எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் (Periplus of the Erythraean Sea) என்ற கையெழுத்து ஆவணம் (manuscript document) பண்டைய ரோமின் கடல் சார்ந்த வர்த்தகம் (Maritime Trade) (அதாவது, செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடல்) குறித்த மிகவும் இன்றியமையாத ஒற்றைத் தகவல் மூலமாகும் (single most important source of information). ஒரு கடற்கரையோரமாகக் கப்பலின் தலைமை மாலுமி என்னவெல்லாம் எதிர்பார்க்கக்கூடும் என்று கணித்து அங்குள்ள துறைமுகங்கள் மற்றும் கடலோர நிலப்பகுதிகளுக்கு இடையிலான தோராயமான தூரம் ஆகியவற்றை இந்த ஆவணம் பட்டியலிடுகிறது. இந்த ஆவணம் கிழக்கு ஆப்பிரிக்கா (eastern Africa), தென் அரேபியா (southern Arabia) மற்றும் இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரங்களில் பல்வேறு துறைமுகங்களில் வாங்குவதற்கும் விற்பதற்குமான ரோம எகிப்தின் (Roman Egypt) செங்கடல் துறைமுகத்திலிருந்து வந்தவர்களுக்கான ஒரு சிறிய கையேடு எனலாம்.
இந்தக் கையெழுத்து ஆவணம் எரித்திரிய (செங்கடலைச்) கடலைச் சுற்றி கிரேக்க மொழி பேசும் எகிப்திய வணிக மாலுமிகளால் கிரேக்க நாட்டிலிருந்து அரபிக்கடல் வழியாகப் தென்மேற்குப் பருவக்காற்றைப் பயன்படுத்தி வரும் பாய்மரக் கப்பலில் மேற்கொள்ளப்பட்ட கடற்பயணத்தை விவரிக்கிறது. இந்தக் குறிப்புகள் அந்தக் காலத்திய இந்தியத் தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரைத் துறைமுகங்கள், கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் மற்றும் கங்கையாற்றுச் சமவெளி பற்றி எல்லாம் விவரிக்கின்றன.
பண்டையகாலத் தமிழர் கடல் வணிகம் என்பது வரலாற்றுத் தொடக்கத்துக்குச் சற்று முந்தைய காலமான கி.மு. 700 முதல், சங்க காலத்தின் இறுதிக்கட்ட காலமான கி.பி. 300 வரை என்று கணியன்பாலன் கருதுகிறார். “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி” என்ற புறநானூற்று (வெண்ணிற் குயத்தியார் சோழன் கரிகாற் பெருவளத்தானைப் பாடிய பாடல் 66) வரிகள் தமிழர்களின் கடற்பயணம் பற்றி விளக்குகிறது. தொடக்க காலத் தமிழர் கடல் வணிகம் என்பது இந்தோனேசிய தீவுகளிலிருந்து, தமிழகத்தின் ஊடாக, பாரசீக வளைகுடா வரையில் கடற்கரைகளிலேயே நடைபெற்றது. பின்னாளில் அது நடுக்கடல் வணிகமாக மாற்றம் கண்டது. மேற்கே எகிப்து மற்றும் ரோம் நாடுகளிலும் கிழக்கே சீன நாடுகளிலும் இந்தக் வணிகம் பரவியது. கி;மு. 7 ஆம் நூற்றாண்டில் தமிழகத்துப் பொருட்கள் சீனாவில் விற்கப்பட்டிருப்தாகவும், சீனப் பொருட்களான சீனப்பட்டும், சீனியும் தமிழகத்திற்கு வந்தன என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். தமிழர்கள் மிக நீண்டகாலம் வரை இந்தோனேசிய தீவுகளுக்கிடையேயும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கிடையேயும் மட்டுமே வணிகம் மேற்கொண்டனர். அரபியர்கள் இலங்கை, தமிழகம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களைப் பெற்று அவற்றை மேலை நாடுகளில் விநியோகித்து வணிகம் மேற்கொண்டனர். மேலை நாடுகளில் தமிழகத்தின் வாசனைத் திரவியங்களுக்கான தேவை மென்மேலும் அதிகரித்தது.
கடற்பயணத்தின் முன்னோடிகள்
பொனீஷியர்களே கடல் பயணத்தின் முன்னோடிகள் ஆவர். தமிழக வணிகர்கள் இச்சரக்குகளை மரக்கலங்களில் ஏற்றிச் சென்று ஏடன் வளைகுடாவிற்கு இருபுறமுள்ள துறைமுகங்களில் இறக்கினர். பொனீஷியர்கள் இந்தச் சரக்குகளை தங்கள் கலன்களில் ஏற்றுக் கொண்டு எகிப்துக்கு எடுத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து எகிப்தியர்களும் கடற்பயணம் மேற்கொண்டனர். கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதப்படும் தமிழ் பிராமி எழுத்துகளைக் கொண்ட சிதைந்த களஞ்சிய சாடி ஒன்று எகிப்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கி.பி 15ம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்டதாகக் கருதப்படும் எகிப்திய கல்வெட்டொன்றில் இலவங்கப்பட்டை பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது.
எகிப்தியருக்குப் பின்பு கிரேக்கர்கள் கி.மு. 5 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் தமிழகத்துடன் கடல் வணிகம் மேற்கொண்டனர். தென்னிந்தியப் பொருட்கள் பலவற்றின் பெயர்கள் இன்றும் கிரேக்க மொழியி;ல் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கிரேக்கர்கள் மூலம் தமிழகத்தின் வாசனைப் பொருட்கள் பற்றி ரோமர்கள் அறிந்து கொண்டார்கள். ரோமப் பேரரசன் அகஸ்டஸின் (கிமு 63 – கிபி 14) ஆட்சியில் ரோமர்கள் தமிழகத்துடன் வணிகத் தொடர்பு மேற்கொண்டிருந்தனர். அகஸ்டஸ் பேரரசனின் சமகாலத்தவரும் ஜியோகிராபிகா (Geographica) என்னும் பூகோள நூல் ஒன்றை எழுதியவருமான ஸ்டிராபோ (Strabo) ஒரு கிரேக்க புவியியலாளர், தத்துவ அறிஞர், மற்றும் வரலாற்று ஆய்வாளர் ஆவார்.
யவனர்கள் என்ற சொல் பொதுவாக அந்நியர்களைக் குறித்தாலும் பெரும்பாலும் அது கிரேக்க, ரோமானியர்களையே குறித்து நின்றது. மிளகு வணிகம் பண்டைய தமிழகத்திற்குப் பெருஞ் செல்வத்தைக் கொண்டுவந்தது. ரோமானியக் கப்பல்கள் ஏற்றிச் சென்ற சரக்கில் முக்கால் பங்கு மிளகும் பிற வாசனைத் திரவியங்களும் இருந்தனாவம். ரோமிலிருந்து ஆண்டுதோறும் 6,00,000 பவுன் மதிப்புள்ள தங்கம் தமிழருடன் மிளகு வாணிகத்திற்காகச் செலவானதாம். “கள்ளி அம் பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” என்று அகநானூறு, 149 கூறுவது, ரோமானியரின் கப்பல் தமிழ்நாட்டின் மிளகை எடுத்துச் சென்று ரோம் நாட்டின் பொன்னை இங்குக் கொண்டு வந்து சேர்த்ததாம்.
சொற்பிறப்பியல்
“பெரிப்ளூஸ் (Greek: Περίπλους) என்ற கிரேக்கச் சொல்லுக்கு மரியம் வெப்ஸ்டர் அகராதி (Merriam-Webster Dictionary) தரும் பொருள் அது:
- a voyage or a trip around something (as an island or a coast) : circumnavigation எதையோ சுற்றி ஒரு கடற்பயணம் (ஒரு தீவு அல்லது கடற்கரை): உலகத்தைச் சுற்றும் கடற் பயணம்.
- an account of a circumnavigation உலகத்தைச் சுற்றும் கடற் பயணம் பற்றிய விரிவுரை
எரித்ரீயன் கடல் என்பது செங்கடல் (Red Sea) ஆகும். ஆப்பிரிக்கவிற்கும் ஆசியாவிற்கும் இடையே இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள கடலுக்குச் செங்கடல் என்று பெயர். செங்கடல் கிரேக்க மொழியில் எரித்ர தலஸ்ஸா (Erythra Thalassa) என்றும் இலத்தின் மொழியில் மரே எரித்ரயம் (Mare Erythraeum) என்றும் வழங்கப்படுகின்றன.
பெரிப்ளூஸ்
பெரிப்ளூஸ் (Periplus) என்னும் இந்தப் படைப்பு ஒரு குறிப்பட்ட ஆசிரியரால் எழுதப்பட்டதல்ல. கடற்பயணக் குறிப்புகள் கடல் சார்ந்த கிரேக்க மொழி பேசிய எகிப்த்திய வணிக மாலுமிகளால் எழுதப்படிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். கிரேக்க மொழியில் Περίπλους τῆς Ἐρυθράς Θαλάσσης என்றும் இலத்தீன் மொழியில் Periplus Maris Erythraei என்றும் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படைப்பு இயற்றப்பட்ட காலம் இதுவென்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. எனினும் இந்நூலில் காணப்படும் ஆட்சியாளர்களின் பெயரின் அடிப்படையில் வரலாற்று ஆய்வாளர்கள் இந்த நூலின் காலம் கி.பி. முதல் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கணித்துள்ளார்கள்.
இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகள் (Coastlines), முக்கியத் துறைமுகங்கள், ஒவ்வொரு துறைமுகத்திலும் (Ports) கிடைக்கும் சரக்குகள் (goods) மற்றும் பல செய்திகளை இந்தப் படைப்பு விவரிக்கிறது. இந்தப் படைப்பில் 66 அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயமும் நீண்ட பத்தியாக எழுதப்பட்டுள்ளது.
பெரிபுளூஸ் உள்ளடக்கம்
இந்தப் படைப்பின் முதல் பகுதி (1 – 18 அத்தியாயங்கள்) வடக்கு – தெற்கு நேர்கோட்டில் (north-south axis) எகிப்தில் துவங்கி, கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரை (Coast of East Africa) வழியே, தற்காலத்திய தான்சானியா (Tanzania) வரை அமைந்துள்ள துறைமுக நகரங்கள் மற்றும் கடல் சார்ந்த வணிக வழிகளையும் (maritime trade-routes) விளக்குகின்றன.
தொடர்ந்து வரும் பகுதியிலுள்ள (19 – 60 அத்தியாயங்கள்) 42 அத்தியாயங்கள் மேற்கு – கிழக்கு நேர்கோட்டில் பாரசீக வளைகுடாவை (Persian Gulf) ஒட்டி, எகிப்தில் துவங்கி இந்திய தீபகற்பத்தின் மேற்குக் கடற்கடற்கரை வரை அமைந்துள்ள பகுதிகளை விளக்குகின்றன. இந்தப் படைப்பில் சொல்லப்பட்டுள்ள இடங்களின் விலாவரியான விவரங்களை வைத்து இதன் படைப்பாளி(கள்) தா(ங்களே)னே எல்லா நிலப்பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு வரமுடிகிறது.
இறுதியாக இடம்பெற்றுள்ள (61 – 66 அத்தியாயங்கள்) 6 அத்தியாயங்கள் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில், வடக்கில் கங்கை ஆற்றின் முகத்துவாரம் தொடங்கி, மசூலிப்பட்டிணம் வழியாக, இலங்கை வரை இடம்பெற்றுள்ள ஆராயப்படாத நிலப்பகுதிகளை (uncharted lands) விளக்குகின்றன. வழித்தடத்தின் நீளம் மற்றும் நிலைமைகளை (lengths and conditions of the routes) பதிவு செய்தது ஆசிரியர்(களி)ன் பாணி அல்லது பாங்கு (style or pattern) எனலாம். பேரங்காடிகள் (emporiums) மற்றும் நங்கூரம் பாய்ச்சிய புள்ளிகள் (anchorage points), உள்ளூர் மக்களின் மனநிலை மற்றும் இப்பகுதியின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவை பற்றி ஆசிரியர்(கள்) பதிவு செய்துள்ளார்கள். வருடாந்திர பருவக் காற்றானது இந்தியாவுக்குக் கடற்பயணம் மேற்கொள்வதற்கான முக்கியக் காரணியாக இருந்துள்ளது. எனவே ஆசிரியர்(கள்) சில நேரங்களில் எகிப்திலிருந்து கடற்பயணம் மேற்கொள்ளத்தக்க மாதத்தை கிரேக்கம் மற்றும் எகிப்திய மொழிகளில் குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து சீனம் வரையிலான பகுதிகள் குறித்து இவர்கள் கேள்விப்பட்டவற்றைப் பதிவு செய்துள்ளார்கள்.