எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் (குறள் 62) பழி இல்லாத நல்ல பண்புள்ள மக்களை ஒருவர் பெற்றால அவரை ஏழு பிறப்பிலும் தீவினைப் பயன் தீண்டாது.
எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமந் துடைத்தவர் நட்பு (குறள் 107) தமக்கு நேர்ந்த துன்பத்தினைத் துடைத்தவரின் நட்பினை பெரியோர் ஏழு பிறப்புகளிலும் தொடர்ந்து நினைத்துப் பார்ப்பர்.
ஒருமையுள் ஆமை போல ஐந்தடக்கலாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து (குறள் 126) ஒரு பிறவியில் ஆமை போல் ஒருவன் ஐந்து புலன்களையும் அடக்கி வாழக் கற்றுக் கொண்டால் அது அவனுக்கு ஏழு பிறவிக்கும் பாதுகாவலாக வந்து அமையும்.
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து (குறள் 398) ஒரு பிறவியில் ஒருவர் கற்கும் கல்வி அறிவானது அவர் எடுக்கும் ஏழு பிறவிகளிலும் பாதுகாவலாக வந்து அமையும்.
புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் (குறள் 538) பெரியோரால் புகழ்ந்து போற்றிக் கூறப்பட்ட்வற்றின் படி செயல் பட வேண்டும். அப்படிச் செயல்படாதவர்க்கு ஏழு பிறவிகளிலும் நன்மை உண்டாகாது.
ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும் தான்புக் கழுந்தும் அன்று (குறள் 835) முட்டாளான ஒருவன் ஒரு பிறவியிலேயே ஏழு பிறவிகளில் தான் அனுபவிக்க வேண்டிய நரகத் துன்பத்திற்கானவற்றைச் செய்து முடிக்க வல்லவன்!
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவார் மற்றீண்டு வாரா நெறி (குறள் 356) கல்வி கேள்விகளால் மெய்ப்பொருளை உணர்ந்தோர் மீண்டும் இவ்வுலகில் பிறந்து துன்பம் அடையாத நெறியை அடைவ்ர்.
வீழ்நாள் ப்டாஅமை நன்று ஆற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல் (குறள் 38) ஒவ்வொரு நாளையும் அறம் செய்யாமல் கழித்த நாளாக இல்லாமல் பார்த்துக் கொண்டு அறத்தை அன்றாடம் செய்து வந்தால் அதுவே ஒருவனுக்கு இனி பிறவி ஏற்படாதவாறு பிறவியை அடைக்கும் கல்லாகும்.
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு (குறள் 339) உறங்குவதும் விழிப்பதும் இயல்பாய் உயிருக்கு அமைவது போல சாக்காடும் பிறப்பும் மாறி மாறி வருகின்றன. எவ்வளவு பிரம்மாண்டமான ஒரு தத்துவத்தை மிக சுலபமாக இரண்டே இரண்டு வரிகளில் தந்து விடுகிறார்!
பிறப்பு என்பது துன்பம். எதையாவது மனிதப் பிறவியில் வேண்டி நீ விரும்பினால் அது பிறவாமையாக அமைய வேண்டும்.. மற்ற எதையும் விரும்பும் அவாவை அறுத்து விட்டால் அது தானே வரும். என்கிறார் அவர். குறளைப் பார்ப்போம்.
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது வேண்டாமை வேண்ட வரும் (குறள் 362)
பிறவிச் சுழலிலிருந்து ஏன் விடுபட வேண்டும்?அதற்கு பதிலையும் அழகாகத் தருகிறார் இப்படி!
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவனடி சேராதார் (குறள் 10)
இரகசியம் புரிகிறது இப்போது. பிறவிச் சுழலிலிருந்து விடுபட்டால் தான் இறைவன் அடியைச் சேர முடியும். இல்லையேல் இல்லை தான்! பிறப்பை அறுப்பது எப்படி? அதற்கும் வழியைச் சொல்கிறார். முதலில் பிறப்பை வேண்டாதவனின் இயல்பை இப்படிக் கூறுகிறார்:
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை (குறள் 345) பிறப்பறுத்தலை மேற்கொண்ட ஒருவனுக்கு அதற்கு க்ருவியாக இருக்கும் அவன் உடம்புமே மிகை தான்! அதற்கு மேல் உலகத் தொடர்பு எதற்காக?
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும் (குறள் 349) ஒருவன் இருவகைப் பற்றையும் அறுத்து விட்ட உடனேயே அப்பற்று அவனது பிறப்பை அறுக்கும். அது அறாத போது பிறந்து இறந்து வருகின்ற நிலையாமை காணப்படும்.
பிறப்பு என்பது என்ன என்பதை வரையறுக்கும் குறளையும் வள்ளுவர் தந்து விடுகிறார்:
பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம் மாணாப் பிறப்பு (குறள் 351) மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வால் தான் இன்பம் இல்லாத பிறப்பு ஏற்படுகிறது.
ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப் பேர்த்துள்ள வேண்டாப் பிறப்பு (குறள் 357) உபதேசப் பொருளை ஒருவன் ந்னகு ஆராய்ந்து முதல் பொருளை உணருவானாயின், மீண்டும் பிறப்புள்ளதாக நினைக்க வேண்டாம்.
பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும் செம்பொருள் காண்பது அறிவு (குறள் 358) பிறப்பிற்கு காரணமாகிய பேதைமை நீங்க சிறப்பு என்னும் செம்பொருளைக் காண்பதே அறிவாகும்.
பிறப்பிற்குக் காரண்மாக எல்லா உயிருக்கும் அமைவது எது? இரகசியத்தை வெட்ட வெளிச்சமாக்குகிறார் வள்ளுவர்.
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு என்னும் வித்து (குறள் 361) எல்லா உயிர்களுக்கும் எல்லாக் காலத்தும் விடாமல் வருகின்ற பிறப்பிற்குக் காரணம் அவா என்று சொல்லுவர் நூலோர்
முத்தான ஒன்பது குறள்கள்!
பிறப்பிற்குக் காரணம் அவா. அது நீங்க செம்பொருள் காண்பது அறிவு. அது நீங்க பெரியோரின் உபதேச நெறிகளை ஓர்ந்து உணர். அறி! மெய்ப்பொருள் இல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று நினைக்கும் மயக்கத்தினாலேயே பிறப்பு ஏற்படுகிறது. இருவகைப் பற்றையும் அறுக்கும் ஒருவனுக்கு அந்தப் பற்றே பிறப்பை அறுத்து விடும். பிறப்பு வேண்டாதவனுக்கு உடம்பே மிகை தான். பிறவிப் பெருங்கடலைக் கடந்தவனே இறைவன் அடி சேர முடியும். இந்த உலகில் நீ ஒரே ஒன்றை மட்டும் வேண்ட விரும்பினால் பிறவாமையை வேண்டு! ஏனெனில் பிறப்பும் இறப்பும் தூங்குவதும் விழிப்பதும் போலத் தான்!