வைக்கம் போராட்டம்: பெரியார் கலந்து கொள்ள காரணம் என்ன? - பழ. அதியமான் நேர்காணல்
27 ஜனவரி 2020
கேரளாவின் வைக்கத்தில் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஒடுக்கப்பட்டோரை அனுமதிக்கக் கோரி நடந்த போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அந்தப் போராட்டத்தில் அவரது முழுமையான பங்களிப்பு, காந்தியின் பங்கேற்பு, போராட்டத்தின் தாக்கம் ஆகியவை குறித்து பத்தாண்டுகளுக்கு மேல் ஆய்வுசெய்து விரிவான ஆய்வு நூல் ஒன்றை எழுதியிருக்கிறார் பழ. அதியமான். இந்தப் புத்தகம் குறித்தும், வைக்கம் போராட்டம் குறித்தும் பிபிசி தமிழிடம் விரிவாகப் பேசினார் பழ. அதியமான். பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசியதிலிருந்து:
கே. வைக்கம் போராட்டம் குறித்து ஆய்வுசெய்து எழுத வேண்டுமென ஏன் முடிவுசெய்தீர்கள்?
ப. தமிழகத்தின் சமூக வரலாறு இன்னும் முழுமையாக எழுதப்படவில்லை. ஆங்காங்கே செய்திகளாக எழுதப்படுகின்றன. அவ்வளவுதான். அந்த வகையில்தான் சேரன் மாதேவி குருகுலப் போராட்டம் குறித்து 2014ல் ஒரு புத்தகத்தை எழுதினேன். அந்தப் புத்தகம் குறித்து எழுதும்போதுதான் வைக்கம் போராட்டம் குறித்து முழுமையான நூல் ஏதும் இல்லை என உணர்ந்தேன். சுருக்கமாக சில நூல்கள் வந்திருக்கின்றன. அவ்வளவுதான். அந்தப் போராட்டத்தின் முழு வரலாற்றைச் சொல்லும் புத்தகங்கள் வரவில்லை.
ஆகவே, வைக்கம் போராட்டத்தின் வரலாற்றை சமகால நாளிதழ்கள், திருவிதாங்கூர் அரசின் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வைத்து வைக்கம் போராட்டத்தைப் பற்றிய இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன். தவிர, வைக்கம் போராட்டம் குறித்து வந்த மலையாள இதழ்கள் எனக்கு இரண்டாம் நிலை ஆதாரமாகப் பயன்பட்டன. குறிப்பாக சுதேசமித்திரன் நாளிதழில் வந்த செய்திகள் பெரிதும் பயன்பட்டன. அந்த நாளிதழ் காங்கிரஸ் சார்பு நாளிதழ். அதில் 1924-25ல் வெளியான சுதேச மித்திரனின் ஒவ்வொரு நாளையும் பார்த்து, அதில் வைக்கம் பற்றி வந்த தகவல்களின் அடிப்படையில் இந்த புத்தகத்தை எழுதியிருக்கிறேன்.
இந்த நூலின் முதல் பகுதி, ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது என்பதை நாளிதழ்களின் செய்தியின் அடிப்படையில் எந்தவிதமான கருத்து கூறலும் இல்லாமல் நடந்ததை, நடந்தபடி எழுதியிருக்கிறேன். போராட்டம் துவங்கிய 1924 மார்ச் 30 முதல், போராட்டம் முடிந்த 1925 நவம்பர் 23ஆம் தேதிவரை நாளிதழ்களில் வந்தபடி கொடுத்திருக்கிறேன்.
அந்தப் பகுதியை வைத்துக்கொண்டு, இந்தப் போராட்டம் குறித்து வேறுவிதமான பார்வையோடு ஒரு கட்டுரையை எழுத முடியும்.
இந்தப் போராட்டத்திற்கு பின்னணியாக, தூண்டுதலாக எவையெல்லாம் அமைந்தன, முன்முயற்சிகள் என்ன என்பதை அடுத்த பகுதியாகக் கொடுத்திருக்கிறேன். இதனைப் பலர் கோவில் நுழைவுப் போராட்டம் என நினைக்கிறார்கள். இது கோவில் நுழைவுப் போராட்டம் அல்ல. கோவிலைச் சுற்றியுள்ள நான்கு தெருக்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நடப்பதற்கு உரிமை வேண்டி நடத்திய போராட்டம். இது கேரளாவில் கோட்டையம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் என்ற சிறிய ஊரில் இருந்த சிவன் கோவிலைச் சுற்றியிருந்த தெருவில் நடப்பதற்கான போராட்டம்தான் இது.
கேரளாவில் ஈழவர்கள் இந்த உரிமையை நாடிப் போராடினார்கள். ஈழவர்களை தமிழகத்தில் ஒப்பிட வேண்டுமென்றால் நாடார்களைச் சொல்லலாம். அந்தப் போராட்டம் நடந்தபோது, இங்கிருந்த பெரும்பான்மையான நாடார்கள் நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார்கள். இவையெல்லாம் முதல் முறையாக தமிழில் பதிவாகியிருக்கின்றன. காமராஜர்கூட இந்தப் போராட்டத்திற்குப் போயிருக்கிறார். பத்திரிகைகளில் அவர் பெயர் வரவில்லை என்றாலும்கூட, போராட்டத்திற்குச் சென்றுவந்த டி.எஸ். சொக்கலிங்கம் இதனைக் குறிப்பிடுகிறார்.
பட மூலாதாரம்,GETTY IMAGES
மூன்றாவது பகுதியில், காந்தி என்ன பங்களிப்பைச் செய்தார் என்பதைக் கொடுத்திருக்கிறேன். காந்தி நேரடியாக இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அவர் அலோசகராகத்தான் இருந்தார். போராட்டம் நின்றுவிடும் ஒரு சூழல் ஏற்பட்டபோது, 1925 மார்ச் மாதம் காந்தி அங்கு வந்தார். அதாவது போராட்டம் துவங்கி ஒரு வருடத்திற்குப் பிறகு வந்தார். அதன் பிறகு ராணியிடம் பேசினார், காவல்துறையினரிடம் பேசினார். அதைவிட முக்கியமாக அங்கிருந்த வைதீக பிராமணர்களிடம் கடுமையான விவாதத்தில் ஈடுபடுகிறார். அந்த விவாதமெல்லாம் இந்த நூலின் பின்னிணைப்பில் இருக்கிறது. அந்த விவாதங்களைப் பார்த்தால், காந்தி ஒரு மாபெரும் அறிவாளி என்பதும் அவரிடம் எதிராளி ஜாக்கிரதையாகப் பேச வேண்டும் என்பது புரியும்.
காந்தி இந்தப் போராட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும் அறிவுரை சொன்னார். ஆனால், எல்லா அறிவுரைகளையும் அங்கிருந்த ஈழவத் தலைவர்கள் கேட்கவில்லை.
இந்தப் போராட்டத்தில் பெரியாரின் பங்கு என்ன என்பதுதான் நான்காவது பகுதி. பெரியார் எந்தச் சூழலில் போராட்டத்திற்குச் சென்றார், என்ன பங்களிப்பைச் செய்தார் என்பது இந்தப் பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகு, வைக்கம் போராட்டம் குறித்து பிற்கால வரலாற்று ஆசிரியர்கள், அந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்று நூலில் என்ன சொல்லியிருக்கிறார்கள், தமிழக, கேரள வரலாற்றாசிரியர்கள் என்னவிதமாகப் பார்த்தார்கள், இந்தியவின் பிற பகுதிகளில் இருந்தவர்கள் எப்படிப் பார்த்தார்கள் போன்றவை கொடுக்கப்பட்டிருக்கிறது.
இவை தவிர, அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளரான மேரி எலிசபத் கிங் என்பவர் வைக்கம் போராட்டத்தை முன்வைத்து, அகிம்சாவழி போராட்டங்கள் குறித்து ஒரு ஆய்வை எழுதியிருக்கிறார். அதிலுள்ள கருத்துகள் இதில் இடம்பெற்றுள்ளன.
பின்னிணைப்பில், ராஜாஜி எழுதிய அறிக்கை, எஸ். ஸ்ரீநிவாச அய்யங்கார் எழுதிய அறிக்கை போன்றவை கொடுக்கப்பட்டிருக்கின்றன.
கே. அந்தத் தருணத்தில் பெரியார் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர். அவர் ஏன், கேரளாவில் நடந்த போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றார்? அதன் பின்னணி என்ன?
ப. 1924 மார்ச் 30ஆம் தேதி துவங்கிய இந்தப் போராட்டம் எப்படி நடந்ததென்று முதலில் புரிந்துகொள்ளலாம். தினமும் மூன்று பேர், கோவிலுக்கு அருகில் தடுக்கப்பட்ட ஒரு பகுதியில் வந்து நின்று போராடுவார்கள். உடனே திருவாங்கூர் அரசு அவர்களைக் கைதுசெய்யும். இப்படி ஒரு வாரம் நடந்தது. அதன் பின் தலைவர்களைக் கைதுசெய்ய அரசாங்கம் முடிவுசெய்தது. அந்தப் போராட்டத்தை நடத்தத் துவங்கிய தலைவர்களான டி.கே. மாதவன், கே.பி. கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் ஆகியோரைக் கைதுசெய்துவிட்டது. அதனால், போராட்டத்திற்கு தலைவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டது.
இதனால், பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து அழைக்க முடிவுசெய்கிறார்கள். ஏன் பெரியாரை அழைக்க வேண்டுமென்பது அடுத்த கேள்வி. பெரியார்தான், அப்போது இங்கே காங்கிரஸ் தலைவராக இருந்தார் என்பது ஒரு காரணம். இம்மாதிரியான போராட்டம் நடத்தவது, மக்களைத் திரட்டி, உறுதியாகப் போராடுவது ஆகியவற்றில் அந்த காலகட்டத்தில் இரண்டு தலைவர்கள் சிறப்பானவர்களாக இருந்தார்கள். ஒருவர் வரதராஜுலு நாயுடு. இன்னொருவர் பெரியார். அதில் பெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமை விஷயத்தில் தீவிரமாக இருப்பார் என்பதால் பெரியாரை அழைத்தார்கள்.
கே. கேரள தலைவர்கள் அழைத்து அங்கே பெரியார் சென்றாரா அல்லது காந்தி சொல்லி சென்றாரா?
ப. கேரளாவில் போராடிக்கொண்டிருந்த தலைவர்கள்தான் அழைத்தார்கள். சிறையில் இருந்து ஜார்ஜ் ஜோசப், கே.பி. கேசவமேனன் ஆகியோர் கடிதங்களைக் கொடுத்து அனுப்புகிறார்கள். பெரியார் தன் வாழ்க்கை வரலாற்றில் சொல்லியிருக்கிறார். ஜார்ஜ் ஜோசப்பின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய அவரது பேரனும் இதைச் சொல்லியிருக்கிறார். காந்தி சொல்லி செல்லவில்லை. நான் கட்டாயம் வரவேண்டுமா என்று இரண்டு முறை கேட்டு, நீங்கள் கட்டாயம் வந்தாக வேண்டும், நிலைமை மோசமாக இருக்கிறது என்று சொன்ன பிறகுதான் நான் போனேன் என அந்த சமயத்திலேயே சொல்லியிருக்கிறார்.
கே. பெரியார் அங்கே சென்ற பிறகு வைக்கம் போராட்டம் எப்படி மாறியது?
ப. வைக்கம் போராட்டம் குறித்து முதன் முதலில் ஆங்கிலத்தில் புத்தகம் எழுதியவர் டி.கே. ரவீந்திரன். "பெரியார் வந்த பிறகு, இயக்கத்திற்கு ஒரு புதிய உயிர் கிடைத்தது" என்று அவர் அந்த நூலில் குறிப்பிடுகிறார். பெரியாரின் சாமர்த்தியமான, கவர்ச்சிகரமான பேச்சு போராட்டத்தை உயிர்த்தன்மையோடு வைத்திருந்தது. மக்கள் போராட்டமாக மாற்றியது. சுதேசமித்திரனில் இது தொடர்பான செய்திகள் விரிவாக வந்திருக்கின்றன. இங்கிருந்த சென்ற டி.எஸ். சொக்கலிங்கம் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள் இதை சொல்லியிருக்கிறார்கள்.
கே. பெரியார் தமிழ்நாட்டிலிருந்து போராட்டத்திற்கு சென்று வந்தாரா அல்லது வைக்கத்திலேயே தங்கியிருந்து நடத்தினாரா?
ப. இந்தப் போராட்டம் 1924 மார்ச் முப்பதாம் தேதி துவங்கியது. பெரியார் முதன் முதலில் ஏப்ரல் 13ஆம் தேதி அங்கே போனார். அவர் அங்கே போய் இறங்கியவுடன் அவருக்கு அரச வரவேற்பு கிடைக்கிறது. காரணம், அந்த அரசர் பெரியாரின் நண்பர். ஆனால், தான் நண்பராக வரவில்லை; அரசுக்கு எதிராகப் போராட வந்திருக்கிறேன் என்று வரவேற்பை மறுத்துவிட்டார் பெரியார். முதலில், 10-15 நாள் தொடர்ந்து பேசுகிறார் பெரியார். பிறகு பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. நுழைவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. இதனால், ஊருக்கு வருகிறார் பெரியார். பிறகு, மே மாதத்தில் மீண்டும் வைக்கத்திற்குப் போகிறார் பெரியார்.
இந்த முறை பெரியார் கைதுசெய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்படுகிறார். சிறைவாசம் முடிந்த பிறகு வீட்டிற்கு வராமல், மீண்டும் போராடச் செல்கிறார். மீண்டும் கைதுசெய்யப்படுகிறார். அப்போது நான்கு மாத தண்டனை விதிக்கப்படுகிறது. இப்படியாக ஏழு முறை வைக்கத்திற்குச் செல்கிறார் பெரியார். என் கணக்குப்படி சுமார் 140 நாட்கள் வைக்கத்தில் இருந்தார் அவர்.
கே. இந்தப் போராட்டத்தில் காந்தியின் பங்களிப்பு என்ன?
ப. இந்தப் போராட்டம் துவங்குவதற்கு முன்பே, இப்படி ஒரு போராட்டத்தைத் தொடங்கலாமா, வேண்டாமா என்பதையெல்லாம் காந்தியிடம் ஆலோசித்தார் டி.கே. மாதவன். வைக்கம் போராட்டம் என்ற சொல்லாடல் துவங்குவதற்கு முன்பே காந்திக்கு இதில் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. 1922-23ல் காந்தி திருநெல்வேலிக்கு வந்தார். அங்கே டி.கே. மாதவன் காந்தியிடம் இது குறித்து விவாதித்தார். நிச்சயமாக போராடலாம் என காந்தி சொன்னார். இதை நீங்கள் எழுத்து மூலமாகக் கொடுங்கள் என்கிறார் மாதவன். காந்தியும் எழுதிக் கொடுத்தார். இது தன்னுடைய தேசாபிமானியில் பிரசுரித்தார் மாதவன். அது இந்தப் புத்தகத்தின் பின்னிணைப்பில் இருக்கிறது.
கே. போராட்டம் நிறைவுக்கு வரும்வரை காந்தியின் பங்களிப்பு என்னவாக இருந்தது?
ப. ஒவ்வொரு கட்டத்திலும் காந்தியிடம் ஆலோசனை செய்துதான் இந்தப் போராட்டத்தை நடத்தினார்கள். ஒரு முறை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாமா என்று கேட்டார்கள். காந்தி மறுத்துவிட்டார். தடையைத் தாண்டலாமா என்று கேட்டார்கள். அதற்கும் காந்தி மறுத்தார். கிறிஸ்தவர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளலாமா என்று கேட்டபோது, அதுவும் கூடாது என்றார் காந்தி. சீக்கியர்கள் பஞ்சாபிலிருந்து வந்து இந்தப் போரட்டக்காரர்களுக்கு உணவளித்துவந்தார்கள். அதற்கும் தடை விதித்தார் காந்தி.
மற்ற மதத்தினர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்றார் அவர். இது இந்துக்களின் பிரச்சனை; அதற்கு அவர்கள்தான் பிராயச்சித்தம் செய்ய வேண்டுமே தவிர வேறு மதத்தினர் அதில் கலந்துகொள்ளக்கூடாது என்றார் காந்தி. அதனால்தான் ஜார்ஜ் ஜோசப் போராட்டத்திலிருந்து வெளியேறினார். இப்படியாக ஒவ்வொரு கட்டத்திலும் காந்தியின் ஆலோசனைப்படிதான் போராட்டம் நடைபெற்றது.
கே. பெரியாரை போராட்டத்திற்கு அழைப்பது குறித்து காந்தியிடம் கேட்கப்பட்டதா?
ப. அப்படிக் கேட்கப்பட்டதாக நம்மிடம் தகவல் இல்லை. போராட்டக் குழுதான் அதை முடிவுசெய்தது.
கே. இந்தப் போராட்ட காலகட்டத்தில் காந்தி எத்தனை முறை வைக்கத்திற்கு வந்தார்?
ப. 1924 மார்ச் துவங்கி 1925 நவம்பர் வரையிலான காலத்தில் ஒரே ஒரு தடவைதான் அதாவது 1925 மார்ச் மாதம் வந்தார். ஏறக்குறைய பத்து நாட்கள் தங்கியிருந்தார். ஒவ்வொரு நாளும் என்ன செய்தார் என்ற தகவல் புத்தகத்தில் இருக்கிறது.
கே. இந்தப் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பை எப்படி மதிப்பிடுவீர்கள்?
ப. ஒரு போராட்டம் கலங்கிக்கொண்டிருந்தபோது, பெரியார் சென்று அந்தப் போராட்டத்தை நிமிர்த்தினார் என்று நான் நினைக்கிறேன். மக்கள் ஆதரவை அவர் திரட்டினார். அதில் அவருடைய பங்கு மிகச் சிறப்பானது. காந்தி சமாதானங்களைச் செய்தார். அதாவது மேல் மட்டத்தில் அவர் பல காரியங்களைச் செய்தார். பெரியார் கீழ்மட்ட நிலையில், போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதில் பெரும்பங்கு வகித்தார்.
கே. போராட்டம் இறுதிக்கட்டத்தை நெருங்கும்போது காந்தி ஏன் அழைக்கப்படுகிறார், பெரியாரை ஏன் அழைக்கவில்லை?
ப. இது குறித்து பிற்காலத்தில் பெரியார் சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். அரசாங்கம் தன்னிடம் கலந்துபேச விரும்பி ராஜாஜியிடம் சொன்னபோது, அவர் காந்தியை வைத்தே இதை முடித்துக்கொள்ளலாம் எனச் சொன்னதாகவும் பெரியார் எழுதியிருக்கிறார். இது தொடர்பாக வேறு ஆதாரங்கள் இல்லை.
கே. வைக்கம் போராட்டம் ஒரு முழுமையான வெற்றியை எட்டியதா?
ப. இல்லை. அப்படிச் சொல்ல முடியாது. போராட்டக்காரர்கள் நான்கு தெருக்களிலும் நடக்க அனுமதிக்க வேண்டுமென்றனர். ஆனால், மூன்று தெருக்களில் மட்டுமே நடக்க அனுமதி கிடைத்தது. அந்தப் போராட்டத்தின் செயலராக இருந்த கேளப்பன் என்பவர், தீண்டாமை என்பது முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று சொல்ல முடியாது; அது ஒரு மூலையில் ஒதுங்கியிருக்கிறது என்று குறிப்பிட்டார்.
கே. போராட்ட காலத்தில் காந்திக்கும் பெரியாருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றம் இருந்ததா?
ப. இந்தப் போராட்ட காலத்தில் இருந்ததற்கான தகவல்கள் இல்லை. ஆனால், காந்தி வைக்கத்திற்கு வந்தபோது, பெரியார் அவரை ஈரோட்டில் வரவேற்றார். அதற்குப் பிறகு, கேரளா சென்று இரண்டு நாட்களுக்குப் பின் இவர் காந்தியுடன் சென்று சேர்ந்துகொள்கிறார். அதற்குப் பிறகுதான் பெரியாரும் காந்தியும் நாராயண குருவைச் சந்தித்தார்கள். காந்தி ராணியிடம் பேசும்போது, தன்னிடம் கலந்துகொண்டு பேசியதாக பெரியார் சொல்கிறார்.
கே. இந்தப் போராட்டத்தில் நாராயண குருவின் பங்களிப்பு என்ன?
ப. துவக்கத்தில் இந்தப் போராட்டத்திலிருந்து நாராயண குரு சற்று விலகியே இருந்தார். ஆனால், போராட்டம் இன்னும் தீவிரமாக நடக்க வேண்டுமென அவர் நினைத்தார். அதற்காக ஒரு நேர்முகம்கூட அவர் அளித்தார். ஆனால், அந்த நேர்முகம் வெளியான பிறகு அவர் அதனை மறுத்தார்.
காந்தி வைக்கத்திற்குவந்து நாராயண குருவை சந்தித்தபோது, அவருக்கு போராட்டத்தில் விருப்பமில்லை என்பதை மனதில் வைத்தே காந்தி பேசுவதுபோல அந்தச் சொற்களில் இருந்து நாம் புரிந்துகொள்ளலாம். அதற்குப் பிறகு நாராயண குரு போராட்டத்திற்கு ஆதரவளித்தார். அவர் முழுமையான ஆதரவைக் கொடுத்திருந்தால் போராட்டத்தை சீக்கிரமாக முடித்திருக்கலாம். ஆனால், அவருடைய ஒப்புதல் இல்லாமல் இந்தப் போராட்டம் முடிந்திருக்கவே முடியாது. போராட்டம் நடந்த இடம், நாராயண குருவுடையது.
ஒரு கட்டத்தில் நாராயண குரு நேரடியாகச் சென்று சத்யாகிரகிகளை ஆசிர்வதித்தார். ஆயிரம் ரூபாய் நன்கொடையாகக் கொடுத்தார். போராட்டத்தை நடத்திய டி.கே. மாதவன், நாராயண குருவின் அத்யந்த சீடர்.
கே. இந்தப் போராட்டத்தின்போது தமிழக சனாதனிகள் எப்படி நடந்துகொண்டனர்?
ப. அது தொடர்பாக நாம் இன்னும் ஆராய வேண்டியிருக்கிறது.
கே. வைக்கம் போராட்டத்தில் பங்கேற்றது, பெரியாரின் எதிர்கால அரசியல் வாழ்வில் தாக்கம் ஏதும் செலுத்தியதா?
ப. இதைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். அவருடைய பிற்கால வாழ்வில் வைக்கம் போராட்டம் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறது. ஆனால், பிற்காலத்தில் கோவில் நுழைவு என்ற கருத்திலேயே அவர் மாறுபடுகிறார். அது முக்கியமல்ல என்று நினைக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களின் பொருளாதார வளர்ச்சிதான் முக்கியம் என்ற கருத்துக்கே வந்துவிடுகிறார் பெரியார். ஆனால், துவக்ககாலத்தில் இந்தப் போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தால்தான் ஈழவர்களுக்கும் பெரியாருக்கும் ஒரு நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.
கே. பெரியார் இந்தப் போராட்டத்தை ஜாதி ஒழிப்புப் போராட்டமாக பார்த்தாரா?
ப. 1953வாக்கில் விடுதலையில் ஜாதி ஒழிப்பு குறித்து ஒரு நீண்ட கட்டுரையை எழுதினார் பெரியார். அதில், முதல் நிகழ்ச்சியாக வைக்கம் போராட்டத்தைத்தான் குறிப்பிடுகிறார். ஆகவே, அவர் இந்தப் போராட்டத்தை அப்படி நினைத்தார் என்று சொல்லலாம்.
கே. தமிழ்நாட்டில் அதற்குப் பிறகு நடந்த கோவில் நுழைவுப் போராட்டங்களில் வைக்கம் போராட்டத்தின் தாக்கம் இருந்ததா?
ப. தமிழ்நாட்டில் நடந்த கோவில் நுழைவுப் போராட்டங்கள் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் நடந்த கோவில் நுழைவு, தெரு நுழைவு போராட்டங்களில் வைக்கம் மிகப் பெரிய பங்களிப்பை, உத்வேகத்தை அளித்தது. அம்பேத்கர் 1936வாக்கில் ஒரு போராட்டத்தைத் துவங்கியபோது, வைக்கம் போராட்டம்தான் தனக்கு ஒரு உணர்ச்சியைக் கொடுத்தாக குறிப்பிடுகிறார். கேரளாவிலும் 1936ல் கோவில் நுழைவு பிரகடனம் செய்யப்பட்டபோது, வைக்கம்தான் அதற்கு முக்கியக் காரணம் என எல்லோருமே சொல்லியிருக்கிறார்கள்.