பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் இந்த வரியை அனைவரும் பல முறை பலரும் பயன்படுத்தி கேட்டுள்ளோம், பெருமை அதிகாரத்தின் குறளின் அடுத்தவரியோடு முழு குறளையும் பார்ப்போம்.
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். (குறள் 972: பெருமை)
பிறப்பு தன்மையில், ஈன்றாள் தன் கர்ப்பப் பையில் சுமந்து நம்மை பெற்றுடுக்கும் முறையில் பிறப்பு ஒரே மாதிரியாக அமைகிறது. செய்யும் தொழில்களின் வேற்றுமைகளால் பெருமை ஒன்றாக ஒத்து இருக்காது.
எளிமையான இந்தக் குறளை வைத்து நவீன தமிழ் மெய்யியல் மரபை ஏற்காத நவீன புலவர்கள் பிரிவினை மூட்டி திருக்குறளை சிறுமை செய்வதால் நாம் விரிவாகக் காண வேண்டி உள்ளது.
பொருள் கொள்ள வரிஅமைப்பு:
செய்தொழில் வேற்றுமையான் சிறப்பு ஒவ்வா.
பதவுரை: பிறப்பு-தோற்றம்; ஒக்கும்-ஒத்து அமைகிறது; எல்லா-அனைத்து; உயிர்க்கும்-உயிருக்கும். சிறப்பு- பெருமை ஒவ்வா- ஒப்பாகாது - ஈடாகாது- இணையாகாது; செய்-செய்யும்; தொழில்-தொழில்; வேற்றுமையான்-வேறுபாட்டினால்.
எல்லா உயிர்க்கும் -எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் -
தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. குறள் 327
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். குறள் 251
உயிர் என்கையில் எல்லாவித உயிரையும் வள்ளுவர் பல்வேறு குறளில் சொல்லி உள்ளார்.
செய்தொழில் வேற்றுமையான் என அடுத்த அடியில் உள்ளதால் இது மனிதர்களை மட்டுமே குறிக்கும்
பிறப்பு ஒக்கும் & சிறப்பு ஒவ்வா - அருஞ்சொல் - இவற்றை வள்ளுவர் வேறு குறட்பாவில் என்ன பொருளில் பயன் படுத்தி உள்ளார்
பலர்காணும் பூ ஒக்கும் என்று.
நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்து இருக்கின்றன, என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய். (தலைவியின் கண்ணையும் பூவின் மலரையும் ஒப்பீடு, ஆனால் இரண்டு வேறு; எனவே பார்வைக்கு ஒன்று போலே ஆனால் வெவ்வேறு எனவே அமைந்துள்ளது).
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண் ஒவ்வேம் என்று.
குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், தலைவியின் கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.
ஒவ்வேம் -தலைவியின் கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே
செய்யும் தொழில்களின் வேறுபாட்டால் கிடைக்கும் பெருமை ஒன்றாக இருக்காது என்பது இப்பகுதியின் பொருள்.
செய்தொழில் வேற்றுமை யான் (அதிகாரம்:பெருமை குறள்:972)
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆயினும் செய்கின்ற வேறுவேறு தொழில்களால் கிடைக்கும் பெருமை ஒத்து இருப்பதில்லை
அதிகாரத்தோடே பொருள் காண்பது
வள்ளுவர் எந்த அதிர்காரத்தில் ஒரு குறளை இயற்றி உள்ளாரோ - அந்த அதிகாரத்தின் தலைப்போடேயே தான் பொருள் காண்பது தமிழ் இலக்கண மரபு
பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும் -குறள் பெருமை அதிகாரத்தில் உள்ளது
971. ஊக்கம் மிகுதியே ஒருவர்க்கு பெருமை தரும்; அதை நீங்கி வாழ்வோம் என்று கருதுதல் சிறுமையே உண்டாக்கும்.
972. அனைத்து உயிர்களின் பிறப்பும் ஒரே போல அமைகிறது; அவரவர் செய்யும் தொழில்களால் பெருமை வேறுபாடு உணரப்படும்.
973. மேலிருந்தும் மேன்மையில்லாதார் மேன்மக்களல்லர்; கீழிருந்தும் கீழ்மை யில்லாதார் கீழ்மக்களல்லர்.
974. மகளிர் மனத்திண்மையால் தம்மைக் காத்தொழுகுதல் போலப் பெருமையும் ஒருவன் தன்னைக் காத்தொழுகின் உண்டாகும்.
975. பெருமை உடையவர் அரிய செயல்களை முறையாகச் செய்து முடிக்க வல்லவராவர்.
976. பெரியாரைப் போற்றிக் கொள்வோம் என்னும் கருத்து சிறியவர்கள் அறிவிற்குத் தோன்றுவதில்லை.
977. சிறப்புக்கள் சிறியாரிடத்துச் சேருமாயின் நெறிகடந்த செயல்களே நடக்கும்.
978. பெருமையுடையவர் எந்நாளும் பணிவோடு இருப்பர்; சிறுமையுடையார் தம்மைத்தாமே வியந்து பாராட்டிக் கொண்டிருப்பர்.
979. செருக்கு இன்மை பெருமையின் குணம்; சிறுமைக் குணம் என்பது தருக்கி உலாவருதல்.
980. பெருமையுடையவர் பிறரது மானக் கேட்டை மறைப்பர்; சிறுமையுடையவர் குற்றங் குறைகளையே கூறிக்கொண்டிருப்பர்.
பெருமை அதிகாரத்தில் குறள்972 - பிறப்பு ஒக்கும் என்றவர் அடுத்த குறளிலேயே
மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். ( 973:பெருமை)
மு. வரதராசன் உரை: மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர்; கீழ்நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ்மக்கள் அல்லர்.
வள்ளுவர் கல்வியும் நற்பண்புகளில் ஒருவன் உயர் நிலை அடைய முடியும் என்கையிலேயே-நாம் வள்ளுவர் மேல் கீழ் என்பதை பிறப்பால் எனவும் கூறுவதைக் காணலாம்
மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. (409: கல்லாமை)
சாலமன் பாப்பையா உரை:படிக்காதவர் மேல்சாதியில் பிறந்திருந்தாலும், கீழ்சாதியில் பிறந்திருந்தும் படித்தவர் அளவிற்குப் பெருமை இல்லாதவரே.
நல்ல குடியில் பிறந்தவனிடனிடமே நல்ல பண்புகள் இருக்கும்
நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்.(குறள் 958:குடிமை)
ஒருவனுடைய நல்ல பண்புகளுக்கிடையில் அன்பற்ற தன்மை காணப்பட்டால், அவனை அவனுடைய குடிப்பிறப்புப் பற்றி ஐயப்பட நேரும்.
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். ( 959: குடிமை)
நிலத்தின் இயல்பை அதில் விளைந்த பயிர்காட்டும்; அதுபோல் குடியிற் பிறந்தவரின் இயல்பை அதில் பிறந்தவர் பேசும் சொல் காட்டும்.
எல்லோரையும் ஒன்றாகப் பார்க்கவேணுமா
வள்ளுவர் மிகத் தெளிவாய் ஒவ்வொருவரையும் அவரவர் தொழில் - தகுதி அடிப்படையில் தான் நோக்க வேண்டும் பொதுமைப் படுத்தி பார்க்கலாகாது எனவும் தெளிவாய் உரைக்கின்றார்.
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர் ( 528:சுற்றந்தழால்)
அரசன் எல்லாரையும் சமனாகப் பொதுநோக்கு நோக்காமல் அவரவர் தகுதியறிந்து அதற்கேற்பச் சிறப்பு நோக்கு நோக்குவானாயின், அச்சிறப்பு நோக்கி அவனை விடாது (விரும்பிச் சுற்றமாக) வாழ்பவர்கள் பலராவர்.
இவ்வுலக வாழ்விற்கு வள்ளுவர் காட்டும் வழி
வள்ளுவர் தன்மனிதன் நட்பு தேர்ந்தெடுக்க கூறு வழி
குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. (793: நட்பாராய்தல்)
மு. வரதராசன் உரை: ஒருவனுடைய குணத்தையும், குடிப்பிறப்பையும், குற்றத்தையும், குறையாத இனத்தாரின் இயல்பையும் அறிந்து அவனோடு நட்புக் கொள்ளவேண்டும்.
குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. (794: நட்பாராய்தல்)
மு. வரதராசன் உரை: உயர்ந்த குடியில் பிறந்து, தன்னிடத்தில் வரக்கூடிய பழிக்கு நாணுகின்றவனைப் பொருள் கொடுத்தாவது நட்புக் கொள்ளவேண்டும்.
அரசன் தன் சார்பாக தூது அனுப்ப்வோரை தேர்ந்தெடுக்க வள்ளுவர் வழி
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. ( 681: தூது)
அன்புடையவனாதல், உயர்ந்த குடிப்பிறப்பு உடையவனாதல், அரசர் விரும்பும் சிறந்த பண்பு உடையவனாதல் அகிய இவை தூது உரைப்பவனுடைய தகுதிகள்.
வள்ளுவத்தின் அடிப்படை வழிகாட்டல்
ஆதி பகவன் முதற்றே உலகு என இந்த உலகம் இறைவனிலிருந்து தொடக்கம் முழுமுதல் கடவுளை உலகைப் படைத்த இறைமை (பிரம்மத்தை) கூறி தொடங்கினார்.
கல்வி கற்பதன் பயனே இறைவனின் திருவடியைப் பற்றி கொள்ளவே என்றவர்; இறைவன் திருவடி சேராதாரோல் மீண்டும் மீண்டும் பிறக்கும் பெரும் கடலை நீந்த (முக்தி- மோட்சம் அடைதல்)இயலாது என்கிறார்.
திருக்குறளிற்கு வள்ளுவர் தரும் முகவுரை அறன் வலியுறுத்தல் அதிகாரம் முதல் பாடலிலேயே
சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. (31:அறன்வலியுறுத்தல்)
மணக்குடவர் உரை: முத்தியும் தரும் செல்வமும் தரும் ஆதலால், அறத்தின் மேல் உயிர்கட்கு ஆக்கமாவது பிறிதில்லை. இது பொருளான் ஆக்கம் உண்டென்பாரை மறுத்து, அறன் வலி யுடைத்தென்று
வள்ளுவத்தின் அடிப்படை- இறை நம்பிக்கை, இறைவன் திருவடியைப் பற்றி இவ்வுலகில் மீண்டும் பிறக்கும் வழியை அடைக்கும் வகையில் அறத்தை செய்து இறைவனை அடையும் வழி நாடவேண்டும்
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். (குறள் 38:அறன்வலியுறுத்தல்)
அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை (குறள் 36:அறன்வலியுறுத்தல்)
கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. (356:மெய்யுணர்தல்)
இந்த உலகில் நாம் பிறந்த இந்த உடல் இருக்கிறது ஆனால் உயிர் எங்கே இருக்கிறது மீண்டும் மீண்டும் பிறப்பு எடுக்கிறது என்பதை வள்ளுவர்
உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு (339 :நிலையாமை)
இந்த உலகில் நாம் இறைவனை வேண்டும் பொழுது ஆசைகள் எதை கேட்டாலும் கிடைக்கும் ஆனால் மனிதன் கேட்க வேண்டியது பிறவாமை என்னும் நிலை என்பார் வள்ளுவர்
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். ( 362: அவாவறுத்தல்)
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. ( 361: அவாவறுத்தல்)