திருவாங்கூருக்கு வெளியிலிருந்து, பொது மக்களின் அனுதாபத்தைத் தவிர வேறு எவ்வித உதவியும் வரக்கூடாதென்று நான் கூறியிருக்கிறேன் அல்லவா? அந்த வாதத்தை விளக்கும்படி என்னைக் கேட்டிருக்கிறார்கள். வெளியிலிருந்து உதவி வராததால் என்ன லாபம் என்பது பற்றி நான் முன்பே ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறேன். அத்தகைய உதவி வருவதற்கு, அதை அங்கீகரிப்பதற்கும்கூட, அடிப்படையான ஆட்சேபணை இருக்கிறது. சத்தியாக்கிரகம், ஏராளமான பலவீனர்களின் சார்பில் தன்னலத் தியாகிகளான சிலர் கைக்கொள்ளும் முறையே; அல்லது மகத்தான கஷ்ட நஷ்டங்களுக்கிடையே வெகு சிலர் கையாளும் முறை என்றும் சொல்லலாம். வைக்கத்தில் நடை பெற்று வருவது, முதலில் கூறப்பட்ட சத்தியாக்கிரகமாகும். அங்கே தீண்டாதார்கள் சார்பில் பலர் தியாகம் செய்ய விருப்ப முடையவர்களாக, ஆனால், பலவீனர்களாக இருக்கிறார்கள்; சிலர் விருப்பமுடையவர்களாகவும் தங்களுக்குச் சொந்தமான எல்லா வற்றையும் தியாகம் செய்ய சக்தியுடையவர்களாகவும் இருக்கிறார்கள். அந்நிலையில் அவர்களுக்கு வெளி உதவி எதுவும் தேவையில்லை என்பது தெளிவாகும். அவர்கள் வெளி உதவியை ஏற்றுக்கொள்ளுவதாக வைத்துக்கொள்ளுவோம். அதனால் தீண்டாதாரான நம் தேச மக்களுக்கு என்ன பலன் ஏற்படும்? பலம் வாய்ந்த எதிரிகளைப் பலவீனர்களான ஹிந்துக்கள் எதிர்த்து நிற்க முடியாது. இந்தியாவின் மற்ற பாகங்களிலிருந்து உதவி புரிவோரின் தியாகம், எதிரிகளின் மனத்தை மாற்ற முடியாது. எனவே அதன் விளைவாக, தீண்டாதாரின் நிலை முதலில் இருந்ததைவிட பெரிதும் அதிக மோசமாகி விடக் கூடும். சத்தியாக்கிரகம், எதிரிகளின் மனத்தை மாற்றுவதற்கு மிகச் சக்தி வாய்ந்த ஒரு முறை என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். அது இதயத்தைத் தொடும் ஒரு வேண்டுகோளாகும். இந்தியாவின் மற்றப் பாகங்களிலிருந்து வைக்கத்திற்கு வந்து கூடும் ஜனங்களால் அத்தகைய ஒரு வேண்டுகோள் விடுத்து, அதை வெற்றிகரமாகும்படி செய்வது முடியாத காரியம்.
இந்த சமஸ்தானத்திற்குள் நடைபெறும் ஓர் இயக்கத்திற்கு, வெளியிலிருந்து பண உதவி தேவையாக இருக்கக் கூடாது. திருவாங்கூரில் உள்ள பலவீனர்களான, ஆனால் சத்தியாக் கிரகத்தில் அனுதாபம் உள்ள எல்லா ஹிந்துக்களும், கைதியாகவும் மற்றக் கஷ்டங்களை அனுபவிக்கவும் முன்வராமலிருக்கலாம். ஆனால், அவர்கள் தேவையான பண உதவி செய்ய முடியும்; செய்யவும் வேண்டும். அத்தகைய ஆதரவின்றேல், அவர்களுடைய அனுதாபம் எதற்கு என்பது எனக்குத் தெரியவில்லை.
மகத்தான கஷ்ட நஷ்டங்களுக்கிடையே சத்தியாக்கிரகம் செய்யும் வெகு சிலர் விஷயத்தில் வெளி ஆதரவு அனுமதிக்கத் தக்கதல்ல. தனி நபரின் அல்லது குடும்ப சம்பந்தமான விரிவான முறையே பொது மக்களின் சத்தியாக்கிரகமாகும். பொது மக்களின் சத்தியாக்கிரகம் ஒவ்வொன்றும், அதற்கு இணையான குடும்ப சத்தியாக்கிரகத்தைக் கற்பனை செய்துகொள்ளுவதன் மூலம் சோதித்துப் பார்க்கப்பட வேண்டும்.
உதாரணமாக, என் குடும்பத்தில் நான் தீண்டாமைச் சாபக் கேட்டை அகற்ற விரும்புவதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த அபிப்பிராயத்தை என் பெற்றோர்கள் எதிர்க்கிறார்கள்; பிரகலாதனைப் போன்ற கொள்கை உறுதியும் உற்சாகமும் எனக்கு இருக்கிறது; என் தந்தை எனக்குத் தண்டனைகள் விதிப்பதாகப் பயமுறுத்துகிறார்; என்னைத் தண்டிக்கச் சர்க்காரின் உதவியைக்கூட நாடுகிறார்; இப்படியெல்லாம் நடப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அந்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்? என் தந்தை எனக்காக ஏற்படுத்தியுள்ள தண்டனைகளை என்னுடன் சேர்ந்து அனுபவிக்கும்படி என் நண்பர்களை நான் அழைக்கலாமா? அல்லது என் தந்தை எனக்கு விதிக்கும் தண்டனைகளையெல்லாம் தலை வணங்கிச் சாந்தமாக ஏற்று, அவரது மனம் உருகும்படி செய்வதற்காகத் துன்பத்தைச் சகித்துக்கொண்டு, அன்பு காட்டும் நியதியில் பூரண நம்பிக்கை வைத்து, தீண்டாமைத் தீமையையொட்டி அவர் கண்கள் திறக்கும்படி செய்வது என் கடமையாகாதா? அவரது குழந்தையான என்னிடமிருந்து அவர் அறிந்துகொள்ள விரும்பாத ஒரு விஷயத்தை அவரிடம் விளக்கிக் கூறுவதற்காக, குடும்பத்தின் கற்றறிஞர்களான நண்பர்களின் உதவியை நான் பெறுவதிலும் கஷ்டமில்லை. ஆனால், துன்பத்தை ஏற்கும் பாக்கியத்தையும் கடமையையும் என்னுடன் பங்குகொள்ள நான் எவரையும் அனுமதிக்காமல் இருக்கலாம். கற்பனையான இந்தக் குடும்பச் சத்தியாக்கிரகம் சம்பந்தப்பட்டவரையில் எது உண்மையோ, அதுவே பொது மக்கள் சத்தியாக்கிரக விஷயமாகவும் உண்மையாகும்.
எனவே, வைக்கம் சத்தியாக்கிரகிகள், நம்பிக்கைக்கே இடமில்லாத மிகச் சிறுபான்மையோராக இருந்தாலும் சரி, அல்லது எனக்குக் கிடைத்துள்ள தகவலுக்கு இணங்க, சம்பந்தப்பட்ட இந்துக்களின் பெரும்பான்மையோராக இருந்தாலும் சரி, அவர்கள் சமஸ்தானத்திற்கு வெளியிலிருந்து பொதுமக்களின் அனுதாபத்தைத் தவிர வேறெந்தவித உதவியையும் தவிர்க்க வேண்டும் என்பது தெளிவான விஷயமாகும். அத்தகைய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் மேலே குறிப்பிட்ட நியதிக்கு இணங்க நடந்துகொள்ள முடியாதவர்களாக இருக்கலாம். இந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் அவ்விதம் செய்ய முடியாமல் இருக்கலாம் என்பது உண்மையே. எனினும், அந்த நியதியை நாம் மறந்து விடக்கூடாது. நம்மால் இயன்ற வரையில் நாம் அதற்கிணங்க நடக்க வேண்டும்.