தி. பொ. கமலநாதன் எழுதிய ‘தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும்’ என்ற நூலை வாசித்துக் கொண்டிருந்தேன் (தமிழில் ஆ. சுந்தரம் எழுத்து பிரசுரம்) அதன் துணைத்தலைப்பு வித்தியாசமாக இருந்தது ‘மறைக்கப்படும் உண்மைகளும் கறை படிந்த அத்தியாயங்களும்’.
இந்நூலின் வரலாறு ஆர்வத்திற்குரியது 1980 களின் தொடக்கத்தில் பெங்களூரில் இருந்து வெளிவரும் ‘தலித் வாய்ஸ்’ என்ற ஆங்கில இதழ் திராவிட இயக்கம் தற்போது தலித்துக்களுக்கு எதிராக இருப்பதாகக் கூறி தலையங்கம் ஒன்றை எழுதியது. திராவிட இயக்கம்இன்று தமிழ் நாட்டில் நடக்கும் தீண்டாமை முதலிய சாதிக் கொடுமைகளுக்கு எதிராக எதுவுமே செய்யாமலிருக்கிறது என்று குற்றம் சுமத்தியது.
அதற்குப் பதிலாக திராவிட இயக்கத்தின் தலைவர் கி. வீரமணி அவர்கள் ஒரு நீண்ட மறுப்புரை எழுதி அதற்கு அனுப்ப அது வெளியிடப்பட்டது. அதில் திராவிட இயக்கத்தின் வழக்கமான கருத்து வடிவம் முன்வைக்கப்பட்டது. ஒன்று, சாதி வேற்றுமை தீண்டாமை முதலியவை பிராமணர்களால் உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்படுபவை. ஆகவே அதில் பாதிக்கப்படும் அனைவருமே சேர்ந்து பிராமணர்களை எதிர்க்க வேண்டும். பிற்பட்ட சாதியினரும் தலித்துக்களும் சேர்ந்து பிராமண எதிர்ப்பில் ஈடுபட வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் செய்யும் சாதிகொடுமைகளை பிராமணர்களின் பிரித்தாளும் சதியாக மட்டுமே பார்க்க வேண்டும்.
இரண்டாவதாக தலித்துக்களின் விடுதலைக்கான குரல் தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தால் தான் உருவாக்கப்பட்டது. ஈ. வே. ரா அவர்கள் நடத்திய வைக்கம் சத்தியாக்கிரகத்திற்குப் பிறகே அத்தகைய விழிப்புணர்ச்சி தமிழ்நாட்டில் ஏற்பட்டது. தலித் விடுதலைக்கான போராட்டங்களை நடத்தியதும், அவர்கள் இன்று அடைந்துள்ள எல்லா நன்மைகளைப் பெற்றதும் திராவிட இயக்கத்தின் வழியாகவே.
இவ்விரு கருத்துக்களையும் விரிவாக மறுத்து கமலநாதன் அவர்கள் தலித் வாய்ஸ் இதழுக்கு நீண்ட கடிதம் எழுதினார். நீளம் கருதி அது பிரசுரிக்கப்படவில்லை. ஆகவே அதை அடிக்குறிப்புகள் சேர்த்து நூலாக பிரசுரித்தார். அந்நூலின் தமிழாக்கமே இந்த நூல்.
தலித்துக்களை அடிமைப்படுத்தியதிலும் இழிவு படுத்தியதிலும் பிராமணியத்திற்கு உள்ள பங்களிப்பைப் பற்றி கமலநாதன் அவர்களுக்கும் மாற்றுக் கருத்து ஏதும் இல்லை. ஆனால் பிராமணியம் என்ற பொது எதிரியை முன்வைத்து தலித்துக்கள் மீது நேரடியான ஒடுக்குமுறையைச் செலுத்தும் பிற்பட்ட மக்களின் சாதிவெறியை மழுப்ப நினைப்பது தலித் உரிமைப் போராட்டத்திற்கு எதிரானது என்று கமலநாதன் வாதிடுகிறார். தலித் அடையாளத்தை திராவிடம் என்ற அடையாளத்தில் அடக்கி விடமுடியாது என்று கூறுகிறார்.
அவரது கூற்றின்படி தலித்துக்கள் அவர்கள் தலித்துக்கள் என்பதனால்தான் பிற்பட்டோர் உட்பட அனைத்து சாதியினராலும் ஒடுக்கப்படுகிறார்கள். ஆகவே அந்த அடையாளத்துடன் அவர்கள் ஒருங்கிணைவதே சிறந்த போராட்ட முறையாக அமையமுடியும். அதற்கு திராவிட இயக்கத்தின் பொதுமைப்படுத்தல்கள் தடையாக ஆகக்கூடும் என்கிறார்.
தலித்துகளின் உரிமைக்கான போராட்டத்தை 1920ல் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்கு வந்தபோதிருந்து ஆரம்பிப்பது என்பது தலித்துகளின் உரிமைக்காகப் போராடிய தலித் தலைவர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதும் அவமதிப்பதுமாகும் என்று வாதிடுகிறார் கமலநாதன். மிகவிரிவான ஒரு வரலாற்றுச் சித்திரத்தை உருவாக்கிக் காட்டுகிறார். இந்தியாவுக்கு வந்த மிஷினரிகளிடமிருந்து தலித் விடுதலைக்கான கருத்துக்கள் ஆரம்பிக்கின்றன. அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம். சி. ராஜா ஆகிய தலித் தலைவர்களின் அயராத உழைப்பால் தலித் விடுதலைக்கான கருத்தியல் சட்டகம் உருவாகிறது.
உண்மையில் தலித் விடுதலைப் போர் தனித்த இயக்கமாக வளராமல் செய்தது திராவிட இயக்கம். இதை பிற்பட்ட சாதியினரின் நலனுக்கான இயக்கமாக இருந்த திராவிட அரசியலுடன் இணைத்தல் வழியாக அதன் தனித்தன்மையையும் போர்க்குணத்தையும் இல்லாமலாக்கியது. திராவிட இயக்கத்தின் பிடியில் இருந்து விடுபட்ட பின்னரே தமிழ்நாட்டில் மீண்டும் தலித் இயக்கம் உருவாகி முக்கால் நூற்றாண்டு தாண்டிய பிறகும் தலித்துக்கள் மீதான ஒடுக்குதல்கள் அப்படியே இருந்தன. அவர்களின் கோரிக்கைகள் 1930 களில் எப்படி இருந்தனவோ அப்படியே நீடித்தன. அவற்றை 1980 களில் மீண்டும் புதிதாக கிளப்பி, போராட்டங்களை நிகழ்த்த வேண்டிய தேவை இருந்தது. அதன் விளைவாகவே இன்று தமிழகம் முழுக்க பலவகையான தலித் போராட்டங்கள் வேகம் கொண்டிருக்கின்றன.
அதாவது தங்களுடைய வரலாற்று ரீதியான போராட்டங்களையும் அதற்காக உருவாக்கிய கருத்துச் சட்டகத்தையும் திராவிட இயக்கம் எடுத்து வெறும் கோஷமாக மாற்றி பொருளிழக்கச்செய்தது என்றும் தங்கள் பிரச்சினைகளுக்காக அது எதையுமே செய்யவில்லை என்றும் தலித்தியக்கம் கூறுகிறது.
ஏறத்தாழ இதே வரலாற்றுச் சித்திரத்தை தமிழியர்களும் கூறுவார்கள். தமிழ் மொழி மற்றும் தமிழ்ப்பண்பாட்டின் தனித்தன்மை மறுக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் வரலாற்றின் தேவையால் உருவானது தமிழியக்கம். தமிழ்நாடு ஏறத்தாழ 300 ஆண்டுகளாக தமிழரல்லாதவர்களால் ஆளப்பட்டது. தமிழகத்தை ஆண்ட நாயக்கர்களின் ஆட்சியும், மராட்டியர் ஆட்சியும் தமிழ்நாட்டின் பொருளியலுக்கும் மதத்திற்கும் பெரும் பங்களிப்புகளை ஆற்றியிருக்கின்றன. தமிழகத்தில் இன்றுள்ள சாலைகள், சந்தைகள், ஏரிகள் பெரும்பாலானவை இவர்களின் ஆட்சிக்காலத்தில் உருவானவை. இன்று நாம் காணும் தமிழக ஆலயங்கள் பெரும்பாலும் இவர்கள் காலகட்டத்தில் புதுப்பிக்கப்பட்டு எழுந்தவை.
ஆனால் இந்த அன்னிய ஆட்சிக்காலத்தில் தமிழ்ப்பண்பாடு புரவலர்களை இழந்து மெல்ல மெல்ல அழிய ஆரம்பித்தது. தமிழிசை கைவிடப்பட்டு மருவி கர்நாடக சங்கீதமாக ஆகியது. தமிழ் இலக்கியங்களை பேணிவந்த தமிழறிஞர் குடும்பங்கள் பேணுநரின்றி அழியவே தமிழ்நூல்கள் மறைந்தன. சம்ஸ்கிருதம் தெலுங்கு முதலியவை முன்னிறுத்தப்பட்டமையால் தமிழ் மொழிக்கலப்பு அடைந்து அதன் அழகை இழந்தது. இக்காலகட்டத்தில் தமிழின் மாபெரும் செவ்வியல் மரபு அனேகமாக மறக்கப்பட்டது. மதத்துடன் இணைந்திருந்த காரணத்தினால் பக்தி மரபு மட்டுமே உயிருடன் எஞ்சியது.
இந்திய மறுமலர்ச்சியின் காலகட்டத்தில் இந்தியா முழுக்க கிட்டத்தட்ட ஒரே சமயம் வட்டார மொழிகளைப் பற்றிய விழிப்புணர்வு உருவாகியது. அதே காலகட்டத்தில்தான் தமிழ்குறித்த விழிப்புணர்வு உருவாகியது. ஆங்கிலக்கல்வி மூலம் பண்பாட்டுப் பிரக்ஞை பெற்ற ஒரு புதிய தலைமுறை உருவாகி வந்ததே இதற்கு முதற்காரணம். அவர்கள் தங்கள் பண்பாடு குறித்த இழிவுணர்ச்சியை உதறி பெருமிதத்தைப் பெற ஆரம்பித்தார்கள். விளைவாக தமிழ்ப் பண்பாட்டுச் சின்னங்கள் மீட்கப்பட்டன. அதற்கு அன்று உருவாகி வந்த அச்சு, பதிப்பு முதலிய துறைகளும் உதவி புரிந்தன.
தமிழியக்கத்தை மூன்று தளங்களில் நிகழ்ந்த செயல்பாடுகளாகப் பிரிக்கலாம். 1) தமிழ் நூல்களை பதிப்பித்தல் 2) தமிழிசை இயக்கம் 3) தனித்தமிழ் இயக்கம்.
ஏட்டுச்சுவடிகளில் பேணப்படாது அழியும் நிலையில் இருந்த தமிழ் நூல்களை தேடிக் கண்டுபிடித்து பிழைதிருத்தம் செய்து பொருள் குறிப்பு உருவாக்கி சீராக நூலாக கொண்டு வந்ததே தமிழை மீண்டும் உருவாகிய பெரும்பணி என்று கூறலாம். உ. வே. சாமிநாதய்யரே இப்பணியின் முன்னோடியாவார். சி. வை. தாமோதரம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார், வ. உ. சிதம்பரம் பிள்ளை, வெள்ளக்கால் சுப்ரமனிய முதலியார், கெ.என்.சிவராஜ பிள்ளை, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை போன்றவர்களை இத்துறையில் பெரும்பணியாற்றிய முன்னோடிகள் என்று கூறலாம்.
தமிழிசையே கர்நாடக இசையாக மருவியது என்று இலக்கணப்படியும் வரலாற்றின்படியும் நிலைநாட்டுவதும், வழக்கொழிந்து போன தமிழ்ப்பண்ணிசையினை மீண்டும் புத்துருவாக்கம் செய்வதும், தமிழ்ப் பாடல்களை மீண்டும் புழக்கத்திற்குக் கொண்டுவருவதும், தமிழ் பாடல்களை புதிதாக உருவாக்குவதும் தமிழிசை இயக்கத்தின் பணிகள். இதில் முன்னோடி என்று தஞ்சை ஆபிரகாம் பண்டிதரைச் சொல்ல வேண்டும். அண்ணாமலை அரசர், பரிதிமாற் கலைஞர் , விபுலானந்த அடிகள், தண்டபானி தேசிகர், குடந்தை சுந்தரேசனார், கல்கி, டி.கெ.சிதம்பரநாத முதலியார் போல பல முக்கியமான அறிஞர்கள் இத்துறையில் பெரும்பணி ஆற்றியிருக்கிறார்கள்.
தமிழில் மறந்து விட்ட பிறசொற்களை விலக்குவது, தமிழின் தூய சொற்களை புழக்கத்திற்குக் கொண்டு வருவது, தமிழில் புதிய கலைச் சொற்களை உருவாக்குவது ஆகியவை இவ்வியக்கத்தின் பணிகள். மறைமலை அடிகளை இந்த இயக்கத்தின் முன்னோடி, வழிகாட்டி என்று கூறலாம். பரிதிமாற் கலைஞர், ரா. பி. சேதுப்பிள்ளை, திரு. வி. கலியாணசுந்தரனார் போன்றவர்கள் இவ்வியக்கத்தின் முதல்வர்கள்.
தமிழியக்கம் என்பது திராவிட இயக்கத்துடன் எவ்வகையிலும் சம்பந்தம் உடையதாக இருக்கவில்லை என்பதே வரலாறு. தமிழியக்கம் பெரும்பாலும் சைவச் சார்பு உடையது. அதன் முன்னோடிகளில் பலர் காங்கிரஸ் அனுதாபிகளும் கூட. அரசியலில் ஜஸ்டிஸ் கட்சியின் குழந்தையாக உருவாகி வந்ததே திராவிட இயக்கம். ஜஸ்டிஸ் கட்சிக்கு தமிழியக்கத்தில் பெரிய ஆர்வம் இருந்ததில்லை. காரணம் அதில் பெரும்பாலானவர்கள் தமிழர்களல்ல. சொல்லப் போனால் அதற்கு தமிழ் அடையாளமே இருக்கவில்லை. தமிழர், தெலுங்கர், மலையாளிகள் கூடி உருவாக்கிய இயக்கம் அது. அதன் தலைவர்கள் ஆங்கில மோகம் கொண்ட அன்றைய உயர்குடிகள். பிரிட்டிஷ் அரசுடன் ஒத்துழைத்து தங்களுக்கான நலன்களைப் பேணிக்கொள்ள முயன்றவர்கள்.
ஜஸ்டிஸ் கட்சியில் இருந்து திராவிட இயக்கம் உருவான காலத்தில் கூட அதற்கு தமிழியக்கத்தில் ஆர்வம் இருந்ததில்லை. அக்காலத்தல் ஈ. வே. ரா அவர்கள் தீவிரமாக ஆங்கிலத்தை ஆதரிப்பவராகவும் தமிழை காட்டு மிராண்டி பாஷை என்று கூறுபவராகவும் தான் இருந்தார். இது தமிழ் நீசபாஷை என்று கூறிய சனாதனிகளிடமிருந்து எவ்வகையிலும் வேறுபட்ட தரப்பு அல்ல. அந்த தரப்பில் இருந்து தமிழ்ப்பற்றை நோக்கி திடீரென்று ஒரு தாவலை நிகழ்த்தியது திராவிட இயக்கம். அதற்கு சி.என்.அண்ணாத்துரை ஒரு காரணம்.
தமிழியக்கத்தின் ஆரம்பகால அறிஞர்களில் பலர் பிராமணர்கள். ஆனால் விரைவிலேயே பிராமணரல்லாத உயர்சாதியினரின் இயக்கமாக அது மாறியது. குறிப்பாக வேளாளர், முதலியார். இவர்களின் பிராமண எதிர்ப்புப் போக்கு காரணமாக திராவிட இயக்கத்திற்கும் இவர்களில் சிலருக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு உருவாகியது. ஆனால் அக்காலகட்டத்தில் திராவிட இயக்கத்திற்கும் தமிழியக்கத்திற்கும் நடுவேதான் கடுமையான மோதல்கள் உருவாகி நீடித்தன. தமிழியக்க முன்னோடிகளில் பலர் ஈவேராவை தமிழில் ஈடுபாடற்றவர், தமிழை அழிக்கவந்த கன்னடர் என்றே எண்ணினார்கள், இன்றும் அக்கால கட்டுரைகளில் அந்த விமரிசனங்கள் குவிந்துகிடக்கின்றன.
ஆனால் தமிழியக்கத்தின் ஆயுதங்களை சிறப்பாக பயன்படுத்த ஆரம்பித்த சி. என். அண்ணாதுரை அவர்கள் விரைவிலேயே தமிழியக்கத்திற்கும் திராவிட இயக்கத்திற்குமான முரண்பாடுகளை இல்லாமலாக்கினார். ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ போன்ற வரிகள் இந்தச் சமரசத்தின் வழிகளே. திருமூலர் வரியை கூறுவதன் மூலம் பகுத்தறிவையும் இழக்காமல் சைவத்தையும் இழக்காமல் ஒரு சமரசத்தை அண்ணாதுரை மேற்கொண்டார். பின்னர் தமிழியக்கத்தின் எல்லா கோஷங்களையும் திராவிடஇயக்கம் எடுத்தாள ஆரம்பித்தது.
இன்று திராவிட இயக்கம் தமிழியக்கத்தின் எல்லா கடந்த காலச் சாதனைகளுக்கும் உரிமை கொண்டாடுகிறது. தமிழ் நூல்களை மீட்டது, தமிழிசையை வளர்த்தது, தனித்தமிழைப் பரப்பியது எல்லாமே ஈவேரா வில் தொடங்கும் திராவிட இயக்கத்தின் சாதனைகள் என்று இன்று சாதாரணமாக மேடைகளில் பேசுகிறார்கள். தமிழியக்க முன்னோடிகளான உ. வே. சாமிநாதய்யர், ஆபிரகாம் பண்டிதர், மறைமலை அடிகள் போன்றவர்கள் மறக்கப்பட்டு விட்டார்கள்.
ஆனால் உண்மையில் திராவிட இயக்கம் தமிழுக்கு என்ன செய்தது? நிலையாக எதுவுமே செய்யவில்லை என்பதே உண்மை. மேடைகளில் ஆர்ப்பாட்டமாகப் பேசுவதற்கு தனித்தமிழியக்கத்தின் சொல்லாட்சிகளை கடன்பெற்று பயன்படுத்தி வெற்றிக் கண்டது அது. சி. என். அண்ணாதுரை அவர்களின் மேடைமொழி ரா. பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்றவர்களின் அடுக்குமொழிப் பாணியில் இருந்து கடன்பெற்றது என்பதை நாம் காணலாம். அவரை ஒட்டி தமிழை அலங்காரமாகப் பயன்படுத்தும் பேச்சாளர்களின் பெரும் படை ஒன்று கிளம்பியது. அவர்களின் வாரிசுகள் இன்றும் உள்ளனர். இவர்களை வைத்தே தமிழை திராவிட இயக்கம் வளர்த்தது என்ற பாமர நம்பிக்கை உருவாகி நீடிக்கிறது.
தமிழியக்கத்தின் பணியை திராவிட இயக்கம் பரவலாக்கியது, மக்கள்மயமாக்கியது, அதனூடாக தமிழகத்தின் அரசியலில் ஒரு மாற்றத்தை உருவாக்கியது என்பதை மறுக்கமுடியாது. மக்களுக்கு செம்மைமொழியை கொடுப்பதன் வழியாக அவர்களின் ஜனநாயகமயமாதலில் பெரும்பங்கை அது ஆற்றியது என்பதும் அதற்காக தமிழகம் திராவிட இயக்கத்திற்குக் கடன்பட்டுள்ளது என்பதும் உண்மையே
ஆனால் சி.என்.அண்ணாத்துரை, மு.கருணாநிதி போன்றவர்களின் மொழிநடையில் தனித்தமிழ் மிகக்குறைவே என்பதை பலர் கவனிப்பதில்லை. குறிப்பாக சி.என்.அண்ணாத்துரை அவர்களின் ஆரம்பகால பேச்சுகளில் கடினமான சம்ஸ்கிருதச் சொற்கள் புழங்கும். துவஜாரோகணம் போன்ற சொற்களைக்கூட அவரது உரைகளின் அக்கால பதிப்புகளில் காணமுடியும். அன்றும் தனித்தமிழியக்கவாதிகளே நல்ல தமிழ் பேசினார்கள்.
ஒரு மொழி வளரவும் வேர்விடவும் தேவையான அடிப்படைப் பணிகள் எதுவுமே தமிழில் திராவிட இயக்கத்தால் செய்யப்படவில்லை. திராவிட இயக்கம் போல மொழியரசியல் பேசியவர்கள் பதவியில் இல்லாத கேரளத்திலும் கர்நாடகத்திலும் செய்யப்பட்ட பெரும்பணியுடன் ஒப்பிடும்போது இது பரிதாபகரமான யதார்த்தம் என்பது புரியும்.
இந்தியாவுக்குச் சுதந்தரம் கிடைத்ததும் எல்லா இந்திய மாநிலங்களும் மாநில மொழிகளின் வளர்ச்சிக்காக திட்டங்கள் தீட்டி செயல்பட ஆரம்பித்தன. தமிழின் வளர்ச்சிக்காக அன்றைய காங்கிரஸ் அரசு மூன்று அடிப்படையான செயற்திட்டங்களை வகுத்தது. ஒன்று, தமிழை ஆட்சிமொழி ஆக்குவதற்கான கலைச்சொல்லாக்கம் இரண்டு, பேரகராதி தயாரிப்பு .மூன்று, தமிழில் கலைக்களஞ்சியம் கொண்டுவருதல், இம்மூன்று பணிகளையும் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் செய்து முடித்தார்கள். இன்றும் தமிழில் செய்யப்பட்ட மாபெரும் மொழிவளர்ச்சிப் பணிகளாக அவை நீடிக்கின்றன.
தமிழின் வளர்ச்சிக்கு பணியாற்றியவர்களில் தி. சு. அவினாசிலிங்கம் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. கல்வியமைச்சராக பணியாற்றிய அவர் அக்காலத்தைய திறன்மிக்க பேரறிஞர்களை எல்லாம் இப்பணிக்கு தன்னுடன் இணைத்துக் கொண்டார். ஏறத்தாழ இக்காலகட்டத்தில் தான் தமிழகத்தின் மாபெரும் ஆரம்பக்கல்வி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. தமிழகத்தை இன்றும் பிற மாநிலங்களில் இருந்து ஒருபடி முன்னால் நிற்கச் செய்த இயக்கம் அது. தமிழ் ஆரம்பக்கல்வி முதல் உயர்தளம் வரை புத்தெழுச்சி கண்ட காலகட்டம் இதுவேயாகும்.
ஆனால் இன்று இந்தச் சாதனைகளை வரலாற்றில் இருந்து தோண்டி எடுத்து திரும்பத்திரும்பச் சொல்லி நிறுவ வேண்டியிருக்கிறது. திராவிட இயக்கத்தின் ஆர்ப்பாட்டமான மேடையுரைகளிலும் கூசாமல் செய்யப்படும் வரலாற்றுத் திரிப்புகளும் இந்த உண்மைகளை முற்றாகவே மழுங்கச் செய்து விட்டிருக்கின்றன. இன்றும் பெரிய அநீதி என்னவென்றால் காங்கிரஸின் பணி உட்பட இந்த தொடக்ககாலத்து தமிழ் மறுமலர்ச்சியின் சாதனைகளை எல்லாம் திராவிட இயக்கம் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடுகிறது என்பதே.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பேரகராதிக்கு இன்றுவரை ஒரு நல்ல மறுபதிப்பு கொண்டு வர பின்னர் வந்த திராவிட ஆட்சிகளால் இயலவில்லை. தமிழ்ப் பேரகராதிக்கு ஒரு மறு அச்சு கொண்டுவரக்கூட அவற்றால் முடியவில்லை. தமிழ்மொழிக்கு கடந்த ஐம்பதாண்டுக்கால திராவிட ஆட்சியில் செய்யப்பட்டது என எந்த பெரும்பணியும் கிடையாது. இதுவே நம் கண்முன் உள்ள உண்மையாகும்.
அதற்கு மாறாக நிகழ்ந்தது என்ன? எப்போதும் கவற்சியான மேடை உரைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள், ஆர்பாட்ட அறிவிப்புகள் மட்டுமே நிகழ்ந்தன. பெரும் திட்டங்கள் முன்வைக்கப்படும், ஆனால் அவை ஒரு போதும் எளிய முறையில் கூட நிறைவேற்றப்படாது. திராவிட ஆட்சியில் தமிழுக்கு என்று உருவாக்கப்பட்ட மிகப்பெரிய அமைப்பு என்றால் அது தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம்தான். அது கடந்த கால்நூற்றாண்டில் செய்த சாதனை என்ன என்று கேட்டால் சங்கடமான மௌனமே பதிலாக அமையும். அறிவிக்கப்பட்ட எல்லா திட்டங்களும் அரைகுறை முயற்சியாக முடிய இன்று செயலற்று பெறும் கட்டிடக்குவியலாக கிடக்கிறது அது.
இதே போன்றுதான் சென்ற காலங்களில் திராவிட இயக்கத்தால் நடத்தப்பட்ட உலகத்தமிழ் மாநாடுகளையும் கூறவேண்டும். பாமரர்கள் தவிர பிறர் எவரும் இந்த மாநாடுகளால் தமிழுக்கு ஏதேனும் நன்மை விளைந்தது என்று கூறமாட்டார்கள். திராவிட இயக்கத்தின் அடிபப்டை இயல்பே பெரும் திருவிழாக்களை நடத்துவதில்தான் இருக்கிறது. கூட்டம் ஆர்பபட்டம் அலங்காரம் என்றே அதன் மனம் செல்கிறது. அழுத்தமான ஆக்கப்பணிகளை அதனால் நீடித்தகால உழைப்புடன் ஆற்ற இயலாது.