினை உடையராய், இடும்பையாயுள்ள
தமக்குற்ற குறைவேண்டும் பகுதியில் (தம்)தொழில்களைப் பெறுமுறையினை முடித்துக்கொள்வதற்கு,
வானத்தே சுழற்சியினையுடையராய், வந்து ஒருசேரக் காண -
குற்றமற்ற அறக்கற்பினையுடைய மடந்தையுடன், சில நாள் 175
திருவாவினன்குடி என்னும் ஊரிலே இருத்தலும் உரியன் - அவ்வூரேயல்லாமல்,
ஆறாகிய நன்மை பொருந்திய இலக்கணத்தில் வழுவாமல்,
(பெற்றோர்)இருவர் குலத்தையும் உலகத்தார் சுட்டிக்காட்டத்தக்க பலவாய் வேறுபட்ட பழைய குடியிற் பிறந்த,
இருபத்துநான்கின் இரட்டியாகிய இளமை மிக்க நல்ல ஆண்டுகளை
(மெய்ந்நூல் கூறும்)நெறியால் கழித்த, அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கோட்பாட்டினையும், 180
மூன்று வகையைக் கருதின மூன்று தீயாலுண்டாகிய செல்வத்தினையும் உடைய
இருபிறப்பினையுடைய அந்தணர், காலம் அறிந்து வாழ்த்துக்கூற -
ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட, ஒரு புரி மூன்றாகிய, நுண்ணிய பூணூலையும் உடைய,
ஈரம் காயாத துகில் புலர உடுத்தி,
தலைமேல் கூப்பிய கையினராய், தன்னைப் புகழ்ந்து, 185
ஆறெழுத்தினைத் தன்னிடத்தே அடக்கி நிற்கின்ற கேட்டற்கரிய மந்திரத்தை
நா புடை பெயரும் அளவுக்கு பயில ஓதி,
(வாசனைப்புகை முதலியவற்றால்)வாசனையேற்றப்பட்ட மணமுள்ள பூவை எடுத்துத் தூவி, பெரிதும் மகிழ்ந்து,
திருவேரகம் என்கின்ற ஊரில் இருத்தலும் உரியன் - அதுவேயன்றி
புறநானூறு 9 நெட்டிமையார்
ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணி உடையீரும் பேணி
தென் புலம் வாழ்நர்க்கு அரும் கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர் பெறாஅதீரும்
எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்-மின் என 5
அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல் களிற்று மீமிசை கொடி விசும்பு நிழற்றும்
எம் கோ வாழிய குடுமி தம் கோ
செம் நீர் பசும்_பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன் 10
நன் நீர் பஃறுளி மணலினும் பலவே
# 9 நெட்டிமையார்
பசுக்களும், பசுவைப் போன்ற இயல்புள்ள பார்ப்பன மக்களும்,
பெண்களும், நோயாளிகளும், வழிபாட்டுடன்
தென் திசையில் ஆவியாக இருக்கும் மூதாதையர்க்குப் பிதிர்க்கடன் செய்யும்
பொன் போன்ற புதல்வர்களைப் பெறாதவர்களும்,
எம் அம்புகளை விரைவாகச் செலுத்தப்போகிறோம், உம் அரண்களுக்குள் சேர்ந்துவிடுங்கள் என்று
அறநெறியைச் சொல்லும் கொள்கையைப் பூண்ட மறத்தினையுடைய
கொல்கின்ற யானையின் மேல் உயர்த்தப்பட்ட கொடிகள் விசும்பினுக்கு நிழலைச்செய்யும்
எம்முடைய வேந்தனாகிய குடுமி வாழ்வானாக, தம்முடைய முன்னோனான,
சிவந்த தன்மையுள்ள பசும்பொன்னை கூத்தர்க்கு வழங்கிய
முந்நீராகிய கடலின் தெய்வத்திற்கு எடுத்த விழாவினையுடைய நெடியோன் என்பவனின்
நல்ல நீரைக்கொண்ட பஃறுளி என்னும் ஆற்றின் மணலைக்காட்டிலும் பல ஆண்டுகள் -
பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 87-இல் காண்க. பாடப்பட்டோர்: சேரமான் மாவண்கோ, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி ஆகிய மூவேந்தர்கள்.
பாடலின் பின்னணி: ஒருகால், சேரமான் மாவண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் ஒருங்கிருந்தனர். அதைக் கண்ட ஒளவையார் பெருமகிழ்ச்சியோடு இப்பாடலை இயற்றியுள்ளார். ’வேந்தர்களே! இவ்வுலகம் வேந்தர்களுக்கு உரியதாயினும், அவர்கள் இறந்தால், இவ்வுலகம் அவர்களோடு செல்வதில்லை. ஆகவே, அறநெறிகளில் பொருளீட்டி, இரவலர்க்கு வழங்கி, இன்பமாக வாழுங்கள். உங்கள் வாழ்நாட்களில் நீங்கள் செய்த நல்வினையைத் தவிர நீங்கள் மறுவுலகிற்குச் செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை. எனக்குத் தெரிந்தது இதுதான். ‘ என்று இப்பாடலில் ஒளவையார் மூவேந்தர்களுக்கும் அறிவுரை கூறுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுதல்.
கொண்டு கூட்டு: வேந்திர், மண்டிலம் செல்லா ஒழியும்; சொரிந்து, சிறந்து வீசி, வாழ்தல் வேண்டும்; புணைபிறிது இல்லை, மீனினும் உறையினும் தோன்றிப் பொலிக எனக் கூட்டுக.
உரை: தேவலோகத்தைப் போன்ற பகுதிகளையுடைய நாடு, அந்த நாட்டு வேந்தனுடையதாக இருந்தாலும், அவ்வேந்தன் இறக்கும்பொழுது அது அவனுடன் செல்வதில்லை. அது அவனுக்குப் பின்னர் வரும் தொடர்பில்லாத வலியோர்க்குப் போய்ச் சேரும். பொருளை வேண்டி இரந்த பார்ப்பனர்களுக்கு, அவர்களின் ஈரக்கை நிறைய பூவும் பொன்னும் நீர்வார்த்துக் கொடுத்தும், நல்ல அணிகலன்களை அணிந்த மகளிர் பொற்கலங்களில் கொண்டுவந்து கொடுக்கும், நாரால் வடிகட்டப்பட்ட கள்ளின் தெளிவை அருந்தியும், மகிழ்ச்சியோடும், சிறப்பாகவும், இரவலர்க்கு அரிய அணிகலன்களைக் குறையாது கொடுத்தும், இவ்வுலகில் நீங்கள் வாழ்வதற்காக வரையறுக்கப்பட்ட நாட்கள் முழுதும் வாழ்க. நீங்கள் வாழும்பொழுது இவ்வுலகில் செய்த நல்வினைகளைத் தவிர, நீங்கள் மறுவுலகிற்குச் செல்லும்பொழுது உங்களுக்குத் துணையாக வருவது வேறொன்றுமில்லை. வீடுபேறு ஒன்றையே விரும்பிப், புலன்களை அடக்கிய அந்தணர்கள் வளர்க்கும் முத்தீயைப் போல அழகுடன் வீற்றிருக்கும் வெண்கொற்றக் குடையையும் கொடிகட்டிய தேரையும் உடைய மூவேந்தர்களே! நான் அறிந்த அளவில் முடிவாகத் தெரிந்தது இதுவேயாகும். வானத்தில் விளங்கும் விண்மீன்களையும் இம்மென்ற ஒலியுடன் பெய்யும் பெரிய மழைத்துளிகளையும் விட நும்முடைய வாழ்நாட்கள் மேம்பட்டு விளங்குவன ஆகுக.
சிறப்புக் குறிப்பு: புறநானூற்றில் உள்ள நானூறு பாடல்களில், இந்த ஒரு பாடல் மட்டுமே மூவேந்தர்களும் ஒருங்கிருந்தபொழுது பாடப்பட்ட பாடல்.
ஆகவனீயம், தட்சிணாக்கினி, காருகபத்தியம் என்பவை, அந்தணர்கள் வேள்வி செய்யும் பொழுது வளர்க்கும் மூன்று தீ வகைகளாகும். அவற்றுள் ஆகவனீயம் என்னும் தீ, தேவர்களுக்காக யாகசாலையின் வடகிழக்கில் நாற்கோணக் குண்டத்தில் வளர்க்கப்படுவது. தட்சிணாக்கினி என்னும் தீ, தெற்கில் எட்டாம் பிறைத் திங்கள் போன்ற வடிவமான குண்டமிட்டு அதில் வளர்க்கப்படும் தீ. காருகபத்தியம் என்னும் தீ ஆகவனீயத்தை அடுத்து, வட்ட வடிவமைந்த குண்டமிட்டு அதில் வளர்க்கப்படும் தீ. இப்பாடலில், தமிழ் மூவேந்தர்களுக்கு முத்தீ உவமம் ஆகக் கூறப்பட்டுள்ளது.
மூவேந்தர்களும் அவரவர் நாட்டை நல்ல முறையில் ஆட்சி செய்து, அறம் சார்ந்த செயல்களைச் செய்து தம்முடைய நாட்டு மக்களைப் பாதுகக்க வேண்டும் என்பது இப்பாடலில் ஒளவையார் கூறும் கருத்து. ஆனால், தமிழ் வேந்தர்கள் ஒற்றுமையின்றித் தமக்குள் போர் புரிந்து கொண்டிருந்ததால், களப்பிரரும், வடுகரும், மோரியரும், பல்லவரும், துருக்கரும், தெலுங்கரும், வெள்ளையரும் தமிழ் நாட்டை பலகாலம் ஆட்சி செய்தனர் என்பது வரலாறு கூறும் செய்தி.
மூன்று அக்னிகள் என்ன என்றால், ஒன்று ‘கார்ஹபத்யம்’- அதாவது இல்லத்தின் அதிபதியான க்ருஹபதிக்கு உரியது. இந்த கார்ஹபத்ய குண்டத்திலேதான் அணையாமல் எப்போதும் ச்ரௌதாக்னி எரிந்து கொண்டிருக்க வேண்டும். இது முழுவட்ட வடிவமாக இருக்கும். இதிலே நேராக ஒரு ஹோமமும் கூடாது. இதிலே இருக்கிற அக்னியை பித்ரு காரியம் (இது க்ருஹ்யமான சிராத்தம் இல்லை; இது ச்ரௌதமாக அமாவாஸ்யை தோறும் செய்யும் பிண்ட பித்ரு கர்மா) செய்வதற்காகவும், சில சில்லறை தேவதா ஹோமங்களுக்காகவும் இரண்டாவதான ஒரு குண்டத்தில் எடுத்து வைத்துப் பண்ண வேண்டும். இந்தக் குண்டம் தெற்கே இருப்பதால் இந்த அக்னிக்கு ‘தக்ஷிணாக்னி’ என்று பெயர். இது அரை வட்டமாக இருக்கும். பொதுவாக மற்ற எல்லா தேவதைகளுக்கும் செய்கிற ஹோமங்களை மூன்றாவதான ‘ஆஹவநீயம்’ என்ற கிழக்குப் பக்கமுள்ள குண்டத்தில் பண்ண வேண்டும். கார்ஹபத்ய அக்னியிலிருந்தே கிழக்குக் குண்டத்தில் எடுத்து வைத்து ஆஹவநீய அக்னியை உண்டாக்க வேண்டும். ஹவன், ஹவன் என்றுதானே வடக்கே யாகத்தையே சொல்கிறார்கள்? அந்த ஹவனம் அல்லது ஆஹவனத்துக்கு ஆதாரமாக இருக்கப்பட்டதுதான ஆஹவநீயம். இந்த ஆஹவநீய குண்டம் சதுரமாக இருக்கும். தேவதாப்ரீதியாகச் செய்யப்படும் ஸோம யாகம் முதலான எல்லாப் பெரிய வேள்விகளும் ஆஹவநீய அக்னியை க்ருஹத்திலிருந்து யாகசாலைக்கு கொண்டு போய் அங்கே அதில் செய்வதுதான்.