தமிழர் சமயம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பெரிபுளூஸ் எரித்திரியக் கடலின் பெரிபுளூஸ்:


Guru

Status: Offline
Posts: 898
Date:
பெரிபுளூஸ் எரித்திரியக் கடலின் பெரிபுளூஸ்:
Permalink  
 


எரித்திரியக் கடலின் பெரிபுளூஸ்: பெரிபுளூஸ்ஸின் கடற்பயணக் குறிப்புகளில் பண்டைய தமிழகம்

எரித்திரியக் கடலின் பெரிப்ளூஸ் (Periplus of the Erythraean Sea) என்ற கையெழுத்து ஆவணம் (manuscript document) பண்டைய ரோமின் கடல் சார்ந்த வர்த்தகம் (Maritime Trade) (அதாவது, செங்கடல், ஏடன் வளைகுடா மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடல்) குறித்த மிகவும் இன்றியமையாத ஒற்றைத் தகவல் மூலமாகும் (single most important source of information). ஒரு கடற்கரையோரமாகக் கப்பலின் தலைமை மாலுமி என்னவெல்லாம் எதிர்பார்க்கக்கூடும் என்று கணித்து அங்குள்ள துறைமுகங்கள் மற்றும் கடலோர நிலப்பகுதிகளுக்கு இடையிலான தோராயமான தூரம் ஆகியவற்றை இந்த ஆவணம் பட்டியலிடுகிறது.  இந்த ஆவணம் கிழக்கு ஆப்பிரிக்கா (eastern Africa), தென் அரேபியா (southern Arabia) மற்றும் இந்தியாவின் மேற்குக் கடற்கரையோரங்களில் பல்வேறு துறைமுகங்களில் வாங்குவதற்கும் விற்பதற்குமான ரோம எகிப்தின் (Roman Egypt) செங்கடல் துறைமுகத்திலிருந்து வந்தவர்களுக்கான ஒரு சிறிய கையேடு எனலாம்.

இந்தக் கையெழுத்து ஆவணம் எரித்திரிய (செங்கடலைச்) கடலைச் சுற்றி கிரேக்க மொழி பேசும் எகிப்திய வணிக மாலுமிகளால் கிரேக்க நாட்டிலிருந்து அரபிக்கடல் வழியாகப் தென்மேற்குப் பருவக்காற்றைப் பயன்படுத்தி வரும் பாய்மரக் கப்பலில் மேற்கொள்ளப்பட்ட கடற்பயணத்தை விவரிக்கிறது. இந்தக் குறிப்புகள் அந்தக் காலத்திய இந்தியத் தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரைத் துறைமுகங்கள், கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் மற்றும் கங்கையாற்றுச் சமவெளி பற்றி எல்லாம் விவரிக்கின்றன.

பண்டையகாலத் தமிழர் கடல் வணிகம் என்பது வரலாற்றுத் தொடக்கத்துக்குச் சற்று முந்தைய காலமான கி.மு. 700 முதல், சங்க காலத்தின் இறுதிக்கட்ட காலமான கி.பி. 300 வரை என்று கணியன்பாலன் கருதுகிறார். “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி” என்ற புறநானூற்று (வெண்ணிற் குயத்தியார் சோழன் கரிகாற் பெருவளத்தானைப் பாடிய பாடல் 66) வரிகள் தமிழர்களின் கடற்பயணம்  பற்றி விளக்குகிறது. தொடக்க காலத் தமிழர் கடல் வணிகம் என்பது இந்தோனேசிய தீவுகளிலிருந்து, தமிழகத்தின் ஊடாக, பாரசீக வளைகுடா வரையில் கடற்கரைகளிலேயே நடைபெற்றது. பின்னாளில் அது நடுக்கடல் வணிகமாக மாற்றம் கண்டது. மேற்கே எகிப்து மற்றும் ரோம் நாடுகளிலும் கிழக்கே சீன நாடுகளிலும் இந்தக் வணிகம் பரவியது. கி;மு. 7 ஆம் நூற்றாண்டில் தமிழகத்துப் பொருட்கள் சீனாவில் விற்கப்பட்டிருப்தாகவும், சீனப் பொருட்களான சீனப்பட்டும், சீனியும் தமிழகத்திற்கு வந்தன என்றும் வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். தமிழர்கள் மிக நீண்டகாலம் வரை இந்தோனேசிய தீவுகளுக்கிடையேயும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கிடையேயும் மட்டுமே வணிகம் மேற்கொண்டனர். அரபியர்கள் இலங்கை, தமிழகம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட பொருட்களைப் பெற்று அவற்றை மேலை நாடுகளில் விநியோகித்து வணிகம் மேற்கொண்டனர். மேலை நாடுகளில் தமிழகத்தின் வாசனைத் திரவியங்களுக்கான தேவை மென்மேலும் அதிகரித்தது.

கடற்பயணத்தின் முன்னோடிகள்

பொனீஷியர்களே கடல் பயணத்தின் முன்னோடிகள் ஆவர். தமிழக வணிகர்கள் இச்சரக்குகளை மரக்கலங்களில் ஏற்றிச் சென்று ஏடன் வளைகுடாவிற்கு இருபுறமுள்ள துறைமுகங்களில் இறக்கினர். பொனீஷியர்கள் இந்தச் சரக்குகளை தங்கள் கலன்களில் ஏற்றுக் கொண்டு எகிப்துக்கு எடுத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து எகிப்தியர்களும் கடற்பயணம் மேற்கொண்டனர். கி.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதப்படும் தமிழ் பிராமி எழுத்துகளைக் கொண்ட சிதைந்த களஞ்சிய சாடி ஒன்று எகிப்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கி.பி 15ம் நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்டதாகக் கருதப்படும் எகிப்திய கல்வெட்டொன்றில் இலவங்கப்பட்டை பற்றிக் குறிக்கப்பட்டுள்ளது.

எகிப்தியருக்குப் பின்பு கிரேக்கர்கள் கி.மு. 5 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் தமிழகத்துடன் கடல் வணிகம் மேற்கொண்டனர். தென்னிந்தியப் பொருட்கள் பலவற்றின் பெயர்கள் இன்றும் கிரேக்க மொழியி;ல் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கிரேக்கர்கள் மூலம் தமிழகத்தின் வாசனைப் பொருட்கள் பற்றி ரோமர்கள் அறிந்து கொண்டார்கள்.  ரோமப் பேரரசன் அகஸ்டஸின் (கிமு 63 – கிபி 14) ஆட்சியில் ரோமர்கள் தமிழகத்துடன் வணிகத் தொடர்பு மேற்கொண்டிருந்தனர். அகஸ்டஸ் பேரரசனின் சமகாலத்தவரும் ஜியோகிராபிகா (Geographica) என்னும் பூகோள நூல் ஒன்றை எழுதியவருமான ஸ்டிராபோ (Strabo) ஒரு கிரேக்க புவியியலாளர், தத்துவ அறிஞர், மற்றும் வரலாற்று ஆய்வாளர் ஆவார்.

யவனர்கள் என்ற சொல் பொதுவாக அந்நியர்களைக் குறித்தாலும் பெரும்பாலும் அது கிரேக்க, ரோமானியர்களையே குறித்து நின்றது. மிளகு வணிகம் பண்டைய தமிழகத்திற்குப் பெருஞ் செல்வத்தைக் கொண்டுவந்தது. ரோமானியக் கப்பல்கள் ஏற்றிச் சென்ற சரக்கில் முக்கால் பங்கு மிளகும் பிற வாசனைத் திரவியங்களும் இருந்தனாவம். ரோமிலிருந்து ஆண்டுதோறும் 6,00,000 பவுன் மதிப்புள்ள தங்கம் தமிழருடன் மிளகு வாணிகத்திற்காகச் செலவானதாம். “கள்ளி அம் பேரியாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும்” என்று அகநானூறு, 149 கூறுவது, ரோமானியரின் கப்பல் தமிழ்நாட்டின் மிளகை எடுத்துச் சென்று ரோம் நாட்டின் பொன்னை இங்குக் கொண்டு வந்து சேர்த்ததாம்.

சொற்பிறப்பியல்

“பெரிப்ளூஸ் (Greek: Περίπλους) என்ற கிரேக்கச் சொல்லுக்கு மரியம் வெப்ஸ்டர் அகராதி (Merriam-Webster Dictionary) தரும் பொருள் அது:

  1. a voyage or a trip around something (as an island or a coast) : circumnavigation எதையோ சுற்றி ஒரு கடற்பயணம் (ஒரு தீவு அல்லது கடற்கரை): உலகத்தைச் சுற்றும் கடற் பயணம்.
  2. an account of a circumnavigation உலகத்தைச் சுற்றும் கடற் பயணம் பற்றிய விரிவுரை

எரித்ரீயன் கடல் என்பது செங்கடல் (Red Sea) ஆகும். ஆப்பிரிக்கவிற்கும் ஆசியாவிற்கும் இடையே இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலில் அமைந்துள்ள கடலுக்குச் செங்கடல் என்று பெயர். செங்கடல் கிரேக்க மொழியில் எரித்ர தலஸ்ஸா (Erythra Thalassa) என்றும் இலத்தின் மொழியில் மரே எரித்ரயம் (Mare Erythraeum) என்றும் வழங்கப்படுகின்றன.

பெரிப்ளூஸ்

பெரிப்ளூஸ் (Periplus) என்னும் இந்தப் படைப்பு ஒரு குறிப்பட்ட ஆசிரியரால் எழுதப்பட்டதல்ல. கடற்பயணக் குறிப்புகள் கடல் சார்ந்த கிரேக்க  மொழி பேசிய எகிப்த்திய வணிக மாலுமிகளால் எழுதப்படிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.  கிரேக்க மொழியில் Περίπλους τῆς Ἐρυθράς Θαλάσσης என்றும் இலத்தீன் மொழியில் Periplus Maris Erythraei என்றும் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படைப்பு இயற்றப்பட்ட காலம் இதுவென்று அறுதியிட்டுக் கூற முடியவில்லை. எனினும் இந்நூலில் காணப்படும் ஆட்சியாளர்களின் பெயரின் அடிப்படையில் வரலாற்று ஆய்வாளர்கள் இந்த நூலின் காலம் கி.பி. முதல் நூற்றாண்டாக இருக்கலாம் என்று கணித்துள்ளார்கள்.

map_of_the_periplus_of_the_erythraean_sea

பெரிபுளூஸ் கடற்பயணம் PC: Wikimedia Commons

இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகள் (Coastlines), முக்கியத் துறைமுகங்கள், ஒவ்வொரு துறைமுகத்திலும் (Ports) கிடைக்கும் சரக்குகள் (goods) மற்றும் பல செய்திகளை இந்தப் படைப்பு விவரிக்கிறது. இந்தப் படைப்பில் 66 அத்தியாயங்கள் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயமும் நீண்ட பத்தியாக எழுதப்பட்டுள்ளது.

பெரிபுளூஸ் உள்ளடக்கம்

இந்தப் படைப்பின் முதல் பகுதி (1 – 18 அத்தியாயங்கள்) வடக்கு – தெற்கு நேர்கோட்டில் (north-south axis) எகிப்தில் துவங்கி, கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரை (Coast of East Africa) வழியே, தற்காலத்திய தான்சானியா (Tanzania) வரை அமைந்துள்ள துறைமுக நகரங்கள் மற்றும் கடல் சார்ந்த வணிக வழிகளையும் (maritime trade-routes) விளக்குகின்றன.

தொடர்ந்து வரும் பகுதியிலுள்ள (19 – 60 அத்தியாயங்கள்) 42 அத்தியாயங்கள் மேற்கு – கிழக்கு நேர்கோட்டில் பாரசீக வளைகுடாவை (Persian Gulf) ஒட்டி, எகிப்தில் துவங்கி இந்திய தீபகற்பத்தின் மேற்குக் கடற்கடற்கரை வரை அமைந்துள்ள பகுதிகளை விளக்குகின்றன. இந்தப் படைப்பில் சொல்லப்பட்டுள்ள இடங்களின் விலாவரியான விவரங்களை வைத்து இதன் படைப்பாளி(கள்) தா(ங்களே)னே எல்லா நிலப்பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு வரமுடிகிறது.

இறுதியாக இடம்பெற்றுள்ள (61 – 66 அத்தியாயங்கள்) 6 அத்தியாயங்கள் இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில், வடக்கில் கங்கை ஆற்றின் முகத்துவாரம் தொடங்கி, மசூலிப்பட்டிணம் வழியாக, இலங்கை வரை இடம்பெற்றுள்ள ஆராயப்படாத நிலப்பகுதிகளை (uncharted lands) விளக்குகின்றன. வழித்தடத்தின் நீளம் மற்றும் நிலைமைகளை (lengths and conditions of the routes) பதிவு செய்தது ஆசிரியர்(களி)ன் பாணி அல்லது பாங்கு (style or pattern) எனலாம். பேரங்காடிகள் (emporiums) மற்றும் நங்கூரம் பாய்ச்சிய புள்ளிகள் (anchorage points),  உள்ளூர் மக்களின் மனநிலை மற்றும் இப்பகுதியின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவை பற்றி ஆசிரியர்(கள்) பதிவு செய்துள்ளார்கள். வருடாந்திர பருவக் காற்றானது இந்தியாவுக்குக் கடற்பயணம் மேற்கொள்வதற்கான முக்கியக் காரணியாக இருந்துள்ளது. எனவே ஆசிரியர்(கள்) சில நேரங்களில் எகிப்திலிருந்து கடற்பயணம் மேற்கொள்ளத்தக்க மாதத்தை  கிரேக்கம் மற்றும் எகிப்திய மொழிகளில் குறிப்பிட்டுள்ளனர். தொடர்ந்து சீனம் வரையிலான பகுதிகள் குறித்து இவர்கள் கேள்விப்பட்டவற்றைப் பதிவு செய்துள்ளார்கள்.

Enter a caption

 



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
RE: பெரிபுளூஸ் எரித்திரியக் கடலின் பெரிபுளூஸ்:
Permalink  
 


அத்தியாயம் 54

அத்தியாயம் 54 திண்டிஸ்’ (Tyndis) என்று சேரநாட்டுத் (Kingdom of Cerobothra) துறைமுகபட்டிணமான தொண்டியைக் குறிப்பிடுகிறார்.  முசிறிஸ் (Muziris) என்று குறிப்பிடப்படும் முசிறியைப் போலவே தொண்டியும்  கடல் சார்ந்த வெளியில் சேரநாட்டில் இருந்த ஊர். அரேபியாவிலிருந்தும், கிரேக்கத்திலிருந்தும் அனுப்பப்பட்ட கப்பல்கள் சரக்குடன்  அங்கு வந்தன. தொண்டி ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. தொண்டியும் முசிறியும் 500 கண்ணிய (five hundred stadia) தூர (ஸ்டேடியா என்பது பண்டைய கிரேக்கில் நீளத்தை அளக்க பயன்படுத்தப்பட்ட அலகு ஆகும். சரியாக எவ்வளவு தூரம் என்று இன்றளவிலும் குழப்பம் இருக்கிறது) இடைவெளியில் ஆற்றிற்கும் கடலுக்கும் அமைந்திருந்தது. தொண்டியிலிருந்து ஆற்றின் வழியே 20 கண்ணிய தூரம் நாட்டுக்குள் செல்லலாம். நெல்சிந்தா (Nelcynda) என்ற ஊர் முசிறியிலிருந்து 500 கண்ணிய தூரத்தில் ஊர் உள்ளது. இது பாண்டியநாட்டின் மற்றொரு ஊராகும். நெல்லினூர் கடலிலிருந்து 120 கண்ணியம் தொலைவில், ஆற்றங்கரையில் உள்ளது.

தொண்டி

தொண்டி என்பது இராமநாதபுரத்திற்கு அருகில் உள்ள ஊர் என்பது நமக்குத் தெரியும். பெரிப்ளூஸ் கூறும் தொண்டி மேற்குக் கடற்கரையில் சேரனுக்குரிய துறைமுகபட்டிணமாகும். இந்த இரண்டு பட்டிணங்களையும் இணைத்து ஒரு ஆறு ஓடியதாக குறிப்புகள் உள்ளன. கடலையடுத்த துறைமுகம் என்பதை ‘வண்டு இமிர் பனித் துறைத் தொண்டி’ (ஐங்குறுமூறு 172) ‘அணங்குடைப் பனித் துறைத் தொண்டி’ (ஐங்குறுநூறு 174) போன்ற சங்க இலக்கிய அடிகளால் புலனாகிறது. வஞ்சிச் சேரன் குட்டுவனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த தொண்டியை
வெண் கோட்டு யானை விறற் போர்க் குட்டுவன் தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறை, (அகம் 290) என்றும் கருவூர் சேரனான பொறையனின் ஆட்சியில் சிறந்து விளங்கிய தொண்டியை ‘திண் தேர்ப் பொறையன் தொண்டி’ (அகம் 60) என்றும் அகநானுறு அழைக்கிறது. தொண்டியைக் கருவூர்ச் சேரன் இளஞ்சேரல் இரும்பொறை தன் ஆட்சிக்குக் கீழ்க் கொண்டுவந்த செய்தியை ‘வளைகடல் விழவின் தொண்டியோர் பொருநன்’ (பதிற்றுப்பத்து 87). என்று பதிற்றுப்பத்து பதிவு செய்துள்ளது.

முசிறி (முசிறிஸ்)

சேரநாட்டின் துறைமுகமான முசிறி சுள்ளி என்னும் பேரியாறு (தற்போது பெரியார்) கடலோடு கலக்கும் இடத்தில் வடகரைமேல் கடற்கரைப் பக்கத்தில் அமைந்திருந்தது. கிரேக்க யவனர் இந்தத் துறைமுகப் பட்டினத்தை முசிறிஸ் என்றும், வடமொழியாளர்கள் மரீசிபட்டணம் என்றும் கூறினார்கள். தற்போது பரவூருக்கு அருகில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பட்டணம் (Malayalam: പട്ടണം) (அமைவிடம் 10.15654°N அட்சரேகை 76.208982°E தீர்க்கரேகை) என்னும் கிராமமே அன்றைய முசிறி துறைமுகப் பட்டணம் என்பதை 2007, 2008 மற்றும் 2015 ஆண்டுகளில் முசிறி மரபுத் திட்டத்தின்  (Muziris Heritage Project) கீழ் இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் உறுதி செய்துள்ளன. கொடுங்கள்ளூரில் (English: Kodungallur (Cranganore), (மகோதயபுரம்) இருந்து இவ்வூர் 9 கி.மீ. தொலைவிலும், கொச்சியிலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. அரியாகே (ariake), எகிப்து (Egypt) போன்ற இடங்களிலிருந்து முசிறிக்கு கப்பல்கள் வந்து போயினவாம்.

இந்த ஆற்றின் வழியாக உள்நாட்டுக்குக்கூட கலம் சென்றதாம். பாண்டிய மன்னன் அடுபோர்ச் செழியன் முசிறி நகரை முற்றுகையிட்டு அங்கு வந்த அழகிய படிமப் பொருள்களைக் கைப்பற்றிச் சென்ற செய்தியை அகநானுறு பதிவு செய்துள்ளது:

….. …. …. சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ
அருஞ்சமங் கடந்து படிமம் வவ்விய
நெடுநல் யானை அடுபோர்ச் செழியன் – அகநானூறு 149
கறி = மிளகு

தலையாலங்கனத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என்னும் கொடிதேர்ச் செழியன், சேரனின் முசிறியை முற்றுகையிட்டு அவனுடைய யானைப்படையை அழித்ததன் காரணமாக சேரன் நாட்டு மக்கள் துன்புற்ற செய்தியை அகநானுறு பதிவு செய்துள்ளது:

கொய்சுவற் புரவிக் கொடியேர்ச் செழியன்
முதுநீர் முழறை முசிறி பழிக்க 15
களிறுபட எருகி கல்லன் ஞாட்பின்
அரும்பண் உறுநரின் வருந்தினள், – அகநானூறு 57

நெல்சிந்தா

பெரிப்ளூஸ் குறிப்பிடும் நெல்சிந்தா என்பது பற்றி பல்வேறு கருத்துகள் உள்ளன. நெல்லின் ஊர் சங்ககாலத்துத் துறைமுகங்களில் ஒன்று. பெரிபுளூஸ் குறிப்பிடும் நெல்சிந்தா (Nelcynda) இதுவே என்பது ஒரு கருத்து. சில ஆய்வாளர்கள் நெல்சிந்தாவை கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், நிரனம் (Niranam) அருகில் உள்ள நக்கடா (Nakkada) என்று அடையாளம் கண்டுள்ளனர். பிற சாத்தியமான இடங்கள் திருவல்லா அருகில் உள்ள நீண்டகரா (Neendakara), ஆழப்புழை அருகில் உள்ள நிற்குன்னம் (Nirkunnam), கன்னேற்றி (Kannetri) மற்றும் கொல்லம் (Kollam) போன்றவை ஆகும். இவ்வூரை தாலமி சாலியூர் எனக் குறிப்பிடுகிறார்.

அத்தியாயம் 55

கடலோடு ஆறு கலக்கும் முகத்துவாரத்தில் ‘பக்கரே’ என்னும் ஊர் இருந்ததாக 55 ஆம் அத்தியாயத்தில் குறிப்பிடப்படுகிறது. இது சங்க இலக்கியங்களில் பந்தர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நெல்சிந்தா என்னும் நறவூரிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கான பொருட்களைச் சுமந்து வரும் மரக்கலங்கள் பக்கரே (பந்தர்) துறைமுகத்தில் நங்கூரம்  பாய்ச்சி நிறுத்தப்படிருக்குமாம்.

இந்த மூன்று வணிக நகரங்களின் அரசர்கள் உள்நாட்டுப் பகுதியில் இருந்தவாறு அரசாட்சி செய்து வந்தனர். இவ்வரசர்களின் ஆட்கள் இந்தத் துறைமுகங்களுக்கு வரும் வெளிநாட்டு வணிகர்களைக் காண வருவதுண்டு. கருநிறத் தோற்றமும், குள்ளமான (கூளியர்) உருவமும், பம்பைத் தலையும் கொண்ட இவர்கள் நாகர் (serpents) என அழைக்கப்பட்டனர்.

பந்தர்

பெரிபுளூஸ் பந்தர் துறைமுகத்தை Balita என்று குறிப்பிட்டுள்ளார். ‘பந்தர்” என்ற அரபுச் சொல்லுக்குத் துறைமுகம் என்று பொருள். அரபிக் கடலோரத் துறைமுகங்களான கொடுமணம், பந்தர் ஆகிய இரண்டும் பத்துப்பாட்டில் இணையாகவே குறிப்பிடப்படுகின்றன.

“கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க்
கடனறி மரபில் கைவல் பாண!
தெண்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை”
பதிற்றுப்பத்து 7-ஆம் பத்து 7-ஆம் செய்யுள்

“கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்”
பதிற்றுப்பத்து 8-ஆம் பத்து 4-ஆம் செய்யுள்

அத்தியாயம் 56

56 ஆம் அத்தியாயத்தில் ஏற்றுமதியான பொருட்கள் பற்றிய செய்திகள் உள்ளன. நாகர்கள் பெரிய கப்பல்களில் தரமான மிளகையும், மலைநாட்டு திரவியங்களையும் மிகுதியாக ஏற்றிக்கொண்டு இந்த வணிக நகரங்களுக்கு வந்தது பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. .அவை இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும். மற்றும் நாணயம் (coin), இரத்தினக் கற்கள் (topaz), மெல்லிய துணியாடைகள் (thin clothing), கலை உருவம் கொண்ட லினன் துணிகள் (figured linens), நீல மணிக் கற்கள் (antimony), பவளம் (coral), நாட்டுக் கண்ணாடி (crude glass), செம்பு (copper), தகரம் (tin), காரீயம் (lead), நறவு (wine), செம்படடிகம், செம்படிகம் பதித்த அணிகலன்கள், கடல்-பயணிகளுக்குப் போதுமான கோதுமை ஆகியனவும் உள்-நாட்டு வணிகர்களால் ஏற்றுமதி செய்யப்படும். மிளகு கேரளாவின் கொட்டநரா (Cottonara) (குட்டநாடு) மாவட்டத்திலிருந்து அதிகமான அளவில் ஏற்றுமதி செய்வர். இவற்றுடன் தரமான முத்து (fine pearls), யானைத் தத்தம் (ivory), பட்டுத்துணி (silk cloth), கங்கைச் சமவெளியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணமுள்ள வெட்டிவேர் முதலான மூலிகைகள் (spikenard), உள்நாட்டுப் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட பிரிஞ்சி-இலை (malabathrum), தெக்காணக் கடலோரமாகக் கொண்டுவரப்பட்ட பளிங்குக் கற்கள் (transparent stones), பல்வகை வைரங்கள் (diamonds), நீலக் கற்கள் (sapphires), கிரைசுத் தீவிலிருந்து (Chryse Island) (கடம்பத் தீவு) கொண்டுவரப்பட்ட ஆமை ஓடுகள் (tortoise-shell) முதலானவையும் இந்தத் தமிரிக்கக் கடற்கரை (coast of Damirica) துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. பெரிபுளூஸ் குறிப்பிட்ட இந்தத் தமிரிக்கா என்ற சொல் “லிமிரிக்” (Limyrike) என்ற சொல்லுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. தென்மேற்கு இந்தியாவின் மலபார் கோட்டையுடன் தொடர்புடைய “லிமிரிக்” (Limyrike) என்ற வார்த்தை இங்குத் தமிரிக்காவுடன் “Damirica” தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. சில நவீன அறிஞர்கள் லிமிரிக் Limyrike என்ற சொல்லை தமிரிகா “Damirica” என்ற சொல்லுடன் இணைப்பது தவறு என்றும் குறிப்பிடுள்ளர்கள்.  உகந்த பருவக் காற்று வீசும் சூலை மாதத்தில் எகிப்தியக் கப்பல்களில் இவை ஏற்றுமதி செய்யப்பட்டன.

அத்தியாயம் 57

57 ஆம் அத்தியாயத்தில் பெரிப்ளூஸ் ஹிப்பாலஸ் (Hippalus) என்னும் பருவக்காற்று பற்றிக் குறிப்பிடுகிறார். தென்மேற்கு பருவக்காற்றை முதன்முதலாகக் கண்டறிந்தவர் ஹிப்பாலஸ்  (கி.பி. 45) என்ற கிரேக்க மாலுமி என்று கூறுவர். இந்தியாவில் எடீசின் காற்று (Etesian winds) வீசத் தொடங்கியபோது இவன் முதலில் பெருங்கடலைக் குறுக்காகக் கடக்கும் வழியைக் கண்டறிந்தவன். எனவே இவன் இக்காற்றைக் கணித்தறிந்ததால்இக்காற்றுக்கு ஹிப்பாலஸ்’ எனப் பெயரிடப்பட்டது.

பண்டைத் தமிழர்களின் நாவாய் செலுத்தும் திறன்

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
புறநானூறு 66

காற்றின் இயல்பை அறிந்து, நீர் நிறைந்த பெரிய கடலில் மரக்கலத்தை ஓட்டிய வலியவர்களின் வழித்தோன்றலே! என்பது இதன் பொருள். முதல் கரிகாலனின் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டு ஆகும். வெண்ணிபறந்தலைப் போரில் வெற்றி கண்ட கரிகாலனைப் போற்றி வெண்ணிக் குயத்தியார் பாடிய இந்தப் புறநானூற்றுப் பாடலில் காற்றைப் பயன்படுத்திக் கப்பலைச் செலுத்தும் தொழில் நுட்பத்தைக் கற்று, நடுக்கடல் ஊடே கப்பலோட்டிய திறனை கி.மு. 3ஆம் நூற்றாண்டிற்கு முன்பே கரிகாலனின் முன்னோர்கள் அறிந்திருந்தார்கள் என்ற செய்தியைப் பதிவு செய்துள்ளார்.

தமிழர்கள் கடலை முந்நீர் என்ற சொல்லால் குறிப்பிட்டர்கள். மழைநீர் கடலில் பொழிந்து வளம் பெருக்கும். கடலில் வந்து கலக்கும் ஆற்று நீர் மற்றும் மண்ணிலிருந்து ஊறிவரும் ஊற்று நீர் ஆகிய மூன்று நீரும் முந்நீர் எனப்பட்டது. முந்நீராகிய கடலில் திமில், நாவாய், கலன் மற்றும் கப்பல்கள் செலுத்தப்பட்டன . முந்நீரில் செல்ல காற்று உதவும் ஆனால் இதே காற்றுக் கப்பல்களைக் கூடக் கவிழ்த்துவிடும். இக்கருத்துக்களை:

கரை பொரு முந்நீர்த் திமில் புறநானூறு 303
முந்நீர் வழங்கும் நாவாய் புறநானூறு 13
நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் கலித்தொகை 5

சங்க இலக்கியப் பாடல் வரிகள் வாயிலாக அறிந்துகொள்ளலாம். முந்நீர் விழா என்பது சங்ககாலத்தில் நடைபெற்ற விழாக்களில் ஒன்று. முந்நீர் விழா என்பது நாவாய்த் திருவிழா. பஃறுளியாறு கடலோடு கலக்கும் குமரிமுனையில் இந்த விழா நடைபெற்றது. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி இந்த விழாவைக் கொண்டாடினான் என்பதற்கு:

முந்நீர் விழவின் நெடியோன் புறநானூறு 9
கரை பொருது இரங்கும் முந்நீர் போல மதுரைக்காஞ்சி 425 (வைகை ஆற்றில் விழாக் கொண்டாடினார்கள்)

சங்க இலக்கிய வரிகளே சான்று. மதுரை, வைகை ஆற்றில் கொண்டாடப்பட்ட விழா பற்றி மதுரைக்காஞ்சி விரிவாக விளக்குகிறது.

 



__________________


Guru

Status: Offline
Posts: 898
Date:
Permalink  
 

 அத்தியாயம் 58

58 ஆம் அத்தியாயத்தில் குமரித் துறைமுகம் என்னும் கன்னியாகுமரித் துறைமுகம் பேசப்படுகிறது. பாக்கரே (பந்தர்) துறைமுகத்திற்கு அப்பால் பரலியா மாவட்டத்தில் உள்ள பலிதா என்னும் ஊரைத் தாண்டி வரும் ஊர்  ‘கொமரி’ (Comari) (கன்னியாகுமரி) துறைமுகம் என்று பெரிப்ளூஸ் பதிவு செய்துள்ளது. தன் வாழ்நாளின் எஞ்சிய காலத்தைப் புனிதமாக்கிக்கொள்ள விரும்பும் ஆண்களும், பெண்களும் இங்கு வந்து நீராடி வாழ்விடமாக்கிக் கொள்வர். இங்குப் பெண்-தெய்வம் உறைவதாகச் சொல்கின்றனர்.

அத்தியாயம் 59

59 ஆம் அத்தியாயத்தில் பாண்டிய நாட்டின் கொற்கை துறைமுகத்தினைப் பெரிப்ளூஸ் கொல்சி‘ (Colchi) என்று குறிப்பிட்டுள்ளார். முத்துக்குளிப்போர் (Pearl fishing) இவ்வூரில் வாழ்ந்தது பற்றிப் பதிவு செய்துள்ளார். “கடற்கரை நாடு” (Coast Country) என்று அறியப்பட்ட வளைகுடா மாவட்டத்தில் அமைந்துள்ள வட்டார நாடு “அர்காரு” (Argaru) என்று அழைக்கப்பட்டதாக இவ்வத்தியாயம் பதிவு செய்துள்ளது. இந்த அர்காரு தான் இராமேஸ்வரம் ஆகும்.  இதன் கடற்கரையிலிருந்து வேறு எங்குமில்லாத அளவுக்கு முத்துகள் வாங்கப்பட்டனவாம். இங்கிருந்து ‘அர்காரிட்டிக்’ (Argaritic) எனப்படும் ‘மஸ்லின்’ மெல்லாடைகள் (muslins) ஏற்றுமதி செய்யப்பட்டன.

சங்க இலக்கியங்களில் வங்கக் கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ள நான்கில் கொற்கையும் ஒன்று. புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினம், ஓய்மானாட்டுத் துறைமுகமான எயிற்பட்டினம், தொண்டைநாட்டுத் துறைமுகமான நீர்ப்பெயற்று ஆகிய மூன்றும் வங்கக் கடல் துறைமுகங்களாகும். பிற்காலத்தில் எயிற்பட்டினம் மரக்காணம் என்று பெயர்பெற்றது. நீர்ப்பெயற்றுச் சங்ககாலத் துறைமுகங்களில் ஒன்று. கடல்மல்லை என்று போற்றப்படும் மாமல்லபுரம் நீர்ப்பெயற்று என்னும் பெயருடன் விளங்கியது. நீர் என்றால் கடல். நீரின் பெயரைக் கொண்ட பட்டினம் கடியலூர் உருத்திரங் கண்ணனாரால் நீர்ப்பெயற்று என்று குறிப்பிடுகிறது. இது தொண்டைநாட்டுத் துறைமுகமாகும். இந்த நீர்ப்பெயற்றுக் குறித்துப் கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் பெரும்பாணாற்றுப்படை விவரிக்கிறது.

பாண்டியர்களின் மூன்றாம் தலைநகரம் கொற்கை ஆகும். பாண்டிய நாட்டு வணிகத் துறைமுகமாகும். கொற்கை முத்தின் சிறப்பை அர்த்தசாஸ்திரம் கூறுகிறது. உலக அழகி கிளியோபாட்ரா கொற்கை முத்தை அணிந்ததாக பிளினி குறிப்பிட்டுள்ளார். கொற்கை துறைமுகத்தை முத்துடன் தொடர்புபடுத்தி விவரிக்கும் வரிகள் சுவை மிக்கவை:

ஈண்டுநீர் முத்துப்படு பரப்பின் கொற்கை முன்றுறை – நற்றிணை 23
கொற்கை முன்றுறை இலங்கு முத்து உறைக்கும் – ஐங்குறுநூறு 185

இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும்
நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை
– அகநானூறு 130-11

கொற்கையின் கடல் அலை குவித்துச் சென்ற முத்துக்கள் செல்வந்தர் ஏறி அமர்ந்து வரும் குதிரையின் குளம்புக்குள் மாட்டிக் கொள்ளும். இவ்வாறு குதிரைக்கு இடையூறாக அமையும் அளவிற்கு முத்துக்கள் கொற்கையில் கொட்டிக் கிடக்குமாம்.

அத்தியாயம் 60

அத்தியாயம் 60 இல் பெரிபுளூஸ் குறிப்பிடும்  ‘கமரா’ (Camara) என்னும் காவிரிபூம்பட்டினம்,  ‘புதுக்கா’ (Poduca) என்னும் அரிக்கமேடு  (புதுச்சேரி),   ‘சோபட்மா’  (Sopatma) என்னும் எயிற்பட்டிணம் ஆகியவை வங்கக்கடல் துறைமுகங்கள் ஆகும். இந்தத் துறைமுகங்களில் கப்பல்கள் கடற்கரையிலிருந்து தொலைவில் நிறுத்தப்பட்டிருந்தனவாம். இங்குப் பயன்படுத்தப்பட்ட ‘சங்காரா’ என்ற நீளமான மரக்கலன் ஒரே மரத்தால் செய்யப்பட்டு நுனியில் பிணைக்கப்பட்டிருந்தது. ‘கிரிசி’ (Chryse island), கங்கைவெளி (Ganges) ஆகிய இடங்களுக்குக் கடற்பயணம் மேற்கொள்ளக் ‘கொலந்தியா’ (சொழாந்தியம்) (colandia) என்றழைக்கப்பட்ட மிகப் பெரிய மரக்கலன்கள் பயன்படுத்தப்பட்டன.

இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார், ஓய்மானாட்டு நல்லியக்கோடனை குறித்துப் பாடிய சிறுபாணாற்றுப்படை என்னும் பத்துப்பாட்டு நூலில் இந்தத் துறைமுகத்தைப் பற்றி ‘மதிலொடு பெயரிய பட்டினம்’ என்று குறிப்பிடுகிறது. மதில் = எயில். எயிற்பட்டினம். பெரிப்ளூஸ் இந்த ஊரை சோபட்மா (Sopatma) என்று குறிப்பிடுகிறார். தற்காலத்தில் இந்த எயிற்பட்டினம் மரக்காணம் என்று பெயரில் அறியப்படுகிறது.

எரித்திரியக் கடலின் பெரிபுளூஸ்: ஆவணப் பாதுகாப்பு

பைசாண்டிய நகரைச் சார்ந்த இந்தப் படைப்பு (Byzantine Text) கையெழுத்துப் படியாக ஹைடெல்பர்க்கிலுள்ள (Heidelberg) பல்கலைக்கழக நூலகம் (Universitäts Bibliothek), பாலடினஸ் கிரேஸ்கஸ் (Palatinus Graecus) 398, இணைப் பக்கமாகவும் (folio). 40v – 54v ஆன்லைனிலும் (folio) பேணிக் காக்கப்பட்டு வருகிறது. இந்தக் கையெழுத்து ஆவணப் படியை இங்குச் சென்று பார்த்துத் தகவல் திரட்டலாம். இந்த அரிய ஆவணம் இடைவெளிகள் நிரம்பியும் பிழைபட்டும் உள்ளது. இந்த எழுத்தர் (scribe) நிறைய இடைவெளி விட்டு எழுதிள்ளார். மார்ஜினில் (Margin) டிக் (Tick) அடித்துக் கண்ட பிழைகளை அடையாளம் கண்டுள்ளார். கையெழுத்து ஆவணப் படி சிறிய எழுத்துகளால் எழுதப்பட்டுத் தொடர்பில்லாத சிறிய எழுத்துக்களாலான மார்ஜின் தலைப்புகளைப் பெற்றுள்ளது. இந்தக் கையெழுத்துப் பிரதியின் காலம் 10 ஆம் நூற்றாண்டு என்று கால அளவீடு செய்யப்பட்டுள்ளது. பிழைகளுடன் கூடிய இந்த ஏட்டின் 14-15 நூற்றாண்டைச் சேர்ந்த கையெழுத்துப் பிரதி ஒன்று பிரிட்டிஷ் நூலகத்தில் கூடுதலான 19391, இணைப் பக்கங்களாக (folios), 9r – 12r பாதுகாக்கப்பட்டு வருகிறது.

ஸ்காஃபின் ஆங்கிலப்பதிப்பு

வில்பிரட் ஹார்வி ஸ்காஃப் (Wilfred Harvey Schoff) (கி.பி. 1874-1932) இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் வாழ்ந்த அமெரிக்கத் தொல்பொருள் மற்றும் மரபார்ந்த அறிஞர் ஆவார். பல இன்றியமையாத பண்டைய நூல்களை ஸ்காஃப் (Schoff) மொழிபெயர்த்துள்ளார். கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க ரோமானிய படைப்பான, எரித்திரியக் கடலின் பெரிபுளூஸ் (Periplus of the Erythraean Sea) மற்றும் கர்த்தேஜிய படைப்பான ஹன்னோவின் பெரிப்ளுஸ் (Periplus of Hanno) போன்ற புகழ்பெற்ற ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

நூற்பட்டியல் (Bibliography): எரித்திரியக் கடலின் பெரிபுளூஸ் : இந்திய பெருங்கடலில் பயணமும் வர்த்தகமும் (The Periplus of the Erythraean Sea : travel and trade in the Indian Ocean). ஸ்காஃப், வில்பிரட் ஹார்வி (Schoff, Wilfred Harvey), 1874-1932; அற்றியன் (Arrian). வெளியிடப்பட்ட தேதி 1912; பங்களிப்பாளர்: ரோபர்ட்ஸ், டொராண்டோ பல்கலைக்கழகம். மொழி ஆங்கில மொழிபெயர்ப்பு.

இந்த நூல் 325 பக்கங்களைக் கொண்டது. பெரிபுளூஸ் கையெழுத்து ஆவணம் பக்கம் 22 முதல் 49 வரையிலான 28 பக்கங்களில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பக்கங்களில் ஸ்காஃப் விரிவான சிறு குறிப்புகளை இட்டுள்ளார்.  பண்டைய தமிழகத்தின் துறைமுகங்கள், வணிக நகரங்கள், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட வணிகப் பொருட்கள் பற்றிய முழு வரலாற்று விவரங்கள், நிலவியல் தரவுகள் போன்ற அனைத்தையும் முறையாக அறிந்தவர் ஸ்காஃப்.  இவர் பிளினி, ஸ்ட்ராபோ, டாலமி ஆகிய பண்டைய மேலை நட்டு வரலாற்று நூலாசிரியர்கள்  மட்டுமின்றி வின்சென்ட் ஸ்மித், ஸ்வெல், கென்னடி போன்ற தற்கால வரலாற்று அறிஞர்களின் நூற்களையும் முழுமையாகக் கற்றறிந்தவர். இதனாலேயே இவருடைய இந்த நூல் மிக முக்கியமான நூலை பண்டைத் தமிழர்களின் கடல் வணிகம் குறித்த அதிகார பூர்வமான நூலாக வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

குறிப்புநூற்பட்டி

  1. சங்கத்தமிழரின் வணிக வளம் http://paniveli.blogspot.com/2014/06/blog-post.html
  2. பட்டணம்: முசிறித்துறைமுகம். து.சுந்தரம் https://groups.google.com/forum/#!topic/mintamil/agrv1Pf2TnA
  3. பழந்தமிழர் கடல் வணிகம்-1 கணியன்பாலன் http://www.keetru.com/index.php/component/content/article?id=19766
  4. பழந்தமிழர் வாழ்வில் அமல்படுத்தப்பட்ட வணிக மேலாண்மை http://muganisnis.blogspot.com/2018/
  5. பெரிப்ளசு காட்டும் தமிழகம் விக்கிபீடியா
  6. மல்லல் மூதூர் மதுரை – 1 ப. பாண்டியராஜா
  7. மேலை நாட்டாருடன் வாணிபத் தொடர்பு http://www.tamilvu.org/courses/degree/a031/a0311/html/a0311442.htm
  8. Notes on the manuscripts of the Periplus of the Erythraean Sea. Roger Pearse. September 17, 2012 https://www.roger-pearse.com/weblog/2012/09/17/notes-on-the-manuscripts-of-the-periplus-of-the-erythraean-sea/
  9. The ancient ports of India. S. Muthiah The Hindu April 24, 2017 https://www.thehindu.com/society/history-and-culture/the-ancient-ports-of-india/article18198307.ece
  10. The Voyage around the Erythraean Sea https://depts.washington.edu/silkroad/texts/periplus/periplus.html

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard