சங்க இலக்கியம் (Sangam literature) எனப்படுவது தமிழில் கி.மு. 500இல் இருந்து கி.பி. 200 வரை உள்ள காலப்பகுதியில் எழுதப்பட்ட செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். நீதி நூலகள் கி.பி.700 வரை எழுதப்பட்டுள்ளவை சங்கத்தில் சேர்கின்றன.
சங்க இலக்கியம் என்று அறியப்படும் எட்டுத் தொகை, பத்துப் பாட்டு என்ற இரு தொகுப்பு நூல்களிலும் 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்கள் உள்ளன. அவற்றில் அகப் பாடல்கள் 1874. புறப்பாடல்கள் 507. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு.
சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன. பண்டைத்தமிழரது காதல், போர், வீரம், ஆட்சியமைப்பு, வணிகம் போன்ற நடப்புகளைச் சங்க இலக்கியப்பாடல்கள் அறியத்தருகின்றன.
சங்க இலக்கியம் என்பது 1. பதினென்மேற்கணக்கு, 2.பதினென்கீழ்க்கணக்கு ஆகிய இரண்டும் அடங்கியதாகும்.
சங்கம் சார்ந்த இலக்கண நூலாக தொல்காப்பியத்தையும், காப்பியங்களாக சிலம்பையும், மணிமேகலையையும் கூறலாம்.
1.பதினென்மேற்கணக்கு நூல் என்பது அ.எட்டுத் தொகையும், ஆ.பத்துப்பாட்டும் ஆகும்.
அ.எட்டுத் தொகை நூல்கள் யாவை என்பதை,
'நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியொடு அகம்புறம் என்று
இத்திறத்த எட்டுத் தொகை.' என்ற பாடல் பேசும்.
அதாவது நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,
பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டும் எட்டுத் தொகை.
சங்க இலக்கியங்களில் அதிகமாக எட்டுத் தொகை நூல்களான அகநானூறு, புறநானூறு , நற்றிணை, குறுந்தொகை ஆகியவை கொண்டாடப்படுகின்றன எனலாம்.
ஆ. பத்துப்பாட்டு: பத்துப்பாட்டு நூல்கள் யாவை என்பதை,
'முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து' என்ற பாடல் பேசும்.
அதாவது திருமுருகாற்றுப்படை,பொருநர் ஆற்றுப்படை,
சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை,
முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை
குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய பத்தும் பத்துப்பாட்டு.
2.பதினென்கீழ்க்கணக்கு: பதினென்கீழ்க்கணக்கு நூல்கள் யாவை என்பதை,
"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு." என்ற பாடல் பேசும்.
நீதி நூல்கள்
1.நாலடியார்
2.நான்மணிக்கடிகை
3.இன்னா நாற்பது
4.இனியவை நாற்பது
5.திருக்குறள்
6.திரிகடுகம்
7.ஏலாதி
8.பழமொழி நானூறு
9.ஆசாரக்கோவை
10.சிறுபஞ்சமூலம்
11.முதுமொழிக்காஞ்சி
அகத்திணை நூல்கள்
1.ஐந்திணை ஐம்பது
2.திணைமொழி ஐம்பது
3.ஐந்திணை எழுபது
4.திணைமாலை நூற்றைம்பது
5.கார் நாற்பது
6.கைந்நிலை
புறத்திணை நூல்
1.களவழி நாற்பது
சங்கம் சார்ந்த இலக்கண நூலாக தொல்காப்பியத்தையும், காப்பியங்களாக சிலம்பையும், மணிமேகலையையும் கூறலாம்.