வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்
வைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு
அன்புள்ள ஜெமோ,
பெரியார்-வைக்கம் பற்றிய உங்கள் சமீபத்திய பழ.அதியமானுக்கு எதிரான பதிவை படித்தேன். இதற்கு சில வருடங்கள் முன்பே நீங்கள் எழுதிய கட்டுரைகள் பின் அதற்கான பதிலுரைகளை தொடர்ந்திருக்கிறேன். வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு சார்ந்த உங்களது வாதம் அல்லது அதன் தொனி இன்னும் என் அறிவுக்கு ஏற்புடையதாக இல்லை.
பெரியாரை எப்போதும் பெரியாரிஸ்டுகள் வழியாகவே அணுகி, அதன் மூலமே அளவிட வேண்டுமா என்றும் எனக்கு தெரியவில்லை. பெரியாரிஸ்ட்டுகளை சார்ந்து அல்லது அவர்களுக்கு எதிராக எனது பெரியார் சார்ந்த கருத்துக்களை கட்டமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். எனக்கு பெரியார், அவரது பங்களிப்பு, அந்த காலகட்டம், அதற்கான தரவுகள் அவ்வளவுதான்.
வைக்கம் போராட்டம் மார்ச் 30, 1924ல் ஆரம்பிக்குது, உடனே பேசசுவார்த்தை நடந்து, அது தோல்வியுற்று, பின் மீண்டும் ஏப்ரல் 7 போல மீண்டும் போராட்டம் ஆரம்பிக்கிறது. ஏப்ரல் 13, 1924 அன்று பெரியார் தன் மனைவி நாகம்மையுடன் வந்து வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு, தொடர்ச்சியாக அங்கேயே இருந்து பின் செப்டம்பர் 10-ம் தேதிதான் ஊர் திரும்புகிறார்
தமிழகத்தில் இருந்து இன்னொரு சமஸ்தானத்துக்கு போயி 5 மாதங்கள் தொடர்ச்சியாக போராட்டம், கைது, விடுதலை, போராட்ட தலைமை தாங்குதல், பிரச்சாரம் என்று வைக்கத்தை ஒட்டிய பகுதிகளில் இருந்துவிட்டு, அரசின் பேச்சுத்தடை, நுழைய தடை என அனைத்தையும் மீறி இரண்டாம்முறை கடுங்காவல் தனிமை சிறைக்கு பின் 30 ஆகஸ்ட் விடுதலையாகி, மீண்டும் பிரச்சாரம் செய்துவிட்டு, ஈரோட்டுக்கு செப்டம்பர் 10-ம் தேதி திரும்புகிறார். ஊர் திரும்பிய உடனேயே சென்னை மாகாணக் காவல் துறையால் செப் 11-ம் தேதியே கைது செய்யப்படுகிறார்.
ஏறக்குறைய 5 மாதங்கள் இன்னொரு மாகாணத்திற்கு சென்று, அங்கேயே தங்கி, தொடர்சியாக பங்கு பெற்று வருவது என்பது அவ்வளவு குறைத்து மதிப்பிடக் கூடியதோ, எளியதோ இல்லை என்றே நினைக்கிறேன். இத்தனைக்கும் அப்போது அவர் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர்.
அவர் “தொடங்கவில்லை” என்ற உங்கள் ஒற்றை வார்த்தையை நானும் ஏற்கிறேன். அது இன்னொரு மாகாணத்தில் நடந்த நிகழ்வு, கண்டிப்பாக அதை இவர் தொடங்கி இருக்க முடியாது, தொடங்கவும் இல்லை. ஆனால் அந்த போராட்டத்துக்கு சென்ற பெரியார் போன்ற ஒருவர் தொடர்சியாக 5 மாதங்கள் வெளிமாகாணத்தில் தங்கி ஓய்வை கழித்திருக்கமாடடார் என்று நம்புகிறேன். அவர் செப் 10 தேதி திரும்பும் வரை தொடர்ந்து போராட்டத்தில், பிரச்சாரத்தில் தான் ஈடுபட்டிருக்கிறார். அங்கிருந்த முன்னணி போராளிகள் சிறையில் அடைக்கப்பட்டதால்தான் பெரியார் அங்கு சென்றிருக்கிறார், போராட்டத்துக்கு தலைமை தாங்கி இருக்கிறார். மெட்றாஸில் இருந்து வந்த நிதியும், தலைமைத்துவமும் போராட்டம் மீண்டும் வலுவடைய காரணம் என்ற அரசு ஆவண பதிவுகள் இருக்கிறது. பெரியாரை தவிர வைக்கம் போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டவர்கள் அய்யாமுத்துக்கவுண்டர் மற்றும் எம் பெருமாள் நாயுடு என்பதும் பல்வேறு இடங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்களை விட பெரியாரின் பங்களிப்பு குறைவு என்று சொல்வதற்கிடம் இல்லை. பெரியாருக்கு இரண்டாம் முறை சிறை தண்டனை அளிக்கப்பட்ட பின்பும் நாகம்மை, திருமதி. மாதவன், திருமதி.ஜோசப், திருமதி, கோவிந்தன் போன்ற போராளிகளின் மனைவிகளோடு இணைந்து மகளிர் கமிட்டியை உருவாக்கி தொடர்ந்து பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். அவர்களும் மே 20 கைது ஆகி இருக்கிறார்கள். இதில் அவர்களின் தொடந்த தீவிரம் போற்றத்தக்கது. இப்படி 5 மாதம் அங்கே தங்கி இருந்து, தொடர்சியாக செயல்பட்டவரை “நடத்தவில்லை” என்ற வார்த்தைக்குள் அடைக்கமுடியாது என்றே நினைக்கிறேன். வைக்கம் போராட்டம் வெற்றிக் கொண்டாட்டத்துக்கு அழைக்கப்பட்டு மீண்டும் அங்கே சென்று 29.11.25 ஆம் தேதி பெரியார் அந்த கூட்டத்தில் சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார்.
இந்த நிகழ்வில் பெரியாரின் பங்களிப்பு சார்ந்து திராவிட கழகம் அல்லாமல் கேரளாவை சார்ந்தவர்களின்/வெளிநபர்களின் தரவுகளே ஏகப்பட்டது இருக்கிறது, ராஜாஜி அறிக்கை, யங் இந்தியா உள்பட. அதை யாரும் மறுக்கவில்லை. நீங்களும் உங்கள் பழ. அதியமானின் கட்டுரையில் எதையும் தகவல் பிழை என்று மறுக்கவில்லை.
வைக்கம் போன்ற ஒரு போராட்டம் பெரியாரால் மட்டுமே இங்கு நினைவில் கொள்ளப்படுகிறது, அது தவறு என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஆனால் அதுதானே இயல்பானது. எந்த வரலாறு, அரசியல், சமூக நிகழ்வுகளும் பள்ளிக்கல்வியில் பிராந்திய முக்கியத்துவம் சார்ந்ததே. சுதந்திர போராட்டத்தில் தமிழக போராட்டவீர்கள் பற்றி நமக்கு படிப்பிக்கப்படுவதை விட கேரளா, ஆந்திரா, கர்நாடக சுதந்திர போராட்டவீர்கள் பற்றி படிப்பிக்கப்படமாடடார்கள். இதேதான் அந்த அந்த மாநிலங்களிலும். பாண்டிய, சோழ வரலாறை விட சேர வரலாறு அவ்வளவாக நமது பள்ளிக் கல்வியில் இருக்காது. சோழர்கள் அல்ல, சாளுக்கியர்களும் புலிகேசியும்தான் கர்நாடக கல்வியில் முக்கியத்துவம் பெருவார்கள். இதுதான் பொதுவான நியதி. வைக்கத்திற்கும் தமிழகத்திற்கும் நேரடி சம்பந்தம் இல்லாதபோது அது வைக்கம் போராட்டமாக இங்கு நினைவுறுத்தப்படாது. பெரியார் பங்கு கொண்டதாலேயே அது பிராந்திய முக்கியத்துவம் கொண்டு இங்கு பள்ளிக் கல்விக்கு வந்திருக்கிறது. இல்லையெனில் அய்யன்காளி, கந்துகுரி வீரசலிங்கம், பாக்ய ரெட்டி வர்மா போன்றவர்கள் செயல்பாடுகள் சார்ந்து எப்படி நாம் அறியமாடடோமோ, அப்படியே வைக்கமும் பள்ளிக்கல்வியில் அறியப்படாமல்தான் போயிருக்கும். உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரிவுகளில் கதை வேறு. கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் இருக்கும் எனது நண்பர்களிடம் கேட்டேன், அவர்கள் இப்போதும் வைக்கம் பற்றி அறியவில்லை, அவர்கள் படித்தபோது கல்வி திட்டத்தில் வைக்கம் சார்ந்து ஏதும் இல்லை.
பெரியாரை வைக்கம் போராட்டத்தில் அவரது பங்களிப்பு சார்ந்து நிராகரிக்கவோ, குறைவாகவோ மதிப்பிடவோ முடியாது. நீங்கள் அப்படி குறைவாக மதிப்பிடுகிறீர்கள் என்றும் நான் நினைக்கவில்லை, ஆனால் பெரியாரிஸ்ட்டுகள் வைக்கத்தை பெரியாரின் முகமாக முன்னிறுத்துவது உங்களை தொந்தரவு செய்கிறது என்று நினைக்கிறேன், அது வைக்கம் போராட்டத்தை முன்னெடுத்த பல்வேறு பெரும் சீர்திருத்தவாதிகளை மறைப்பதாக நினைக்கிறீர்கள். ஆனால் அது இயல்பானது என்பதே என் எண்ணம். கேரளாவில் வைக்கம் பற்றி படிப்பவர்கள் அதன் பின் இருந்த முக்கியத்துவர்கள் எல்லோரையும் விரிவாகவே படிப்பார்கள், ஒருவேளை பெரியார் அதில் ஒரு அடிக்கோடாக மட்டுமே இருக்கலாம், ஆனால் தமிழகத்தில் வைக்கம் பெயர் தெரிவதற்கும் அது சார்ந்தவை பிரபலமானதற்கும் பெரியாரின் வைக்கம் போராட்ட பங்களிப்புதான் காரணம் என்று நினைக்கிறேன், அப்படி இல்லையெனில் அது இவ்வளவு முக்கியத்துவமாக பள்ளிக்கல்வியில் அறியப்பட்டு கூட இருக்காது என்பது இயல்பானது என்றே நம்புகிறேன். அதேபோல் அவர் சும்மா போராட்டத்தில் பங்குகொண்டு திரும்பவில்லை. வைக்கம் போராட்ட ஆரம்ப கட்டத்திலேயே அதன் முன்னணி தலைவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்ட சூழ்நிலையில் பெரியார் அங்கு சென்று தொடர்ச்சியாக போராடியது அந்த போராட்டத்தை தொடர்ந்து தக்கவைக்க, நீங்கள் சொல்வது போல் அவருடைய அன்றைய இளமைவீச்சால் ஆற்றல் கொண்டதாக, பெரும் தூண்டுகோலாக இருந்திருக்கும். எனவே தமிழக சூழ்நிலையில் அவரை வைக்கம் வீரர் என்று சொல்வது நியாயமானது என்பதே என் எண்ணம்.
அன்புடன்
சரவணன் விவேகானந்தன்
***
அன்புள்ள சரவணன்
நான் மீண்டும் மீண்டும் தெளிவுபடுத்திக்கொண்டே இருக்கும் ஒன்றுதான் இது. வைக்கம் போராட்டம் கேரளப்பண்பாட்டின் பெருநிகழ்வு. காந்தி நடத்திய மாபெரும் போராட்டமான ஆலயநுழைவு இயக்கத்தின் தொடக்கப்புள்ளி
வைக்கம்போராட்டம் நாராயணகுரு, காந்தி உள்ளிட்ட பெரும் ஆளுமைகளால் வழிநடத்தப்பட்டது. டி.கே,மாதவன், பி.கே.குஞ்ஞிராமன், சகோதரன் அய்யப்பன் போன்ற சமூகசீர்திருத்தவாதிகளாலும் கேளப்பன், கே.பி.கேசவமேனன் போன்ற காங்கிரஸ் தலைவர்களாலும் நடத்தப்பட்டது. ஈஎம்எஸ், ஏ.கே.கோபாலன் போன்ற தலைவர்களை உருவாக்கியது. அதை ஈவேராவின் ஒற்றையாள் போராட்டம் என திரிப்பது மோசடி.
அவர் அதில் பங்குகொண்டார், போராடினார் என்று சொல்வதில் எந்தப்பிழையும் இல்லை. அவர் அதை தொடங்கினார், வழிநடத்தினார், வெற்றிவாங்கி தந்தார் என்றெல்லாம் புனைவதுதான் சிக்கலே. காந்தி உட்பட அதில் ஈடுபட்டவர்களின் பங்களிப்பை திரிப்பதும் சிறுமைசெய்வதும்தான் கண்டிக்கத்தக்கது.
ஜெ
***
ஜார்ஜ் ஜோசப்
ஜெ
காந்தி ஜார்ஜ் ஜோசப் அவர்களை போராட்டக்களத்திலிருந்து மாறியிருக்கச் சொன்னது உண்மைதான். ஆனால், காந்தி கடிதமெழுதிய அடுத்தநாள் (7ஏப்ரல்1924) டி.கே. மாதவன் மற்றும் கே.பி.கேசவன் இருவரும் கைதானபிறகு, வைக்கம் போராட்டத்தை முன்னின்று நடத்தியது ஜார்ஜ் ஜோசப். ஏப்ரல் 11, 1924-ம் நாள் காந்திக்கு “வைக்கம் போராட்டம் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்டது. போலிஸ் வழிதரவில்லை. கைதுசெய்யவும் மறுக்கிறது. சத்தியாக்கிரகிகள் முன்சாலையில் அமர்ந்து சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இன்னும் பல சத்தியாக்கிரகிகள் இணையவுள்ளார்கள். இந்த போரட்ட வடிவத்தில் ஏதேனும் மாற்றமிருந்தால் தெரியப்படுத்துங்கள். அவசரம்” என்று தந்தியனுப்பினார். காந்தியிடமிருந்து அடுத்தநாள், “உண்ணாவிரதத்தை கைவிட்டுவிட்டு, கைது செய்யப்படும்வரை அமைதியாக முறையில் நிற்கவோ உட்காரவோ செய்யுங்கள்” என்று பதில் வந்தது.
ஏப்ரல் 11, 1924 அன்று ஜார்ஜ் ஜோசப் கைதுசெய்யப்பட்டு ஆறுமாதம் சிறைலடைக்கப்பட்டார். கைதானபோது, அவர் காந்திக்கு அனுப்பிய தந்தி, “நான் கைதுசெய்யப்பட்டுள்ளேன். சத்தியாகிரகம் கண்டிப்பாக தொடரவேண்டும். பொதுமக்களின் பெருத்த ஆதரவும், ஏராளமான தன்னார்வலர்களும் இருக்கின்றார்கள். தலைவர்கள் தான் தேவையாக இருக்கின்றார்கள். எனவே தேவதாஸ் காந்தியையோ அல்லது மகாதேவ் தேசாவையோ அனுப்புங்கள்…”
எனவே, ஜார்ஜ் ஜோசப் அவர்கள் ஒருபோதும் போராட்டக்களத்திலிருந்து விலகியதில்லை.
அன்புடன்
கிறிஸ்
***
அன்புள்ள கிறிஸ்
காந்தியின் ஆலோசனைகளை ஜார்ஜ் ஜோசப் குழு ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கிடையே மோதல்களும் கண்டனக் கடிதப்போக்குவரத்தும் நிகழ்ந்தன. ஆனால் ஜார்ஜ் ஜோசப்பை இழக்கவும் காந்தி தயாராகவில்லை. வைக்கம் இயக்கத்தில் பிளவு நிகழக்கூடாது என்று தொடர்ந்து எழுதினார். ஜார்ஜ் ஜோசப் காந்தியை கண்டித்தபடி காங்கிரஸிலேயே நீடித்தார். பின்னர் காந்தியின் ஹரிஜன இயக்கத்தின் முன்னணிப் போராளியாக ஆனார். இதையெல்லாம் நான் முன்னரே எழுதியிருக்கிறேன்
ஜெ