’வைக்கம் போராட்டம்’ புத்தகம் பற்றி ஜெயமோகன் விமர்சனம்... எழுத்தாளர்கள் ராஜன் குறை, பெருமாள் முருகன் கருத்து...!
பழ. அதியமான் எழுதிய காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட வைக்கம் போராட்டம் புத்தகத்தை நேர்மை இல்லாமல் எழுதப்பட்ட நூல் என்று எழுத்தாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஜெயமோகன் விமர்சித்திருந்தார்.
இந்த நிலையில், ஜெயமோகன் கருத்துக்கு எழுத்தாளர் ராஜன் குறை பதிலளித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அவரை "லைசென்ஸ்டு டு கில்" என்று குறிப்பிடுவார்கள். கொல்வதற்கான லைசன்ஸ் உள்ளவர்.
தமிழ் சிறுபத்திரிகைகள் என்ற இலக்கிய, அறிவுப் புலத்தில் இலக்கியவாதிகளுக்கு ஒரு லைசன்ஸ் உண்டு. அவர்கள் எதைப்பற்றி வேண்டுமானால் எழுதலாம், என்ன வேண்டுமானால் எழுதலாம். யாரை வேண்டுமானால் எப்படி வேண்டுமானால் தூற்றலாம். அவர்கள் இலக்கியவாதிகள் என்பதால் அவையெல்லாம் பொருட்படுத்தப்படாது.
பழ. அதியமான் வைக்கம் போராட்டம் குறித்து தரவுகளை திரட்டி விரிவான நூலை எழுதியுள்ளார். அதியமானின் எழுத்தை அறிந்தவர்கள் நூல் நிச்சயம் தரவுகள் அடிப்படையில் அமைந்திருக்கும் என்று நம்பலாம். காலச்சுவடு பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது.
ஜெயமோகன் அந்த நூலை "கழைக்கூத்து" என்றும், ஆய்வு நேர்மை இல்லாமல் எழுதப்பட்ட நூல் என்றும் கூறியுள்ளார். இது கடுமையான வசை மற்றும் தூற்றுதல்.
இப்போது நானும் ஒரு ஆய்வாளன் என்பதால் உடனே அதியமானின் நூலை வாசித்து, ஜெயமோகனின் முந்தைய கட்டுரைகளை மீண்டும் வாசித்து விரிவாக ஜெயமோகனுக்கு ஒரு கண்டனம் எழுதலாம். ஐந்து அல்லது ஆறு நாட்கள் செலவாகும்.
ஆனால் என்னுடைய இலக்கியவாதிகளான நண்பர்கள் சிறிதும் கவலைப் பட மாட்டார்கள். ஜெயமோகனிடம் போற்றிப் பாராட்ட அவர்களுக்கு இலக்கிய சமாசாரங்கள் நிறைய இருப்பதால் அவர் யாரைத் தூற்றினால் இவர்களுக்கு என்ன?
ஏற்கனவே எம்.எஸ்.எஸ்.பாண்டியனையும், எஸ்.வி. ராஜதுரையையும் தூற்றியபோது என்ன செய்து விட்டார்கள்? அவர்கள் அந்நிய நிதி தூண்டுதலால் எழுதுவதாக சொன்னபோது என்ன கேள்வி எழுப்பினார்கள்?
இதைப் படித்த உடனே அதியமான் நூலை படிக்காமல் நீங்கள் எப்படி ஜெயமோகனை கண்டிக்கலாம் என்று பின்னூட்டப் புலவர்கள் கேட்பார்கள்.
சென்ற மாதம்தான் பாபர் மசூதி விஷயத்தில் ஜெயமோகன் கேவலமான ஒரு பொய்யை, அங்கு ராமர் கோயில் இருந்து இடிக்கப்பட்டது "வரலாற்று உண்மை" என்று அபாண்டமாக எழுதியதை கண்டித்து "ஜெயமோகனின் நயவஞ்சகம்" என்று ஒரு கட்டுரை எழுதினேன். இதை வெளியிடச் சொல்லி யாரையும் சங்கடப்படுத்தாமல் முகநூலிலே வெளியிட்டேன்.
இவ்வளவு முக்கியமான விஷயத்தில் அபாண்டமாக ஜெயமோகன் எழுதியதை கண்டிக்க இலக்கியவாதிகள் யாரும் முன்வரவில்லை என்பதையும் கவனிக்கிறேன்.
புனைவுகளைத் தவிர ஒரு வரியும் எழுதாத கோணங்கி போன்றவர்களை நான் மதிக்கிறேன். ஆனால் நான் இலக்கியவாதி மட்டுமல்ல, சிந்திக்கிறேன், சமூகத்திற்காக பேசுகிறேன் என்பவர்கள் எல்லாம் பொதுக்களத்தில் தனிநபர்களை இலக்கியவாதிகள் அவதூறு செய்யும்போது மெளனமாகி விடுவார்கள். வசதி.
தமிழ் இலக்கியவாதிகள் ஜேம்ஸ்பாண்டு போலத்தான். அவர்கள் யாரை வேண்டுமானால், எப்படி வேண்டுமானால் தூற்றலாம். அவர்கள்தான் படைப்பாளிகள் ஆயிற்றே. இலக்கியத்தை காப்பாற்றுகிறார்களே.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஜெயமோகன் கருத்துக்கு எழுத்தாளர் பெருமாள் முருகனும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளர். “சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கிய மிக முக்கியமான நூல் 'வைக்கம் போராட்டம்' (பழ. அதியமான், காலச்சுவடு பதிப்பகம்). பல்லாண்டு தொடர் உழைப்பின் விளைவு இந்நூல். 646 பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வு, வரலாற்று நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
புத்தகம் வெளியான சில நாட்களுக்குள் முழுமையாக வாசித்து முடித்திருக்கிறார் ஜெயமோகன். எழுதுவதில் மட்டுமல்ல, வாசிப்பிலும் ராட்சஷன்தான். ஆனால் நூலை வாசித்தமைக்கான சிறுஅறிகுறி ஏதுமற்றுக் கட்டுரை எழுதும் திறமை பெற்றிருக்கிறார். வாழ்க.” என்று அவர் கூறியுள்ளார்.