தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு


Guru

Status: Offline
Posts: 1049
Date:
வைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு
Permalink  
 


வைக்கம், ஈவேரா – என் மதிப்பீடு

‘வைக்கம் வீரர்’ டி,கே.மாதவன்

வைக்கம், ஈவேரா, புதிய கழைக்கூத்துக்கள்

அன்புள்ள ஜெமோ,

பெரியாரின் மறுபக்கம் என்ற பேரில் ம.வெங்கடேசன் எழுதிய கட்டுரை இது. விரிவான மூலநூல் ஆதாரங்களுடன் உள்ளது. மறுப்பு தெரிவிப்பவர்கள் இதைத்தான் மறுக்கவேண்டும். வைக்கம் போராட்டத்தில் காந்தியே ஈடுபடவில்லை, அவர் வைக்கம் போராட்டத்தை உண்மையில் எதிர்த்தார், பெரியார்தான் நடத்தினார் என்று திகவினர் சொன்னதற்கு எதிரான விரிவான ஆதாரங்கள் அவர்களின் தரப்பினர் எழுதிய நூலில் இருந்தே எடுத்து அளிக்கப்பட்டுள்ளன.

http://www.tamilhindu.com/2009/09/periyar_marubakkam_part16/?fbclid=IwAR0x7E6wiBE-SwnLQYkarTSvC9JM2dRXf4YjMw2W7cu0L7oU3pi280grH04

ஈவெராவின் மறுபக்கத்தை வெளிக்கொண்டுவந்தமைக்கு நன்றி.

ஸ்ரீனிவாஸ்

***

அன்புள்ள ஸ்ரீனிவாஸ்,

ஈவேரா அவர்களைப் பற்றிய என் கருத்து எந்த சிலையுடைப்பு நோக்கமும் கொண்டது அல்ல. சிலையுடைப்புப் பணிகளில் எனக்கு ஆர்வமும் இல்லை.

நான் ஆய்வாளன் அல்ல. முறையான விரிவான ஆய்வுகளைச் செய்ய என் புனைவிலக்கியப் பணி எனக்கு பொழுது அளிக்காது. நெடுநாட்கள் ஓர் ஆய்வை தொடருமளவுக்கு பொறுமைகொண்டவனும் அல்ல. நான் கூறுவன எவையுமே ஆய்வுமுடிவுகள் அல்ல. தேடிச்சென்று கண்டடைந்த தகவல்களும் அல்ல. மிகமிக அடிப்படையான தரவுகளையே நான் சொல்கிறேன். எந்த வாசகனும் சாதாரணமாகக் கண்டடையக்கூடிய பொதுச்செய்திகள்.

நான் அவற்றைக்கொண்டு ஒரு எளிமையான பொதுப்பார்வையை மட்டுமே உருவாக்குகிறேன். அரிய, சிக்கலான வாதங்களை உருவாக்குவதில்லை. அது நேர்மையும் அறவுணர்வும் கொண்ட இயல்பான வரலாற்றுநோக்கு. அது அரசியல்சார்ந்த கழைக்கூத்தாட்டங்களுக்கு எதிரானதாக நிலைகொள்கிறது.

ஈவேரா அவர்களைப்பற்றி நான் எழுதவில்லை. 2008 முதல் நான் எழுதியது காந்தி பற்றி. அவருடைய வைக்கம்போராட்டம் பற்றி எழுதியபோது அது ஈவேரா நடத்தியதல்லவா, காந்தி அதை உடைக்கத்தானே முயன்றார் என்றவகையில் கேள்விகள் வந்தன.

அதற்குப் பதிலாக வைக்கம் போராட்டம் என்பது எவ்வளவு பெரிய, எவ்வளவு சிக்கலான ஒரு போராட்டம், எத்தனை மாமனிதர்களால் நடத்தப்பட்டது, எத்தனையெத்தனை அமைப்புக்கள் அதில் ஈடுபட்டன என்பதை எழுதினேன். அவையெல்லாம் பொதுத்தளத் தகவல்கள். மிகமிக அடிப்படைத் தரவுகள்.

அவற்றைக்கூட இங்கே எவரும் சொல்லவில்லை. அவற்றை முற்றாக மறைத்து ஈவேரா அவர்களைப் பற்றிய ஒரு தொன்மமாக வைக்கத்தை கட்டமைத்துவிட்டிருக்கிறார்கள். அதையே நான் எதிர்த்து எழுதினேன்

ஈவேரா அவர்களைப்பற்றிய என் மதிப்பீட்டை நான் எழுதியிருக்கிறேன். இன்றைய இந்த்துத்துவர்களின் வெறுப்பு நோக்கு எனக்கில்லை. ஈவேராவை நிராகரித்துவிட்டு சாதிவெறிகொண்ட பிற்போக்காளர்களை முன்வைக்கும் அவர்களின் நோக்கு எனக்கு அருவருப்புக்குரியதே.

பெரியாரியர்கள் பதினொரு ஆண்டுகளுக்கு முன் நான் வைக்கம் பற்றிச் சொன்னவற்றை இன்று ஏற்றுக்கொண்டு தங்கள் வரலாற்று வரைவை கொஞ்சம் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் மாற்றுவார்கள். நடுவே என்னை வசைபாடியிருக்கிறார்கள், ஆனாலும் இந்த மாற்றம் நல்லதுதான்.

வைக்கம் போராட்டத்தை தொடங்கி – அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்தி – வெற்றிகரமாக முடித்து உடனடியாக திருவார்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து மேலே சென்ற சமூகப் போராளியான டி.கே.மாதவனே மெய்யான ‘வைக்கம் வீரர்’ அவரைப் பற்றி பெரியாரியர் சொல்லத் தொடங்கியதே வெற்றிதான்.

காந்தியைப் பற்றிய பொதுவான எண்ணங்கள் அனைத்துமே இவ்வாறு மாறியிருப்பதைக் காண்கிறேன். அதிலும் எனக்கு ஒரு பங்கு உண்டு. சிந்தனைத்துறையில் பொறுமையான நெடுங்கால செயல்பாட்டுக்கு எப்போதும் பயனுண்டு என மீண்டும் உறுதிகொள்கிறேன்.

ஈவேரா அவர்களைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன். பலமுறை. மீண்டும் சுருக்கமாக.

ஈவேரா அவர்களை நான் எப்படி மதிப்பிடுகிறேன்?

அ. ஈவேரா அவர்களை நான் ஒரு சமூகசீர்திருத்தவாதியாகவே காண்கிறேன். நிரூபணவாத அறிவியல்நோக்கையும், மானுட சமத்துவம் சார்ந்த அறவியலையும், நவீன ஜனநாயகத்திற்குரிய குடிமைப்பண்புகளையும் அன்றைய சூழலில் முன்வைத்தவர். ஆகவே தமிழ்ச்சமூகத்தின் அறிவார்ந்த முன்னேற்றத்திற்குப் பங்களிப்பாற்றியவர்.

ஆ. ஈவேரா அவர்கள் இந்துமதத்தின் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக போராடியவர். அன்றைய மதநிறுவனங்களின் மூர்க்கமான மேலாதிக்கம், ஆசாரங்களின் குருட்டுத்தனம் ஆகியவை தளர அவர் ஒரு முக்கியமான காரணம். அவ்வகையில் அவர் இந்துமதச் சீர்திருத்தவாதியும்கூட

இ. ஈவேரா ஈவேரா அவர்கள் முன்வைத்த பொருள்முதல்வாதமும் இறைமறுப்பும் இந்துசிந்தனை மரபில் என்றுமிருந்த ஒரு தத்துவநிலைபாடு. என்றும் சிந்தனையில் இருந்துகொண்டிருக்கும் ஒன்று. அது இல்லாமல் சிந்தனையே செயல்பட முடியாது. ஆகவே அவர் நம் சிந்தனையின் ஒரு முக்கியமான சரடின் முதன்மை ஆளுமை

ஈ. ஈவேரா முன்வைத்த இந்த பொருள்முதல்வாத கொள்கை, மதமறுப்பு அணுகுமுறை நம் பண்பாட்டின் முக்கியமான ஒரு அறிவுத்தரப்பு.எல்லா அறிவுத்தரப்புகளையும்போல அதில் சிதைவுகள் திரிபுகள் உண்டு. மூடநம்பிக்கைத்தன்மையும் உண்டு. ஆனாலும் அவர் உருவாக்கியது ஓர் அறிவியக்கத்தை. இன்றுவரை திராவிட இயக்கம் என நீளும் அந்த இயக்கம் ஓர் அறிவியக்கமே. அந்த அறிவுத்தளம் இந்நூற்றாண்டில் இங்கே உருவானது, அதன் அடிப்படைக் காரணிகள் தென்னகநிலத்தில் என்றும் இருந்துகொண்டிருப்பவை. நாளை ஒருவேளை இன்னொருவடிவில் எழவும்கூடியவை.

உ. ஈவேரா அவர்களின் தனிவாழ்க்கையைப் பற்றி கூறப்படும் கூச்சல்களில் எனக்கு உடன்பாடில்லை. அவர் தன் கொள்கைகளை நேர்மையாகவும் உறுதியாகவும் இருந்தவர் என்பதே என் மதிப்பீடு. ஆகவே மதிப்பின்றி எதையும் அவரைப்பற்றி நான் சொல்வதில்லை.

என்னுடைய எதிர்கருத்துக்கள் என்ன?

அ. ஈவேரா அவர் கையாண்ட சிந்தனைகளையே வரலாற்றறிவுடன், உளச்சமநிலையுடன் கற்றறிந்தவர் அல்ல. அன்றைய அறிவுச்சூழலில் திகழ்ந்த குறைவான வரலாற்று –தத்துவக் கருத்துக்களை அவர் கற்றுக்கொண்டார் என்றாலும்கூட அவர் கற்றுக்கொண்டிருந்தது மிகமிகக் குறைபாடு கொண்டது.

ஆ. தன் கொள்கைத்தரப்பை அதற்குரிய நிலைபாடுடன்,உணர்வுச்சமநிலையுடன் அவர் முன்வைக்கவில்லை. தன் கருத்துக்களை அன்றன்று மனம்போன போக்கில் அள்ளி இறைத்தார். ஆகவே ஏராளமான முரண்பாடுகள் நிறைந்தவை அவருடைய சிந்தனைகள்.

இ. ஈவேரா தன்  வரலாற்றுநோக்கில் தனிப்பட்ட காழ்ப்புகளை கலந்தார். ஆகவே கருத்துக்களை உச்சகட்ட வெறுப்புடன் முன்வைத்தார். இந்த எதிர்மறைத்தன்மை அவருடைய நோக்கங்களையே சிதைக்கும் அளவுக்கு இருந்தது. அவரை தொடர்ந்து வந்தவர்கள் அந்த எதிர்மறைத்தன்மையை மட்டுமே கற்றுக்கொண்டார்கள். இன்றுவரை காழ்ப்பின்குரலில் மட்டுமே பேசுபவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்

ஈ. ஆங்கிலேய ஆட்சி அது சென்ற இடத்தில் எல்லாம் எளிமையான இனக்கொள்கையை உருவாக்கிப் பரப்பி அச்சமூகங்களை பிளவுபடுத்தி ஆட்சி செய்தது. அந்த  ‘ஒன்றரையணா’ இனக்கொள்கையை ஈவேரா கற்றுக்கொண்டு அதை ஆவேசமாக முன்வைத்தார். அது இன்றும் நாளையும் மிகப்பெரிய அழிவை உருவாக்கும் ஆபத்து கொண்டது. அது அழிவை உருவாக்கவில்லை என்றால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனாலேயே. அத்தகைய இனப்பிளவுக் கொள்கை எங்கு எவரால் முன்வைக்கப்பட்டாலும் எதிர்ப்புக்குரியது.

உ. ஐரோப்பியர் உருவாக்கிய இனவாதத்தை உள்ளூர் சாதிக்காழ்ப்புகளுடன் இணைத்தார் ஈவேரா. அவருக்கு இன்றிருக்கும் பீடம் என்பது அந்தச் சாதிக்காழ்ப்பினூடாக இடைநிலைச் சாதியினருக்கு உவப்பானவராக அவர் இருப்பதனால்தான். அதாவது அவர் இடைநிலைச் சாதியினரின் சாதிக்காழ்ப்பின் கொள்கைமுகம்

ஊ. இனவாதம் ஃபாஸிசமாக ஆவது அது உடனடி எதிரிகளாக ஒரு சாராரை கற்பிதம் செய்துகொள்ளும்போதுதான். ஈவேராவின் பிராமண எதிர்ப்பு என்பது நேரடியான சாதிக்காழ்ப்பே .சிந்தனையில், மானுடநாகரீகத்தின் வளர்ச்சியில் , மானுடசமத்துவத்தில் நம்பிக்கைகொண்ட எவராலும் அதை ஏற்கமுடியாது. ஒரு சாதியினர், மதத்தினர், இனத்தினர், நிறத்தினர் மீதான பொதுவான காழ்ப்பு என்பது வேறெந்த சிறப்புகள் இருந்தாலும் நம்மை ஆன்மீகமான இருளில் தள்ளிவிடக்கூடியது. சிறுமையை நிறைக்கக்கூடியது. சிந்திப்பவர் எவரும் அஞ்சி அருவருத்து தவிர்க்கவேண்டிய உணர்வுநிலை அது.

எ. ஈவேராவின் சமூகவியல் கருத்துக்கள், வரலாறு சார்ந்த பார்வைகள், இலக்கிய மதிப்பீடுகள் எல்லாமே மிகநுட்பமான, சிக்கலான களங்களுக்குள் ஒன்றும்தெரியாத மூர்க்கத்துடன் ஊடுருவிச் செல்வதன் விளைவாக உருவானவை. எந்தத்துறையிலும் சற்றே நுட்பமாக பயில்பவர் அவற்றை கண்டு திகைப்பே அடைவார். ஆனால் அவை மிக எளிமையானவை. ஆகவே பாமரர்களுக்கு புரிபவை, அவர்களால் ஏற்கப்படுபவை. இதன் விளைவாக தமிழ்ச்சிந்தனையின் அனைத்து தளங்களிலும் பாமரத்தனமான ஒரு மூர்க்கம் படர்ந்தது. சிந்தனைக்கு, கலைகளுக்கு, ஆய்வுக்கு எதிரானது அது

ஏ. ஈவேரா அவர்களின் மரபு குறித்த பார்வைகள் மிகமிக மேலோட்டமான நவீனத்துவ அணுகுமுறை கொண்டவை. அவை உடனடியாக அவருடைய வழித்தோன்றல்களாலேயே நிராகரிக்கப்பட்டன. அவர்கள் அவர் குறள் குறித்தும் சிலப்பதிகாரம் குறித்தும் சொன்னவற்றை நிராகரித்தனர்

மொத்தமாக,

ஈவேரா அவர்கள் ஒரு காலகட்டத்தின் சிந்தனையாளர். அவரை அங்கே நிறுத்தி விமர்சனரீதியாக அவருடைய பங்களிப்பை ஆய்ந்து ஏற்பதே அறிவார்ந்தது. விமர்சனமில்லாமல் அவரை திருவுரு ஆக்குபவர்கள் சமூகக்காழ்ப்புக்கான கருவியாக அவரை பயன்படுத்துகிறார்கள், அவ்வளவுதான்

ஈவேரா அவர்களின் நோக்கில் இருந்து இன்று பெற்றுக்கொள்ள வேண்டியவை  இவை. அறிவியல்மீதான நம்பிக்கை, மானுட சமத்துவத்திற்கு ஆதரவான உலகநோக்கு, மதச்சார்பில்லாத ஜனநாயகம் குறித்த கனவு ஆகியவை. நிராகரிக்கப்படவேண்டியவை அவருடைய இனவாத நோக்கு, வெறுப்பரசியல், எதையும் இரட்டைத்தன்மையாக எளிமைப்படுத்தும் அறிதல்முறை ஆகியவை

ஜெ



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard